29 Jun 2014

ஓநாய் குலச்சின்னம் - ஒரு புனைவும் சில எண்ணங்களும்


ஜாரட் டைமண்டின்  ‘துப்பாக்கிகள், கிருமிகள், மற்றும் எக்கு’ நூலில் அவர் வரலாற்று எழுச்சி வீழ்ச்சி  நிகழ்வுகளில்,  மார்க்சிய பொருள்முதல்வாத முரண் இயக்கம் எனும் கோட்பாட்டுக்கு வெளியே இருக்கும் வேறு பல காரணிகள் குறித்து தனது சிந்தனையை முன்னெடுக்கிறார். உதாரணமாக முதல் உலகப்போருக்கு முன்னான காலக்கட்டத்தில், ராணுவ நடவடிக்கைக்கு அடிப்படையான குதிரைகள் மீதான ஆளுமை கொண்டோரின் எழுச்சி தருணத்தை ஜாரெட் முன்னிலைப்படுத்துகிறார். கி மு 1674இல் எகிப்த்தில் ஹிக்ஸோ எனும் குழு, பாரோக்களுக்கு சொந்தமான குதிரைகளின் பரிபாலகர்களாக இருக்கிறார்கள். குதிரை மீதான தேர்ச்சி அக்குழுவுக்கு கைவந்தவுடன் ஒரு சிறிய படையெடுப்பு மூலம், அரசை வென்று அவ்வினக்குழு சில காலம் பாரோக்களாக ஆட்சி புரிகிறார்கள்.

ஜாரெட்டின் இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு, ஒரு முறை தனது உரையாடலில் ஜெயமோகன், பாலை நில மக்கள், இந்தியாவை வென்று அடக்க அடிப்படைக் காரணிகளாக அம் மக்கள், தங்கள் அன்றாட உயிர் பிழைத்தலுக்கு, பாலைநில சூழலுடன் புரிந்த சமரில் அடைந்த தகவின் பலனாய்க் கிடைத்த மூர்க்கம், மற்றும் சோர்வே அற்ற உறுதி குலையாத அரேபியக் குதிரைகள் மீது, அதன் திறன்கள் மீது,  அவர்கள் அடைந்திருந்த தேர்ச்சியை முன்வைத்தார். தொடர்ந்து மேய்ச்சல் சமூகமாக இருந்து, முகமதிய அரசர்களின் குதிரைகளுக்கு பரிபாலகர்களாக மாறி, அதன் பலனாக கைவரப்பெற்ற குதிரைகள் மீதான ஆளுமைத்திறனை அடிப்படையாகக் கொண்டு, உயர்ந்து வந்த நாயக்க மன்னர்களின், அடித்தளத்தை இதே சிந்தனை வரிசை கொண்டு விளக்கினார். இந்தப் பாலைநில ஆற்றலுக்கு, நிகராக எழுந்துவந்த சத்ரபதி சிவாஜி, மற்றும் நாயக்க வம்சம் இரண்டின் ஆற்றலுக்கான அடித்தளமும் இதேதான் என்று தொடர்ந்தார்.

நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றை,ஒரு புதிய சிந்தனைத் தளத்தில் நிறுத்தி, அதன் வெளிச்சத்தில் விஷயங்கள் புதிதாக துலங்குகையில் அளிக்கும் உவகையில் அன்றெல்லாம் திளைத்திருந்தேன். சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படம் கண்டேன். செர்ஜி பாத்ரோ இயக்கி, மங்கோலிய மொழியில் வெளியான, செங்கிஸ்கான் வாழ்வின் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ‘மங்கோல்’ எனும் படம் அது. அதன் தருணங்களும், கானின் எழுச்சியும், இந்த சிந்தனைத் தொடரில் பொருந்தி, மேலும் பல சிந்தனை பாதைகளுக்கு என்னை அழைத்துச் சென்றன.

பின்னர் சமீபத்தில் ஜாரெட்டின் அந்த நூல் தமிழில் வாசிக்கக் கிடைத்தது. [வெளியீடு பாரதி புத்தகாலயம்] ஜாரெட் அவரது நூலின்  பக்கங்களில், வெவ்வேறு தருணங்களில் சொல்லியவற்றை, ஒரு வரிசையில் வகுத்துக் கொண்டேன்.

முதலில் வேட்டைச்சமூகம். இங்கே வலியது எஞ்சும் எனும் வன நீதிதான் அடிப்படை. அடுத்து வேட்டையுடன் இணைந்த மேய்ச்சல் சமூகம். இங்கே இயற்கையுடன் ஒரு உடன்படிக்கை நிகழ்கிறது. தேவைக்கு மட்டுமே இயற்கை நுகர்வு, ,பேராசைக்கு அல்ல  அதுதான் இங்கு அடிப்படை. அடுத்து வேளாண் சமூகம். வேட்டை சமூகம் கொண்ட ஸ்தரமின்மை இங்கே இல்லை. தங்கி வாழும் தன்மையால் பிறப்பு விகிதம் அதிகரிக்கிறது. உணவு சேமிக்கப்படுகிறது. சமூக நிர்வாகமும், சேமிப்பு பாதுகாக்கப்பட ராணுவமும் தேவையாக, அதை உருவாக்க உபரியும், உபரியின் வழி மையமான அரசாங்கமும் உருவாகின்றன. படிநிலையில் இந்த வேளாண் மைய அமைப்பைக் காக்க, ஒரு மைய அரசு. அது முதலில் ஒடுக்குவது, அல்லது அழிப்பது வேட்டைச் சமூகமாக இருக்கிறது. இன்று மக்கள் தொகையில் முன்னணியில் இருக்கும் சீனா கிமு 7000 அளவிலேயே விவசாயம், மற்றும்  பட்டுப்புழு வளர்ப்பில் அடித்தளம்  அமைத்து விட்டது என்பதை இதனுடன் இணைத்து சிந்திக்க, சுவாரஸ்யம் கூடுகிறது.

இந்த அடிப்படை சிந்தனைகளின் இலக்கிய சாட்சியமாக, மைய அரசால் ஒடுக்கப்படும் வேட்டை சமூகம் ஒன்றின் இறுதி நாட்களை அடிப்படையாகக் கொண்டு, இயற்கைமீது மனிதன் செலுத்தும் வன்முறையால், எதிர்வரும் சுய அழிவு, இவற்றை சரடாகக் கொண்டு, ஒரு இயற்கை தரிசனத்தை முன்வைத்த அற்புதமான  புனைவு ஒன்று வாசிக்கக் கிடைத்தது.

ஜியாங் ரோங் எழுதிய, [ஆங்கிலம் வழி தமிழில்] சி.மோகன் அவர்களின் சரளமான மொழிபெயர்ப்பில், ‘’ஓநாய் குலச்சின்னம்’’ எனும் நாவல் அது.

12 Jun 2014

மேற்கத்திய ஓவியங்கள் - பி. ஏ. கிருஷ்ணன்

பி ஏ கிருஷ்ணன் எழுதி காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் "மேற்கத்திய ஓவியங்கள் - குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை" என்ற நூல், ஒரு பெரிய சாதனையை நிகழ்த்த முயற்சிக்கிறது. ஏறத்தாழ முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குகை ஓவியங்களில் துவங்கி, எகிப்திய ஓவியங்கள், கிரேக்க ஓவியங்கள், ரோமானிய ஓவியங்கள் என்று பண்டைக்கால ஓவியங்களைத் தொட்டு இத்தாலி, ஹாலந்து, வெனிஸ், இங்கிலாந்து, பிரான்சு என்று பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டம் வரை உள்ளவற்றின் சிறப்பை முந்நூற்றுக்கும் குறைவான பக்கங்களில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என்பது ஒரு அசாத்திய லட்சியம். இவற்றோடு ஏறத்தாழ இதே எண்ணிக்கையில் வண்ணப்படங்களை அச்சிட்டு மிக உயர்ந்த தாளில் ஓரளவுக்கு பெரிய அளவு புத்தகமாக பதிப்பித்து விற்பனை செய்வது காலச்சுவடு பதிப்பகத்தாரின் அசாத்திய லட்சியம். இருவரின் துணிச்சலையும் பாராட்ட வேண்டும் என்றாலும் சிலபல வரைகள் எந்த அளவுக்கு தம் முயற்சியில் இவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகின்றன.

9 Jun 2014

வங்காள நாவல்: நபநீதா தேவ் சென்னின் ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக் (கூதிர்ப்பருவத்தை எதிர்நிற்றல்)




"நாவலின் கதையைத் திரும்பச் சொல்வதுதான் இவரது விமரிசனமாக இருக்கிறது," என்பதுதான் புக் ரிவ்யூ செய்யும் ஒருவன் எதிர்கொள்ளக்கூடிய முக்கியமான கண்டனமாக இருக்கிறது. ஆனால் அதுதான் நபநீதா தேவ் சென்னின், “ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக்” என்ற குறுநாவலைப் பற்றி எழுதுவதில் மிகவும் சந்தோஷமளிக்கும் விஷயமாகவும் இருக்கிறது. இதில் எந்தக் கதையும் சொல்லப்படுவதில்லை.

கதை சொல்வதற்கு பதிலாக, நபநீதா தேவ் சென், "அந்திக் காப்பக"த்தில் இருப்பவர்களின் பார்வையில் அவர்களைச் சுற்றி விரியும் பரவலான சமூகத்தைச் சித்திரிக்கிறார், முதுமை குறித்து சிந்திக்கவும் செய்கிறார். அந்திக் காப்பகம் பெண்களுக்கான முதியோர் இல்லம். இங்கு வாழும் வெவ்வேறு பெண்களைப் பற்றி பேசிச் செல்கிறது கதை.

6 Jun 2014

இனி நான் உறங்கட்டும் - பி.கே.பாலகிருஷ்ணன்


வாசிப்பின் துவக்கம். கற்பனையில் உழல, பகல் கனவில் திளைக்க வாசித்துத் தள்ளினேன். வாசிப்பது கற்பனையில் திளைக்க மட்டுமல்ல, அதை கருவியாகக் கொண்டு இந்த வாழ்வையும் அறிய வேண்டும் எனும் பிரக்ஞையை தனது ‘சுய தரிசனம்’ சிறுகதை வழியே ஜெயகாந்தன் எனக்குள் உருவாக்கினார். இந்த போதத்துடன் நான் வாசித்த முதல் கதை. ஜெயமோகனின் ‘விரித்த கரங்களில்’. அடுத்த கதை அதே ஆசிரியரின் ‘விஷ்ணுபுரம்’. மூன்றாவது கதை, பி.கே.பாலக்ருஷ்ணன் மலையாளத்தில் எழுதி, ஆ.மாதவன் தமிழில் மொழிபெயர்த்த ‘இனி நான் உறங்கட்டும்’ என்ற தலைப்பிட்ட மகாபாரதக் கதை. கர்ணனின் கதை.

---                      

மகாபாரதம் மானுடத்தின் காவியம். தோன்றிய நாள் முதல் இன்று ஜெயமோகன் வரை மீண்டும் மீண்டும் அது மறுஉருவாக்கம் செய்யப்படுவதன் காரணம், மகாபாரதம் அன்றும், இன்றும், இனியும் விகசிக்கப்போகும் மனிதனின் அனைத்து மனோ தத்துவங்களையும், உன்னதங்களையும் பரிசீலிக்கிறது என்பதே. குல,குடும்ப, தனிமனித அறங்களை, எக்காலகட்டமாகிலும் அக்காலகட்டத்து வாழ்வை உரைகல்லாகக் கொண்டு எழும் பேரறம் ஒன்றை நோக்கிய காலாதீதத் தேடல் அதில் உறைகிறது என்பதே.