8 Aug 2012

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்

சிறப்புப் பதிவர்: எம்.ஜி.ரவிக்குமார்

புரட்டிப் புரட்டிப் படிப்பதெல்லாம் புத்தகங்கள் அல்ல படித்ததும் எது நம்மைப் புரட்டிப் புரட்டி எடுக்கிறதோ அதுவே சிறந்த புத்தகம் என்று நம்புபவன் நான் அப்படி சமீபத்தில் வாசித்த புத்தகங்களில் என்னை மிகவும் கவர்ந்த புத்தகம் இது இதற்குப் பரிசு வழங்கி சாகித்ய அகாதமி தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டது

நாஞ்சில் நாடன் - இவரின் கட்டைவிரல் நையாண்டியாலும்,ஆள்காட்டிவிரல் நக்கலாலும் செய்யப்பட்டிருக்கிறது அதுவே இவரின் கதைகள் முழுவதிலும் நெய்யப்பட்டிருக்கிறது இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு களங்களைக் கொண்டது மனிதத்தின் மாண்பைப் பேசுவது, நம் மனதில் தென்றலையும் புயலையும் ஒருசேர வீசுவது இந்தக் கதைகள் உயிர்மை,யுகமாயினி போன்ற சிற்றிதழ்களிலும், விகடன், தினமணி போன்ற பிரபல ஏடுகளிலும் வெளி வந்தவை

இவர் கதைக்குக் கொடுக்கும் தலைப்பு மழையில் நனையும் குழந்தைக்கு தாய் போர்த்திவிடும் சேலைத் தலைப்பை ஒத்தது வளைகள் எலிகளுக்கானவை, செம்பொருள் அங்கதம், பரிசில் வாழ்க்கை என்பன சில உதாரணங்கள்

ஒவ்வொரு கதைகளிலும் அந்தக் கதை நடைபெறும் இடம்,சூழல்,வரும் மனிதர்கள்,அவர்களின் வாழ்க்கை என பல்வேறு பரிமாணங்களை 70mmல் வாசகனுக்குக் காட்டுகிறார் டீட்டைலிங் என்பார்களே ஆங்கிலத்தில் அதைப் போல

அதனாலேயே நாமும் அதனூடே ஒன்றிப் போய் விட முடிகிறது உத்தரத்துப் பல்லியாய். ஒரு கதையைப் படித்து முடித்ததும் உடனே அடுத்த கதைக்குத் தாவ விடுவதில்லை அது ஏற்படுத்திய தாக்கம். சூயிங் கம்மைப் போல அது நம்மை மென்று கொண்டே இருக்கிறது.

நா.நாடனின் இன்னுமொரு சிறப்பு அவர் எப்பொழுதும் கைகொள்ளும் நாஞ்சில் நாட்டு மண்ணின் சொற்கள். கதை முழுதும் தோட்டத்தில் விரவியிருக்கும் புல்லைப் போல நாஞ்சில் மண்ணின் சொல்லே பரவிக் கிடக்கின்றன. தூய தமிழில் நாம் சொல்லும் டவலை "துவர்த்து" என்றே குறிப்பிடுகிறார். அனக்கம், அவயா
ன், சட்டுவம், சம்சயம் இப்படி பல சொற்கள் துருவ நட்சத்திரங்களாய் மின்னுகின்றன!

சூடிய பூ சூடற்க - தலைப்புக்கதை ஒரு அரசாங்க அலுவலகத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை விவரிக்கிறார் ஒரு பியூனின் பார்வையில், கூடவே சிகப்பு நாடாவின் அவலத்தையும். என் நண்பனின் தந்தை அரசு அலுவலர். அவர் அலுவலகத்தில் நடக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அருகிலிருந்து பார்த்தவனாதலால் இந்தக் கதையுடன் என்னால் எளிதில் ஒன்ற முடிந்தது. அதிகாரிக்குப் போட மாலை வாங்கப் போன அந்தப் பியூன் மாலையை என்ன செய்கிறான் என்பதை படித்து முடித்ததும் என் புறங்கைகள் கண்களை ஒரு முறை நீவி விட்டுக் கொண்டன.

தன்ராம்சிங் கதையில் கூர்க்காகளின் வாழ்வியல் முறையை அப்படியே படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். விளைவு நீங்கள் மறுபடி எப்போது எங்கே ஒரு கூர்க்காவைக் கண்டாலும் உங்களின் மனதில் அவரைப் பற்றி உயர்வான எண்ணம் மட்டுமே வரும். அலுவலக நேரம் முடிந்து எல்லோரும் போன பின் விழிக்கும் அவர்களின் உலகத்தில் தான் எத்தனை சுவாரஸ்யங்கள், வலிகள், வேதனைகள். கூர்க்காகள் கடிதம் எழுதி அதை உரியவரிடம் கொண்டு சேர்ப்பிக்கும் முறை இப்போது வந்திருக்கும் 2G 3G நெட்வொர்க்குக்கெல்லாம் முன்னோடி.

அவ்வளவாகச் சிறு விடுப்புகள் கூட எடுக்காது ஈராண்டுகள் தொடர்ந்து பணி புரிந்து பின் மொத்தமாய் ஒரு மாதம் விடுப்புக்கு தாய் மண்ணுக்குப் போகிறவர்கள் அவர்கள். அதிலும் பாதி நாள் பயணத்தில் கழியும். எல்லாம் இருந்தும் நம்மை எங்கே எப்போது பார்த்தாலும் எப்படி இவர்களால் நமஸ்தே சாப் சொல்ல முடிகிறது?

செம்பொருள் அங்கதம் - ஈகோ நிரம்பிய மேலாளர்,அவரின் கீழ் பணியாற்றும் பிரதிநிதி, ஒரு பயணத்தின் போது அவர்களுக்கிடையே நடைபெறும் ஒரு சிறு சம்பவமே கதை. அதை இவர் சொல்லிய, விவரித்த விதம் படித்தால் மட்டுமே உணரக் கூடியது. கதையின் முடிவு நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத ஒன்று. அதுவே என்னைப் படித்து முடித்ததும் தூங்கவிடாமல் செய்தது. ஏனெனில் இது போன்ற மேலாளர்களை நாமும் கடந்து வந்திருக்கிறோம். எப்போதும் சாயம் பூசிய முகங்களையேக் கண்டு வரும் போது திடீரென்று நிஜத்தைச் சந்தித்தால் ஏற்படும் மூச்சுத் திணறல் அது.

இந்தப் புத்தகம் நாம் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. இப் புத்தகத்தின் எழுத்துக்கள் அலமாரியில் உறங்கினாலும் எண்ணங்கள் நமக்குள்ளே ஓடிக் கொண்டே இருக்கும்.

சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்
பதிப்பகம் - தமிழினி
விலை - ரூ100
இணையத்தில் வாங்க: உடுமலை

2 comments:

  1. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மராத்தி மொழி பின்னணியில் வரும் அனைத்து சிறுகதைகளும் இத்தொகுப்பில் அருமையாக இருக்கும். வளைகள் எலிகளுக்கானவை, யாம் உண்பேம், தன்ராஜ் சிங் போன்ற கதைகள் எனது விருப்பங்கள்.

    - ஞானசேகர்

    ReplyDelete