7 Aug 2012

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


“ஐயா எனக்கு ஏதாவது கொடுங்கள்” என்று கேட்கும் பாம்பாட்டிக்கு, மேல் வேட்டியை அரையில் கட்டிக் கொண்டு அரை வேட்டியை கொடுக்கும் மனிதரை என்னவென்று சொல்வீர்கள்?

இப்படிச் செய்கிறீர்களே என்று கேட்டால், “எனக்கு நாலு பேர் கொடுப்பார்கள். அவனுக்கு யார் கொடுக்கிறார்கள்? நானே யோசிக்கவில்லை. உனக்கென்ன யோசனை?” என்று கேட்பவரை என்னவென்று சொல்வீர்கள். 


யதுகிரி, பாரதியின் தோழராகிய ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மகள். ‘சுதேசி’களான பாரதி,  ஸ்ரீநிவாஸாச்சாரியார், வ.வே.சு ஐயர், அரவிந்தர் போன்றவர்கள் அப்போது புதுவையில் வசித்திருக்கிறார்கள். யதுகிரி அம்மாள், பாரதியின் மகள்களைவிடச் சற்றே பெரியவர் என்று தெரிகிறது. பாரதியின் சிஷ்யையாகவே தன்னை அறிவித்துக் கொள்கிறார். பாரதி இறந்து பலவருடங்களுக்குப் பின் தன்னுடைய நினைவுகளை எழுதியிருக்கிறார். புத்தகம் வெளிவந்தது 1954ம் வருடம். அப்போது யதுகிரி அம்மாளும் காலமாகிவிட்டிருக்கிறார். 


யதுகிரி அம்மாளின் பார்வையில் பாரதியின் இயல்பான குணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அந்த அம்மாளுக்கு பாரதியின் வாழ்க்கையை சொல்ல வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்திருக்க வேண்டும். பாரதியை தன்னுடைய தகப்பன் ஸதானத்தில் வைத்துப் பார்க்கும் யதுகிரி அம்மாள், அவருடைய நற்குணங்களையும் நேர்மையையும் சொல்லும் அதே நேரத்தில், அவரிடம் தான் கண்ட குறைகளையும் சொல்கிறார்.

புகுந்தவீடு செல்லும் யதுகிரியிடம் பாரதி,

“நீ இரண்டு வீட்டிற்கும் விளக்கைப் போல் பிரகாசிக்க வேண்டும். இரண்டு குடும்ப வாழ்க்கை கலப்பது முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும். பழகியபின் வழக்கமாய் விடும். கேவலம், அடிமைத்தனத்திற்கு ஒத்துக்கொள்ளாதே. உனக்கு உரிமை உண்டு; புத்தி உண்டு. ஸ்வதந்திரம் உண்டு. தலை நிமிர்ந்து நட, உன் இருபுறமும் உள்ள இயற்கையைக் கண் குளிரப் பார், நேர்ப் பார்வையில் பார், கடைக்கண் பார்வையில் பார்க்கத் தகுந்தவன் கணவன் ஒருவனே. தந்தை சகோதரர்கள், பிள்ளைகள் முதலியோரை நிமிர்ந்து பார். இவர்களைக் கடைக் கண்ணால் பார்க்காதே. நிமிர்ந்து உட்கார். பேசுவதை ஸ்பஷ்டமாகப் பேசு. தைரியமாகப் பேசு. இதில் கற்பு கெடுவதில்லை. மேலுக்கு வேஷம் அவசியம் இல்லை.”

“பாரதியார் வாயால் பெண்கள் சுதந்திரம் பாடினாரே ஒழியச் செல்லம்மாவைத் தம் நோக்கத்தின்படியேதான் நடக்கும்படி செய்தார். செல்லம்மா தமதிஷ்டப்படி நடப்பது வெகு அபூர்வமே.” என்கிறார் யதுகிரி. 

மாறுவேடம் போட்டுக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் பதினைந்து நாட்கள் பாரதியார் எங்கோ போய் வந்திருக்கிறார். செல்லம்மா தன்னுடைய பிறந்த வீட்டிற்கு போய்விட, தான் மறு விவாகம் செய்து கொள்ளப்போவதாய் சொல்லியிருக்கிறார் பாரதி. பல நாட்கள் தொடர்ந்து மெளனவிரதம் அனுஷ்டித்திருக்கிறார். கஞ்சா பழக்கத்தினால் மற்றவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். திருமணமாகிச் சென்று பின் பிறந்தவீடு வரும் யதுகிரி, பாரதியின் கண்களில் முன் போல் ஒளியில்லை என்கிறார். 

ஒரு ஆறேழு பாடல்கள் உருவான சூழ்நிலைகள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. யதுகிரியின் தம்பி இறந்த போது பாடியது, நல்லதோர் வீணை. யதுகிரியின் ருது ஸ்நான வைபவத்தின் போது எழுதியது “கண்ணன் திருவடி எண்ணுக மனமே”. சில பாடல்களில், பாரதி நேரில் பாடியதற்கும் இப்போது அச்சாகியிருப்பதற்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்கிறார். பாரதியின் எந்த படைப்புகளிலும் வெளிவராத “இந்த தெய்வம் நமக்கநுகூலம் இனிக்கவலைக் கிடமில்லை” என்ற பாடலும் இந்த புத்தகத்தில் இருக்கிறது.

12 comments:

  1. சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  2. உங்கள் தொடர் ஊக்கத்திற்கு நன்றி தனபாலன் சார் :)

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    தன் 'கோட்'டை ஒரு ரிக்ஷாதோழனுக்கு கொடுத்ததாக மேடைகளில் கேட்டிருக்கிறேன்;அவர் பாம்பாட்டி போலிருக்கிறது. . .

    ReplyDelete
    Replies
    1. அது கோட்டு சார்! இது வேஷ்டி சார்! முதலாமவர் ரிக்ஷாக்காரர், இவர் பாம்பாட்டி. நன்றி!

      Delete
  4. பாம்பாட்டிக்கு கோட்டு, ரிக்ஷாகாரருக்கு வேட்டி...

    கொவனமாவது மிஞ்சிச்சா? :)

    ReplyDelete
    Replies
    1. வ.ரா ஒரு கடைசி பத்தி எழுதியிருப்பார் அவர் புத்தகத்துல #தமிழ்சூழல்

      Delete
    2. என்ன புத்தகம்? என்ன எழுதினார்?

      அதையும் இந்த மாதிரி விவரமா எழுதிடுங்களேன்...

      Delete
    3. பாரதியார் வரலாறு தான். அதையும் எழுதிடலாம்.

      Delete
    4. ஆவலோடு காத்திருக்கிறேன் சார், அவசியம் எழுதணும்

      Delete
    5. நன்றி சார்! கண்டிப்பாக!

      Delete
  5. யதுகிரி, பாரதி படத்துல சின்ன பொண்ணா வருவாங்களே அவங்க கேரக்டர் தானே? nice name!

    ReplyDelete