31 May 2013

வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்

’இந்நூலைத் தொடுபவன் என்னைத் தொடுகிறான்’ என்றார் ஓர் எழுத்தாளர் . இச்சிறு நூலைப் பற்றி அதைச் சொல்லத் துணிவேன் - முன்னுரையில் ஜெயமோகன்
நனவிடைதோய்தல் என்ற வார்த்தையை சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வியுற்றேன். Nostolgia என்பார்கள் ஆங்கிலத்தில். பழைய நினைவுகளை அல்லது அனுபவங்களை அசைபோடுதல். சினிமாவில் கொசுவத்தி சுழற்றுவார்கள். தூர்தர்ஷனில் மலரும் நினைவுகள் என்று சொல்லுவார்கள். பொதுஜன உதாரணம் என்றால் சுஜாதாவின் ”ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்” ஒரு நல்ல உதாரணமாகச் சொல்லலாம்.

நனவிடைதோய்தல் எழுதுதல் தனிக்கலை. அது எல்லோருக்கும் நன்றாக வாய்த்துவிடுவதில்லை. இது எல்லோருக்கும் சாத்தியம்தான். எழுத்து சாத்தியப்படுபவனுக்கு மட்டும் தனிரூட்டிலா வாழ்க்கை நடக்கிறது? தத்தமது தோழமை வட்டத்தில் விழிவிரியப் பகிருவதுடன் நிறைந்து போகின்றது இங்கே பலரது நனவிடைதோய்தல்கள். எழுத வாய்த்தவன் வார்த்தைகளில் அதைக் கொஞ்சம் தன் சரக்கையும் சேர்த்துவிட்டுத் தோய்த்துவிட முடிகிறது.


30 May 2013

சொல்முகம் - ஜெயமோகன்

சிறப்புப் பதிவர் - R.கோபி

பூவிடைப்படுதல் என்ற தலைப்பில் 2011 டிசம்பர் மாதக் கடைசியில் ஜெமோ சென்னையில் குறுந்தொகை குறித்து ஒரு உரை_நிகழ்த்தினார்.  அதைக்கேட்கும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்க்கவில்லை. ஆனால் அதுபற்றியஒரு முன்னோட்டத்தை அந்த வருடத்தின் டிசம்பர் மாத மத்தியில்அறிந்துகொள்ள முடிந்தது.

அது ஒரு மறக்க முடியாத நாள். எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு அந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டிருந்த மாலைப்பொழுது. விழா இனிதே நிறைவுற்றதும் இரவு ணவிற்குப் பின் ஜமா கூடியது. ஜெமோ தங்கியிருந்த அறையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

நள்ளிரவிற்கு மேல் காலாறக் கோவை சந்திப்பைச் சுற்றியிருந்த தெருக்களில் சுற்றியலைந்தோம். கவிதைகள் பற்றிப் பேச்சு திரும்பியபோது இந்த உரை குறித்துச் சில விஷயங்களை ஜெமோ பகிர்ந்துகொண்டார்.' நீர்முள்ளிபற்றி அவர் சொன்னவை இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

எப்போதேனும் இந்த உரை புத்தக வடிவில் கிடைத்தால் வாங்கிவிடுவது என்று அப்போதே முடிவு செய்திருந்தேன்.  'சொல்முகம்என்ற தலைப்பில் நற்றிணை ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. வசீகரமான தலைப்பு. ஜெமோ ஆற்றிய சில உரைகளின் எழுத்து வடிவம். இந்த ஏப்ரல் மாதம் வாங்கினேன்.நேற்றுப் படித்து முடித்தேன். உரைகளின் எழுத்து வடிவத்தைப் புத்தகத்தில் படிப்பது ஒரு அலாதி இன்பம்.


29 May 2013

நாவல் கோட்பாடு - ஜெயமோகன்



வ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் புது எழுத்து இயக்கத்தைத் தோற்றுவிக்கும். அந்தந்த புத்தக எழுத்தாளர்களுக்கு அவர்களது எழுத்தின் பாதிப்பு இன்னின்னது என எழுதும்போது தெரியாது. கா.நா.சு-வின் பொய்த்தேவு, புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஜெயமோகனின் காடு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தின் புனைவு மையங்கள் திட்டவட்டமான மாற்றங்களைக் கொண்டுள்ளன. தமிழ் சூழலில் நாவல் எனும் வடிவத்தை முன்வைத்த ஆரம்ப கட்ட படைப்பாக பொய்த்தேவு நாவலையும், சராசரித்தனம் ஏதுமில்லாமல் புது எண்ணங்களின் வீச்சை முன் நடத்தக்கூடிய ஜே.ஜே எனும் ஆளுமையின் சித்திரம் கொண்ட படைப்பாகட்டும், கவித்துவ ரசனை எழுத்தை புனைவின் சாத்தியங்கள் கொண்டு படைப்பாக்கிய காடு நாவலாகட்டும் எல்லாமே தமிழ் படைப்பு உலகத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியவை.

சிறுகதைகளில் நாம் செய்துபார்த்த புதுமைகளிலிருந்து மிகக் குறைந்த சதவிகிதமே நாவல் உலகில் வெளிப்பட்டுள்ளது. நாவலில் காட்டிய பாய்ச்சலில் மிகச் சொற்பமான பங்கு குறுநாவல்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுப்புகள் மேற்கு இலக்கிய உலகிலிருந்து கிளைத்தவை என்றாலும் இலக்கியத்தின் தரப்பகுப்பாய்வுக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் விமர்சனத்துறை அதிக வளர்ச்சி அடையவில்லை எனப் பொதுவான எண்ணம் நிலவுகிறது. அது ஓரளவுக்கு உண்மை என்றாலும், ஏற்கனவே நம்முன் இருக்கும் இலக்கிய தரங்களை நாம் எந்தளவு மதித்து வருகிறோம் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.

28 May 2013

மீதி வெள்ளித்திரையில் - தியடோர் பாஸ்கரன்

சிறப்பு பதிவர் -கிருஷ்ணகுமார் ஆதவன்

சினிமா எவ்வாறு சமூகத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது? மக்களுக்கும் சினிமாவுக்குமான உறவுமுறை என்ன? மேலும், ஒரு திரைப்படம் எப்படி பார்க்கப்பட வேண்டும்? - இது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்புவதுடன் தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களையும் அலசும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

இந்த நூல் வழியே தியடோர் பாஸ்கரன் தன்னுடைய தனித்த பார்வையின் மூலம் சில முக்கிய விழுமியங்களை வாசகனுக்கு உருவாக்கித் தருகிறார். திரைப்பட வரலாறு, சினிமா அழகியல், ஆளுமைகள், திரைப்படங்கள் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் முக்கியமானவை.

ஏன் முக்கியமானவை? 

27 May 2013

காகித மலர்கள் - ஆதவன் - 1977

சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா

எழுத்து எனக்கு ஒரு அலங்காரச் சேர்க்கையல்ல. யாரையும் பிரமிக்கச் செய்வதற்காகவோ, யாராலும் ஒப்புக்கொள்ளப் படுவதற்காகவோ நான் எழுதவில்லை. இது பொழுதுபோகாத பணக்காரன் வளர்க்கும் நாயைப்போல் அல்ல (நன்றி: Snap Judgment

முன்னெச்சரிக்கை: முதலிலேயே சொல்லிவிடுகிறேன். முழுக்க முழுக்க ரசித்துச் சிலாகித்துப் படித்த புத்தகம் இது என்பதால் இந்தக் கதை பற்றி எதிர்மறையாக நான் ஒரே ஒரு எழுத்தையும் இங்கே எழுதப் போவதில்லை. முழுவதும் ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் என்று நான் எழுதியிருப்பது உங்களுக்கு ஒரேயடியாக போரடித்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, ஆதவனே பொறுப்பு.

தைத் தலைப்புடன், ஆசிரியர் பெயருடன் கதை எழுதப்பட்ட வருடத்தையும் மேலே குறிப்பிட வேண்டிய அவசியம் என்னவென்றால், விமர்சனம் படிப்பவர்கள் தற்போதைய காலகட்டத்தில் வெளிவந்த நாவல் இது எனக் கருதி விடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஒற்றை வரியில் சொல்வதானால் டில்லியில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை மதிப்பீடுதான் கதை.

வெவ்வேறு குணாதிசயம் கொண்ட மூன்று சகோதரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு வேண்டிய மற்றும் வேண்டாத நபர்கள் என இவர்களைச் சுற்றியே கதை வளைய வருகிறது. நாகரிகம் என்னும் பெயரால் ஒவ்வொருவரும் (பாத்திரங்கள்) செய்யும் பாசாங்குகள், அவை அவர்களுக்குத் தரும் திருப்தி அல்லது சலிப்பு, நாகரிக வாழ்க்கை குறித்த அவர்களது மதிப்பீடுகள் இவையே கதையின் மைய இழையாக இருக்கின்றது.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த சேதன் பகத் எழுதிய ‘one night at call centre"ன் சில காட்சிகளை 77’ல் வெளிவந்த இந்தக் கதையின் காட்சிகளோடு (கதை, கதாபாத்திரங்களோடு அல்ல) ஒப்பிடும்போது அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் தருவதாக இருக்கிறது. குறிப்பாக...பெண்கள் ரெஸ்டரண்டில் பீடி பிடிப்பது.... ஓ! ஸாரி.. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, pre-marital sex (தமிழில் எழுத கூச்சமாயிருக்கு போங்கப்பா :) ).

இவையெல்லாம் அப்போதே... அந்த 70’களிலேவா? (அப்பாடா! டில்லியில்தான்). ஆனால் பாருங்கள், ஆதவன் இவ்விஷயங்களைக் கையாண்டிருக்கும் விதத்தால் மக்கள் யாரும் அவரை சேதன் பகத் அளவிற்கு எதிர்த்து அல்லது ஆதரித்துப் பிரபலம் ஆக்கவில்லை போலும்.

டில்லி மாநகரின் இடங்களை விவரிப்பதில் மாநகருடன் கதாசிரியருக்கு இருக்கும் பரிச்சயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. (சுஜாதாவின் சில கதைகளைப் படித்தால் பெங்களூருவின் கீ-ப்ளான் உங்களுக்குக் கிடைக்கும்)


மனோதத்துவ நிபுணர் போல் கதாபாத்திரங்களின் மனவோட்டங்கள்; சமூக அக்கறை கொண்ட விஞ்ஞானி போல் செயற்கை உரங்கள், அதன் தொழிற்சாலைகளால் மண்ணுக்கும், மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்படும் கேடுகள்; ஒரு தேர்ந்த அரசியல் விமர்சகர் போல் அரசாங்கம், அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் என ஆதவனின் ஆல்-ரவுண்ட் பர்ஃபார்மன்ஸில் கதையை ரசிக்க முடிகிறது.

அரசாங்க அலுவலகத்தில் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரைக்கும் அனைவரது செயல்பாடுகள் அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள், புறக்கணிப்பு என விளக்கமாக எழுதியிருக்கிறார் ஆதவன். பல்வேறு துறைகள் பற்றி, விஷயங்களைப் பற்றி கதாபாத்திரங்களின் விவாதங்கள்  சிந்தனைகள் மூலம் தம் கருத்துகளைப் பதிவு செய்வதைப் படிக்கும்போது பல்வேறு துறைகளைப் பற்றிய கதாசிரியரின் ஆழ்ந்த ஞானம் நம்மை நிச்சயம் வியக்க வைக்கிறது என்றால்; இதில் எங்கும் தன் சிந்தனைகளை, யாரோ இருவரின் சம்பாஷனை அல்லது விவாதம் வழியே நம் மீது வலிந்து திணிக்காமல் கதையோட்டத்தோடே கொண்டு செல்லும், சொல்லும் பாங்கில் ஆதவனின்... மேதைமை என்றழைக்கலாமா அந்த பண்பை... அது நிச்சயம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது அதில் பிடித்த சிந்தனையைத் தூண்டும் வரிகளை அடிக்கோடிட்டு திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அப்படிப்பட்டவர்கள் அடிக்கோடிட வேண்டும் என்று ஆரம்பித்தால் சில இடங்களில் பக்கம் பக்கமாக (முழுப்பக்கங்களையும்) அடிக்கோடிடும் அவசியம் ஏற்படும்.  Random-ஆக பிரித்து ஒரு பக்கத்திலிருந்து நான்கு வரிகளும் அதிக பட்சம் பக்கம் முழுவதையும் select செய்யலாம்.

என்னைப் பொருத்தவரையில் லைப்ரரியில் எடுத்த புத்தகம் இது என்பதால், அடிக்கோடிடும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. அதனால் புத்தகம் வாசித்து முடித்த பின் மேலே சொன்ன அதே random முறையில் புத்தகத்தை book cricket விளையாடும் பாங்கில் அங்கங்கே பிரித்த இடத்தில் பிடித்த வரிகளைக் குறிப்பிடுகிறேன்.

பெண் சிந்தனையால் அணுகப்பட வேண்டியவள்...... சிந்தனைக்கு முதலில் விடுதலையளித்து விட வேண்டும். அவள் உருவாக்குகிற பிரமைகளில் ஏமாறும் முட்டாளாக வேண்டும். புலப்படாதவை புலப்படுவது போலவும், புலப்படுவது புலப்படாதது போலவும் பாசாங்கு செய்ய வேண்டும். 
இயற்கையின், சூழ்நிலைகளின் இயல்பு ஒழுங்கீனம்தான். மனிதன் இவற்றிலிருந்து ஒழுங்கை உருவாக்க முயல்கிறான்.
ஒரு சாராரைப் பற்றி உருவாகும் பிம்பத்திற்கு அந்தந்த சாரார் பொறுப்பாளி என்பது உண்மையோ இல்லையோ! ஆனால் மக்கள் தாம் விரும்புகிற ரூபத்தில் - பிம்பத்தில் பிறரைக் காண்கிறார்கள் என்பது மிகவும் உண்மை 

வெவ்வேறு சூழ்நிலைகளில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு முடிவிற்காக வெவ்வேறு விதமான முடிவுகளை ஒரே சமயத்தில் ஏற்படுமாறு முடித்திருக்கிறார் ஆதவன். எனினும், அந்த முடிவு அத்தியாயம் எழுதிய விதத்தில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார். 

காகித மலர்கள் | ஆதவன் | உயிர்மை | இணையம் மூலம் வாங்க: உயிர்மை

26 May 2013

தாயார் சன்னதி - சுகா

சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன்

தாயார் சன்னதி பற்றி என்ன சொல்வது? யோசித்தால் என்னென்னவோ தோன்றுகிறது, ஆனால் யோசிக்காமலே வரும் எண்ணம் இதுதான் - நான் கடைசியாக படித்த புத்தகங்களில் உறவுகளை இந்த அளவுக்கு சீராட்டிப் பாராட்டும் புத்தகம் வேறு எதுவும் நான் படிக்கவில்லை. கதைகளில் வேண்டுமானால் இந்த எழுத்தாளர் எழுதுவது போல் நட்பையும் பாசத்தையும் கொட்டிக் கொட்டி எழுதலாம், சினிமாவில் கதை கதையாக நடித்துக் காட்டலாம். ஆனால் நிஜமாகவே நெருங்கிப் பழகிய மனிதர்களைப் பற்றி இவ்வளவு ஆசை ஆசையாக யாரும் இத்தனை எழுதி நான் படித்ததில்லை. அது கஷ்டமும்கூட. நீண்ட நாட்கள் பழகியவர்களோடு நல்லது கெட்டது எல்லாம் நடந்திருந்தாலும், அப்புறம் ரொம்ப நாள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது நமக்கெல்லாம் அதிகமாக கோபமும் வருத்தமும்தான் வருகிறது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்று சொல்கிறார்களே, அந்த மாதிரி. ஆனால் சுகா மற்றவர்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் எழுதும்போதுகூட அதில் பிரியம்தான் தெரிகிறது. சில பேர் இருக்கிறார்கள், விளையாட்டாக நினைத்துத்தான் பேசுவார்கள், ஆனால் அதில் குத்தல்தான் அதிகம் இருக்கும். சுகா எழுதுவது அந்த மாதிரி கிடையாது.

25 May 2013

Hot Flat and Crowded - Tom Friedman

சிறப்பு பதிவர் : ரவி நடராஜன்





சில எழுத்தாளர்களே நல்ல பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள்.. தாமஸ் ஃபீரீட்மேன் (இவர் செல்லமாக டாம் ஃபீரீட்மேன் என்று அழைக்கப்படுகிறார்). டாம்,  நியூயார்க் டைம்ஸில் வேலை பார்ப்பவர். உலகம் முழுவதும் பல்வேறு செய்திச் சேகரிப்பு விஷயமாக பயணம் செய்ததால், உலக நிகழ்வு பற்றி மிகவும் தெளிவான அறிவு கொண்டவர். அருமையான பேச்சாளர், மற்றும் சிந்தனையாளர்.

இவருடைய பல்வேறு ஆரம்ப கால புத்தகங்கள் அவரது மத்திய கிழக்கு அரசியல் அனுபவங்களைப் பற்றியது. யூதரான இவர், பெய்ரூட்டில் (லெபனான்) மற்றும் ஜெரூஸலத்தில் பணி புரிந்த காலத்தைய பல்வேறு அனுபவங்களை அழகாக எழுதியுள்ளார். இன்று நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், 2008 –ல் இவர் எழுதிய ‘Hot Flat and Crowded’  என்ற சூழலியல் பற்றிய அருமையான பதிப்பு.

24 May 2013

யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி

சிறப்பு பதிவர் - மானஸி

அப்பா, அம்மா, 5 பிள்ளைகள், அவர்களின் மனைவியர், குழந்தைகள் என ஒரே கூரையின்கீழ் வாழும், பணத்துக்குக் குறைவில்லாத ஒரு  கூட்டுக் குடும்பம். ஆனால் மனதளவில், உணர்வுகளை கவனித்துப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஒரு கூரையின்கீழ் வாழும் தனித்தனி மனிதர்களகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடையே நடக்கும் பரிவர்த்தனைகள் கடமையாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்தான் நடக்கின்றன.

வீட்டுக்குப் பெரியவர், அத்தனை செல்வத்துக்கும் உடைமையாளர், அன்பான மனைவி இருந்தும் அவளால் தன் உடல் தேவைகளை ஈடு கட்ட முடியாமல் போகும்போது வேறு உறவுகளை நாடிப் போய் குடும்பத்திடமிருந்து உணர்வளவில் பிரிந்து விடுகிறார்.
வீடு இரவு தங்க மட்டும் போகும் இடமானது... பணத்தைத் துரத்த துரத்த அதைக் குவித்து வைத்து எண்ணும் போதை வெறியாக மாறிவிட துரத்தலின் காரணமே தெரியாமல் காலம் ஓடியது.
அண்ணன் தம்பிகளிடையே நிலவும் உறவு ஒரே நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள் போலத்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் என்பதினால் தன் குழந்தைகளையே ஒதுக்கும் ஒரு மகன். வீட்டுப் பசுமாடுகளிடம் காட்டும் அன்பைக்கூட அவரால் பாசத்துக்கு ஏங்கும் தன் பெண்ணிடம் காட்ட முடியவில்லை. ஓடி வரும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியாதபடிக்கு, இன்னும் பல வருடம் கழித்து அவள் திருமணத்துக்குப் போட வேண்டிய நூறு பவுன் நகைதான் அவருக்கு மனதில் சுமையாய் இருக்கிறது. வியாபாரம், பணம் சேர்த்தல் என்கிற வெறி பிடித்த ஓட்டத்தில் குடும்ப உறவுகள் சுமையாகவும் கடமையாகவுமே தெரிகின்றன.
நால்வருமே வெளியின் திசைகளில் அலைந்து களைப்புறும்போது இளைப்பாறும் இடமாகவே வீட்டைக் கருதினர். அவர்களுடைய வெளியுலகத்தின் நீட்சியாக இருக்கவியலாத வீட்டின் மீதிருந்த வெறுப்பு, ... எதிர்பாராத உரசல்கள் எல்லாவற்றாலும் அவர்கள் வீட்டை விட்டுத் தம்மைத் துண்டித்துக் கொள்ள விரும்பினர்.


23 May 2013

என் பெயர் ராமசேஷன்- ஆதவன்

 
இது நான் வாசிக்கும் ஆதவனுடைய இரண்டாவது நாவல். என்றைக்காவது உங்களுடைய எண்ணங்களைக் கூர்மையாக கவனித்தது உண்டா? ஒவ்வொரு நிகழ்வின்போதும் உங்கள் மனதின் எண்ணங்களைக் கொஞ்சமாவது உற்று நோக்கியது உண்டா? உங்கள் வாழ்வின் முக்கியமான காலகட்ட எண்ணங்களை உங்களால் இப்போதும் நினைவுகூர முடியுமா? இது மாதிரியான சில கேள்விகளுக்கு இந்நாவல் பதில் கூற முற்படுகிறது.

ஆதவனின் காகித மலர்கள் – என் பெயர் ராமசேஷன் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு, ஆனால் அது நம்மை நாவல் வாசிப்பதில் இருந்து அந்நியப்படுத்துவதில்லை. அப்படி என்றால் நாவலில் எனக்கு பிடிக்காத அம்சமே இல்லையா என்றால் உண்டு, அது பற்றி இடை இடையே.

22 May 2013

கோணல்கள் - ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன்

'குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. - அசோகமித்ரன் (முன்னுரை - புதிய தமிழ்ச் சிறுகதைகள்)
அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி


பொதுவாக எனக்குச் சிறுகதைகளின் மீது அவ்வளவு விருப்பம் கிடையாது. நாவல்களைக் காட்டிலும் சிறுகதைகள் தெளிவாக இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. இல்லையில்லை, அதற்கு நீ இன்னுமும் சிரத்தையாகயும் ஆழமாகவும் சிறுகதைகளை நோக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், இன்றைய நிலையில் நாவல்களே எனது விருப்பம். அதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்லமுடியும். நாவல்களில் ஒரு எழுத்தாளரை என்னால் மிக அருகில் நெருங்க முடிகிறது. மாறாக சிறுகதைகள், எழுத்தாளர்கள் நடத்தும் வித்தைகளாகத் தெரிகின்றன. அவை எனக்குப் புரிவதில்லை என்பதும் ஒரு காரணம். புரிவதில்லை என்று சொல்லும் அதே நேரத்தில், இன்னது-இன்னதுதான் என்று முழுமையாகச் சொல்லிவிடும் சிறுகதைகளும் பிடிப்பதில்லை. நண்பர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் எழுதியச் சிறுகதையை அனுப்பி, ‘இதைப் படித்துவிட்டுச் சொல்லு’ என்றார். 'இந்தக் கதைல வர்றவன் கடைசில செத்துட்டானா?’ என்று பதிலனுப்பினேன். கண்டிப்பாக நண்பர் என்னைச் சபித்திருப்பார். அதே நண்பர், “சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடாமல், கதை முடிந்த பின்பும் வாசகனிடம் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். கதையை அவன் படித்த பின்பும் அதன் சொச்சம் வாசகனின் எண்ணத்தில் இருக்க வேண்டும்” என்றார். நண்பர் சொல்வது புரியாமலில்லை. ஆனால், சில சமயம் இந்தச் சிறுகதைகள் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. கதையே அப்படித்தானா இல்லையென்றால் நான் தான் pervert ஆகச் சிந்திக்கிறேனா? 

