3 Jan 2013

பேரழிவு - ஜேரட் டயமண்ட்

நாகரிகங்களின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணங்கள் என்ன என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வரும் ஒன்று. ஜாரட் டயமண்டை விமரிசிப்பவர்கள் அவரை environmental determinist என்று குற்றம் சாட்டுகிறார்கள். அவரது Collapse என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் இதில் துளியும் நியாயமில்லை என்று சொல்வார்கள். சூழியல் - நம் புறச்சூழல் நமக்கு எத்தகைய வளர்ச்சி சாத்தியப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது என்று அவர் சொல்கிறார் என்பது உண்மைதான். புறச்சூழல் சீரழிவு மண்ணை வாழ்வதற்கில்லாததாக ஆக்கிவிடுகிறது, அதனால் அழிந்த சமூகங்கள்  ஏராளம் என்று சொல்பவர் அவர் மட்டுமல்ல. ஆனால், ஏறத்தாழ அனைத்து சமூகங்களும் அழியக் காரணம் சூழியல் பிரச்சினைகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாததுதான் என்று அவர் சொல்வது பிற துறையினரால் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. வணிகம், தனி மனித விருப்பு வெறுப்பு, அரசியல் வியூகங்கள் என்று ஏராளமான காரணங்களைப் பலரும் முன்வைக்கிறார்கள். ஆனால் டயமண்ட் சூழியல் காரணிகளையே பிரதானப்படுத்துகிறார்.

கம்யூனிஸ்டுகளுக்கு காரல் மார்க்ஸ் மாதிரி எனக்கு ஜாரட் டயமண்ட். மார்க்ஸுக்கு ஒரு தாஸ் காபிடல் என்றால் டயமண்டுக்கு கொலாப்ஸ். அதை நான் விடாமல் புகழ்ந்ததை கேட்டு என் சகோதரர் ஒருவர் புத்தகத்தையே வாங்கிக் கொடுத்துவிட்டார். இது என் கைக்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் ஆனபின்னும் இன்றும் படித்துக் கொண்டிருக்கிறேன். துப்பறியும் கதைகள் போல் சுவாரசியமானவை இதில் உள்ள கதைகள். இதில் உள்ள விஷயங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அந்த வகையில் எழுதப்பட்டதுதான் யாமாகிய திகோப்பியா. விரிவான பதிவு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், டயமண்ட் எத்தனை புதிய விஷயங்களைச் சொல்கிறார் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு சான்று.

கொஞ்சம் போரடிக்கும் என்றாலும் ஜாரட் டயமண்ட் நாகரிகங்களின் பேரழவுக்கான காரணிகள் எவை என்று பட்டியலிடுகிறார், அதைப் பார்ப்பதில் பயனுண்டு. அவர் சொல்லும் அத்தனை காரணிகளையும்விட, சூழியல் மாற்றங்களால் ஏற்படும் சவால்களை ஒரு சமுதாயம் எப்படி எதிர்கொள்கிறது என்பது அதன் இருப்பைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது என்று சொல்கிறார். டயமண்ட் பற்றி பேசும்போது இதை நாம் மறக்கக் கூடாது.

ஒரு குறிப்பிட்ட மக்கள் தங்கள் சூழலைத் தாங்கள் அறியாமல் சீரழிக்கலாம். அந்தச் சீரழிவுக்கு அவர்கள் தங்கள் வளங்களைச் சூறையாடியது ஒரு காரணமாக இருக்கலாம், அல்லது அங்கே வளரும் மக்கள் தொகைக்குத் தேவையான இயற்கை வள போதாமை இருக்கலாம். ஆனால் முடிவில் சூழியல் சீர்கெட்டு அந்த சமுதாயம் அல்லது நாகரிகம் அழிகிறது. இதற்கு நேர் மாறாக இயற்கையாக ஏற்படும் சூழியல் மாற்றங்கள். பூமியின் வரலாற்றில் தட்பவெப்பநிலை மட்டுமல்ல, மழை வறட்சி என்று மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்திருக்கின்றன. ஓரளவு தங்கள் வளங்களைத் தக்க வைத்துக் கொண்ட சமூகங்கள்கூட தொடர்ந்த வறட்சியைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால், விளிம்பில் இருப்பவர்களை மூன்று நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பொய்க்கும் மழை அழித்துவிடும்.

போராலும் நாகரிகங்கள் அழிகின்றன. ஆனால் இங்கும்கூட தொடர்ந்து தன் எதிரிகளை சமாளித்துவந்த நாகரிகங்கள் ஏன் திடீரென்று வீழ்கின்றன என்ற கேள்வி எழுப்பப்பட வேண்டும் - இதற்கும் தோற்ற நாகரிங்கள் தங்கள் சுற்றுப்புறச் சூழல், இயற்கை வளங்களை சீரழித்திருக்கலாம், அல்லது இயற்கையாகவே இரு எதிரிகளுக்கு இடையில் இருந்த சமன்பாடு குலைந்திருக்க்லாம் என்கிறார்  டயமண்ட். உதாரணத்துக்கு ரோமானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு சூழல் மாற்றங்களும் காரணமாக அமைந்திருக்ககூடும் - ஸ்டெப்பி புல்வெளிகள் செழிப்பாக வளர்ந்த காரணத்தால் குதிரை வளர்ச்சி, குதிரை பயிற்சி, குதிரைப் படை என்று ரோமானியர்களின் எதிரிகளின் வளங்கள் கூடியிருக்கலாம். எதிரிகளின் வலிமை கூடியது ஒரு காரணமாக இருந்தால், நண்பர்கள் வலுவிழந்து போவது இன்னொரு காரணமாக இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் எண்ணை வளங்கள் உலக நாடுகளுக்குக் கிடைக்க முடியாமல் போனால், இப்போதுள்ள வளர்ச்சி தொடருமா என்பது ஐயம்தான். குறைந்த வளங்களால் ஏற்படும் பிரச்சினைகளை எதிர்கொள்ள போர் ஒரு இயல்பான எதிர்வினையாக இருக்கும். இதில் இன்றுள்ள மனித நாகரிகமே அழிந்தாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை.


