23 Nov 2012

சமைப்பது எப்படி? - வேதவல்லி

God may send a man good meat, but the devil may send an evil cook to destroy it. - an English saying

சமைப்பது என்பது அத்தியாவசியம் என்பதில் தொடங்கி, ஒரு கலையாக மாறி இப்போது ஒரு பெரும் சுமையாகிவிட்டது. சமைப்பது கூடப் பிரச்சனையில்லை. இந்தப் பாத்திரம் தேய்ப்பது தான் மகா கொடுமை. தொலைபேசியில் அழைத்தால், அரைமணியில் சுடச்சுட இத்தாலி ரொட்டி வந்துவிடுகிறது. பாக்கெட்டை பிரித்து, வெந்நீரில் சிறிது நேரம் உமிழ வைத்தால் வேகாத பொங்கலும் சாம்பாரும் கிடைக்கிறது; சாக்லேட்டை எடுத்து பிடித்துக் கடித்தால் பசி போய்விடும் என்கிறார்கள். பதினைந்து ரூபாய் போகிறது என்பது வரை உண்மை. ஹோட்டலில் ஒரு பரோட்டா சாப்பிட்டால் ஒரு அண்டா தண்ணீர் வேண்டியிருக்கிறது. இரவு இரண்டு மணிக்கு தூக்கம் கெட்டுப் போகிறது. இந்தக் கொடுமைக்கு நாமே சோறு பொங்கி சாப்பிட்டுவிடுவது நல்லது. ஆனாலும், இந்தப் பாத்திரம் தேய்ப்பது என்பது ஒரு மகா கொடுமை என்பதில் மாற்றமில்லை.

அந்தந்த ஊர்களில் அவரவர் குடும்பங்களுக்குத் தெரிந்த பதார்த்தங்களை மட்டுமே செய்து கொண்டிருந்த நிலைமை மாறி, வெளிமாநில வெளிநாட்டு உணவு வகைகளும் சாதாரண குடும்பங்களில் சமைக்கப்படும் நிலை உருவாக காரணமாக, பெண்களுக்கான அக்கால சஞ்சிகைகள் இருந்திருக்கும் என்பது என் எண்ணம். சில சமயம் ஆர்வம் அளவுக்கு மீறி சில மகா கொடுமைகளையும் நுழைத்துவிட்டது (இங்கே பாத்திரம் தேய்ப்பதைப் பற்றிச் சொல்லவில்லை). குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக்க அரிசிமாவைப் போடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தோ தெரியவில்லை. ஆனால், பலர் தவறாகப் புரிந்துகொண்டு அதை நிரந்தரமாகவே ஆக்கிவிட்டார்கள். இது தான் மகா கொடுமை நம்பர் 2. கேட்டால், “எங்கள் பக்கத்துல எல்லாம் இப்படித்தான் சமைப்பாங்க” என்கிறார்கள். எதையும் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதே இந்நாட்டினுடைய பெரிய நோய்.



இன்றைக்கு வார மாத சஞ்சிகைகளில் வரும் சமையல் குறிப்புகள் எல்லாம் எக்ஸ்பிரிமெண்டல் ஸ்டேஜில் தான் இருக்கின்றன. ‘புதுவித’ என்ற விஷயம் ஆட்டிப்படைக்கிறது. முப்பது வகை பஜ்ஜியில் சகல காய்களிலும் பஜ்ஜி போட்டுவிட்டு, மாவு மிஞ்சிவிட்டதென்று கவலைப்படாதீர்கள். குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கும் ப்ளாட்டிங் பேப்பரை எடுத்து வட்டமாக வெட்டிக்கொள்ளுங்கள். பின் அதை பஜ்ஜி மாவில் தோய்த்து பொரித்து எடுங்கள். சற்று ஆறவிட்டு, பஜ்ஜியின் சுற்று ஓரத்தில் கத்தியால்கீறி, ப்ளாட்டிங் பேப்பரை சுருட்டி மெதுவாக வெளியே எடுத்துவிடுங்கள். பின் பஜ்ஜியினுள் சட்னியையோ , அல்லது சாஸையோ வைத்து அடைத்துவிடுங்கள். விருந்தாளிகள் புதுவிதமாக இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டுப் போவார்கள். ஸ்கூல் விட்டுவரும் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

இன்னும் சில புத்தகங்களில் வழவழா கொழகொழாவென்று பக்கம் பக்கமாக சமையல் குறிப்பு எழுதிவிடுகிறார்கள். பூரியை எடுத்துக் கொள்வோம். பூரிக்கு மாவு பிசையும்போது கவனமாக இருக்க வேண்டும். அளவான தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு மாவைப் பிசைய வேண்டும். மாவை கொஞ்சம் பிசைந்தவுடன் சிறிது ரவை தூவி மீண்டும்பிசைந்தால் பூரி மொரமொரப்பாக இருக்கும் (செய்துபார்த்துவிடாதீர்கள்). பின் அதைச் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். பின் ஒரு தட்டில்சிறிதளவு கோதுமை மாவையோ மைதாவையோ எடுத்துக் கொண்டு பிசைந்த உருண்டைகளை தட்டி, மாவில் தோய்த்துக் கொண்டு சப்பாத்திக்கு இடுவது போல் இடவும்.மாவில் தோய்த்து தோய்த்து இடுவதால், எண்ணெயில் கசடு சேர்கிறது என்று நினைப்பவர்கள் எண்ணெய்யை பூரி மாவின் மேல் தடவியும் இடலாம். இதே நேரத்தில் நீங்கள்எண்ணையை ஒரு அகண்ட வானலியில் விட்டு காயவைத்திருக்கலாம். எண்ணெய் காய்ந்தவுடன், அதில் தேய்த்த வட்டங்களை போட்டு அவை உப்பி வந்ததும் எடுத்துவிட்டால்பூரி ரெடி.

அணுவுலையில் எரிபொருள் நிரப்புவதற்கான செய்முறை போல இருக்கிறதா? இதைப் படித்து பூரி செய்பவர்கள் கண்டிப்பாக மாவில் உப்பு போட மறந்துபோவார்கள்.

தன்னுடைய மொத்த அனுபவத்தையும் ஒரே சமையற்குறிப்பில் அடுத்த தலைமுறைக்குத் தந்துவிடும் அவசரம். ஆனால் லிஃப்கோ பதிப்பதகத்தின் சமைப்பது எப்படி? புத்தகம் 20 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் விற்றுக் கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் சொல்லவந்ததை நேரடியாகச் சொல்லும் முறை தான். சமையல் புத்தகங்களை நாடுபவர்களுக்கு சமைப்பது எப்படியென்று கொஞ்சமாவது தெரிந்திருக்கும் என்று வேதவல்லி நம்பியிருக்கிறார். உதாரணத்திற்கு பூரிக்கான சமையல்குறிப்பை பாருங்கள்,
பூரி
கோதுமை மாவு – 1 ஆழாக்கு நெய் – 2 ஸ்பூன் உப்பு - கால் ஸ்பூன்
மேலே சொன்ன மூன்றையும் சேர்த்து நீர் விட்டுப் பிசைந்து பூரிகளாக இட்டு, எண்ணெயைக் காயவைத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
இவ்வளவு தான். இதை விட்டுவிட்டு.