21 May 2013

Mortality - Christopher Hitchens

Mortality என்பதை எளிமையாக சாக்காடு என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், மொழி என்பது பண்பாட்டின் சுருக்கெழுத்து என்பதால் ஹிட்சென்ஸ் போன்ற ஒரு வாழ்நாள் நாத்திகர் இந்தச் சொல்லைப் பயன்படுத்தும்போது அதற்கு அவ்வளவு எளிய பொருள் பொருத்தமாக இருக்காது.

மேலை இலக்கியத்தை வாசிக்கும் எவரும் கிரேக்க துன்பியல் நாடகங்கள் மற்றும் லத்தின் கவிதைகளில் தங்கள் கல்வியைத் துவங்குவது நல்லது. அந்த அளவுக்கு அவர்களது மொழியும் பண்பாடும் கிரேக்க, லத்தின் இலக்கியங்களில் தோய்ந்திருக்கின்றன.

Aeschylus, Sophocles, Euripides என்று துவங்கி பண்டை கிரேக்க நாடகங்களை வாசித்த எவருக்கும் mortality என்பதில் உள்ள mortals என்ற சொல் மனிதர்களைக் குறிக்கிறது என்பதும், இறவாமையை நாடுவது என்பது இறைத்தன்மையை நாடுவதாகும் என்பதும் சொல்லாமலே விளங்கும். Memento Mori - Remember, you too are mortal, மிகவும் புகழ் பெற்ற ஒரு லச்சினை (ஹிட்சன்ஸ் இதை மேற்கோள் காட்டுகிறார் : "Remember, you too are a mortal" - hit me at the top of my form and just as things were beginning to plateau. My two assets my pen and my voice - and it had to be the esophagus").

20 May 2013

ஒட்டகம் கேட்ட இசை - பாவண்ணன்

'எவரை எங்ஙனம் சமைத்தற்கு என்னமோ அங்ஙனம் சமைப்பாய்' - என பராசக்தியிடம் பாரதி முறையிட்டதைப் பற்றிய ஒரு முன்னுரைக் குறிப்பு பாவண்ணன் எழுதிய `ஒட்டகம் கேட்ட இசை` கட்டுரைத் தொகுப்பை வாங்கத் தூண்டியது. `அதனை அவன்கண் விடல்` என்பது போல் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அனுபவங்களின் கூட்டுத்தொகைதான் ஒட்டுமொத்த மனிதனின் ஆளுமை எனச் சொன்னால் தவறில்லை. அனுபவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கு பாரதியின் வரிகளைவிட சிறப்பானத் தொடக்கம் இருக்காது.

 
 
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதுய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தனது அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடையங்களை இந்த நூலில் காணலாம்.
 
எழுத்துக்கும் வாசிப்புக்கும் தேவையான அனுபவங்கள் நம்மைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன - எல்லா படைப்பாளிகளும் சொல்லும் வசனம். ஆனால் அனுபவங்களை படைப்பூக்கமாக மாற்றும் கலையைத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. கொஞ்சம் சுரணையும், அளவுக்கதிகமான பொறுமையும், உழைப்பும், நடைமுறைப்பார்வையும் ஒருசேர அமையும்போது நல்ல படைப்பு உருவாகிறது. ஆனால், மாபெரும் கதையாக மாறும் அனுபவங்கள் சிறு ஜன்னலைப் போன்றவை. அதைத் திறந்து பார்க்கும்போது காணக்கிடைக்காத அற்புதங்களும், யதார்த்தமே பிரம்மாண்டப் புனைவாக மாறியதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
 
திப்புவின் கண்கள் - எனும் கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வீரத்தையும் துணிச்சலையும் பறைசாற்றிய திப்புவின் திடலில் பாவண்ணனுக்குக் கிடைக்கும் அனுபவம். பெரும் அழிவுகளையும், சாவுகளையும் எதிர்கொண்ட இடத்தில் ஒரு ஓவியத்தின் மூலம் திப்புவின் கண்களை சந்திக்கிறார் ஆசிரியர். கண்களே மனதின் வாசல் என்பதுபோல, காலம்காலமாக ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் சிரிப்புகள், கோபங்கள், கருணை, காதல், மயக்கம், சீற்றம் எல்லாமே இரு கண்கள் வழியே படம்படமாகத் தெரிந்துவிடும் மாயம் தான் என்ன? இதை அனைத்தையும் மீறி ஓவியர் பிடிக்க வேண்டிய கணத்தை நம் முன்னே நிறுத்தப்பார்க்கிறார். காலம் காலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நினைவில் பதியவேண்டிய உருவம் - திப்பு என்றவுடன் சட்டென நினைவு வரவேண்டிய கண்களைப் படம் பிடிப்பதுதான் ஓவியரின் வெற்றி. திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்துகொண்டதை பாவண்ணன் பேரனுபவமாக நினைக்கிறார்.
 
குருவிமடம் - என்றொரு கட்டுரை இத்தொகுப்பில் மிகச் சிறப்பான கட்டுரை. தொலைபேசித் தொடர்புக்கான கட்டுமான வளர்ச்சிக்காக பல ஊர்களுக்குப் பயணம் செய்யும் வேலை ஆசிரியருக்கு. சிக்கமகளூருக்கு அருகில் ஒரு கோபுரத்தை முடுக்குவதற்காக பயணம் செய்கிறார். பழுதுபார்க்கும் வேலை தொடங்கிய பிறகு அங்கு வேலை செய்ய வந்த மஞ்சுநாத் என்பவரோடு பேசத்தொடங்குகிறார். காடு பற்றி பல சுவாரஸ்யமானத் தகவல்களை மஞ்சுநாத் தரத்தொடங்க, ஆசிரியருக்கு பேச்சு மிக சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது.மணிக்கணக்கில் பறந்துவந்த பிறகு ஒரு கிலையில் எல்லா குருவிகளும் சேர்ந்திருக்கும். அதை குருவிமடம் எனக் குறிப்பிடுகிறார் பஞ்சுநாத். குவெம்புவின் கவிதைகளைப் பற்றி பேசத்தொடங்க, மஞ்சுநாத்தைப் பற்றி பல சுவாரஸ்யங்கள் வெளிவருகின்றன. ஒரு விதத்தில் எழுத்தாளர் சந்திக்கும் மனிதர்களும், அனுபவங்களும் குருவி மடம் போன்றதுதான். விதவிதமான மனிதர்கள், பெயரே தெரியாமல் பழகிச் செல்லும் உறவுகள் என வாழ்வே ஒரு குருவிமடம்.
 
சிற்பம், ஓவியம், கவிதை என வெவ்வேறு வடிவங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை மிக ய்தார்த்தமான ஒன்று. தோற்றத்தின் அடிப்படையில் சிற்பவம் வடிவம் சார்ந்ததும், ஓவியம் கற்பனை சார்ந்ததும், கவிதை மொழி சார்ந்ததும் போலத் தோன்றினாலும் உண்மையில் அனைத்துமே மனம் சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவை தான். கலைஞனின் மனம் காட்சிகளால் நிறைந்த ஒரு மாபெரும் தொகுப்பு. அதை அவன் எப்படி உள்வாங்குகிறான் என்பதிதான் கலைஞனின் மொழி ரூபம் வெளிப்படுகிறது. ஓவியம், சிற்பம் மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தைகளும் கூட பெரும் பண்பாட்டின் பின்புலத்தில் இயங்குகிறது. இதை முன்வைத்து ஹம்பி நகரில் கண்ட ஓவியத்தைப் பற்றி அற்புதமான கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். கவிதையாகவும் ஓவியமாகவும் சிற்பமாகவும் புதிரின் தருணங்கள் மீண்டும் மீண்டும் மனிதகுலத்தின் முன் படைக்கப்படுகின்றன.
 
