20 Nov 2013

The Daughter of Time - Josephine Tey


நண்பர் எஸ். சுரேஷ் முன்னொரு மதிப்பீட்டில் இப்படி எழுதினார் : "ஒரு கொலை வழக்கின் விடையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, ஸ்காட்லாந்தின் அழகைக் கண்டுபிடிப்பதும்தான் நாவலின் கருப்பொருள். பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட விவரணைகளால் தான் அறியாத இடங்களுக்கும் வாசகர் கொண்டு செல்லப்படுகிறார் - நாவலின் முடிவில், ஸ்காட்லாந்துடன் தனக்கு நெருங்கிய ஒரு பந்தம் இருப்பதான உணர்வு வாசகரின் மனதில் ஏற்பட்டுவிடுகிறது. சிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தே அவர்களில் ஒருவர்."

இதைப் படித்ததிலிருந்தே தே (Josephine Tey) எப்படி எழுதுவார் என்ன என்று அறிந்து கொள்ள ஒரு ஆர்வம் வந்து விட்டது - எனவே அவரது The Daughter of Time கிடைத்தபோது மறுயோசனையின்றி படிக்க எடுத்துக் கொண்டுவிட்டேன். தே ஏமாற்றவில்லை என்பது மட்டுமல்ல, இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் சொல்லுவேன். பக்கத்துக்கு பக்கம் பரபரப்பு, விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பங்கள். இத்தனைக்கும் இது நமக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத பிரிட்டிஷ் அரசர்களைப் பற்றிய கதை. அதுவும் ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய அரதப்பழசான ராஜா ஒருவன் மீது பிரிட்டிஷ் வரலாற்றில் பதியப்பட்ட அவதூறுகளை மறுத்து, அவன் நல்லவன் என்று நிறுவும் கதை. அதிலும் இது சீரியஸ் கதைகூட இல்லை - ஒரு திருடனைத் துரத்திக் கொண்டு ஓடும் இன்ஸ்பெக்டர் ஆலன் கிராண்ட் ஒரு பாதாள அறைக்குள் தடுக்கி விழுந்து காலை உடைத்துக் கொள்கிறான்; அதன்பின் மருத்துவமனையில் படுத்தபடியே தன் புலன் விசாரணையை நடத்தி நடந்தது என்ன என்ற உண்மையை அவன் கண்டுபிடிப்பதாகச் செல்கிறது கதை.

இருந்தாலும், இது இந்த ஆண்டு நான் படித்த நாவல்களில் மிகச் சிறந்தவற்றுள் ஒன்று.

18 Nov 2013

The Thief - Fuminori Nakamura


பலமுறை ஜப்பானுக்கு சென்று வந்தவன் என்ற முறையில், இந்த நாவலில் என்னை வசீகரித்த முதல் விஷயம் ஜப்பானில் பிக்பாக்கெட்டுகள் இருக்கிறார்கள் என்ற தகவல்தான். மிக நெரிசலான ரயில் பயணங்களில்கூட என் பாக்கெட்டில் பர்ஸ் பத்திரமாக இருக்கிறதா என்று நான் கவலைப்பட்டதில்லை. ஜப்பான் மிகவும் பாதுகாப்பான இடம் என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கை இருந்திருக்கிறது. இதுவரை என் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியாக எதுவும் நடக்கவுமில்லை. எனவேதான் ஒரு ஜேப்படி திருடனை நாயகனாகக் கொண்ட ஃபூமிமோரி நகமுராவின் "The Thief" நாவலைப் படிப்பது ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்தது.

இத்தனை நாட்கள் எங்கு ஒளிந்து கொண்டிருந்தானோ தெரியாது, நிஷிமுரா டோக்கியோவுக்குத் திரும்புகிறான். அவன் அங்கு தனக்கு நன்றாகத் தெரிந்த தொழிலைத் தொடர்கிறான் - பிக்பாக்கெட் அடிப்பது. நிஷிமுராவுக்கே தான் ஏன் டோக்கியோவுக்குத் திரும்ப வந்தோம் என்று குழப்பமாக இருக்கிறது - அவன் தன் தொழிலைத் தொடர்வதர்காகத் திரும்பி வருகிறானா, அல்லது ஒரு காலத்தில் தனக்கு ஆசானாகவும் நண்பனாகவும் இருந்தவன் என்ன ஆனான் என்பதைக் கண்டுபிடிக்கத் திரும்புகிறானா? திரும்பிய நோக்கம் எதுவாக இருந்தாலும், இப்போது கடந்த காலத்தில் நடந்தது என்ன என்று முழுமையாக அறிந்து கொள்ள விரும்புகிறான். ஆனால் அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத வகையில் கடந்த காலம் சமகால நிகழ்வுகளைக் கைப்பற்றிக் கொள்கிறது - இதனால் நிஷிமுரா கடும் பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியதாகிறது.



