1 Apr 2013

Fifty Shades of Grey - E L James

பதிவர்: பைராகி 



கடந்த வருடம் விற்பனையில் சக்கைப்போடு போட்ட புத்தகம் Fifty shades of Grey எனும் நாவல். இதன் வெற்றியைத் தொடர்ந்து தொடர் நாவல்களாக Fifty shades darker , Fifty shades freed வந்து வசூலில் அள்ளிக் குவித்தன. விமர்சகர்களும் இலக்கிய உலகின் ஜாம்பவான்களுக்கும் ஆச்சர்யம். படித்த அனைத்துத் தரப்பினரும் ஒட்டுமொத்தமாக 'கொலைக் கதையின் சிகரம்' எனப் புகழ்ந்து தள்ளினர். சிலர் இதைப் போன்ற காதிக் நாவல் (gothic) வந்ததில்லை என அதிர்ந்தனர். பிரபலமடையும் எழுத்துகளை சொந்தங்கொண்டாட விரையும் விஷமிகளும் நிறைந்தனர். ரஷ்யாவில் நடாஷா பெட்ரோய்க்கா எனும் எண்பது வயது மூதாட்டி நாவலில் சொல்லப்பட்ட கொடூரமான கொலை சம்பவம் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று என ஆதாரங்களோடு பேட்டி கொடுத்தார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகை கசாண்ட்ரா க்ரே நாவலுக்குத் தடை வாங்க கோர்ட்டு படி ஏறினார். எழுதிய E.L.Jamesக்கே பெரும் அதிர்ச்சி.

மைக்கெல் ஓல்பெக்கை (Michel Houellebecq) தனது ஆதர்சமாகக் கொண்ட இளம் தமிழ் எழுத்தாளர் ஆபேஷ் இது பற்றி 'இடஞ்சுழி'' எனும் சிற்றிதழில் எழுதிய விமர்சனத்தில்:

'காலமிடறிய உதிர்தல் பருவத்தின் கூடுகை பொழுதில் ரோமம் கருகி நிணம் உருகும் வாசம் காற்றில். பித்தனின் பித்தேறிய கண்கள் துருவ நட்சத்திரத்தை வெறித்துக் கிடந்தன. மேல்நோக்கி குத்திட்டுக் கிடந்த க்ரேயின் விழியில் காமத்தின் அண்டகண்டார காத்திருத்தலும், வெறுப்பின் உச்சகட்ட ராட்ஸச நடனமும் பதிவிருக்கும்.'

பெளர்ணமி நிலவின் நிழலை முகரும்போதெல்லாம் அவனது நரம்புகள் முறுக்கேறும். சிதைவுபட்ட கட்டிடங்களில் வாசம் செய்வான். முதிர் கன்னிகளை வேட்டையாடும் ரெட் எனும் குழுவினருக்கும், கன்னி ரத்தம் குடித்து தாகசாந்தி செய்யும் க்ரேவுக்கும் நடக்கும் போராட்டங்கள் கதையின் மையம்.

கதை நாயகன் க்றிஸ்டியன் க்ரே. பகலில் கணக்குப்பிள்ளையாக வேலை பார்த்து வருபவன். இரவில் அவனது ஆட்டங்கள் மிகவும் அமானுஷுயமாக இருக்கின்றன. ரோமக் கரங்களுடன் கோரப் பற்களுடன் ஊரைப் பயமுறுத்துவான்.

சாம்பல் நிறத்தின் சாயங்கள் எண்ணிலடங்காதவை. அவற்றில் ஐம்பதைத் தேர்ந்தெடுத்து இரவு வானத்தின் நிறத்தைப் பொருத்து க்ரேயின் குணாதிசயம் மாறும். பதினைந்து திதியைகளில் பதினைந்து விதமாக உருமாறுவான். காதலி எலிசாவை பகலில் காதலித்தாலும், இரவில் பல கன்னிப் பெண்களை வேட்டையாடுவான். இதனால் அவன் வாழும் நகரம் முழுதும் சாபத்தின் கொடும் கரம் தாண்டவமாடியிருக்கும். அமாவாசை கும்மிரவில் அவனது தகிப்பு அடங்கியிருக்க, அன்று மட்டும் ஓவர்டைமில் வேலை பார்ப்பான்.

