30 Jul 2014

மிளிர் கல் - இரா. முருகவேள்


சில மாதங்களுக்கு முன் ஜெயமோகன் தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் தனது பத்தியில் 'நமக்குத் தேவை டேன் ப்ரௌன்கள்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தொலைகாட்சியின் ஆதிக்கம் காரணமாக வணிகப் பத்திரிக்கைகளில்  கோலோச்சிக் கொண்டிருந்த தொடர்கதைகள் அனேகமாக நின்று போனதையும் சுஜாதா போன்ற பெரும் ஆளுமைகள் உருவாகாததையும் அதனால் தமிழில் வாசகர் பரப்பு சுருங்குவதையும் சுட்டிக்காட்டி அப்படி ஒரு எழுத்தாளர் உருவாவதன் அவசியத்தைக் கூறியிருந்தார்.  டேன் பிரவுன் போல் தொன்மத்தையும் நவீன வாழ்வையும் இணைத்து, தமிழ், இந்திய கலாச்சாரத்தை மையமாக வைத்து எழுதக்கூடிய ஒரு எழுத்தாளரையும் அப்படியான ஒரு எழுத்தையும் நானும் சில காலமாக ஏக்கத்துடனேயே எதிர்பார்த்திருந்தேன். மேலும் ஆங்கிலத்தில் அமிஷ் திரிபாதி (The shiva Trilogy) , அசோக் பன்கர் (Ramayana series), மற்றும் அஷ்வின் சாங்கி (The Krishna key, Rozabal line) போன்றோரின் எழுத்துக்களை வாசிக்கும்போது தமிழில் அவ்வாறான ஒரு எழுத்து இல்லையே என்று நிஜமாகவே ஏங்கினேன்.

சுதாகரின் '6174' என்ற நாவல் அத்தகைய ஒன்றாக வந்திருக்கக் கூடியது. ஆனால் ஆசிரியருக்குத் தன் பேசுபொருள் மீதும் நாவலின் வடிவத்தின் மீதும் சரியானதொரு பிடிமானம் இல்லாத காரணத்தால் நல்ல கருப்பொருள் கொண்ட ஒரு நாவல் அதன் முழு வீச்சை அடையாமல் தோல்வியுற்றது என்றே எனக்கு தோன்றியது. கே. என். சிவராமனின் 'கர்ணனின் கவசம்' அது போன்றதொரு நாவல் என்று வகைப்படுத்தப் பட்டாலும் நான் மேலே சொன்ன ஆங்கில நாவல்களுடன் அதை நேர்மறையாக ஒப்பிட்டு எழுதப்பட்ட    விமர்சனங்கள் ஏதும் நான் பார்க்கவில்லை. அந்தப் புத்தகத்தையும்  நான்  இன்னும் படிக்கவில்லை.

இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் இரா. முருகவேள் எழுதியுள்ள மிளிர் கல் என்ற நாவலையும் அதற்கு ஓர் அமைப்பு இந்த வருடத்தின் சிறந்த நாவல் என்ற பரிசு அளித்திருப்பதாகவும் ஒரு தகவலைப் படித்தேன். அன்று மாலையே என் நல்லூழாக அந்தப் புத்தகம் என் கைக்குக் கிடைத்தது (வழக்கம் போல் கோவை தியாகு புத்தக நிலையத்தில்தான்).

அன்று இரவு படிக்க ஆரம்பித்தவன் ஒரு நான்கு ஐந்து மணி நேரத்தில் ஒரே மூச்சில் நாவலை முடித்துவிட்டுதான் உறங்கப் போனேன். உண்மையிலேயே கையில் எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை என்று சொல்வார்களே அந்த ரகம். இப்படி ஒரு தமிழ்   நாவலை ஒரே மூச்சில் படித்து வெகு காலம் ஆகிவிட்டது.

17 Jul 2014

வேப்பெண்ணெய்க் கலயம் - பெருமாள் முருகன்

சிறப்புப் பதிவர்: ஷாந்தி   

சிறுகதை தொகுப்புகள் படிக்க எண்ணி நூலகத்தில் தேடியபோது, இணைய நண்பர்கள் பரிந்துரையான பெருமாள் முருகன் பெயரே முதலில் ஞாபகம் வந்தது. .

இது பெருமாள் முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சிறுகதை வாசிப்பு வார/மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டுவர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம்.

இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாக கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படி படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள்.. கணநேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை,படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள் அதன் போக்கை  தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள் ,எதிர்வினைகள் வெளிப்படும் அந்த தருணங்களை கதைகள் பதிவு செய்கின்றன.

Courtesy: Thinnai