மேலே சொன்ன விஷயங்கள் வாசிக்கவே மிகவும் அலுப்பூட்டும் புத்தகமாக இதைச் சித்தரிக்கலாம். ஆனால் அப்படியில்லை. ஒரு சிறந்த துப்பறியும் கதையைப் போல் அழிந்த நாகரிங்களைக் கொன்றது எது என்ற கேள்விக்குத் தன் பதிலை முன்வைக்கிறார் டயமண்ட். நாம் ஈஸ்டர் தீவில் உள்ள பிரம்மாண்டமான சிலைகளைப் பார்த்திருப்போம். எரிக் வான் டானிகன் அவை ஏலியன்களால் எழுப்பப்பட்டவை, அல்லது ஏலியன் தொழில்நுட்பத்துடன் எழுப்பப்பட்டவை என்று சொல்கிறார். ஆனால் டயமண்ட் அந்த தீவில் உள்ள தடயங்களைக் கொண்டு, அந்த தீவின் மக்கள் காடுகளை அழித்ததாகவும், அதனால் ஏற்பட்ட பஞ்சத்தில் போரும் பேரழிவும் ஏற்பட்டதாகவும் விவரிக்கிறார். இந்தச் சிலைகள் குறித்து அவர் தரும் தகவல்களையும், ஈஸ்டர் தீவில் இருந்தவர்களுக்கு என்ன ஆயிற்று என்பது பற்றிய இவரது முடிவுகளையும் ஏற்றுக் கொள்ள விரும்பாதவர்களும் இந்த அத்தியாயத்தின் சுவாரசியமான, எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய கதைசொல்லலை விரும்புவார்கள்.

தென் அமெரிக்க்காவின் அனசாஸி மற்றும்ம் மாயன் நாகரிகங்கள் அழிய இயற்கை வளங்களை சுரண்டுதல், தட்பவெப்ப நிலை மாற்றம், மக்கள் தொகை வளர்ச்சி, அன்னியர் படையெடுப்பு என்று பல காரணிகளைப் பட்டியலிட்டாலும், சூழியல் சீர்கேடே அத்தனையையும்விட பேரழிவுக்கு முக்கியமான காரணமாக இருந்தது என்கிறார் டயமண்ட். இதில் மாயன் நாகரிகம் குறித்த அத்தியாயம் மிகச் சிறந்த ஒன்று. கிரீன்லாந்து மற்றும் ஐஸ்லாந்து ஒரே சூழலைக் கொண்டிருந்தாலும் அதை இரு வேறு மக்களும் வெவ்வேறு வகைகளில் எதிர்கொண்டதால் ஒன்றில் வாழ வழியில்லாமல் போகிறது, மற்றொன்றில் வளங்களைப் பெருக்கிக் கொள்வதும்கூட சாத்தியப்படுகிறது. இதே போல் டொமினிகன் ரிபப்ளிக் மற்றும் ஹெய்தி குறித்த விவரணையும் அற்புதமான ஒன்று. ஒரே தீவின் இரு வேறு தேசங்கள் இவ்விரண்டும். டொமினிகன் ரிபப்ளிக் சர்வாதிகார அரசுகளின் ஆட்சியில் இருந்தாலும் அதன் இயற்கை வளங்கள் காப்பாற்றப்பட்டன, ஆனால் மக்களாட்சி இருந்த ஹெய்தி தன் இயற்கை வளங்களை முற்றிலும் அழித்தது. இன்று டொமினிகன் ரிபப்ளிக் வளமாக இருக்கிறது, ஹெய்தி உலக நாடுகளின் கொடையை நம்பியிருக்கிறது.

கிரீன்லாந்து மற்றும் ஹெய்தி குறித்த அத்தியாயங்கள் தவறவிடக் கூடாதவை. டயமண்ட் இயற்கை வளங்களை சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிக்கிறார் என்பது வேண்டுமானால் ஒரு காத்திரமான குற்றச்சாட்டாக இருக்கலாம். ஆனால், விவரமறியாத சிறு விவசாயிகள் காடுகளை அழிக்க மாட்டார்கள் என்று எந்த விதியும் இல்லை - பொறுப்பாக நடந்து கொள்ளும் பன்னாட்டு நிறுவனங்கள் இயற்கை வளங்களைக் காப்பாற்றாது என்று திட்டவட்டமாகச் சொல்லவும் இடமில்லை.

இன்று வாசிக்க மிகச் சிறப்பான புத்தகங்கள் சூழியல் குறித்த புத்தகங்களாகவே இருக்கின்றன. இவற்றில் விவரிக்கப்படும் சிக்கல்களும் முன்வைக்கப்படும் தீர்வுகளும் மிகுந்த மனவிரிவை அளிப்பன, மன அழுத்தத்தையும்தான் - ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை.


Collapse: How Societies Choose to Fail or Succeed:
Jared Diamond
Penguin Books

image credit: Amazon, Discovery

2 comments:

  1. Replies
    1. தங்கள் தொடர்ந்த ஊக்குவிப்புக்கு நன்றி திரு நடராஜன் வேங்கடசுப்ரமணியன்.

      Delete