11 Aug 2012

உருள் பெருந்தேர் - கலாப்ரியா

சிறப்புப் பதிவர்: திருநாவுக்கரசு


தேர் கொண்ட ஊரழகு என்பார்கள். தேர் என்றாலே ஊர் தன்னழகை இரட்டிப்பாக்கி கொள்கிறது. அதிலும் நெல்லையப்பர் ஆலயத்தேர் சற்று விசேஷமானது. தாமிரபரணி நதிக்கரை எழுத்தாளர்கள் அனைவரும் நெல்லையப்பர் தேரைத் தங்கள் தமிழால் கட்டி இழுத்திருக்கின்றனர். கலாப்பிரியாவும் தன் பங்கிற்குத் தன் நினைவுகளையும், தமிழையும் கயிறாக்கி நெல்லையப்பரைத் திருவுலா இழுத்து அழைத்துச் சென்று தேரடி சேர்த்திருக்கிறார். தமிழின் முக்கிய கவியாளுமைகளுள் ஒருவரான கலாப்பிரியா உரைநடையில் தனது பால்யத்தை ''நினைவின் தாழ்வாரங்கள்'' எனும் தொகுப்பாக வெளியிட்டிருந்தார்.. உருள் பெருந்தேர் அதன் தொடர்ச்சி எனக் கொள்ளலாம்.

பால்யத்தை தாண்டி பதின்ம வயதினராகவும், காதலும், குடும்பச்சூழலும் அலைக்கழிக்கும் வாலிபராகவும், விதிச் சுழலிலிருந்து மீண்டு சற்று ஆசுவாசப்பட்டு நடுத்தரக் குடும்பத்தலைவராகவும், எழுத்தை நேசிக்கும் கவிஞராகவும் தனது நினைவுக்கண்ணிகளை ஒவ்வொன்றாகக் கோர்த்து வடக்கயிறாக்கியிருக்கிறார் கலாப்ரியா. தேரும் நினைவுகளினூடே ஊர்ந்தும், மிதந்தும், நெகிழ்ந்தும் நிலை சேர்கிறது.

நினைவுகள் எப்போதும் கொடியவைதான், அதிலும்  பால்ய வயதை மெல்ல இழக்கும் பதின்ம வயதின் நினைவுகள் இன்னும் கூர்மையாகிவிடுகின்றன.  கலாப்பிரியாவிற்கும் அது நேர்கிறது. அதுவும் கவிஞர்களுக்கேயான சகலவிதமான அலைக்கழிப்புகளுடன், சற்று மூர்க்கமாய்.

நன்றாய் வாழ்ந்த குடும்பம் சிறிது சிறிதாய் நலிவடையத் துவங்குகிறது. குடும்பத்தின் அன்றாடச் செலவுகளுக்கே வீட்டுப்பொருட்களை விற்கும் சூழல் இதில், தான் விரும்பிய உயர்கல்வியை பிடிவாதமாக தொடர்கிறார். இவற்றினூடே கனவாகவே நிகழ்ந்து கொண்டிருக்கும் காதல் ''சசி'', உடன் படித்த/பழகிய நண்பர்கள், நெல்லையப்பர் தேரோட்டம், அது சார்ந்த விழாக்கள், பிடித்த சினிமாக்கள், அபிமானத் தலைவர், எப்போதும் நெருக்கடியாகவேயிருக்கும் பணிச்சூழல் மற்றும் சுவாசத்துடன் கலந்துவிட்ட வாசிப்பு / எழுத்து என நினைவுகளாய் வியாபித்திருக்கிறார் இந்த ''உருள் பெருந்தேர்'' உருளும் பாதை முழுவதும்.

காலம் பார்த்துக் கொண்டேயிருக்கிறது..மனிதர்கள் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். மனித நினைவுகளைக் கொடியதாக்குவதிலும், நீடித்திருக்கச் செய்வதிலும் உண்மை பெரும்பங்காற்றுகிறது. கலாப்பிரியாவின் இந்தத் தேரோட்டம் முழுவதும் மனிதர்கள் தங்களின் உண்மை முகத்துடனேயே உலவுகிறார்கள். கவிஞரின் முகமும், தமிழும் உண்மையின் சுடராக ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன. 

பள்ளியில் தன்னுடன், தன்னைவிட நன்றாய் படித்த விஜயரெங்கனை பின்னாளில் பேருந்து நிலையத்தில் எல்லோரையும் ஏமாற்றிப் பிழைப்பவனாக பார்க்கும்போது அவனை எதிர்கொள்ள இயலாமல் ஒரு ரூபாய்க் காசை வீசிவிட்டு முகத்தை திருப்பிக்கொள்கிறார். ஆயினும் அவன் நினைவுகள் துரத்தி கொண்டேயிருக்கின்றன. தான் ஒவ்வொரு கட்டத்திலும் நெருங்கிப்பழகிய நண்பர்களை குடும்ப, பணிச்சூழல் காரணமாக திடீர் திடீரெனப் பிரிந்து போக நேர்வது கவிஞரின் வாழ்வில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கல்லூரியில் முதுகலை படிக்கும்போது உடன் படித்த நண்பன் அதே வகுப்பில் படித்த, தான் ஒரு தலையாய் நேசித்த வசுமதியைத் திருமணம் செய்துகொண்டு வாழ்வதை கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அறிந்துகொள்ளுவது, தன்னுடன் அறைத்தோழனாக இருந்த சத்தியவாசகனை பல ஆண்டுகளுக்குப் பிறகு அகமதாபாத்தில் ''சத்தியவாசகன்'' என்ற அவனது பெயரைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்வது என ஒவ்வொரு நினைவும் தேர்ந்த சிறுகதைக்குரிய சுவாரசியத்துடன் நகர்கிறது. முக்கியமாக ''சினிமா'' இந்த நினைவுக் கண்ணிகளை சரியான காலவரிசையில் கோர்க்கும் நூலாக இருக்கிறது..பால்யத்திலும், நடுவயதிலும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் கவிஞர் அன்றைய திரைப்படங்களையும், அவற்றின் பின்னாலிருக்கும் பல தகவல்களையும் தனது எழுத்தில் வெளிப்படுத்துகிறார்.

மனிதர்கள் வாழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்..தேர் உருண்டு கொண்டேயிருக்கிறது. நினைவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. கலாப்பிரியாவின் இந்த நினைவுத்தேரும் தன் பின்னால் நிகழ்ந்த பல தலைமுறைகளின் வாழ்வையும், நினைவுகளையும் சுமந்தபடியே உருள்கிறது 'உருள் பெருந்தேராய்'.

உருள் பெருந்தேர் - கலாப்பிரியா
சந்தியா பதிப்பகம்
விலை - 150 /-
இணையத்தில்: உடுமலை / கிழக்கு

No comments:

Post a Comment