ஒட்டகம் கேட்ட இசை - பாடல்கள் வழியே பாவண்ணன் எனும் படைப்பாளியை அறிந்துகொள்ளும் முயற்சி. சிறு வயதில் பாடல் கேசட்டுகள் வழியே அவருக்குள் உருவான இசை உணர்வுகளை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். அருணா சாய்ராம், மகாராஜபுரம் சந்தானம், ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம் என பலரது பாடல்களை கேட்ட அனுபவங்கள் இக்கட்டுரையில் உள்ளன. இசை கேட்டு மனபாரத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவத்தை மிக அழகாகக் காட்டியுள்ளார். சிலருக்கும் இசை ஒரு மருந்து, சிலருக்கு உள்ளம் உவக்கும் வாழ்க்கை.
 
எல்லா எழுத்தாளர்களும் தாங்கள் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளனர். வெறும் செய்திகளாக எழுதுவதைக் காட்டிலும் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம்முன் நிறுத்துவதை மிகச் சில எழுத்தாளர்கள் மட்டுமே செய்கிறார்கள். பாவண்ணன் இவ்விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

பாவண்ணன் பேட்டி
 
ஆசிரியர் - பாவண்ணன்
 
தலைப்பு - ஒட்டகம் கேட்ட இசை
 
இணையத்தில் வாங்க - ஒட்டகம் கேட்ட இசை.
 

19 May 2013

கவிழ்ந்த காணிக்கை - பாலகுமாரன்


சினிமாவாக எடுத்தால் கௌரவம் படத்தின் பழிவாங்கும் படலம் இல்லாத இரண்டாம் பாதிதான் ‘கவிழ்ந்த காணிக்கை’. அப்பாவிடம் சவால் விட்டு ஜெயிக்கும் சின்னஞ்சிறு பிள்ளைக் கதைதான் என்றாலும் சிவாஜி போல கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் அதிர சவால் விடும் அப்பாவெல்லாம் இல்லை ஆதிச்சப் பெருந்தச்சன். சுருள்முடியைச் சுற்றிக் கொண்டு கண்களால் சவால் விடும் இன்னொரு சிவாஜியும் இல்லை மகனான சோமதேவன்.  தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் நிகழும் ராஜராஜசோழனின் வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கிறது கதை. 

தஞ்சைப் பகுதியானது பாறைகளின் பிரதேசமன்று. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து பாறைகள் தருவிக்கப்பட்டு உலகின் தன்னிகரற்ற அந்தப் ”பெரிய” கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான வரலாறு.

விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்கு அருகே ‘திருவக்கரை’ என்னும் சிவத்தலம் உண்டு. வக்ரகாளியம்மன் திருக்கோயில் இந்தத் தலத்தின் பெருஞ்சிறப்பு. நம்மூர் பக்தி சிகாமணிகள் பெரும்பாலானவர்கள் இந்த ஊரில் நிச்சயம் கால் பதித்திருப்பார்கள். நானும் சமீபத்தில் இங்கே சென்று வந்தேன். நம் ஆன்மிக அன்பர்கள் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. ”திருவக்கரையில் கிடைக்கும் பாறைகள் போல் உலகில் வேறெங்கும் கிடைக்காது”, என்பதுதான் அது. 

திருவக்கரை ஆதிச்சப் பெருந்தச்சனைத் தேடி ராஜராஜன் வருகிறான். பெரிய கோயில் லிங்கமும், நந்தியும் திருவக்கரையில் வடிக்கப்பட வேண்டும் என்பது அவன் வேண்டுகோள். பெருந்தச்சன் அதை ஏற்கிறார். நந்தீஸ்வரரின் வருகைக்குப் பிறகே லிங்கம் எந்தக் கோயிலுக்குள்ளும் புகவேண்டும் என்பது விதி.  சம்பிரதாய தோஷமாக முதலில் பெருவுடையார் தஞ்சை புகுகிறார். 

அடுத்ததாக பெரிய நந்தியின்  பிரயாணத்தின் போது நிகழும் சவாலும் ஆதிச்சப் பெருந்தச்சனின் தலைகுனிவும், நந்தீஸ்வரரின் பயண mission failiure'மே மிச்சக் கதை.

பாலகுமாரனின் எழுத்து லாவகத்தைத் தனியே குறிப்பிடும் அவசியம் இல்லை. கதைக்குள்ளே நம்மை அநாயசமாக அழைத்துச் சென்றுவிடுகிறார். தஞ்சைக் கோயிலோடு நெருங்கிய தொடர்புடைய திருவக்கரை பற்றி பாலகுமாரன் எழுதியிருக்கிறார். திருவக்கரை வரலாறை வேறு யாரும் எங்கும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை (லலிதாராமிடம் கேட்கலாம்?).


கார்ட்டூனிஸ்ட் மதன் விகடனின் இணை ஆசிரியர் பதவியைத் துறந்த காலகட்டத்தில் என்று நினைவு.... அப்போது “விண் நாயகன்” என்றொரு மாதமிருமுறை இதழ் வெளிவரத் தொடங்கியது. ஒன்றிரண்டு வருடங்கள் வந்தபின் நின்றுபோன இதழ் அது. தொடங்கிய புதிதில் மதன், சுஜாதா, பாலகுமாரன் என்று ஃப்ரண்ட்லைன் பிரபலங்கள் எழுத்துகள் மிளிர்ந்த இதழ் அது. 

காதல் பற்றிய தொடரை மதன் எழுதினார்; கடவுள் பற்றி சுஜாதா எழுத; இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டிய இந்தக் குறுந்தொடரை பாலகுமாரன் எழுதினார்.  அப்போது அந்த மூன்று தொடர்களையும் அந்த காலகட்டத்தினையொட்டிய ஆர்வக்கோளாறுடன் கத்தரித்து எடுத்து வைத்து, நம் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் தொடரும் சோம்பேறித்தனத்தினையொட்டி இன்றுவரை பைண்ட் பண்ணாமல் வைத்திருக்கிறேன்.

சொக்கனின் ‘மென்கலைகள்’ புத்தகத்தின் “நூறு போதும்” படித்துவிட்டுப் பரணைக் குடாய்ந்து கொண்டிருந்த போது இந்த கத்தரிப்புகள் கண்ணில் ஆப்ட.... கடவுளையும், காணிக்கையையும் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது.

திருவக்கரை சென்று வந்தபின் நான் எழுதிய பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்; இந்தப் புகைப்படத்துடன்...

கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.

”கவிழ்ந்த காணிக்கை” அப்போது வாசித்தபோது மனதில் பதியாத ‘திருவக்கரை’ இப்போது பழகிவிட்ட தலமாகி நிற்கிறது. இப்போது மறு வாசிப்பு செய்தபின், “அடடா! அந்த ஊரில் ஏதேனும் ஒரு பாறைக் கொல்லைக்கு விசிட் அடிக்காமல் வந்துவிட்டோமே” என்று நினைத்துக் கொண்டேன்.

’கவிழ்ந்த காணிக்கை” - பெருநாவலாக வந்திருக்க வேண்டியதை எழுத்துச் சித்தர் குறுநாவலாக வடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முழு நாவலுக்கான அத்தனை ஸ்கோப்பும் உள்ளதொரு கதைக்களம். விண் நாயகனுக்காய் இந்தக் கருவைத் தாரை வார்க்கத் தலைப்பட்டதால் ”நான்கு அல்லது ஆறு வாரம் வெளிவர்றாப்ல சார், ஒரு குறுநாவல்?”, என்ற வேண்டுகோளுக்கு இந்தக் குறுநாவலை அவசரமாக எழுதித் தந்தாரோ அல்லது வேறு எழுத்துப் பணிகளுக்கிடையே எழுத நேர்ந்ததால் இந்தக் கதையை சுருக்கமாக முடித்துக் கொண்டாரோ, நாம் அறியோம்.

’பொன்னியின் செல்வனு’க்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோப் தந்திருக்கலாம், தஞ்சை பெரிய கோயில் புகழை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பாடியிருக்கலாம், பெருவுடையார் பிரதிஷ்டையைச் சுற்றிய நிகழ்வுகளை அத்தனைச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்க வேண்டாம் என எனக்கே படிக்கையில் தோன்றும் போது, எழுதும்போது அல்லது எழுதி முடித்தபின் எழுத்துச் சித்தருக்குத் தோன்றாமல் போயிருக்குமா என்ன?

ஓகே... தஞ்சை வரை பயணப்படாத அந்த ‘கவிழ்ந்த காணிக்கை’யான நந்தீஸ்வரர் விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையிலிருந்து புதுவை செல்லும் வழியில் திருவக்கரை எல்லையில் இன்னமும் கவிழ்ந்த கோலத்தில் காட்சி தருகிறாராம். அந்தப்புறம் செல்பவர்கள் மறக்காமல் தரிசனம் செய்வீராக.

இந்தக் குறுநாவலானது பாலகுமாரனின் ஏதோவொரு புத்தகத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. அந்தத் தகவல் தெரிந்த பாலகுமார ரசிக அன்பர்கள் அந்தத் தகவலை இங்கே பின்னூட்டமாய்க் குறிப்பிட்டால் இந்தப் பதிவைப் படிக்கும் பிற பாலகுமார கண்மணிகள் பயன் பெறுவார்கள். 

அப்படி எங்கும் இந்தக் குறுநாவலின் வடிவம் கிடைக்காத பட்சத்தில்.... ....இந்தக் குறுநாவலின் தட்டச்சு வடிவம் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் ( rsgiri @ gmail ) அவர்களுக்கு மின்னஞ்சலில் குறுநாவலை அனுப்பி வைக்கிறேன் (என் பதில் அஞ்சலின் வேகம் என் சோம்பேறித்தனத்தின் வீரியத்தின் அளவைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளவும்). 

கவிழ்ந்த காணிக்கை | பாலகுமாரன் | குறுநாவல் | வரலாறு

18 May 2013

நடிகையின் உயில் - தமிழ்வாணன்

பதிவர் - நட்பாஸ்

யாரோ மேஜ் ஸ்ஜோவால், பேர் வாஹ்லூ என்ற இரட்டையர் இணைந்து எழுதிய மார்ட்டின் பெக் தொடர் துப்பறியும் கதை ஒன்றைப் பற்றி பைராகி அறிமுகப் பதிவு எழுதியிருந்தார்-

எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படியெல்லாம் எழுத முடியுமா சொல்லுங்கள்?

எத்தனை விதமான விசாரணை தந்திரங்கள் இருக்கின்றன என ஒரு பக்கம் உரைத்தாலும், புலனாய்வு செய்வது எத்தனை நிதானமான காரியம் என்றும் புரிகிறது. ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மார்ட்டின் பெக் காட்டும் அசாத்தியமான உழைப்பு அசர வைக்கிறது. காவல்துறையினரின் தனிப்பண்புகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் காட்டுகிறது. அசாதரணமாக செய்கைகள் செய்பவர்கள் அல்ல அவர்கள். சாதாரண செயல்களை அசாதாரண உழைப்பை கொடுத்துச் செய்பவர்கள்.

பைராகி மார்டின் பெக் கதைகளைப் பற்றி இப்படியெல்லாம் புளகாங்கிதம் அடைந்தால், சொல்வனம் இணைய இதழில் மைத்ரேயன் என்பவர் இந்தக் கதைகளை எழுதியவர்களை இலக்கிய பீடத்தில் அமர்த்த முயற்சிக்கிறார் -
 சஸ்திர சிகிச்சைக்கான கத்தி போல குற்ற நாவல்களைப் பயன்படுத்தி, சமூகநல அரசு (Welfare State) என்ற பெயரில் கேலிக் கூத்தாகி நிற்கிற ‘முதலியத்தின்’ அடிவயிற்றைக் கிழித்துக் காட்டும் முயற்சிகளே இவை’என்று வாஹ்லா - கோவால் தம்பதியினர் சொல்கிறார்கள்...

17 May 2013

The Power of Habit - Charles Duhigg

சிறப்பு  பதிவர் : வானதி நடனம்

நம் பழக்கங்கள் எப்படி உருவாகின்றன, பழக்கங்களை சேமித்துவைப்பதற்காக மூளையில் தனியாக இடமேதும் இருக்கிறதா, தேவையில்லாத பழக்கங்களை மாற்றுவது எப்படி, 30 நொடிகளுக்கும் மேல் எதையுமே ஞாபகம் வைத்திருக்க முடியாத ஒருவருக்கு பழக்கங்கள் எந்தவிதத்தில் உதவுகின்றன என்பதையெல்லாம் விரிவாகப் பேசுகிறது இப்புத்தகம். தனிமனித பழக்கங்கள், நிறுவன பழக்கங்கள் மற்றும் சமூக பழக்கங்கள் என புத்தகத்தை மூன்று பாகங்களாகப் பிரித்து பழக்கங்களின் அ முதல் ஃ வரை அலசுகிறார் ஆசிரியர்.

16 May 2013

பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி

சிறப்பு  பதிவர் : விக்கி

டிஎல் இருநூற்று முப்பத்து ஒன்பதின் பொழுதுபோக்கு சாதனங்கள் வேலை செய்யவில்லை. வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வைத்திருந்தால் அதிக வரி கட்ட வேண்டும் என்பது போன்ற அற்ப காரணங்களுக்கெல்லாம் அதிகமாய் மூட் அவுட் ஆகும் டச்சு மக்கள் பலரும் ஹை வால்யுமில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். "யூ காட்டபி கிட்டிங் மீ" என ஒரு கருப்பர் அமெரிக்க பெண்மணி மண்டையை குலுக்கிக் கொண்டிருந்தார். நான் ஒருவன் மட்டும் மனதுக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன்.

DL 0239 - ஆம்ஸ்டர்டாமிலிருந்து அட்லாண்டா செல்லும் ஏர்பஸ் A330-300. அன்றைக்கு அட்லாண்டா வழியாக ஒர்லாண்டோ பயணம் செய்து கொண்டிருந்த என் உவகைக்குக் காரணம், கைவசமிருந்த ஐஃபோன் நிறைய பாட்டும், பாட்டரி நிறைய சார்ஜும், கை நிறைய (போன முறை ஊருக்குச் சென்றபோது ஊறுகாய் அப்பளத்துக்கு பதிலாக நான் கொண்டு வந்த) தமிழ் புத்தகங்களும்.

சுஜாதாவின் சிறுகதை தொகுப்பு (பாகம் 1), லா. ச. ரா.வின் அபிதா, பாரதி மணியின் "பல நேரங்களில் பல மனிதர்கள்" ஆகிய விருப்பத் தேர்வுகளில் எதை முதலில் எடுக்கலாம் என்ற கேள்விக்கு, சுறுசுறுப்பாக ஏதாவது படிக்கலாம் என பதில் தோன்றியது. "பாரதி மணி" என்கிற பேரைப் பார்த்தவுடன் பரஸ்பர நண்பர் சுகாவின் முகநூல் பக்கத்தில் இவ்விருவரும் பரிமாறிக் கொள்ளும் நையாண்டி நினைவுக்கு வந்தது.

மேலும், பாட்டையாவை எனக்கு ஏற்கனவே தெரியும் (ஆனால் அவருக்கு என்னைத் தெரியாது :-P). உயிர்மையில் அவரின் சில கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். தவிர, இந்தப் புத்தகம் பற்றி சுகா சொல்வனத்தில் எழுதியிருந்த "பாட்டையா பார்த்த மனிதர்கள்"  என்கிற கட்டுரையையும் படித்திருந்தேன். அதனால் முதலில் அவரின் புத்தகத்தை எடுத்தேன்.

 

15 May 2013

Martin Beck Series - The Man in the Balcony - Maj sjowall, Per Wahloo

சில மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் வலாண்டர் வரிசையில் `முகங்களற்ற கொலையாளிகள்` புத்தக விமர்சனம் ஆம்னிபஸில் வெளியானது. சொல்வனம் இணைய இதழில் வெளியான அஜயின் குற்றப்புனைவைத் தொடர்ந்து சென்றடைந்ததில் இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடர் புத்தகங்கள் முக்கியமான வாசிப்பை அளித்தது. இந்த கட்டுரைத் தொடரில் பேசப்பட்ட அனைத்து குற்றப்புனைவு ஆசிரியர்களின் ஒரு படைப்பையேனும் படிக்க வேண்டும் எனும் முயற்சி எடுக்கத் தொடங்கினேன்.
 
