20 Feb 2019

நானும் சினிமாவும்– ஏ.வி.எம். சரவணன்

-செமிகோலன்-

அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் எடுத்த படத்திற்கு முதலில் மக்களிடையே சொல்லிக் கொள்ளுமளவு வரவேற்பு கிடைக்கவில்லை. சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதை மதுரையில் வெளியிட்ட திரையரங்க உரிமையாளர் படத்தின் இரண்டாம் பகுதியை முதலிலும், ஆரம்பத்தை இடைவேளைக்கு பிறகும் வருமாறு ரீல்களை மாற்ற படம் அதிகமாக மக்களைக் கவர்ந்தது. தமிழ் திரையுலகின் முதல்/ ஒரே பின்-முன் நவீனத்துவ படைப்பாக இருக்கக்கூடிய அந்தத் திரைப்படம் 'மெல்லத் திறந்தது கதவு'.

அதனுடன் தொடர்புடைய மற்றொரு செய்தி, எம்.எஸ்.விக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் தயாரிக்க வேண்டுமென்றும், அதற்கு எம்.எஸ்.வியையே இசையமைக்கச் சொல்லலாமென்றும் அந்த நிறுவனத்தை அணுகினார் இளையராஜா என்பது. தன் முன்னோடிக்கு உதவ வேண்டும், அதே நேரம் அவருடைய சுயமரியாதைக்குச் சிறிதும் பங்கம் வரக்கூடாது என்பதிலும் ராஜா கவனமாக இருந்துள்ளார்.

இந்த இரண்டு செய்திகளும் தன் திரையுலக அனுபவங்கள் பற்றி ஏ.வி.எம்.  சரவணன் தினத்தந்தியில் தொடராக எழுதி, புத்தகமாக வெளிவந்திருக்கும் 'நானும் சினிமாவும்' நூலில் கிடைக்கிறது.

 


16 Feb 2019

நாலுகெட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர்


பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்களின் கற்பனையைத் தூண்டும் இரு கருப்பொருட்களை ஒருசேர எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘நாலுகேட்டு’ பேசுகிறது: பருவமெய்துதல், குடும்பம் சிதைதல்- இந்தக் கதையில் ஒரு கூட்டுக் குடும்பம் அழிகிறது (‘நாலுகெட்டு’ என்ற தலைப்பு பாரம்பரிய கேரள வீட்டினைச் சுட்டுகிறது). பள்ளி செல்லும் சிறுவன் அப்புண்ணி கதையின் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்து முடிவில் முழு ஆடவனாகிறான். கதை பெரும்பாலும் அவன்  பார்வையில் சொல்லப்படுகிறது.