25 May 2016

ஒற்றையடித் தடத்தின் பாதங்கள் : யாதுமாகி - எம். ஏ. சுசீலா


ஒரு படைப்பினை உருவாக்கும் காரணிகள் எவை என்ற கேள்விக்கான விடை முடிவற்ற சாத்தியங்களைக் கொண்ட விவாதத்தை உருவாக்கும். ஆனால், எது ஒரு உருவாக்கத்தை படைப்பாக மாற்றுகிறது என்பதைக் கூர்ந்து  அவதானித்து விடலாம் என்றுதான் நினைக்கிறேன். "யாதுமாகி" தேவி - உள்ளபடியே மனதில் நிறைந்துவிட்டிருக்கிறார் . வாசிக்குந்தோறும் தனது பாட்டியை, தாயை, சகோதரிகளை எண்ணாமல் எவராலும் புத்தகத்தை மூடிவிட இயலாது. நேரடியாகப் பார்த்து உடன் வளர்ந்த விதத்தால் இந்தக் கதைசொல்லிக்குக் கிடைத்திருக்கும் ஒரு கதைப்போக்கு படைப்புக்கு வலுவூட்டுகிறது. தான் கடந்து வந்த வாழ்க்கையின் மொத்தத்தையும் முழுப்பார்வையாக பார்க்க முடிந்தவனின் லௌகீக விவேகம் அவனது வார்த்தைகளுக்கு மந்திரம் போன்ற கனத்தைக் கூட்ட முடியும். அப்படி ஒரு வாழ்க்கையை விளக்கிய விதத்தில் "யாதுமாகி" தன்னை ஒரு படைப்பாக நிறுவிக் கொள்கிறது.


23 May 2016

தொலைந்து போனவர்கள் - சா. கந்தசாமி


வேகமாக சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்து செல்லும் மனித முகங்களில் ஒன்று உங்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்கிறது. கிட்டதட்ட  இருபது ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்ட உங்கள் பால்யகால ஆத்ம நண்பன்தான் அது. உடனே என்ன செய்வீர்கள்? ஓடி போய் கட்டித்தழுவி, நலம் விசாரித்து, வீட்டுக்கு அழைத்து நட்பை புதுப்பித்துக் கொள்வீர்களா? அல்லது கண்டும் காணாதது போல் அவ்விடத்தை விட்டு நழுவி விடுவீர்களா?   இந்த இடத்தில் உங்கள் செய்கையை பெரிதும் தீர்மானிக்கப்போவது உங்களின் தற்போதைய வாழ்க்கை நிலைதான் என்ற யதார்த்தத்தை விவரிப்பதே சா.கந்தசாமி எழுதிய “தொலைந்து போனவர்கள்” நாவல்.

18 May 2016

Why Be Happy When You Could Be Normal? - Jeanette Winterson



(ஆசிரியர் குறிப்பு: ஜியனெட் வின்டர்ஸன், பி.1959, மான்செஸ்டர், இங்கிலாந்து. எழுத்தாளர், பத்திரிகையாளர், கல்லூரியாசிரியர், சிறு தொழில்முனைவர். முதல் நாவல் மற்றும் பி.பி.சி. தொடர் ’Oranges Are Not The Only Fruit’ தனது 25 வயதில் எழுதினார். Officer of the Order of the British Empire உட்பட பல சம்மானங்களயும் விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் பார்க்க: விக்கிபீடியா )

முன்னாள் பி.பி.சி. தொலைக்காட்சி நடத்துனர் ஆலன் யெந்தோபின் (Alan Yentob) ஆவணப்படங்கள் என்னை மிகவும் கவர்ந்த சமீபகால கலாச்சார நிகழ்வுகளுள் ஒன்று. அவற்றின் மூலமாக பல சமகாலக் கலை-இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் கிடைத்தது; கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒரு படத்தில் ஜியனெட் வின்டர்சன் 2011ல்  எழுதிய சுய-சரிதை ‘Why Be Happy When You Could Be Normal?’ என்ற புத்தகத்தை ஒட்டி, ஆசிரியை பிறந்து வளர்ந்த இங்கிலாந்தின் தொழிற்கூடமான மான்சென்ஸ்டரின் வட்டாரங்களும், அதற்கு நேர்மாறாக அவர் படித்து வெற்றி பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையும், அவரது நெருங்கிய நண்பர்களின் நேர்காணலும் தொலைகாட்சியில் சித்தரிக்கப்பட்டன

13 May 2016

புவியிலோரிடம் - பா. ராகவன்


 1989-91 ஆண்டுகள் இந்திய அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் முக்கியமான, கொந்தளிப்பான காலகட்டம். மத்தியில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோற்று வி.பி. சிங் தலைமையிலான ஐக்கிய முன்னணி இடது மற்றும் வலதுசாரிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தது. அந்த அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்குவதாக அறிவித்தது. வட மாநிலங்கள் எங்கும் அதற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அந்த சமயத்தில்தான் நாடெங்கும் இட ஒதுக்கீடு என்பது சலுகையா, உரிமையா, தகுதி என்றால் என்ன, அது சிலருக்கு மட்டுமே  உரித்தானதா என்பது போன்ற பல கேள்விகள் பொதுவெளிகளில் பெரிதும் விவாதிக்கப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிரான நிகழ்வுகளும் விவாதங்களும் அவ்வளவாக இல்லை என்றே சொல்ல வேண்டும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, இங்கு முற்பட்ட வகுப்பினர் எனப்படும் சாதிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. இரண்டு, தமிழகத்தில் சமூக ஆதிக்கம் செலுத்தக்கூடிய முக்கியமான சாதிகள் அனைத்தும் 70களின் இறுதியிருலிருந்தே, பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அடையாளத்தைப் பெற்று இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற்றிருந்தன. இங்கு மண்டல் குழு  பரிந்துரைத்த அளவுக்கு மேலேயே பிற்படுத்தப்படோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. அதனால் மண்டல் பரிந்துரைகள் பெரிதாக தமிழகத்தின் சமூக அரசியல் தளங்களில் எதிர்ப்பைச் சந்திக்கவில்லை.

6 May 2016

ஒரு மணியின் பல ஒலிகள் - பாரதிமணியின் ''புள்ளிகள் கோடுகள் கோலங்கள்''


ஒரு வார கெடுவுக்குள் திருப்பித்தர வேண்டியிருந்த்தால் நானூறு பக்கத்திற்கு மேல் உள்ள இந்த புத்தகத்தை முழுதாக படிக்கும் எண்ணமில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்டுரைகளை படித்தபோது நிச்சயமாக எதையோ  தவற விடுகிறோம் என்று தோன்ற வைத்து, பிறகு முழுதும் படிக்கச் செய்தது..

அனுபவம் கனிந்த மனிதனே புத்தகம் ஆகிறான் என்பதை ருசுப்பிக்கும் புத்தகம் இது. அனுபவ அறிவு கட்டுரைகளாக மாறும்போது டைரிக் குறிப்பாகவோ தகவல் களஞ்சியமாகவோ மாறிவிடும் அபாயம் அதிகம். பாரதி மணி இதை மிக லாகவமாக கையாண்டிருக்கிறார். அவரது நாடக மனம் இதற்கு அஸ்திவாரம் எனலாம். பிரத்யேக மொழி நடை எதுவும் இல்லை. ஆங்கில வார்த்தைகள் பல கலந்த சகஜமான உரையாடல் பாணி. சுவாரசியங்கள் மிகுந்த தொகுப்பு.