அந்த வரிசையில் இன்று இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் தலைமையில் ஸ்வீடன் குற்றப்புனைவைப் பற்றிப் பார்க்கலாம். யோவால் மாய் (Sjowall, Maj) மற்றும் வாஹ்லு பெர் (Wahloo, Per) இரு எழுத்தாளர்கள் மார்டின் பெக் எனும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்கள். இருவரும் ஸ்வீடன் நாட்டின் பொதுவுடமைக்கட்சி உறுப்பினர்கள். இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் மற்றும் ஸ்வீடன் காவல்துறையை முன்வைத்து பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளனர்.
 
உலகில் குற்றங்கள் எத்தனை வகை உள்ளதோ அத்தனை குற்றப் புலனாய்வு வகைகள் உள்ளன போலும். ஒவ்வொரு குற்றப்புனைவின் கதாநாயகனும் ஒவ்வொரு வகையில் குற்றங்களை ஆராய்கிறான்.
 
துல்லியமான பார்வை மற்றும் கூர்மையான மதியூகத்தைக் கொண்டு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு வகை என்றால், நமது துப்பறியும் சாம்பு போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றங்களைக் களைவது மற்றொரு வகை. பத்தொன்பதாம் நூற்றாண்டு குற்றப்புனைவுகள் முதல் வகை என்றால், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி ரெண்டாம் வகை போலும். தேர்ச்சியாகச் செய்யப்படும் குற்றங்கள் என்றில்லாமல், நவீன உலகின் சமூக வகைமைக்கு ஏற்ப குற்றங்களும் மாறுபடுகின்றன. இருநூறு வருடங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றங்கள் இன்றைய சமூகங்களை விடக் குறைவானதாக நடந்திருக்கும். சமூக கட்டமைப்பில் மனிதர்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் விலகிப்போனபடி இருக்கின்றனர். எதிர் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர் என்பது கூட நமக்குத் தெரியாமல் போகிறது. உலகம் எந்திரமயமாக்கப்பட்டு சுருங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், எல்லாரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டே இருக்கின்றனர். குற்றங்களின் சாத்தியங்களை இது அதிகப்படுத்துகிறது.
 
 
 

14 May 2013

You Must Like Cricket? - Soumya Bhattacharya

You Must Like Cricket?
ஆசிரியர்: Soumya Bhattacharya
பக்கங்கள்: 188
Yellow Jersey Press, London.

நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி இப்படி எல்லாத்திலேயும் கிரிக்கெட் ஊறியவங்க நம்ம நாட்டுலே ஏராளமானவங்க இருக்காங்கன்னு நமக்குத் தெரியும். சாப்பாடு, தண்ணீர் எதுவும் தேவையில்லாமல் எந்நேரமும் ஏதாவது ஒரு ஆட்டத்தைப் பற்றி பேசியவாறு அல்லது பார்த்தவாறு அல்லது படித்தவாறு காலத்தைக் கழிக்கும் ஒரு கும்பலும் இருக்கும். நானும் அந்தக் கும்பலில் ஒருவனாக இருந்தேன் என்பதை பெருமையுடன் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

சிறு வயதில் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகி எப்போதும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அம்மாவிடமிருந்து பலத்த அடி/இடி விழும். ஆனால், இந்த ஆசிரியருக்கோ அவர் அம்மாதான் முதல் கோச். கிரிக்கெட் எப்படி விளையாடுவது என்று ஆரம்பித்து அதன் அனைத்து நெளிவு சுளிவுகளையும் சொல்லித் தந்திருக்கிறார். கிரிக்கெட் மீதான இவரது ஆர்வம் குறையாமல் தொடர்ந்து ஆட்டத்தை கவனித்து விளையாடுமாறு ஊக்குவித்திருக்கிறார்.

ஆசிரியருக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து,  ஊர் ஊராக மாற்றலாகி போய்க் கொண்டிருந்தாலும், கிரிக்கெட் மீதான அவரது ஆர்வம் எப்படி வளர்ந்து கொண்டேயிருந்தது என்பதையும், பின்னாளில் ஒரு பத்திரிக்கையாளராக ஆனபிறகு, அதே கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்த்து, ஆட்டக்காரர்களை பேட்டி எடுத்து பேசியது வரை அவரது அனுபவங்களை, Slumdog Millionaire பட பாணியில், இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகரை, இந்தியாவின் 40 ஆண்டுகால ஆட்டத்தில், உனக்குப் பிடித்த தருணங்கள் என்னென்ன என்று கூறினால் என்ன பதில் சொல்வார்?

* 1983 உலகக் கோப்பையை ஏந்தியவாறு லார்ட்ஸில் கபில்’ன் வாய்க் கொள்ளாச் சிரிப்பு.
* 2002ல் அதே லார்ட்ஸில் கங்குலி, தன் சட்டையைக் கழற்றி சுழற்றிய விதம்
* 1998ல் ஷார்ஜாவில் மணற்புயலை எதிர்த்து நின்று சச்சின் அடித்த இரு சதங்கள்.
* 2001ல் கல்கத்தாவில் VVSன் 281.

இதே தருணங்களை ஆசிரியரும் விலாவாரியாக சொல்லியுள்ளார். இந்த ஆட்டங்களை, தன் வாழ்க்கையோடு எப்படி சம்பந்தப்படுத்திக் கொள்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். யாராவது இவரிடம் உன் குழந்தை எந்த வருடம் பிறந்தது என்று கேட்டால், நம்ம VVS 281 எப்போ அடிச்சாரு? 2001 தானே? அந்த வருடம்தான் எனக்கு பெண் பிறந்தாள்னு சொல்வாராம். 

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதம் என்று சொல்வோர் உண்டு. அதை இல்லை என்று மறுக்கிறார் இவர். மதம் எப்போதும் மனிதர்களை இணைத்ததேயில்லை. உதா: குஜராத் சம்பவம். ஆனால், கிரிக்கெட் எப்போதும் அனைவரையும் இணைத்தேயிருக்கிறது என்கிறார். இதற்கும் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு முறை வடஇந்தியாவில் நண்பர்களுடன் ரெயிலில் போய்க் கொண்டிருந்தபோது, சிலர் வந்து உட்கார இடம் வேண்டி கலாட்டா செய்ததாகவும், பின்னர் வானொலியில் கிரிக்கெட் கேட்க ஆரம்பித்ததும், அனைவரும் நண்பர்கள் ஆகிவிட்டதாகவும், தங்கள் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டு, சாப்பாடு வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லி, இத்தகைய மாறுதலுக்கு கிரிக்கெட்டே காரணம் என்று சொல்கிறார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர் என்றபிறகு பாகிஸ்தான் அணியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியுமா? அரசியல், வரலாறு, கௌரவம் என்று பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், ஒவ்வொரு முறையும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை ஒரு பெரும் போராகவே நினைத்துப் பார்ப்பவர்கள் உண்டு. ஆசிரியரும் இதே போல் நினைப்பதால், பாகிஸ்தானுக்காக ஒரு தனிக் கட்டுரையே உண்டு.

கிரிக்கெட் சூது பற்றி ஒரு கட்டுரை. இந்த சர்ச்சை/புகாரில் சம்பந்தப்பட்டு பலர் ஆட்டத்தை விட்டுவிட்டாலும், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கபில் அழுதது யாராலும் மறக்க முடியாத ஒன்று. இது நடந்து சில வருடங்களுக்குப் பிறகு ஒரு நிகழ்ச்சியில் கபிலை பார்த்து, கை குலுக்கி ஒரு நாள் அவருடனே இருக்கும்படியான ஒரு சூழ்நிலை உருவானதாம். அப்போதுகூட கபில் இன்னும் அந்த பழியால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து வெளியே வந்திருக்கவில்லை என்று உணர்ந்தேன் என்று எழுதுகிறார்.

