15 Sept 2012

கோபல்லபுரத்து மக்கள் - கி. ராஜநாராயணன்

பிறந்த எல்லோருக்குமே ஒரு வரலாறு இருக்கும், ஆனா எல்லோருக்கும் அதைப் பதிவு செய்யும் எண்ணம் வருவதில்லை, அல்லது பதிவு செய்வதற்கான நேரம் இருப்பதில்லை , வரலாற்றுப் பதிவு செய்வதெல்லாம் ஒரு வேலையான்னு கேக்கலாம் (என்னை மாதிரி ஆளுங்க). 

அதை விடுங்க, நமக்கு 60-80 வருடங்கள் முன்பு வாழ்ந்த மக்களை பற்றி  நமக்கு என்ன தெரியும்? அவங்க எப்படி வாழ்ந்தாங்க, என்ன சாப்பிட்டாங்க, எப்படி பொழுது போக்கினாங்கன்னு ஏதாவது தெரியுமா? கி. ராஜநாராயணன் அதையெல்லாம் சொல்ற மாதிரி ஒரு புத்தகம் எழுதியிருக்கார் - "கோபல்ல கிராமம்". இந்தியா சுதந்திரம் அடைவதற்கு 30- 40 வருடங்கள் முன்பிருந்து , இந்தியா சுதந்திரம் அடையும் நாள் வரை "கோபல்ல கிராமத்தில்" நடைப்பெற்ற நிகழ்ச்சிகளின் தொகுப்பே "கோபல்லபுரத்து மக்கள்". இந்தப் புத்தகத்தை எந்த அத்தியாயத்தில் இருந்து வேணா படிக்கலாம், எங்கேயாவது ஒண்ணு ரெண்டு அத்தியாயத்தில் வரும் கதைகள் அடுத்ததில் தொடர்ந்து வரும், மற்றபடி  இது கோபல்ல கிராமத்தின் வாழ்க்கை வரலாற்றின் வேவ்வேற காட்சிகளின் தொகுப்பு.
படம் - நன்றி: http://sasitharan.blogspot.in



மொத்த புத்தகமும் இரண்டு பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது, முதல் பாகம் முழுக்க கிட்டப்பன் என்கிற மனிதனின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறது, அதனூடே நாம் அந்த ஊரிலிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் அறிய முடிகிறது. லாந்தர் விளக்கிலிருந்து கோபல்ல கிராமத்துக் கதை ஆரம்பிக்கிறது , மண்ணெண்ணெய் ஊற்றி லாந்தர் எரிய வைப்பதை அதிசயமாகப்  பார்ப்பதும். ஊரில் ஏட்டுப் பள்ளிக்கூடம் ஏற்படுவதும், அதற்கு ஆசிரியராக சாமிக்கண்ணாசாரி வருவதும், மாணவர்கள் ஒவ்வொரு தடவை பள்ளிக்கு வரும்போதும், பள்ளிவிட்டுப் போகும்போதும், ஆசிரியரை வணங்கிப் பாடும் பாடல்கள் , அந்த காலத்தில் மாணவர்- ஆசிரியர் உறவு எவ்ளோ அழகா, ஆழமா  இருந்தது என்பதைக் காட்டுது. 

மா நோம்பு விழாவின்போது, காட்டிலிருந்து வன்னி மரத்தைப் பிடுங்கி வந்து ஊரில் நடுவார்கள், அதை வெளியே எடுப்பது விழாவில் ஒரு நிகழ்ச்சி. கிராமத்து பிள்ளைகள், விளையாட்டு தனமாக, கிட்டப்பனைப் பழி வாங்க  வன்னிமரத்தை ஆழமாக நட்டு விட , எப்போதும் வன்னி மரத்தை வெளியே எடுக்கும் கிட்டப்பன், மிகுந்த வலியோடு மரத்தை வெளியே எடுத்து , நோய்வாய்ப்படுகிறான். அதே சமயம் அவனது மனதும் அவனைப் படுத்துகிறது, தனக்குப் பேசி வைக்கப்பட்ட பெண்ணை(அச்சிந்த்தலு) வேறு இடத்தில் மணம் செய்து கொடுத்ததும், இவனும் வேறு இடத்தில் மணம் புரிந்ததும், இவன் மனைவி இவனை விலகி போவதுமாக கதை நகர்கிறது. ஆச்சிந்த்த்லுவின் கணவனும் ,கல்யாணம் ஆன சிறிது காலத்திலே இறந்து விட, அவளுடைய மனது கிட்டப்பனோடு வாழாதது குறித்து ஏங்குகிறது, எல்லோருடைய வாழ்விலும் ஒரு காதல் இருக்கும். சில பேருக்கு அது நிறைவேறுகிறது, சிலருக்கு நிறைவேறுவது  இல்லை. ஆனால் கிட்டப்பன் இறக்கும்போது அச்சிந்த்தலுவும் இறந்து, தன்னுடைய நிறைவேறாக் காதலை முடிவுக்குக்  கொண்டுவருகிறாள்.

