11 Aug 2012

இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1

பெயர்               :     இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1 
பதிப்பகம்         :    கலைஞன் பதிப்பகம்,                          
                                10, கண்ணதாசன் சாலை,                       
                                தி.நகர், சென்னை-17        
உள்ளடக்கம்   :     சிறுகதைகள்
 தொகுத்தவர்  :    விட்டல் ராவ்

இந்த வாரம் படித்தது "இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-1" கலைஞன் பதிப்பகம்.  அரசு பொது நூலகத்தில் இருந்து எடுத்ததினால், முன் பக்கங்கள் இரண்டு மூன்று இல்லை அதனால் யாரு இந்த 31 சிறுகதையும் தொகுத்தார்கள் என தெரியவில்லை,  சில நாட்கள் கழித்து நூலகம் சென்ற போது   "இந்த நூற்றாண்டு சிறுகதைகள்-2" கிடைத்தது, அதில் இருந்து தொகுத்தவர் யார் என அறிய முடிந்தது.

முதலில் படித்த கதை புதுமைப்பித்தனின் "பிரம்ம ராக்ஷஸ்"  முதல் பகுதி ஒரு மாதிரி வெறுமையாக ஆரம்பித்து பிரம்ம ராக்ஷஸ் உடைய கதையைச் சொல்கிறது, இரண்டாவது பகுதி நடப்பு உலகில் சிறு வயது முதல் மரணத்தைக் கண்டு அஞ்சாத ஒருவன், தன் மனைவியின் மரணத்தைக் கண்டு அஞ்சுவதைச் சொல்கிறது, அவன் தன்னுடைய ஒரே குழந்தையைத்  தூக்கிக் கொண்டு பிரயாணப்படுகிறான். வழியில் பிரம்ம ராக்ஷஸ் குகையை எதிர்கொள்கிறான். இதில் இருந்து கதை ஒரு psychological thriller, அறிவியல் புனைவு நோக்கி சென்று ஒரு அபாரமான முடிவை அடைகிறது.   தமிழில் வந்த முதல் ஹாரர் (horror) சிறுகதை என்று சொல்லலாம்.


வெளவால் -ஆனை சூ குஞ்சிதபாதம்   கதையின் கரு: அடுத்தவன் பணம் கீழே  கிடந்தால்கூட எடுக்கக் கூடாது, எடுத்தால் நோய் நொடி வரும், அவ்ளோதான். ஆனால் அந்தத் திருட்டுப் பணத்திற்குக் காட்டப்படும் குறியீடு வெளவால், வெளவால் பொதுவாக வீட்டில் வசிக்காது, இருட்டிலே உலாவும், மனிதனைக் கண்டால் தூரப் போய்விடும், இந்தக் கதையில் அதற்கு மாறாக சொல்லப்படுகிறது,  கதையின் நாயகன் அந்தப் பணத்தை எடுத்த இடத்திலேயே போட்ட பின்பு அவன் மனைவிக்கு உடம்பு சரியாகிறது.

புவனாவும் வியாழக் கிரகமும் - ஆர். சூடாமணி  பணக்கார நபரான எஸ். டி  ராஜசேகர்   பேருந்து நிறுத்தத்தில் ரொம்ப நேரமாகக் காத்திருக்கும் மகாலிங்கத்தைத் தன் காரில் ஏற்றிச் செல்கிறார், அந்த சமயத்தில் மகாலிங்கம் தன் பெண்ணுக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார். 15 வருடம் கழித்து இருவரும் சந்திக்கின்றனர்.  பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதை. திருமணம் ஆகாத ஒரு பெண்ணின்,  தந்தையின் கதை. இதற்கு மேல் சொன்னால் சஸ்பென்ஸ் போய் விடும்.

பாயசம்: தி. ஜானகிராமன் : சாமநாது என்ற சாதாரண மனிதனின் பார்வையில் இருந்து சொல்லப்படுகிற கதை இது.
அவருடைய கோபங்களும், பொறாமையும், குற்ற உணர்ச்சியும்   தன்னுடைய  சொந்த அண்ணா மகன்(சுப்பராயன்) பேரில் வெளிப்படும்போது சின்ன அதிர்வு ஏற்படுகிறது, இருவருடைய வாழ்வும் இரு துருவங்கள் போல் பிரிந்து இருந்தாலும், சுப்பராயனுக்கு சித்தப்பாவின் மேல் மதிப்பும் மரியாதையும்
அதிகம். சாமநாதுவின் பொறாமையும் , குற்ற உணர்ச்சியும் எல்லை மீறும்போது என்ன நடக்கிறது என்பதே கதை.


பிள்ளையார் கோவிலில்  ஒரு பிணம் -  கி .அ. சச்சிதானந்தம்  யாராவது ஒரு விஷயம் சொன்னால், அதை  எவ்வளவு தூரம் நம்பலாம்? அது உண்மையா பொய்யா என்று ஆராய வேண்டாம்? இந்தக் கதையில் வரும் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் பிணம்  ஒன்று விழுந்து கிடப்பதாகச் செய்தி வருகிறது, பிணத்தை முதலில் பார்த்தவன் காய்ச்சலில் விழுந்து கிடக்கிறான். பிணத்தைப் பார்க்க ஒவ்வொருவரும்  பயந்து கொண்டு பிணம் யாருடையதாக இருக்கும் என கதை கட்டுகிறார்கள், காவல்துறையும்/மணியக்காரரும் வரும்போது பிணம்தான் அங்கே இருக்கிறதா?

அப்பாவின்  பள்ளிக்கூடம்- ந. முத்துசாமி முக்கால்வாசி பேர் பள்ளிக்கூடம் போகும்போது அழுதிருப்போம்,  "வாத்தியார் அடிச்சுட்டாரு.." என்று  அழுவோம், ஆனால் இந்தக் கதையில் வரும் பையனின் தந்தை அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர், அந்தப் பள்ளியில் படிக்கும் மகன் தந்தையின் மரணத்தை அதே பள்ளியிலேயே சந்திக்கிறான், அதனால் அந்த சிறுவனின் மனம் எவ்வளவு உளைச்சல் அடைகிறது என சொல்லும் கதை.

இந்த ஆறு கதைகளையும் தாண்டி மனதை பாதித்த சிறுகதை, பா.செயப்பிரகாசம் எழுதிய  "ஒரு செருசேலம்". நன்றாக இருக்கின்றன எனச் சொல்லக்கூடியவை: பயணம் -இந்திரா பார்த்தசாரதி, பணம் பிழைத்தது - பி.எஸ் .இராமையா , தியாகம் கு-அழகிரிசாமி, மீன் -பிரபஞ்சன் , சங்கை- இரா. முருகன். குடும்பச் சித்திரம்- வண்ணநிலவன், சிலிர்ப்புகள்- சி. ஆர். ரவீந்திரன்.

 

2 comments: