செல்வேந்திரன் எழுதிய பாலை நிலப்பயணம் நூல் ரெண்டு வாரங்களுக்கும் குறைவான பயணத்தைப் பற்றிய குறிப்புகள் கொண்டது. ராஜஸ்தான், குஜராத் வழியே பெரும்பாலும் பாலை நிலத்தில் நண்பர்களுடன் கழித்த நாட்களைப் பற்றியவை. இந்திய நிலத்தில் சிறு பயணம்கூட எப்படியோ நம்முள்ளே செல்லும் நெடும்பயணமாக மாறும் வாய்ப்பை உள்ளடக்கியது. அதுவும், வெறும் ஐநூறு கிமீ பயணத்தில் வேறொரு நிலப்பரப்பும், உணவுப் பாரம்பரியமும், மொழியும் சகஜமாகப் புழங்கும் இடத்தில் சட்டென ஒரு விலகலும் நெருக்கமும் நம்முள் உருவாகிவிடும். அத்தன்மையை சிறிதும் விட்டுவிடாமல் எழுதப்பட்ட சிறு குறிப்புகளின் தொகையே இந்த நூல்.