23 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 4 - ஷாந்தி


கேள்வி: இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?


எனது அன்றைய மதிப்பீட்டில் எந்த மாற்றமும் செய்ய தோன்றவில்லை.பெருமாள் முருகன் படைப்புகள் ,கதைகள் எப்போதும்போல் மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறது .



கேள்வி: புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?


புனைவுகளில் வரும் கதை மாந்தர்களும் ,கதைக் களமும்,காலமும் நம் கற்பனையை எளிதாக்கி கதையின் தீவிரத்தை /செறிவை(intensity) உணர்த்த துணை புரிபவை ,அவை அப்படித்தான் பார்க்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் .புனைவு என்றானபின் இவ்வகை ஆராய்சிகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. நிஜ வாழ்வில் அவலங்கள் ஏதுமே இல்லை என்பதுபோல் ஒரு புனைவிற்கு அஞ்சுவதும் ,ஆத்திரப்படுவதும் அவசியமற்றது

21 Jan 2015

மொட்டு விரியும் சத்தம்- பி. லங்கேஷ், தமிழாக்கம் கா. நல்லதம்பி

நண்பர் ஒருவர், விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள, "மொட்டு விரியும் நேரம்", என்ற புத்தகத்தை, "இது ரொம்ப நல்ல மொழிபெயர்ப்பு" என்ற பரிந்துரையோடு கொடுத்தார். கன்னட மொழியில் பி. லங்கேஷ் எழுதிய "நீலு காவ்ய" மூன்று தொகுப்புகளாக வந்திருக்கின்றன. இவற்றில் சில தேர்ந்தெடுத்த கவிதைகளை கா. நல்லதம்பி மொழிபெயர்த்து பதிப்பித்திருக்கிறார்கள். குறுகிய வடிவம் கொண்ட இந்தக் கவிதைகள், நல்லதம்பியின் அழகிய கருப்பு வெள்ளை புகைப்படங்களின் பின்னணியில் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் பதிப்பாளர் தி. தி. நடராசனின் பதிப்புரையும் புத்தகத்தை அலங்கரிக்கிறது ("ஆங்கிலத்திலிருந்து மூன்று நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம். மூன்று நூல்களில் இரண்டு நூலுக்குத் தமிழ்நாட்டரசின் சிறந்த நூலுக்கான விருது கிடைத்தது"). 

16 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 3 - பைராகி




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

சமூகக் கட்டுப்பாடுகளையும் மனித நாகரிக வளர்ச்சி எனும் மாயவலையினாலும் வெறுப்பாகி வரும் சில நிகழ்வுகளையும் அவற்றைக் கையாளும் விதங்களைப் பற்றியும் இக்கதைகள் சிந்திக்க வைப்பதாக எழுதியிருந்தேன். நீர் விளையாட்டு தொகுப்பில் வரும் புகலிடம் எனும் கதை என்னை அப்படி எழுத வைத்திருக்கலாம். நதியில் விளையாடும்போது தீண்டாமை தன்னைத் தீண்டுவதில்லை என உணரும் சிறுவன் நதியில் தனது இருப்பை அறிகிறான்.

திட்டமில்லாமல் நடக்கும் நிகழ்வுகள் புது உலகைத் திறக்கும் சக்தி படைத்தவை. அவரது புனைவின் தன்மையும் அப்படிப்பட்டதே. புதிதாக எதுவும் சேர்க்கத் தோன்றவில்லை.

15 Jan 2015

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 2 - வெ சுரேஷ்




கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- சாதியும் நானும் தொகுப்பு பற்றி எழுதியபோதே அந்த நூல் பெரியாருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை ஒரு முரண் என்று  குறிப்பிட்டிருந்தேன். அநேகமாக அந்த நூலில் இருந்த கட்டுரைகள் எல்லாமே கொங்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்கச் சாதிகளால் பாதிப்புக்கு ஆளாகும் தாழ்த்தப்பட்ட சாதியினர் எழுதியது. பெரியார் மற்றும் திராவிட இயக்கத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்று தாம் கருதிய பிராமணரல்லாத சாதியினரின் ஆதிக்கத்தை வேண்டியே இயக்கம் நடத்தினர். அவ்வப்போது தலித் மக்களுக்கு ஆதரவாக வாய் வார்த்தைகள் சொன்னதோடு சரி, செயல்பாட்டு அளவில் வேகம் இல்லை. இதை கோவை அய்யாமுத்துவின் சுயசரிதையில் காணலாம். மேலும், அரசியல் சட்டத்தில், அம்பேத்கர் தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை பெரியார், அவர் தன் மக்களுக்கு வசதி செய்து கொண்டுவிட்டார், என்றே விமர்சிக்கிறார். பெரியாரின் other என்பதில்தான் தலித் மக்களும் இருந்தனர். அவர் வேண்டியதெல்லாம், இடையில் ஒரு 100 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக, இன்றுள்ள OBC பிரிவினர் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பிராமணர்களிடம் இழந்திருந்த முற்றாதிக்கத்தை மீட்பது குறித்துத்தான். பெரியாரும் திராவிட இயக்கத்தவரும் ஊட்டி வளர்த்த இந்தச் சாதி வெறிதான் இன்று பெருமாள் முருகனையும் தாக்கியிருக்கிறது. இந்தக் கோணத்திலிருந்து, இந்தப் புரிதல் அவர் தொகுத்த சாதியும் நானும் நூலில் உள்ள அவரது முன்னுரையில்  இல்லை என்பதையே நான் மீண்டும் குறிப்பிடுவேன்.

பெருமாள் முருகன் எழுத்தைப் பேசுதல் 1 - அஜய்





ஆளண்டா பட்சி நாவல் குறித்து மதிப்பீடு எழுதிய அஜய் அளிக்கும் பதில்கள்-


கேள்வி- இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நீங்கள் அன்று எழுதிய மதிப்பீட்டில் இன்று என்ன சேர்ப்பீர்கள்?

பதில்- மன்னிக்க வேண்டும், அந்த நாவல் பற்றி எழுதியதை இப்போது மீண்டும் பேச விரும்பவில்லை, இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதே இரக்கமற்ற செயலாகத் தெரிகிறது. தற்போது பெருமாள் முருகனுக்குத் தேவை, சுதந்திரமாய் இருப்பதற்கான வெளி. இனியும் நாம் பெருமாள் முருகன் என்ற தனியொரு எழுத்தாளரின் பிரச்சினையாக இதை அணுகிக் கொண்டிருக்கக் கூடாது, மனித உரிமைகள்/ கருத்துச் சுதந்திரம் மீதான தாக்குதலாகக் கருதியே வினையாற்ற வேண்டும்.

கேள்வி - புனைவுகளைக் கண்டு அஞ்சுபவர்களுக்கும் ஆத்திரப்படுபவர்களுக்கும் நீங்கள் விடுக்கும் வேண்டுகோள் என்னவாக இருக்கும்?

பதில்- பெருமாள் முருகனின் படைப்பை முழுமையாக ஒரு முறை வாசித்துப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், சாதீய சக்திகளால் விநியோகிக்கப்படும் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து உங்கள் முடிவுகளை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். முழுதும் படித்து, அவதூறாக நீங்கள் கருதும் பகுதிகள் எப்படிப்பட்ட சூழலில் இடம் பெறுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, அதன் பின்னர் தங்கள் எதிர்ப்பு நியாயமானதுதானா என்று அவர்கள் பரிசீலிக்க வேண்டும். அப்படி ஏதேனும் தவறாக எழுதப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினால், நாவலில் ஏற்றுக் கொள்ள முடியாத பகுதிகளை மறுத்து கட்டுரைகளும்/ புத்தகங்களும் எழுதலாம், அறிவுத் தளத்திலேயே உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.