23 Oct 2013

Demystifying Kashmir - Navnita Chadha Behera


நவநிதா சந்திர பெஹெரா அவர்களின் Demystifying Kashmir நூல் அற்புதமான ஒரு முயற்சி எனலாம். பெயருக்கு ஏற்றார் போலவே காஷ்மீர் பற்றி நமக்கிருக்கும் பொதுவான பிம்பங்களை நெருக்கமாக காஷ்மீர் பற்றிய விவரிப்பால் தகர்க்கிறார் ஆசிரியர். காஷ்மீர் சிக்கலை மதரீதியான சிக்கலாக பார்க்கிற போக்கிலிருந்து விலகி ஆராய்கிறார் நவநிதா.

ஒரு டைப் ரைட்டர் மற்றும் ஒரே ஒரு ஸ்டெனோவை வைத்துக்கொண்டு பாகிஸ்தானை அடைந்து விட்டதாக பெருமிதம் கொண்ட ஜின்னா காஷ்மீர் பற்றி முதலில் கவலைப்படவே இல்லை, படேலும் காஷ்மீர் பாகிஸ்தானுக்கு போனால் ஒன்றும் சிக்கலில்லை என்கிற மனோநிலையில் தான் இருந்திருக்கிறார். ஜின்னா தனக்கு கிடைத்த பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவில்லை என்கிற கடுப்பில் காஷ்மீர் பக்கம் கண் பதிக்கிறார். ஜூனாகரில் ஹிந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதியை தன் வசப்படுத்திக்கொள்ள பார்க்கிறார். இது போல இன்னும் சில ஹிந்து பெரும்பான்மை அரசுகளையும் கைப்பற்றிக்கொள்ள பார்க்கிறார். படேல் அப்பொழுது தான் விழித்துக்கொள்கிறார். காஷ்மீர் நோக்கி பழங்குடியினரின் தாக்குதல் நடப்பதும் அதற்கு பிறகு காஷ்மீரின் வடக்கு பகுதி, கில்கிட் பல்டிஸ்தான் பாகிஸ்தான் பக்கம் போவதும் எல்லாருக்கும் தெரியும். இங்கிலாந்தின் பாகிஸ்தான் சார்பு கொள்கை அப்பகுதிகளை அப்படியே காத்தது ஐ.நா. சபையில் என்றால், நேருவும் அப்படிப்பட்ட பிரிவினையை ஏற்றுக்கொண்டார் என்பது வரலாறு. காரணம் அப்பகுதியில் பலமாக இருந்த முஸ்லீம் மாநாட்டு கட்சி பாகிஸ்தான் ஆதரவு நிலையை எடுத்திருந்தது என்கிற உண்மையையும் ஆசிரியர் காட்டுகிறார்.

4 Oct 2013

மாவீரன் செண்பகராமன் - யோகா பாலச்சந்திரன்


இந்திய விடுதலைக்காக அகிம்சைக்கு எதிரான முறையில் இயங்கியவர்கள் மிகச் சிலரே. இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு காந்திய அகிம்சைப் போராட்ட வரலாறாக இருக்கிறது. அப்படியில்லாமல் ஆயுதம் ஏந்திப் போராடிய சிறுபான்மை போராளி ஒருவரின் சுருக்கமான வரலாறு இந்த நூல். சுருக்கம் என்றால் பொடிச்சுருக்கம். முன்னுரை, சில விளம்பரப் படங்கள் கழிய மொத்தமே 34 பக்கங்கள் மட்டுமே. வேகமாக வாசிப்பவர்கள் பதினைந்து நிமிடங்களில் வாசித்து கீழே வைத்துவிடலாம்.

இலங்கை சிந்தாமணி இதழில் 1967ல் வெளிவந்த கட்டுரைத் தொடரை நூல் வடிவில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள். வரலாற்றையும் அதில் வாழ்ந்த ஒருவரையும் மறந்துவிடக்கூடாது என்பதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இல்லை செண்பகராமனைப் பற்றி நாமறிந்த தரவுகளின் ஆழம் அவ்வளவுதானா தெரியவில்லை. அதாவது சொல்வதற்கு அதிகமாக எதுவும் இல்லை என்ற நிலை இருக்கிறதா என்ற கேள்வி பிறக்கிறது.



3 Oct 2013

கோவில்-நிலம்-சாதி: பொ.வேல்சாமி

சிறப்புப் பதிவர்: ஆனந்தராஜ்

”உங்கள் வீட்டில் உணவு வீணாகிவிட்டதா? 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வீடு தேடிவந்து அந்த உணவை ?குழந்தைகள் ஹெல்ப்லைன்”காரர்கள் பெற்றுச் செல்வார்கள்” என்றது ஒரு ட்விட்டர் செய்தி.

”மெண்டோஸ்” என்னும் மிட்டாயை குழந்தைகளுக்குத் தராதீர். கேன்ஸர் வருதாம் - என்று ஒரு குறுஞ்செய்தி வருகிறது. 

முதற்செய்தி போகிற போக்கில் அடித்துவிடப்படும் செய்தி என்றால் இரண்டாவது செய்தி வியாபார எதிரிகளால் பரப்பப்படும் வகையறா.



2 Oct 2013

மணக்கும் எழுத்து- நளபாகம்

- ந.ரா.சேதுராமன்  (@chandsethu)

அமரர் தி.ஜானகிராமனின் "சிலிர்ப்பு" கதையை சில வாரத்திற்கு முன்பு படிக்க நேர்ந்தது. அப்போதுதான் கையில் இந்த புத்தகம் இருந்தது நினைவிற்கு வந்து "அம்மா வந்தாள்" படித்த சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திஜாவை கையிலெடுத்தேன். சில அலுவல்கள் காரணமாக தொடர்ந்து படிக்க முடியாமலிருந்து, நேற்றுதான் ஒரே மூச்சாக படித்தும் முடித்தேன்.

அப்புறம் பேசிக்கொண்டிருக்கும்போது, திஜாவின் படைப்புகளில் அதிகம் பேசப்படாத நாவல் இது என்று புத்தகத்தை எனக்களித்த நண்பர் மகேஷ் ஜெயராமன் தெரிவித்தார். அது தவிர, இணையத்தில் படித்த சில மேம்போக்கான விமர்சனங்களும், பொதுவாகவே திஜா மீது இருக்கும் கருத்துக்களும்தான் நான் இதைப் பற்றி எழுதக் காரணம்.  இங்கு "ஜானகிராமனப் படிச்சா நடு வயசு பெண்கள் மீது நமக்கு ஒரு ஈர்ப்பு வந்துடும் சார்" என்று  திஜாவின் எழுத்துகளைப் படித்த முதிர்ந்த தமிழாசிரியர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் எழுத்தைப் படிக்க ஒரு காரணம் இருக்கும். இப்படிப்பட்ட காரணங்களால்கூட சிலர் திஜாவை படிப்பார்களா என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உறவு, பாலியல்  கிளுகிளுப்புகள் மட்டுமே நிறைந்த  எழுத்தாக திஜாவைப் பார்ப்பது எவ்வளவு தவறான கண்ணோட்டம் என்பது நளபாகத்தை உன்னிப்பாக படித்தவர்களுக்குத் தெரியும், ஏன் அம்மா வந்தாளை புரிந்து படித்தவர்களுக்குக் கூட‌. எளிமையான நடையும், தேங்கி நிற்காமல் போகும் கதையம்சமும்,  ஆழ்பொருளை காற்றைப் போல லேசாக சொல்லிச்செல்லும் பாங்கும் எத்தனை வியப்புக்குரியவை! 


