24 Jan 2016

நடன மங்கை – சுரேஷ்குமார் இந்திரஜித்


சுரேஷ்குமார் இந்திரஜித் எழுதி உயிர்மை வெளியிட்டுள்ள ‘நடன மங்கை’ எனும் சிறுகதை தொகுப்பில் மொத்தம் பத்து கதைகள் உள்ளன. எண்பது பக்க அளவில் சிறிய புத்தகம்தான்.  

தமிழ் தி இந்து தீபாவளி மலரில் அவருடைய ஒரு கதையை படித்தது நினைவில் இருக்கிறது. விஷ்ணுபுர விழா ஒன்றில் அவருடன் கலந்துரையாடல் நிகழ்ந்ததும் நன்றாகவே நினைவிருக்கிறது. கதைகளின் வழி அவர் எதை நிகழ்த்த முயன்றார் என விரிவாக பேசினார். குறிப்பாக, கதைகளில் இருந்து கதையை வெளியேற்றுவது, எனும் தனது தற்கால முயற்சிக்கு தான் வந்து சேர்ந்த பாதையை பற்றிப் பேசினார். 

Image result for நடன மங்கை

7 Jan 2016

சாயாவனம் - சா.கந்தசாமி




இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு, போராட்டங்கள் பற்றிய படைப்புகள் தமிழில் குறைவானவையே. அவ்வகையில் சாயாவனம் மிக நுட்பமான விவரங்கள் கொண்ட நாவல். சுதந்திரத்திற்கு முன்பான  தமிழக கிராமங்களில் இருந்த வாழ்வு முறைகள், சாதிய கட்டமைப்புகள், பொருளாதாரச் சிக்கல்கள், உறவுகள் பற்றிய சுவாரசியமான பதிவு . வாசிப்பவரை கானகத்தின் உள்ளே அழைத்துச் சென்று அதன் ரகசியங்களை அறிந்நு கொள்ள வைக்கும் அற்புத அனுபவத்தை அளிப்பது இப்படைப்பின் உண்மையான வெற்றி. ஆசிரியரின் குரல்  ஒலிக்காமல் வாசிப்பவரின் மனதில் கதைக்களம் விரிந்து ஒட்டுமொத்த தரிசனத்தைப் பெறுவது நல்ல இலக்கிய அனுபவம்.



மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும் கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில் புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று. கானகமும் செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது. 



தஞ்சையின் ஒரு சிறு ஊரான சாயாவனத்திற்கு இலங்கையிலிருந்து வரும் சிதம்பரம் , அவ்வூரின் ஒரு வனத்தை கொஞ்சங் கொஞ்சமாக அழித்து கரும்பாலை ஒன்று கட்டுவதே கதைக்களம். சிதம்பரத்தின் அம்மாவின் சொந்த ஊர் அது என்றாலும் அவன் இலங்கையிலே பிறந்து வளர்ந்தவன் என்பதால் அனைத்து பழக்கங்களும் மனிதர்களும் அவனுக்கு விநோதமாகவே தெரிகின்றனர்.

5 Jan 2016

After the Crash – மிஷேல் புஸ்ஸி




பிரெஞ்சு எழுத்தாளர் மிஷேல் புஸ்ஸியின் ‘After the Crash’ ('Un avion sans elle'- ஆங்கில மொழியாக்கம் சாம் டெய்லர்) ஒரு த்ரில்லர்தான், ஆனால் அதில் நல்ல கற்பனையைப் பார்க்க முடிகிறது. கதையின் அடிப்படையில் முதற்கோள் (premise) ஒன்றுண்டு, அது இந்த நாவலை ஒருங்கிணைக்கும் சரடாய் அமைந்திருக்கிறது.

1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரிலிருந்து பாரிஸ் செல்லும் விமானம் ஒன்று பிரெஞ்சு- ஸ்வட்ஸர்லாந்து எல்லைப் பகுதியில் உள்ள மலை மீது மோதி வீழ்கிறது. அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் இறக்கின்றனர்- பிறந்த மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தை ஒன்றைத் தவிர. அவள் விமானத்திலிருந்து வெளியே தூக்கி வீசப்படுகிறாள். எலும்பை உறைய வைக்கும் குளிரில் அவளை எரியும் விமானத்தின் வெம்மை பாதுகாக்கிறது.