12 Jan 2014

Borkmann's Point - Hakan Nesser


வான் வீட்ரன் காவல்துறை பணியில் இணையும்போது அதன் தலைமை பதவியில் இருக்கும் போர்க்மன் ஒரு விஷயத்தை அவதானிக்கிறார். அது வான் வீட்ரனின் மனதில் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது - "கொஞ்சம் ஒழுங்காக யோசித்தால் போதும், குற்றவாளியைக் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லுமளவுக்குத் தேவையான தகவல்கள் கிடைத்துவிடும் கட்டம் ஒன்று ஒவ்வொரு வழக்கிலும் வரும். அந்தக் கட்டத்தை அடையும்போது அதை உணர்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது," என்று சொல்கிறார் அவர். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கில் துப்பு துலக்க முற்படுகையில் வான் வீட்ரன் இந்த விஷயத்தை யோசித்துப் பார்க்கிறான்.

இந்த நாவலின் அடிப்படையாக இருக்கும் குற்றத்தில் கோடரியைக் கொண்டு கொலை செய்யும் ஒருவன் சம்பந்தப்பட்டிருக்கிறான். மிகக் கூர்மையான கோடரியைக் கொண்டு இருவரைக் கொன்றவன் அவன், அந்தக் கோடரியின் வீச்சு இருவரின் தலைகளையும் உடலிலிருந்து ஏறத்தாழ துண்டித்திருக்கிறது. முதலில் கொலை செய்யப்பட்டவன் போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையானவன், போதை மருந்து விற்பவன். இரண்டவதாக கொல்லப்பட்டவன் ரியல் எஸ்டேட் ஏஜண்ட். இந்த இரு கொலைகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று காவல்துறை விசாரித்துக் கொண்டிருக்கும்போதே கோடரிக் கொலைகாரன் மூன்றாவது கொலையைச் செய்கிறான் - இம்முறை சாவது ஒரு டாக்டர். கடலோரத்தில் இருக்கும் சிற்றூரான கால்ப்ரிங்கனில் பதட்டம் பரவுகிறது, அந்தி சாய்ந்தபின் எவரும் வீட்டை விட்டு வெளியே வர தயாராக இல்லை.

இரண்டாம் கொலைக்குப்பின் குற்றவாளியைக் கண்டுபிடிக்க கால்ப்ரிங்கன் காவல்துறைக்கு உதவும் பொறுப்பை வான் வீட்ரனிடம் தலைமை அதிகாரி ஒப்படைக்கிறார். வான் வீட்ரன் அந்நகரின் காவல்துறை தலைமை அதிகாரி பாஸனின் நண்பனாகிறான்.  பாஸனும் அவரது ஒயின் சேகரமும் வான் வீட்ரனுக்குப் பிடித்துப் போகிறது. பாஸன் விரைவில் ஓய்வுபெறப் போகிறார். அதற்குள் அவர் குற்றவாளியைக் கைது செய்துவிட விரும்புகிறார்.

ஆனால் இவர்கள் துப்புத் துலக்கிக் கொண்டிருக்கும் வேளையில் மூன்றாவது கொலை நிகழ்ந்துவிடும்போது கால்ப்ரிங்கன் காவல் துறையில் டிடெக்டிவாகப் பணியாற்றும் பீட் மோர்க் வான் வீட்ரனின் சகாவுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். அதில் அவர் இந்த வழக்கு சம்பந்தமாக வித்தியாசமான ஒரு விஷயத்தைத் தான் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார். ஆனால் சில மணி நேரங்களில் அந்தப் பெண் அதிகாரி காணாமல் போய் விடுகிறார் - கோடரி கொலைகாரன்தான் அவரைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும்.
நசெர் இந்தக் குற்றங்களை புத்திசாலித்தனமாகப் புனைந்திருக்கிறார். கொலையான மூன்று பேருக்குமிடையே எந்த தொடர்பும் இல்லாதது போலிருக்கிறது. ஆனாலும் அந்தக் கொலைகளை கொலையாளி கவனமாக திட்டமிட்டிருப்பது தெரிகிறது. பைத்தியக்கார சீரியல் கொலைகாரனின் வேலையல்ல இது. இந்தக் கொலைகளை இணைக்கும் கண்ணுக்குத் தெரியாத இழைகளுக்கு ஏதோ ஒரு உருவம் உண்டு என்பது கதையை இன்னும் சுவாரசியமாக்குகிறது. நசெர் நமக்கு சில தகவல்களைத் தருகிறார், ஆனால் வாசகர் மிகச் சுலபமாக அவற்றைக் கடந்து சென்று விடும்வகையில் அவை இருக்கின்றன (அவர் ஒருசில பொய்மான்களையும் கதையினூடே அவிழ்த்து விட்டிருக்கிறார் என்பதையும் சொல்ல வேண்டும்!)

மூச்சிறைக்கும் வேகத்தில் விரையும் நாவலல்ல இது - பரபரப்புக்கும் அமைதிக்கும் இடையே ஊசலாடும் கட்டங்கள் நிறைந்த கதையிது. ஒரு பக்கம் கொலைகள், காவல்துறை விசாரணைகள், தகவல் திரட்டல், பேட்டிகள். மறுபுறம் காலத்தால் சுவைகூடிய ஒயினைச் சுவைத்துக் கொண்டே பாஸனுடன் செஸ் விளையாடும் வான் வீட்ரன், தொலைதூரம் ஓடி மகிழும் பீட் மோர்க்.

சிற்றூர்களுக்குரிய நிதானமான வாழ்க்கை முறையையும் நசெர் சிறப்பாக விவரிக்கிறார். இந்த நிதானமாக வேகம் காவல்துறை விசாரணையிலும் வெளிப்படுகிறது. தலைமை அதிகாரி பாஸன், அவரது அகராதித்தன உதவியாளர், விஷயங்களைத் தெரிந்து கொள்ளத் துடிக்கும் புத்திசாலி பீட் மோர்க் என்று அனைவரும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றனர், இவர்கள் உயிரோட்டமுள்ள பாத்திரங்களாகவும் இருக்கின்றனர். வான் வீட்ரன் வழக்கம் போலவே இந்தக் கதையிலும் சோகமாகதான் இருக்கிறான். இம்முறை அவனது ஷெர்லாக் ஹோம்சுக்கு சகா முன்ஸ்டர் வாட்சனாக இருக்கிறார் (ஆனால் வாட்சன் போலல்லாமல் முன்ஸ்டர் ஒரு முக்கியமான விஷயத்தைத் துப்புத் துலக்குகிறார்).

இந்த நாவல்களின் வெற்றி முடிவை நோக்கி கதை எப்படிச் செல்கிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது. இந்த விஷயத்தில் இங்கு நசெர் மிக அற்புதமான வெற்றி கண்டிருக்கிறார். கதையின் உச்சம் நாம் எதிர்பாராததாகவும் நமக்கு நிறைவளிப்பதாகவும் இருக்கிறது. பெற்றோர் பலருக்கும் தங்கள் பிள்ளைகள் குறித்து இருக்கும் கொடுங்கனவின் இயல்பு கொண்ட பின்கதை உள்ளத்தைத் தொடுவதாக இருக்கிறது. முன்னர் என்ன நடந்தது என்ற விவரணைகள் கதைக்குக் கூடுதல் ஆழம் தருகின்றன, அது நாவல் வாசிப்பை முழுமையானதாகச் செய்வதில் உதவவும் செய்கிறது. கதையின் முடிவு மிகப் பிரமாதமாக இருக்கிறது - வான் வீட்ரன் குற்றவாளியை எப்படி கண்டுபிடித்தான் என்பதை நசெர் சரிவர விளக்குவதில்லை என்ற விஷயம் நமக்குப் பொருட்டாயில்லை என்று சொல்லும் அளவுக்கு அபாரமான முடிவை அடையும் நாவல் இது.

எனக்கு நசெரின் நாவல்களின் எல்லா நாவல்களும் சம அளவில் ஒரே இயல்பு கொண்டிருப்பவையாகத் தெரியவில்லை. ‘Inspector and the Silence’ போன்ற நாவல்கள் லகுவானவை, பெரிய மர்மம் என்று எதுவும் இல்லாமல் கதையின் உணர்வுச் சூழலை நம்பி நிற்பவை. இதுவும் ‘The Minds Eye’ போன்ற நாவல்களும் எளிதில் ஊகித்துவிடக்கூடிய முடிவு கொண்டவையாக இருக்கின்றன. கதை எதிர்பாராத முடிவை அடையும்போது நமக்குக் கிடைக்கும் நிறைவை இந்த நாவல்கள் பறித்துக் கொள்கின்றன. ‘The Hour of the Wolf’ மர்மக் கதை என்பதைவிட மானுட இயல்பின் இருண்மை நிறைந்த பகுதியைக் குறித்த ஒரு நிதான சிந்தனை என்று சொல்லலாம். ‘The Woman with a Birthmark’ எனக்கு திருப்தியளிக்கும் நாவலாக இருந்தது, ஆனால் அதற்குக்கூட நாவலின் முடிவல்ல, அதன் கதையைதான் காரணம் சொல்ல வேண்டும்.

ஒரு வரி பரிந்துரை :

நீங்கள் சுவாரசியமாகச் சொல்லப்பட்ட எதிர்பாராத முடிவு கொண்ட மர்மக் கதைகளை விரும்புபவராக இருந்தால் ‘Brokmann’s Point’ நீங்கள் படிக்க வேண்டிய நாவல்.

ஹக்கான் நசெர் எழுதிய The Inspector and Silence என்ற நாவல் அறிமுகம் இங்கிருக்கிறது.

Borkmann's Point,  Paperback, 336 pages, Vintage (first published 1994)  

புகைப்பட உதவி : Ms. Wordopolis Reads

தமிழாக்க  உதவி - பீட்டர் பொங்கல்

2 comments:

  1. பொங்கல் நல் வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா. தங்களுக்கும் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete