6 Aug 2012

இரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்


இப்புத்தகம் ஆதவனால் எழுதப்பட்ட ஆறு குறுநாவல்களின் தொகுப்பு. ஆதவன், நவீனத்துவத்தின் மிக முக்கியமான நபர். இப்புத்தகத்தில் ஆங்காங்கே அதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கையில் தன் சுயம் தொலைத்து ‘ரொட்டீன்’னாக தினசரி பழக்கப்பட்ட வாழ்க்கைக்கு பாயும் பலரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஆண். இதே குணாதிசயங்கள் கொண்ட மற்றொரு பெண். இருவரும் தங்களை அறிவாளிகளாக, இன்டெலக்சுவல்’களாக காட்டிக்கொள்ள முற்படும் இருவருக்குமான உரையாடல்கள் இவையே “இரவுக்கு முன் வருவது மாலை” எனும் குறுநாவலின் சாராம்சம்.

தமிழ்நாட்டிலிருந்து டில்லிக்குப் போய் வாழும் ஒரு தமிழ்க் குடும்பம், அதிலொரு இளைஞி, படித்ததனால் மட்டுமே தனக்கு சிறகு முளைத்து விட்டதாய் எண்ணி சமூகத்தில் ஒரு நல்ல வேலைக்குப் போக முடிவெடுத்து பறக்க நினைக்கிறாள். பாத்திரம் கழுவுவதையும், சங்கீதம் கற்பதையும் அறவே துறந்து ஒரு புரட்சியாகவோ, சமூக மாற்றமாகவோ இதை செய்ய எத்தனிக்கையில் படும் அவமானங்கள், கண்ட காட்சிகள் கண்டு பயந்து தன்னிலை உணர்ந்து மீண்டும் கூட்டுக்கே திரும்புகிறாள். இது “சிறகுகள்”, இரண்டாம் குறுநாவல். எழுபதுகளின் கதை.

திருவையாற்றில் பிறந்து டில்லி சென்று வாழும் ஒரு இளைஞன், தாய் மண்ணுக்குத் திரும்புகையில் அவன் அங்கு காண்பவற்றையெல்லாம் தான் இழந்தவைகளாக காண்கிறான், தான் அடிப்படையிலிருந்து மாறிவிட்டதாக உணர்கிறான். மேலும் அந்த ஊரில் ஏற்பட்ட மாற்றங்கள் கூட அவனுக்கு அன்னியமாகப் படுகின்றது.  இவையெல்லாம் கண்டு மீண்டும் டில்லிக்கே திரும்புகையில் அவனுக்கான மீட்சி எது என்பதை உணருகிறான். எங்கோ பிறந்து எங்கோ வேலைக்குப் போகும் அனைவருக்கும் எக்காலத்திலும் அவர்களுக்கான மீட்சியையோ அல்லது நினைவுகளையோ தரவல்லது, “மீட்சியைத் தேடி” மூன்றாம் குறுநாவல்.

ஒரு பதவியிலிருக்கும் ஒருவர் ஓரிரு நாள்கள் விடுப்பில் செல்ல நேர்ந்தால், அவருக்கு கீழே வேலை செய்யும் ஒருவர் அவருக்கு இன்-சார்ஜாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால், அதை உடன் வேலை செய்யும் மற்றவர்களால் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையின் கீழ் ஒரு நாள் அல்லது அதிகாரி விடுப்பில் போகும்போதெல்லாம் இன்-சார்ஜ்’ஆக இருந்து தன்னிலை வெறுக்கும் ஒரு ஊழியனின் கதை, “கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்”.

ஆண் என்பவன் மலை, பெண் என்பவள் நதி. ஒரு நதி மலையை அரவணைக்கையில் ஒரு நீர்வீழ்ச்சி உண்டாகிறது. மனைவி இறந்த பின் தன் முன்னாள் காதலியின் நிலை கண்டு அவரைக் காணச்செல்லும் ஒரு மலையின் நினைவுகள்தான் “நதியும், மலையும்”.

வேலைக்குப் புதிதாய் சேர்ந்திருக்கும் ஒரு சாதாரணப் பெண், உடன் உள்ளோர்களால் கெட்டவன் என்று விமர்சிக்கப்படுபவனிடம் உள்ள நற்பண்புகள் கண்டு அவனின் தோழியாகிறாள். பின் வரும் நிகழ்வுகளாய் அலுவலக யூனியன் தேர்தலின் தலைவியாகிறாள். அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைப் பேசுவது “பெண், தோழி, தலைவி”.

வெறும் சோப்புத் தண்ணீரானது சகல நிறங்களையும் தாங்கி நீர்க்குமிழாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தி, சட்டென்று வெடித்து முகத்தில் தெறித்தால் ஒரு குழந்தை என்ன உணருமோ அதுபோலொரு உணர்ச்சிப் பிரவாகத்தை தரவல்ல ஒரு புத்தகம் – இரவுக்கு முன் வருவது மாலை.

வெளியான வருடம் – 1974
மறுபதிப்பு – கிழக்கு பதிப்பகம்

1 comment:

  1. நல்லதொரு புத்தக அறிமுகத்துக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...


    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete