25 Feb 2016

ஆ. மாதவனின் இலக்கியச் சுவடுகள்




ஒவ்வொரு முறையும் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்படும்போது நிச்சயம் அது ஒரு சர்ச்சையை உருவாக்கும். முதல் வகை சர்ச்சை, விருது வாங்கும் எழுத்தாளர் தேர்வை எதிர்மறையாக விமரிசிப்பதாக இருக்கும். தகுதியானவர் என்று எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஒருவருக்கு மிகச்சில சமயங்களே இந்த விருது  கிடைத்திருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது. ஒரு முறை, வணிக இதழ்களில் அதிகம் எழுதியவரும் தமிழக அரசின் உயர் பதவி ஒன்றில் இருந்தவருமான ஒருவர் விருது பெற்றபோது, நல்ல வேளை, இந்த முறை துணி வியாபாரிக்கும் துணைவேந்தருக்கும் தராமல் ஒரு எழுத்தாளருக்கு விருதுத் தந்தார்களே என்று சுஜாதா விளையாட்டாக எழுதி சொல்லடிபட்டார்.

இரண்டாம் வகை சர்ச்சை, தகுதியான எழுத்தாளருக்கு விருது கொடுக்கப்பட்டாலும், அதை அவரது சிறந்த ஆக்கத்துக்குத் தராமல், சுமாரான அல்லது அவர் எதில் சிறந்து விளங்கினாரோ அந்த வகைமைக்கு மாறான வேறொன்றுக்குக் கொடுக்கப்படுவது குறித்து எழுவது. கவிதைகளுக்காக அல்லாமல் ஒரு தொடர்கதைக்கு கண்ணதாசன் விருது பெற்றதை நினைவு கூரலாம். அது போலவே தி.ஜானகிராமன், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் முதலானவர்களுக்கும் இவ்விருது அவர்களின் சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படவில்லை என்ற குறை உண்டு.
      
இந்த முறை சாகித்ய அகாடமி விருது மூத்த எழுத்தாளர் திரு. ஆ. மாதவன் அவர்களுக்கு அளிக்கப்பட்டபோது அநேகமாக யாருமே அதைப் பழிக்கவில்லை. முற்றிலும் தகுதியான ஒருவருக்கு இவ்வளவு காலம் தாழ்த்தியாவது விருது வழங்கினார்களே என்ற மகிழ்ச்சிதான் பரவலாக இருந்தது. ஆனால் அதிலும் ஒரு குறை. முன்னர் செய்தது போலவே ஆ. மாதவன் அவர்களின் சிறந்த நாவல்களுக்கோ, சிறுகதைகளுக்கோ இந்த விருது அளிக்கப்படாமல் அவரது அதிகம் அறியப்படாத ஒரு கட்டுரைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான முக்கிய காரணம், நடப்பாண்டில் விருது பெறும் தகுதி கொண்ட நூல்கள் எவை என்பதை வரையறை செய்யும் விதிமுறைகள்தான்.

17 Feb 2016

காலகண்டம் – எஸ். செந்தில்குமார்


நூற்றைம்பது கால விஸ்தீரணத்தில் ஆசாரிமார் சமூகத்தின் வாழ்க்கை வரலாறாக, ஒரு காலப் பனுவல் போல் அமைந்திருக்கும் புதினம். பென்னி குக் அணை கட்ட தொடங்குவதற்கு முன்னாலிருந்து, நாடெங்கும் சுயராஜ்ய அலை எழுந்து, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று அறைகூவி, சுயராஜ்யம் பெற்று, எம்ஜியார், சிவாஜி, ரஜினி என்பது வரையிலான கால வரையறையில், தென் மாவட்டத்தில் போனூர் என்னும் சிறு கிராமத்தையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் களமாக கொண்ட புதினம்.  கிருஷ்ணப்ப ஆசாரி என்னும் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசாரி வழி வந்த குடும்பத்தின் கதை.

சாமான்யர்களின் வரலாறு என்ற புள்ளியிலிருந்து இந்த நாவலை அணுகத் தொடங்கலாம்.  சாமானியன்   என்று சொல்லத் தொடங்கும் பொழுதே அரசியல் இருக்கக் கூடும் என்ற சந்தேகம் இருப்பினும் நாவலின் இலக்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருக்கிறது. படிக்கையில் திடீரென “இந்தச் சீட்டை எடு” என்று வாசகனைச் சீண்டும் அரசியல் இந்த நாவலில் இல்லை. இருப்பதெல்லாம் தினப்படி நிகழ்வுகள், வருடாந்திர திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், துக்கங்கள், பல்வேறு கதைமாந்தரின் ஆயுட்கால தினப்படி பரிவர்த்தனைகள், இருபதுக்கும் மேற்பட்ட கதைமாந்தர்தம் கனவுகள், ஆசைகள், தவறுகள், முடிவுகள், வலிகள். 


11 Feb 2016

ஆழி சூழ் உலகு - ஜோ டி குரூஸ்


அண்மையில் துறைவன் நாவல் எழுதிய எழுத்தாளர் க்றிஸ் அந்தோணியின் நேர்காணல் வாசிக்க நேர்ந்தது. நெய்தல் பரப்பை பற்றியும் பரதவர் வாழ்வை பற்றியும் நமக்கிருக்கும் பிழையான புரிதல் பற்றி குறைபட்டிருந்தார். என்ன செய்ய, நாம் நமக்குத் தேவையானதற்கு அப்பால் எல்லாவற்றையும் ‘ஸ்டீரியோடைப்’களாக பதிந்து வைத்திருக்கிறோம். 

Image result for ஆழி சூழ் உலகு

ஆனால் ஆழி சூழ் உலகு பரதவர்கள் பற்றிய நம் முன்முடிவுகளை உடைக்கிறது.  நம் மண்ணின் அனைத்து சமுதாயங்களைப் போலவே வரலாற்று நீரோட்டத்தில் பல விசைகள் பிணங்கியும் இணங்கியும் உருவாக்கிய திரளே இன்றுள்ள பரதவர்கள். அவர்களது வரலாற்றில் மறைந்திருக்கும் பல்வேறு முரண்களையும் வளர்ச்சி மற்றும் சிதைவுகளையும் இந்நாளைய பழக்க வழக்கங்கள் மற்றும் சமுதாய அமைப்பையும் விவரிக்கும் சமூக ஆவணம் என்று இந்த நாவலைச் சொல்லலாம். அது மட்டுமல்ல, ஆழி சூழ் உலகு பரதவர் கிராமங்களில் வாழும் பல்வகைப்பட்ட மனிதர்களின் தனித்துவத்தை விவரிக்கும் இலக்கியப் படைப்பாகவும் விளங்குகிறது  மனிதனை நுண்மையாகவும் அவன் வாழும் சமூகத்தின் உள் பொதிந்திருக்கும் வரலாற்று தடத்தை முழுமையாகவும் விவரிப்பதால்தான் இது தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்றாகிறது..

9 Feb 2016

நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை


தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க  ரசிகர்களின் ஆதரவு  இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து  மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந்திரபாபு ஆகியோர் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள். இவர்கள் மீது மக்களுக்கு என்றும் ஒரு அனுதாபமும் அன்பும் உண்டு என்றாலும், அவர்களின் மறுவாழ்வுக்கு அது ஒருபோதும் துணை நிற்கவில்லை.

4 Feb 2016

அறிவியலும் அற்புதமும் - "உன் வாழ்க்கையின் கதைகள் மற்றும் பிற" - டெட் சியாங், சிறுகதைத் தொகுப்பு



Stories of Your Life and Others by Ted Chiang

நவரசங்களில் அற்புத-ரசத்திற்கென்று ஒரு தனியிடம் உண்டு; அழகியலில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலுமே. 'தனது பிரபஞ்சத்தின் சுபாவத்தையே உற்று நோக்கி வியப்பவன் சம்சாரத்தின் அற்ப சுக துக்கங்களில் எப்படி உழல முடியும்?' என்று முறையிடுகிறது ஒரு புராதனத் தாந்திரீக நூல். நவீன யுகத்தில், பிரபஞ்ச இரகசியங்களையும், மானுட சுபாவத்தின் வினோதங்களையும் நொடிதோறும் அவிழ்த்துக் காட்டிக்கொண்டே இருக்கிறது அறிவியல் /விஞ்ஞானம்; ஆனால் தகவல்களின் வெள்ளத்தில் நீந்திச்செல்லும் நமக்கு ஒரு நொடி நிதானமாக நின்று அந்த வெள்ளத்தின் விசையை வியக்கக் கூட முடிவதில்லை. ஊடகங்கள் உருவாக்கும் சம்சாரத்தின் மாயையை ஊடுறுவி அறிவியலை நேராகக் கண்டு கொள்ளும் வாய்ப்புகள் கடினமாகிக்கொண்டே இருக்கின்றன.

அறிவியல், தொன்மங்களைவிட வினோதமாக மாறிய பொழுது உதயமானது அறிவியல்-புனைகதை என்னும் இலக்கியவகை. கூடவே அறிவியல் சமய நம்பிக்கைகளின் போதாமைகளையும் நிரப்ப நேரிட்டது மேற்கில் துவங்கிய சரித்திரம். ஆனால் அடிப்படைவாதங்கள் தலைதூக்கிய நமது புது நூற்றாண்டில், வணிக விஞ்ஞானத்தின் போதாமைகளையும் சுமந்து நிற்கும் அறிவியல், புனைகதைகளில்கூட தனது அற்புதத்தை இழந்து நிற்பது நிதரிசனம்.