ஆனால் இப்படியே வாழ்க்கையை கடத்திவிட முடியுமா? அவனது இருள் ஆட்டங்களுக்கு முடிவு வருகிறது - ஒரு கொடூர கொலையின் சாட்சியாக ஆகும்போது. கதையின் முக்கிய திருப்பம் என்பதால் இதைச் சொல்லி வாசகர்களை ஆர்வமிழக்கச் செய்ய விருப்பமில்லை.

க்ரேயின் காதலி ஆன்னா. காதலனின் மனவிகாரங்கள் தெரியாமல் பழகுபவள். ஒரு கட்டத்தில் க்ரேயின் கருவை சுமக்கிறாள். பத்து மாதங்கள் ஆன்னாவை படுத்தி எடுக்கிறது குழந்தை. அவள் வயிற்றை ஆசையோடு தடவிப்பார்க்கும்போதெல்லாம் உள்ளிருந்து நகத்தால் கீறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் க்ரேயின் இரவு வாழ்க்கையின் வாரிசாக மாறுகிறது. ஆன்னா மயக்கம் வருவது போல் தூங்கிய இரவுகளில் க்ரேயிடம் பாடம் கற்றுக்கொள்கிறது. அடுத்த நாள் காலையில் ஆன்னா பச்சை நிறத்தில் வாந்தி எடுப்பாள் - கோழை வாயோடு ஒழுகும் பச்சை திரவத்தை துடைக்கத் துடைக்க அவளது முகம் விகாரமாக மாறும். அவள் மயக்கம் அடையும்வரை இது தொடரும். உணவுக்காக நம்பியிருக்கும் தாயை சாவின் விளிம்புக்குத் தள்ளிக் காப்பாற்றும். குழந்தையை கொடூரமாகக் காட்டிய முதல் நாவல் இதுவாகத்தான் இருக்கும்.

மனிதனின் கீழ்மை அனைத்தையும் ஒட்டுமொத்தமாகக் காட்டிய க்ரேயின் பாத்திரப்படைப்பு நாவல் முடிந்தபின்னும் நம்மை விட்டு அகலாமல் இருக்கிறது. ஊரின் ஒவ்வொரு வீட்டுக் குடும்பங்களும் அழிந்து வரும் சித்திரம் நம்மை பதட்டமடையச் செய்கிறது. அதுவும் இதெல்லாம் இரு மனங்களின் கழிவு எனப் புரியும்போது நம் வயிறு கலங்குகிறது. அதுவும் Fifty shades darker என அடுத்த நாவலில் குழந்தையின் ஆட்டம் எப்படி இருக்குமோ என பயம் தொற்றிக்கொள்கிறது.

Fifty Shades of Grey | E L James | Arrow Publishers | 528 Pages | Rs.399 | இணையத்தில் வாங்க

3 comments:

  1. நீங்கள் சொல்லும் எந்த விஷயமும் நாவலில் இல்லை. தயவு செய்து நாவலை படித்து விட்டு விமர்சனம் எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. டியர் ஸ்டாலின்,

      தயவுசெய்து மீண்டும் ஒரு முறை, இந்த பதிவின் தேதியைப் பார்த்துவிடுங்கள்.

      நன்றி

      Delete
    2. ஸார், இது ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான சிறப்பு பதிவு.

      "ரஷ்யாவில் நடாஷா பெட்ரோய்க்கா எனும் எண்பது வயது மூதாட்டி நாவலில் சொல்லப்பட்ட கொடூரமான கொலை சம்பவம் தனது சொந்த வாழ்வில் நிகழ்ந்த ஒன்று என ஆதாரங்களோடு பேட்டி கொடுத்தார்."

      "பத்து மாதங்கள் ஆன்னாவை படுத்தி எடுக்கிறது குழந்தை. அவள் வயிற்றை ஆசையோடு தடவிப் பார்க்கும்போதெல்லாம் உள்ளிருந்து நகத்தால் கீறிவிடுகிறது."

      முதலான அபத்தங்கள் இந்தப் பதிவு சீரியஸாக வாசிக்கப்படுவதிலிருந்து காப்பாற்றும் என்று நினைத்தோம்... இல்லை போலிருக்கிறது.

      Delete