“எழுத்துக்களை மாற்றிப் போட்டுப் பல்லாயிரக்கணக்கான சொற்களை உண்டாக்குவதுபோல இருக்கும் உணவுப் பொருள்களின் பலதரப்பட்ட சேர்க்கையால் பலவிதமான சமையல் குறிப்புகள் (Recipes) கிடைக்கும். மனிதன் மாறுதல்களை விரும்புபவன். அப்படிப்பட்டவனுக்கு வேலை செய்யவேண்டிய சக்தியைக் கொடுக்கும் உணவில் தினமும் மாறுதலே இல்லாமல் இருந்தால் அது அவனுக்கு உற்சாகத்தைத் தராது. ஆகவே, விதவிதமான சமையல் குறிப்புகளைப் பெண்கள் – குறிப்பாக, திருமணம் செய்துகொண்டு புது வாழ்வைத் தொடங்கும் இல்லத்தரசிகள் – தெரிந்து வைத்துக்கொண்டு கணவன்மார்கள் மனம் மகிழ உணவு படைத்தல் மிகவும் அவசியம். இதற்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்று நம்புகிறேன்.” என்று ஆசிரியை உரையில் எழுதியிருக்கிறார் வேதவல்லி. இவ்வரிகள் ஏதோ பெண் மட்டுமே சமைக்க வேண்டும் என்பது போல் இருப்பதை நாங்களும் (ஆம்னிபஸ்ஸர்கள்) ரசிக்கவில்லைதான். புத்தகம் எழுதப்பட்டு ஒரு தலைமுறைக் காலம் தாண்டியாயிற்று என்பதையும் மனதில் எடுத்துக் கொள்வோம். ஆகையால், மேலே சொன்ன கருத்துக்கள் ஆண்களுக்கும் சொல்லப்பட்ட அறிவுரையாக எடுத்துக் கொள்வோம்.

புதுவிதச் சமயலுக்கோ மற்று ஊர்/நாட்டுச் சமயலுக்கோ நான் எதிரியில்லை. எதைச் செய்தாலும் என்ன செய்கிறோம் என்பதைச் தெரிந்து செய்வோம். நாக்குக்கு கீழே தான் நம் உடலின் பெரும்பகுதியிருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்*.

தலைப்பு: சமைப்பது எப்படி?
ஆசிரியை: வேதவல்லி
பக்கங்கள்: 172
லிட்டில் ப்ளவர் கம்பெனி (லிப்கோ)
விலை ரூ.30
இணையத்தில் வாங்க: தமிழ், ஆங்கிலம்

பின்குறிப்பு:
இதுவொரு சீரியஸ் கட்டுரை. ஆம்னிபஸ்ஸில் எழுதும் யாரையும் கிண்டலடிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

*கடைசிப் பத்தியில் கருத்து சொல்லவில்லையென்றால் டெம்ப்ளேட்டில் ஏதோ குறைபட்ட மாதிரியே இருக்கிறது.

10 comments:

  1. தேவையான புத்தகம் தான்... ஹிஹி...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. :))

      ஒரு பயனுள்ள புத்தகத்தைத் தங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மகிழ்ச்சியடைகிறோம் ஸார்...

      நிஜமாவே ரொம்ப நல்ல புத்தகம். இதிலுள்ளதைப் பார்த்து ரசம் செய்துதான் நான் என் புகுந்த வீட்டில் நல்ல பேர் வாங்கினேன், பாஸ்கர் ரசம் வச்சா கமகமன்னு மணக்கும்னு இப்பக்கூட பாராட்டுகிறார்கள்.

      முழுமனதுடன் தங்களுக்கு இந்தப் புத்தகத்தை நானும் பரிந்துரைக்கிறேன்.

      தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள்.

      Delete
  2. "சுவை"யான அறிமுகம் ஸார்!
    போன தலைமுறை எழுத்து என்று சொன்னது முக்கியம். அந்த தலைமுறையில் பொதுவாக (ஆண்) பிள்ளைகள் சாப்பாட்டு மேசையுடன் சரி, சமையல் மேசைக்கு வருவது கிடையாது; அந்தப் பயல்கள் வேலைக்கு வெளி மாநிலம்/நாடு போனபிறகுதான் சமையல் அருமை தெரியவரும், திருதிருவென முழிக்க வேண்டிவரும் (இன்று வரை முழித்துக்கொண்டு இருக்கிற ஒருவரை சுமாராகத் தெரியும்!)
    புத்தகம் அருமை. இன்று இணையத்தில் தேடி ஒளிப்படத்துடன் இருக்கின்ற சமையல் குறிப்பைத் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது.