14 Nov 2013

Revolver - Marcus Sedgwick



Marcus Sedgwick எழுதிய Revolver (2009) நாவல் அலாஸ்காவிலும் ஸ்வீடனிலும் நிகழ்கிறது. கதை 1910ஆம் ஆண்டில் சொல்லப்படுகிறது - இடையிடையே வரும் பகுதிகள் பத்தாண்டுகளுக்கு முன்னர் அலாஸ்காவில் நடந்த ஒரு தங்க தள்ளுமுள்ளுவின்போது நடந்ததைப் பேசுகின்றன. வில்லன் கடந்த காலத்திலிருந்து உயிர் பெற்று எழும் கதை, மனிதனின் புத்திசாலித்தனத்தைப் பற்றிய கதையும்தான்.

கதையின் துவக்கத்திலேயே புத்திசாலித்தனத்துக்கு வேலை வந்து விடுகிறது.  ஆர்க்டிக் வட்டத்தின் பனி வனாந்தரத்தில் கதையின் பிரதான பாத்திரம் தனியாக இருக்கிறான், அவன் ஒரு சிறுவன் - உதவிக்கு ஆள் வேண்டுமானால் பல மைல்கள் தேடிப் போக வேண்டும். அவன் இறந்த அப்பாவின் பிரேதத்தோடு கேபினில் இரவின் இருளில் தனித்து விடப்பட்டிருக்கிறான் - விடியலில் துப்பாக்கியும் கையுமாக முரட்டு ராட்சதன் வுல்ஃப் அவனுக்குத் துணையாக வந்து சேர்கிறான் - ஆனால் அவன் வந்திருப்பது சோகத்தில் பங்கேற்கவோ உதவி செய்யவோ அல்ல, எங்கே இருக்கிறது, இருக்கிறதா என்ன என்றே தெரியாத தங்கத்தில் பங்கு கேட்டு வந்திருக்கிறான். அது கிடைக்காவிட்டால் அப்பா செய்த துரோகத்துக்கு பிள்ளையைக் கொன்று பழி தீர்த்துக் கொள்வான். ஆனால் நம் இளம் ஹீரோ ஸிக்குக்கோ தங்கம் பற்றி எதுவும் தெரியாது. தங்கம் எங்கே என்று கேட்கும் வுல்ஃபிடமிருந்து தப்பிப்பது எப்படி?  "நீ எல்லாவற்றையும் கவனிக்க வேண்டும், அறிவைப் பயன்படுத்த வேண்டும்," என்று அப்பா அவனுக்குச் சொன்ன அறிவுரையே கடைசி வரைக்கும் ஸிக்க்கு நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

7 Nov 2013

Black Seconds - Karin Fossum


காரின் ஃபோஸ்சுவின் "Black Seconds' நாவலின் பின்னட்டை வாசகம், பத்தே வயதான ஒரு பெண் காணாமல் போவதைப் பற்றிய கதை இது, என்று சொல்கிறது - சிறு குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படும் உலகை விவரித்தாலும் வழக்கமான மர்ம நாவல்களின் பாதையில்தான் இதுவும் பயணிக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் நான் ஆச்சரியப்படும் வகையில் ஃபோஸ்சுவின் கதை வழக்கமான தடத்தில் செல்லவில்லை, மாறாக மிகவும் நிறைவளிக்கும் மாற்றுப் பாதையொன்றினுள் நுழைகிறது.

பின்னட்டை வாசகம் சொன்னபடிதான் கதை துவங்குகிறது - இன்னும் பத்து நாட்களில் பத்தாம் வயது பிறந்த நாள் கொண்டாடப்போகிற ஐடா, தன் அம்மாவுக்கு டாட்டா காட்டி கையசைத்தபடியே சில இனிப்புகள் வாங்கிக் வர சைக்கிளை ஓட்டிக் கொண்டு ஊரின் மையப்பகுதியை நோக்கிச் செல்கிறாள். மாலை இரவாகிறது, மகள் திரும்பி வருவதில்லை. அவளது நண்பர்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறாள் அம்மா, ஆனால் ஐடா இந்த நண்பர்கள் எவர் வீட்டிற்கும் செல்லவில்லை. அதன் பின் தனது இளைய சகோதரியை அழைக்கிறாள். இருவரும் ஐடா எங்காவது விளையாடிக் கொண்டிருக்கிறாளா என்று காரோட்டிக் கொண்டு தேடிச் செல்கின்றனர். அவள் எங்காவது நேரம் காலம் மறந்து விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆனால் அது வீண் தேடல். கடைசியில் காவல்துறையை உதவிக்கு அழைக்கிறார்கள். இதையடுத்து குற்றத்தை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சயிர் இவர்கள் வீட்டுக்கு வந்து தகவல்களைச் சேகரித்துச் செல்கிறார்.