இந்தியா, இங்கிலாந்து என்று மாறி மாறி வாழ்க்கையைக் கழித்த சௌம்யா தன் சிறுவயதில் லார்ட்ஸிலும், ஈடன் கார்டன் மைதானத்திலும் பார்த்த ஆட்டங்கள் சிலவற்றைப் பற்றியும் விளக்கியுள்ளார். 

* முதல் நாள் ஆட்டத்தைப் பார்த்தல்
* பின்னர் அதன் Highlightsஐப் பார்த்தல்
* பள்ளி/கல்லூரி/அலுவலகத்தில் அந்த ஆட்டத்தைப் பற்றிப் பேசுதல்
* தொலைக்காட்சி செய்திகளில் பார்த்தல்
* அடுத்த நாள் The Hinduவில் இது தொடர்பான செய்தியை வாசித்தல்

என்று காலங்களைக் கழித்த கிரிக்கெட் ரசிகர்கள், தங்களின் சக-ரசிகனின் கதையைத் தெரிந்து கொள்ள விரும்பினால் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம்.

***


13 May 2013

The Design of Everyday Things - Donald Norman

www.jnd.com
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் ஒரு வடிவமைப்புக் கதை இருக்கிறது. ஒரு பொருளை ‘வடிவமைப்பது’ என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால், சாதாரண விஷயங்களை, விட்டுவிட்டு ஒரு நல்ல வடிவமைப்பைப் பெற முடியாது. வடிவமைப்பு என்பது பார்ப்பதற்கு அழகாக இருப்பதைக் காட்டிலும், பழகுவதற்கு எளிதாக இருக்க வேண்டும். பழகிக் கொள்ள கடினமாக பொருட்கள், சந்தையில் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.



12 May 2013

வாஸவேச்வரம் - கிருத்திகா

முதலில் சில அவசியக் குறிப்புகள் : கிருத்திகா 1915ஆம் ஆண்டு பிறந்தவர், இயற்பெயர் மதுரம் பூதலிங்கம். வாஸவேச்வரம் 1966ல் பதிப்பிக்கப்பட்டது. 183 பக்கங்கள், மூன்று பகுதிகள் : பிரம்ம தேவன் விளையாட்டு, இந்திரன் தாபம், மாண்டவர் சாபம் (இங்கு மாண்டவர் என்பது மாண்டவ மகரிஷியைக் குறிக்கிறது). கதைக்களம் வாஸவேச்வரம் என்னும் கற்பனை கிராமம். கதை மாந்தர் அனைவரும் பிராமணர்கள். ஏறத்தாழ எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கதையில் மிக முக்கியமான விஷயம் ஆண் பெண் ஈர்ப்பு. கொச்சையாகச் சொன்னால், எவன் எவளோடு போகிறான், அல்லது, எவள் எவனோடு போகிறாள். கதையை முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிக்க இந்த சுவாரசியமே போதுமானதாக இருக்கிறது. பெண்ணியம், சமதர்மம் என்றெல்லாம் பேச நிறைய விஷயம் கொடுத்திருக்கிறார் கிருத்திகா என்றாலும், அடிப்படையில் கதையை காமம்தான் முன்னகர்த்திச் செல்கிறது. நம்பி படிக்கலாமா என்று கேட்டால், படிக்கலாம் என்று தயக்கமில்லாமல் சொல்ல முடிகிறது. உயர்ந்த இலக்கியம் என்று லேபிள் ஒட்டுவதற்கான முகாந்திரங்கள் அத்தனை இருந்தாலும், அடிப்படையில் இது சுவாரசியமான மனிதர்களைப் பற்றிய சுவாரசியமான கதை, பக்கங்களை]த் திருப்பிக் கொண்டே போக முடிகிறது.

11 May 2013

John Constantine - கிராஃபிக் உலகின் சூப்பர் ஸ்டார்

சில மாதங்களுக்கு முன் `குற்றமும் தண்டனையும்` கிராஃபிக் நாவல் பற்றிய அறிமுகத்தை ஆம்னிபஸ் வாசகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இலக்கிய உலகின் கிளாசிக் எனக் கருதப்பட்ட ஒரு படைப்பு கிராஃபிக் நாவலாக வருவது படைப்பின் வெற்றியைக் காட்டுகிறது. இதுபோல தமிழின் கிளாசிக் நாவல்கள் எதிர்காலத்தில் வருங்கால சந்ததியினருக்காகக் கிராஃபிக் நாவல்களாக வரும். பெங்களூர் கிராஃபிக் காமிக் நண்பர்கள் நடத்தும் பதிப்பகம் அந்த நம்பிக்கையை அளிக்கிறது.
 
இன்று நாம் பார்க்கப்போவது முக்கியமான கிராஃபிக் நாவல். கிராஃபிக் நாவலின் முன்னோடி என அழைக்கப்படும் Hellblazer collection உருவாக்கிய Constantine. ஆலன் மூர், ஸ்டீவ் பெஸெட், ஜேமி டெலானோ மும்மூர்த்திகள் உருவாக்கிய அதி அற்புத பாத்திரம் கான்ஸ்டாண்டைன்.  கான்ஸ்டாண்டைன் திரைப்படம் மாயமந்திரக் கதை என மனதில் தங்கியிருந்தது. அதில் வரும் அதிவினோதங்கள் மனதில் தங்கவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பிறகு, திரைப்பட நினைவு முற்றிலும் மறந்த நிலையில், இந்த கிராஃபிக் நாவல் கையில் கிடைத்தது.

10 May 2013

Norwegian Wood- Haruki Murakami


Norwegian Wood
Haruki Murakami
Novel
Photo Courtesy/To Buy: Flipkart



ஆம்னிபஸ் குழும விவாதம் ஒன்றில் நடராஜன் ஹருகி முராகமி மற்றும் சிலரைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்தப் புத்தகத்தையும் என்னுடைய நூலக வரிசை அட்டையில் குறித்து வைத்திருந்தேன். 

இதற்கு முன் வேறு சில புத்தகங்கள் படித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்தபோதும் இந்த புத்தகம்தான் வந்தது. சரி, வந்ததுதான் வந்தது, இதையே படிப்போம், என்று படிக்க ஆரம்பித்தேன். 

நாவலின் அட்டையில் ‘Murakami must already rank among the world’s greatest living novelists’- Guardian, என்றொரு வாசகம். இந்த புத்தகம் ஜே ரூபின் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இது சிறப்பான மொழிபெயர்ப்பா என்று என்னால் சொல்ல முடியாது, ஜப்பானிய, ஆங்கில மொழி தெரிந்த + இந்த நாவலை இரண்டு மொழிகளிலும் வாசித்தவர்களால்தான் சொல்ல முடியும், சரியா ? 

9 May 2013

மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்


தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் படித்ததில் இருந்து அவருடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் வாங்கிய புத்தகம் இது.

பாலியல் உணர்வு தரும் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமேதும் இல்லை. அந்தக் கதைகள் ஒரு எல்லைக்குள் நின்றுவிடும். பதின்வயதில் அவற்றைப் படித்தபோது ஒரு கிளுகிளுப்பு உண்டாகும். கற்பனையில் அந்தக் கதைகளின் சம்பவங்கள் விரியும்போது சிறிது நேரத்திற்கு ஒரு இன்பத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்தக் கதைகள் போகக்கூடிய தூரம் அவ்வளவே.

மீனின் சிறகுகள் நாவலும் அவை போன்ற ஒன்றுதான் என்றால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். இவற்றில் இருந்து இந்த நாவலைத் தனித்து நிற்கச் செய்வது எது? அல்லது இந்த நாவல் எந்தப் புள்ளியில் இருந்து அவற்றைத் தாண்டிச் செல்கிறது?
தஞ்சை பிரகாஷ்