23 Jun 2013

தமிழகத்தில் அடிமை முறை - ஆ.சிவசுப்பிரமணியன்

சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்

தமிழ் இலக்கியமோ, சமய இலக்கியமோ  எல்லாமே மன்னர் பரம்பரை வழி பற்றிதான் சொல்கிறது. இப்போதே கல்வியில் இப்படி ஏற்றத் தாழ்வுகள் இருக்கிறதென்றால் அந்தக்காலத்தில் சாதாரண கடைக்கோடி தமிழனின் நிலை எவ்வாறு இருந்திருக்கும் என நிறைய யோசித்தாயிற்று. 

நாளந்தா  பல்கலை தமிழ் பல்கலை என கதை விட்டாயிற்று..!
(நாளும் + தா = நாளந்தா )

திண்ணைப் படிப்பு சமணர்கள் வந்த பின்தான் ஆரம்பித்தது. அதுவும் விருப்பமுள்ளவர்களாலும், அரசசபையில் பேச பாடவும் மட்டுமே விதிவிலக்காக சேர்த்து கொள்ளப்பட்டது. 


சரி... சாதாரண  குடிமக்களின் நிலை என்னவாக, எப்படி இருந்தது...?  வரலாறு  என்றாலே  கத்தி சண்டையும்,  நாலு கொலைகளும்,  எதிரி நாட்டு மக்களை, மன்னனின் மனைவியை,  அவர்தம் மக்களை சிறைபிடித்தலும், ஊரை கொள்ளையடித்தலும் தான் என ஆகிப்போய் விட்டது. 


அதுவும் இல்லையெனில் புலிகேசி வடிவேலு மாதிரி ஒரு "பில்ட் அப்" உடன் புலவர்களை கொண்டு கவி வடித்து...  அதை நாம இப்ப மனன பாடமாக படித்து.... அடடடா .. !

அதெப்படி.... அந்த காலத்திலேயே எல்லோருக்கும் கல்வி கிடைத்து "மன நிம்மதியான வாழ்க்கை" வாழ்ந்திருப்பார்கள் என நினைத்து "கல்வி"யின்பாற் திருப்பினால்  பண்டைய தமிழகத்தில் கல்வி முறை அதல பாதாளத்தில் வீழ்ந்திருந்தது போலும். சாமானியர்களுக்கும்  கல்விக்கும் காத தூரம்.

முத்தொள்ளாயிரத்திலும்... இன்னபிற சங்க இலக்கியங்களிலும் குறிப்பிட்டதுள்ளது போல, வயசுக்கு வந்த எல்லா பெதும்பைகளும் சேர சோழ பாண்டியர்களின் படுக்கையை நினைத்து விரகதாபம் கொண்டிருந்தார்களா, இல்லை துணைவனை / மகனை   போருக்கு அனுப்பி விட்டு வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்களா? தோழியருடன் தலைவனை நினைத்து காதல் கவிதைகள் பாடிக்கொண்டிருந்தனரா, இல்லை கஞ்சிக்கு வழியில்லாமல் அல்லலோகல்லல்லோகப்பட்டு அலைந்தார்களா?  எதுவும் அறியக் கிடைக்கவில்லையா , இல்லை மறைத்துவிட்டார்களா எனப்புரியவில்லை. 

வழக்கமான தேடலில் அடிமை முறை பற்றி ஆ சிவசுப்பிரமணியன் எழுதிய “தமிழகத்தில் அடிமை முறை”  என்றொரு  புத்தகம் கிடைத்தது. இந்தச் சிறுநூல் நூலாசிரியர் ஏற்கனவே (1984) வெளியிட்ட நூலின் விரிவாக்கம் ஆகும்.

“அடிமைத்தனம்” தமிழரிடை  இருந்ததில்லை என வி.கனகசபை  மற்றும்  எஸ்.ரா போன்றவர்கள் கூறியிருப்பினும் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், சுவடிகள்,  பயண, குறிப்புகள், அரசு ஆவணங்கள்  போன்ற   எண்ணற்ற கணக்கிலடங்கா செய்திகள் குறிப்புகள் மூலம் தமிழகத்தில் அடிமை முறை நிலவியதை நிறுவுகிறார் ஆசிரியர் 

தமிழத்தில் சமூக நிலை மன்னராட்சியில்  மிக மிக மோசமான நிலையை எட்டியிருந்தது.  இதை சர்வ சாதாரணமாக "கிராமங்களை" கொடையளித்த மன்னர்களின்/அரசர்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறிந்து கொண்டிருப்போம். அப்போது அந்த கிராமங்களை சேர்ந்த  மக்களின் “கதி” என்னவென்று யாரும் நினைத்து பார்த்ததில்லை.

சங்க கால, பல்லவர் கால பிற்கால சோழ, நாயக்கர் கால,  மராட்டிய கால அடிமை முறைகள்  என பின்னி பெடலெடுத்து தமிழத்தின் பரம்பரை அடிமை முறையான பண்ணையாள்,  தேவரடியாள்,  படியாள் முறை பற்றியும் அவற்றின் தொடர்ச்சியாக இந்த நூற்றாண்டில் உள்ள வழக்கு முறையையும் விளக்குகின்றார். 

புதியதாக எதையும் சேர்க்காமல் நாம் படித்தறிந்த  தமிழ் இலக்கியத்திலிருந்தும்,  பக்தி இலக்கியத்திலிருந்தும் , கண்டறிந்த கல்வெட்டுக்களிலிருந்தும்,  சுவடிகளிலிருந்தும்,  மக்களின் வழக்காற்றிலிருந்தும் இதற்கான சான்றுகளை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். 

சற்றேறக்குறைய 29  அடிமை ஆவணங்கள் என அறியப்பட்டவற்றை -புரிந்து கொள்ள எதுவாக 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட- ஆவணங்களை பின்னிணைப்பில்  இணைத்துள்ளார்.

"அடிமைகள் இருந்தார்கள்"  ஆனால் அவர்கள் சமுதாயத்தின்  மன்னரின் அரசனின்  வளர்ச்சியை தீர்மானிக்கும் நிலையில் இல்லை என ஆசிரியர் கூறி "அடிமை சமூகம் இருந்ததில்லை" என ஜகா  வாங்கியிருப்பது "அடிமைத்தனத்தின்" கோரத்தை தெள்ளத்தெளிவாக விளக்கும்.

முக்கியமான குறிப்பு :  "தமிழன்" என்றொரு அகங்காரத்தில் படிப்பதை விட அடிமைத்தனம் மலிந்த தொல் குடியை சார்ந்த  "சாதாரண மனிதன்" என்றொரு கோணத்தில் கவனத்துடன் படித்தறிந்து கொள்ள வேண்டிய "வரலாற்று உண்மை" இந்த புத்தகம்.

தமிழகத்தில் அடிமை முறை
ஆசிரியர் : ஆ. சிவசுப்பிரமணியம்,
வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்,
669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629001,
விலை : ரூ. 120.00
இணையம் மூலம் இந்தப் புத்தகத்தை வாங்க: நூலுலகம்

1 comment:

  1. நல்ல அலசல் அய்யா.. ஆனால் நாடார் இனத்தவர் குறித்து குறிப்புகள் உள்ளதா..

    ReplyDelete