    பிகு:
    அந்த பிளாட்டிங் பஜ்ஜி - Intriguing!

    வாரஇறுதியில் முயற்சித்துப் பார்த்துவிடவேண்டியதுதான்!
    சிவா கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete
    Replies
    1. பிளாட்டிங் பேப்பர் பஜ்ஜி செய்யப்போகிறீர்களா?

      எண்ணையை எல்லாம் உறிஞ்சி ஓவர் ஹீட் ஆகி பஜ்ஜி வெடித்துவிடப் போகிறது சிவா, மாயக்கூத்தன் (அறுசுவை) நடராஜன் அளவுக்கு சமையலில் தேர்ச்சி பெற்றவரா என்ன என்று தெரியவில்லை...

      Don't try this at home அப்படின்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கணும்...

      இப்ப இந்த ரெசிப்பிக்காக மாயக்கூத்தன் மேல 66A பாயுமோ என்னவோ!

      Delete
    2. நன்றி சிவா.

      இந்த ஒளிப்படத்துடன் கூடிய சமையல் குறிப்புகளை தவிர்த்துவிடங்கள். அதுவும் வீடியோவாக இருந்தால் அதில் ‘வாசக அனுபவம்’ என்பது செத்தே போய்விடுகிறது. மேலும், கடுகு, உளுத்தம்பருப்பு எல்லாம் தாளித்து லாப்டாப்பில் கொட்டிவிடும் அபாயமும் இருக்கிறது. கபர்தார்! :-)

      Delete
  3. நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete
  4. பிளாடிங் பஜ்ஜி - சும்மா வெள்ளாட்டுக்கு ஸார்!
    ஒளிப்பட சமையல் குறிப்புகள் - சில நன்றாக இருக்கின்றன. வாசக அனுபவம் என்பது வயற்றிக்கு பின்புதானே! லாப்டாப்பை தள்ளியே வைக்கிறேன், நன்றி!
    முதன் முறையாக சாம்பார் வியர்த்து வியர்த்து செய்து மலைத்து போனேன்; சுவைத்தால்...அட...சாம்பார் மாதிரியேதான்...ஐ!
    அப்புறம் அம்மாவிற்கு போன் செய்து இவ்வளவு வருடங்களும் நீ இப்படித்தான் சாம்பார் வைத்தாயா என்று நம்பவே முடியாமல் கேட்டேன்...வேடிக்கையாக இருந்தாலும் நம்ம ஊர் சமையல்...எவ்வளவு வேலைங்க...சிரமமே தெரியாமல் பிடிபிடித்துக்கொண்டிருந்திருக்கிறேன்...கரண்டி பிடிக்கும் கைகளுக்கு ஒரு முத்தம் தரவேண்டும் (மோதிரமெல்லாம் சொல்லி முன்பு ஒரு முறைபோல கமிட் ஆகக்கூடாது!)

    ReplyDelete
    Replies
    1. சிவா,

      உங்க தொடர் ஆர்வம் / ஊக்கம் - ரெண்டுக்கும் நன்றி. நேரமெடுத்து பின்னூட்டமிடுவதற்கு நன்றியோ நன்றி.

