15 Sept 2017

The Master and Margarita - Mikhail Bulgakov

“எழுத்தாளர்கள் அடையாள அட்டையால் உருவாவதில்லை”- புல்ககாவ், Master and Margarita.

மிகேல் புல்ககாவ் எழுதிய நாவலான ‘Master and Margarita’ பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது. இதற்கு முன் பரிச்சயமற்ற இந்நாவலை, இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள் எனும் தகவல் வாசிக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் அளித்தது. இந்நாவலை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் ‘காலச்சுவடு’ நேர்காணலில் பா.வெங்கடேசன், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்ததை கவனித்தேன்.

ஆழ்ந்த கிறித்தவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் புல்ககாவ். ஸ்டாலினிய ரஷ்யாவில் வாழ்ந்தவர். மருத்துவர், நாடகாசிரியரும்கூட. ஸ்டாலின் அவர் மீது படைப்பாளியாக மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். பல்வேறு இக்கட்டுக்களின்போது ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு அவர் சிறை புகாமல் காத்திருக்கிறார். வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பிற்காலத்தில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் சோவியத்தின் கடவுள் மறுப்பு புல்ககாவ் மனதை ஆழமாகத் தொந்தரவு செய்துள்ளது தெரிகிறது. “இயேசு  ஒரு இழிமகனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார்... இந்தக் குற்றத்தை என்னவென்று அழைப்பது” என்று எழுதுகிறார். இந்நாவல் ஒருவகையில் அந்த உணர்வைச் சமன் செய்ய எழுதப்பட்டது என்றுகூட தோன்றுகிறது. கற்பிதம் என்றும் பிழையென்றும்கூடச் சுட்டலாம்தான், ஆனால் வாழ்விற்கு பொருள் அளிக்கும் வல்லமை இன்னும் பெருமளவில் மதத்தையும் கலையையுமே சார்ந்திருக்கிறது. மனிதனின் ஆன்மீகத்தை அவனிடமிருந்து பிடுங்கி அழிப்பது அவனுடைய வாழ்வர்த்தத்தையும் சேர்ந்தே அழிப்பதாகும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான ரஷ்யாவை விவரிக்கும் ஸ்வெட்லானா அலெக்சியவிக் நாள்தோறும் தேவாலயங்களில் பெருகும் கூட்டத்தைப் பற்றி பதிவு செய்துள்ளார்.