1 Oct 2013

கடல்புரத்தில் - வண்ணநிலவன்


வண்ணநிலவன் - மனைவியின் நண்பர் எனும் சிறுகதையின் மூலம் ஆச்சர்யப்படுத்தியவர். இரு வெவ்வேறு குடும்ப உறவில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு ஏற்படுவது என்பது நம் சமூகத்தில் எளிதான விஷயம் இல்லை. அப்படி ஏற்படும் உறவுக்குள் இயல்பாகவே இரு பாலினதுக்கு உண்டான காமம் சார்ந்த ஈர்ப்பு இருக்கும். ஆனால் அவர்கள் ஒருவனுக்கு ஒருத்தி, பிறன்மனை நோக்காதே எனும் நமக்கு நாமே ஏற்படுத்தி கொண்ட நாகரிக கோட்பாடுகளுக்கு பயந்து, அவற்றின் பால் ஏற்படும் குற்ற உணர்வால் அந்த காம எல்லையை தொட முயற்சிப்பதில்லை. இப்படி, கனவில் நாம் எதையோ பிடிக்க முயன்று அது நம் கைகளுக்கு அகப்படாததும் விழித்து நிஜ உலககிற்கு வருவதுபோல் காமத்தின் பால் ஈர்ப்பு கொண்டு ஆனால் அதை தொடாமல் இயங்கும் எத்தனையோ உறவுகள் எங்கும் விரவிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே எழுத்துக்குள் கொண்டு வர இயலுமா என்று தெரியவில்லை. ஆனால், அதை எழுத்தில் ஓவியமாகவே தீட்டி இருப்பார் வண்ணநிலவன்.

கடல்புரத்தில் நாவல் மணப்பாடு ஊர் மக்களின் வாழ்வியலை குரூஸ் குடும்பத்தை முன்வைத்து நமக்கு காட்சிபடுத்துகிறது. குரூஸ் மிக்கேல், அவரின் மனைவி மரியம்மை, மூத்த மகள் அமலோற்பவம், மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி என்று ஐவர் உள்ள குடும்பத்தில் மரியம்மையும், பிலோமியும் நமக்கு முதன்மையானவர்களாக படுகிறார்கள். மரியம்மைக்கும் அந்த ஊரில் வசிக்கும் வாத்தியாருக்கும் "மனைவியின் நண்பர்" சிறுகதையில் வருவது போன்ற ஓர் உறவு ஏற்படுகிறது. அந்த ஊர் அதை வழக்கம்போல் காமம் சார்ந்த உறவாகவே பார்க்கிறது. ஆனால் அதை பற்றியெல்லாம் மரியம்மை கவலைப்படவில்லை. நாம் செய்யாத தவறை செய்வதாக பிறர் கூறும்பொழுது நமக்குள் இயல்பாகவே ஒரு திமிர் ஏற்படும். இந்த இடத்தில் குற்றம் சாட்டுபவனை விட குற்றம் சாட்டப்பட்டவன் உயர்ந்து நிற்கிறான். அதனால் ஏற்ப்படும் திமிர் அது. இந்த திமிர் நம்மை விளக்கம் கொடுக்க கூட அனுமதிக்காது. இதனால் மரியம்மையின் கணவன் குரூஸ் வாத்தியார் வீட்டு முன் குடித்துவிட்டு சத்தம் போட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல் மரியம்மை இந்த உறவை தொடர்ந்தபடியே இருக்கிறாள். சமூகத்திற்கு இந்த உறவை அன்பு சார்ந்த உறவாக பார்க்க முயல்வதில்லை என்பதை விட விருப்பபடுவதில்லை என்று சொல்லலாம். காரணம், அப்படி காமம் சார்ந்த உறவாக பார்ப்பதில் அவர்களுக்கு ஒரு மன லயிப்பு கிடைக்கிறது. உண்மையில், இதுபோன்ற உன்னதமான உறவை அன்பின் கண்கொண்டு பார்க்கும்போதுதான் நம் மனம் அதிக நெகிழ்ச்சியை அடையும். ஆனால் அன்பை விட காமத்திற்குதான் அதிக கவர்ச்சி இருக்கிறது இல்லையா. இதை வேறு வகையில் பார்க்கப் போனால் இந்த சமூகம் இப்படி நினைப்பதால்தான் இந்த உறவுகள் கவித்துவம் பெற்று உன்னத நிலையை அடைகிறது எனலாம். அந்த வகையில் பார்த்தால் இந்த சமூகம் செய்வது சரிதான். இந்த உலகமே இதன்பொருட்டுதானே இயங்குகிறது. எதுவுமே தவறில்லை. எல்லாமே சரி. தவறு என்பது இன்னொரு சரி.