      ரெண்டு விஷயம் இருக்கு:

      ஒண்ணு:

      இந்த சமையல்ன்றது கிட்டத்தட்ட பைக் ஓட்டறது போல. ஓட்டற புதுசுலதான் க்ளட்ச்சு அமுக்கினமா, எந்த கியர்ல இருக்கு, ஆக்ஸிலேட்டர் எந்த அளவுக்கு ரிலீஸ் பண்ணனும், முன்னாடி எவன் போறான், பின்னால எவன் வர்றான், சைட்ல எவன் ஓவர்டேக் பண்றான், லெஃப்டுல பண்றானா? ரைட்ல பண்றானா? ஸ்பீட் ப்ரேக்கர் வந்தா ஆக்சிலேட்டரை விடணுமா வேணாமா, பின்ன/முன்ன ப்ரேக் ரெண்டையும் சேர்த்துப் புடிக்கணுமா இல்லை முன் ப்ரேக்கை மட்டும் புடிச்சிப்பாத்தா என்னாகும்னு செக் பண்ணலாமா..... இப்படி நிறைய விஷயம் இருக்கு கவனிக்க.

      இதெல்லாம் ஆரம்பத்துலதான்.

      ஓட்டிப்பழகின பிறகு இந்த விஷயம் எல்லாமே உங்களுக்குத் தன்னால கைவந்துடும். எல்லாத்துக்கும் தனித்தனி கவனம் செலுத்த அவசியம் இல்லை. மைண்ட் தன்னால எல்லாத்தையும் உங்களைக் கேக்காமலேயே கவனிக்கத் தொடங்கிடும்.

      சமையலும் அதே அதே!

      விஷயம் ரெண்டு: எங்க அம்மா சொல்லுவாங்க. இந்த ரெசிபி எல்லாம் ரொம்ப அவசியம்தான். ஆனா பாருங்க. நாலு பேர்கிட்ட ஒரே ரெசிபி ஒரே மாதிரியான அடுப்பு கொடுத்து “டிட்டோ” ஒரே கால அவகாசத்துல இதை சேக்கறது, அதை சேக்கறது, ஒரே அளவு ஃப்ளேம் வெச்சு ஒரே நேரத்துல ஒரே மாதிரி சமைச்சு முடிக்கச் சொல்லுங்க. நாலும் நாலு சுவையா இருக்கும்.

      You know the reason? Mind plays a game there. இதை vibration'ன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசியும் விளக்கலாம். இருந்தாலும் என் அம்மாவின் வார்த்தைகளில் சொன்னா, ”ரெசிபியில “அன்பு” அப்படின்னு ஒரு இன்க்ரேடியண்ட் இருக்கு. அதை சேர்க்கும்போது சேரும் சுவைதான் அம்மாவின் கைப்பக்குவம்”.

      அந்தே விஷயமுலு....

      Delete
  5. நன்றியெல்லாம் எதற்கு கிரி? வேலை மெனக்கெட்டு இவ்வளவு புத்தகங்கள் அறிமுகம் செய்கிறீர்கள், அதுவும் தினமும். எவ்வளவு நன்றி நாங்கள் சொல்லணும்!

    அம்மா சமையலை நினைவுபடுத்திட்டிங்க. Divine...
    சமையலை பைக் ஓட்டுகிறது மாதிரிதான். ஆனால் இரண்டையும் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கவேண்டும். நடுவில் விட்டோமானால் மறுபடியும் தொடர்கிறது சற்று சிரமம்!

    ReplyDelete
  6. /// குழம்பு நீர் மாதிரி இருந்தால், அதைக் கெட்டியாக்க அரிசிமாவைப் போடும் பழக்கம் எப்போது ஆரம்பித்தோ தெரியவில்லை. ஆனால், பலர் தவறாகப் புரிந்துகொண்டு அதை நிரந்தரமாகவே ஆக்கிவிட்டார்கள்.///

    அதானே! கார்ன் ஃப்ளோர் போடாம அரிசி மாவைப் போயா போடுவது :))

    // வெந்நீரில் சிறிது நேரம் உமிழ வைத்தால் //

    :)))

    போகிற போக்கில் ஒரு எழுத்தை மாற்றிப் போட்டு, தெரியாத மாதிரி போய்க்கொண்டே இருக்கும் காமெடி கலக்கல்!

    ரெண்டு இட்லி விலையில் 172 பக்கம் எப்படிக் கட்டுபடியாகிறதோ?

    ReplyDelete