இரண்டாம் பாகத்தில் பல ஊரில் இருந்து மக்கள் கோபல்ல கிராமத்தில் குடியேறுவதும், கிராமத்து மாணவர்கள் ஏட்டுப் பள்ளியை விட்டுட்டு  நகரப் பள்ளியில் படிக்கப் போவதும், குடுமியை எடுத்துவிட்டு கிராப் வைத்துக் கொள்வதுமாக ஆரம்பிக்கிறது. இரண்டாவது பாகத்தின் சிறப்பு ஒவ்வொரு அத்தியாத்திலும் மக்களிடம் பரவி இருந்த மூட நம்பிக்கைகள் எப்படி மறைந்தன, அதே சமயம் அவர்களிடம் இருந்த நற்குணங்கள் எப்படி மாற்றம் அடைந்தன என்பதைச்  சொல்கிறார். அது பிரமாதமாக இருக்கிறது. 

மாணவர்கள் கல்வி கற்கும் முறை அந்த காலத்தில் இருந்தே கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. ஏட்டுப் பள்ளிக்கூட மாணவர்கள் நன்றாகக் கணக்கு போடுவதையும், நகரப் பள்ளியில் படித்த மாணவர்கள் தடுமாறுவதையும் சொல்லி நம் நவீனக் கல்வி அமைப்பை  வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விமரிசிக்கிறார் கி ராஜநாராயணன். ஃபவுண்டெய்ன் பேனாவை அதிசயமாகப்  பார்ப்பதும், பேட்டரியால் எரியும் விளக்கு வந்தபின் பல பெரிய மனிதர்கள் விடும் அதிசயக் கதைகள் பொய்யாகிப் போவதும் நடக்கிறது.

கடைசி சில அத்தியாயங்களில் கொஞ்சம் வேகமாக சுதிந்தரப் போர் குறித்து அலச ஆரம்பிக்கிறார், ஒரு  நடுநிலைமையோடு பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார், முக்கியமாக கள்ளு, கள்ளு குடிப்பவர்கள் பற்றியும், அதற்கு எதிராக காந்தியின் கொள்கையையும் விவரித்து, கள்ளு வேண்டுமா வேண்டாமா என்பதை நம் முடிவுக்கு விட்டுவிடுகிறார். காங்கிரஸ், பெரியார், கம்யுனிசம் என்று எல்லா கட்சிகளைப் பற்றியும் , அவர்களது கொள்கைகள் பற்றியும், ஒரு அலசல். யாரையும் நம்ப முடியாத தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஒப்பீடு செய்ய முடிகிறது. "சுதந்திர தினச் செய்தியாக நாட்டு மக்களுக்கு உங்கள் செய்தி என்ன?" என்று மகாத்மாவிடம் செய்தியாளர்கள் கேட்க, அதற்கு காந்தி, ""ஒண்ணுமில்லை,"" என்று சொல்வதுடன் கதை முடிவடைகிறது.

 நெடும் தூரம் செல்லும் ரயிலில் நட்பாகி வரும் தாத்தா கதை சொல்வது போல், ரொம்ப நெருங்கிய உணர்வை இந்த நாவல் படித்தவுடன் உணரமுடிகிறது.

இணையத்தில் வாங்க

No comments:

Post a Comment