13 Aug 2012

எட்றா வண்டியெ – வா.மு.கோமு


காதல் என்றால் ஊடகங்கள் நமக்கு சொல்லி, நம் கண் முன் வருவது ஒரு கல்லூரி மாணவன் அல்லது ஓர் அழகிய வாலிபன், முகத்தில் ரெண்டு முடிகள் விழ அதை ஒதுக்கி விட்டுப் போகும் சாக்கில் குறும்புப் பார்வை பார்த்து கொஞ்ச தூரம் சென்று திரும்பிப் பார்த்து புன்னகைத்துச் செல்லும் பெண், பேருந்துப் பயணம், இருவரும் இடித்துக் கொண்டு புத்தகம் கீழே விழ சாரி சொல்லல், நாயகி கடந்து செல்லும்போது துப்பட்டா நாயகன் முகம் உரச அங்கு காதல் பூக்கும். நிற்க, இவையொன்றும் இப்புத்தகத்தின் உள்ளடக்கம்/கதை அல்ல...

இன்னும் கிராமப்புறங்களில் சேரி என்றோ, வளவு என்றோ சொல்லப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டு வாழும் தாழ்ந்த சாதி விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வில் காதல் எப்படி இருக்கும்? அவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? இதையெல்லாம் கொங்குத் தமிழில் கதை நெடுக எள்ளலும், எகத்தாளமும் தெறிக்கச் சொல்லியிருந்தால் அதை வாசிக்கும் வாசகன் மனநிலை என்னவாகும்? சொல்ல வார்த்தைகளில்லை. அதுவும் கொங்கு நாட்டில் பிறந்து படிப்பு, வேலை என கால ஓட்டத்தில் “ங்க” வை மறந்து “ண்ணா” வுக்கு மாறியிருக்கும் எனக்கு அமுதுண்டாற்போலிருந்தது.

சாமிநாதன் என்றொரு இளைஞன் மற்றெல்லோரையும் போல தானும் காதலிக்க வேண்டும், திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறான். இதற்காக அவன் எடுக்கும் முயற்சிகள், அவன் செய்யும் காதல்கள் இவைதான் கதை.

கதை என்னவோ சாமிநாதன் பற்றியதுதான் என்றாலும், அந்த ஊர் சனங்களின் வாழ்க்கை முறையும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் என்றால் எட்டாவதோடோ, பத்தாவதோடோ படிப்பை நிறுத்தி விட்டு நூல் மில்லுக்கும், ஆண்களானால் தறிக்கும் போகிறார்கள். கொங்குப் பகுதி வளவு மக்களின் முக்கியமான வருமானம் இதுதான். அசதியைப் போக்க பேதமின்றி அனைவரும் குடிக்கிறார்கள். வயது வந்த இளைஞர் இளைஞிகள் காதலிக்கிறார்கள். கர்ச்சீப், பேனா கொடுத்தாள் உறவு முடிந்து விடும் என்பதில் தொடங்கி, வாழ்த்தட்டை, ஒரு கண்ணாடி பாக்ஸில் தெர்மோக்கோல் உருண்டைகள் அடங்க பொம்மைகள் போன்றவற்றை விரும்புபவர்களுக்கு பரிசாகக் கொடுப்பது, சுடிதார் எடுத்துக் கொடுப்பது, காதலை வீட்டில் ஏற்காத போது நண்பர்களின் உதவியோடு காங்கேயமோ, திருப்பூரோ ஏதோ ஒரு பக்கத்து ஊர் கோவில் எதோ ஒன்றில் திருமணத்தை முடித்து விட்டு ஊருக்குத் திரும்புவது என விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் காதலையும் தெளிவாக பதிவு செய்திருக்கிறார் வா.மு கோமு.

நாவலின் குறை என்று பார்த்தால், சாமிநாதனின் அளவுக்கு மீறின காதல்கள், ஒரு கட்டத்தின் சிறு அலுப்புத்தட்டுகிறது. மேலும் நாவல் நெடுக சாதீய சீண்டல்கள் இழையோடுகின்றன. அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிச் சொல்வதால் அது இந்த நாவலுக்கு இன்றியமையாததாகிறது.

நக்கலும், நையாண்டியுமாய் கொங்குத் தமிழில் ஒரு நாவலை வெகு சிறப்பாக எழுதியிருப்பதால் இப்புத்தகம் நிச்சயம் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தரும்.

எட்றா வண்டியெ | நாவல் | உயிர்மை பதிப்பகம் | வா.மு கோமு | விலை: ரூ. 120  

ஆன்லைனில் வாங்க:கிழக்கு

1 comment:

  1. தலைப்பே வித்தியாசம்...

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி ஐயா...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி...


    அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !

    ReplyDelete