17 Sept 2012

பசித்த மானிடம் – கரிச்சான் குஞ்சு


தனித்திருத்தலும் விழித்திருத்தலும் பசித்திருத்தலுமே வாழ்க்கை என வள்ளலார் பெருமான் கூறுகிறார். மனித வாழ்வை இயக்கிக்கொண்டிருக்கும் முக்கியக் காரணி பசி. வெறும் வயிற்றுப் பசிக்காக இயங்கிக் கொண்டிருந்த மனித இனம், ஆறாம் அறிவைப் பெற்றுத் தனக்கான வேறு பசிகளை உணர ஆரம்பித்த பின்னரே இந்த பூமியில் இயக்கம் மாறியது. யார் சிறந்தவர் எனும் போட்டி உருவானது, இந்தப் பசிகளுக்கான மருந்து யாரிடம் அதிகம், சிறந்ததாக இருக்கிறது எனும் பொறாமையும் உண்டாகிற்று. மனிதரிடையே உருவான இந்த ஒப்பிடுதல் பண்பு மனிதர்களுக்கே சாபக்கேடாய்ப் போனது. தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழிப்போம் என்றார் பாரதி. ஒரு மனிதனின் பசி அவனை எதுவும் செய்யத் தூண்டும், அது போலத்தான் மனதின் பசியும். ஒரு மனிதனின், அவன் மனதின் பசிகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் எந்த சூழலுக்கும் ஒத்துப்போகும் ஒரு நாவலாய் ”பசித்த மானிடம்” வடித்திருக்கிறார் கரிச்சான் குஞ்சு.


கணேசன், கிட்டா இருவருமே இதில் முக்கிய கதாபாத்திரங்கள். இவர்களுக்குள் வரும் பசி அதனால் வரும் வாழ்க்கை மாறுதல்கள், சிக்கல்கள் இவையாவுமே கதை. கணேசன் ஒரு அநாதை, தோப்பூரில் ஒரு வாத்தியாரால் எடுத்து வளர்க்கப்பட்டு பின்னர் அந்த ஊருக்கே செல்லப் பிள்ளை ஆகிறான். சுகவாசியாய் அன்பும் அக்கறையும் பெற்று இலக்குகள் ஏதுமின்றி, அவன் எதிர்காலம் குறித்து யாரும் சிந்திக்காத நிலையில் வளர்கிறான்.

கிட்டா, கணேசனைக் கண்டு பொறாமை கொண்டு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியூருக்குச் சென்று மோட்டார் வாகனம் ஓட்டப் பயில்கிறான். டிரைவர் ஆகி சம்பாதிக்க ஆரம்பிக்கிறான். பணமே முக்கிய இலக்காய் கிட்டாவின் வாழ்க்கை நகர்கிறது. மெள்ள மெள்ள கிட்டாவின் நிலை உயர்ந்து முதலாளி ஆகிறான். இதனால் அதிகாரக் கோரப்பசிக்கு ஆளாகி நிம்மதி இழக்கிறான். மனைவியை சந்தேகப் படுகிறான். வாழ்க்கை தடுமாறுகிறது.

ஒரு கட்டத்தில் கணேசனை படிப்பிற்காக வேறொரு ஊரில் பள்ளியில் சேர்க்க, கணேசன் வாழ்க்கை திசை மாறுகிறது. பணம், சுகம், காமம் இவற்றிற்கு அடிமை ஆகிறான் கணேசன். தன்னை எடுத்து வளர்த்த தோப்பூரையும், வாத்தியாரையும் விட்டு விலகுகிறான். காலப்போக்கில் வாழ்க்கை கணேசனுக்குப் பாடம் புகட்டுகிறது. தன் நிலை உணர்ந்து இவற்றிலிருந்து விலக முடிவு செய்கிறான், இருந்தாலும் செய்த பாவம் தொழுநோயாய் அவனைத் தொடர்கிறது. அனைத்தையும் அனுபவித்தவன், இவை அனைத்தையும் துறந்த பின்னர் அடைவது என்ன? என்பதில் நாவல் முடிகிறது.

பணமும் அதிகாரமும் ஒருவனுக்கு முன் நின்றும், பலவீனமும், தான் இழந்தவைகளும் பின் நின்றும் சிரிக்க இவற்றை உதறியவனே மோட்சம் அடைகிறான். வாழ்வின் நோக்கம் உயிர் கொண்டிருக்கும் ஒரு உடலை மட்டும் மகிழ்விப்பதல்ல எனப்புரிவதே வாழ்வென்றும் அது புரியும் காலத்தில் ஒருவன் முக்திக்கான முதல் படியைத் தாண்டுகிறான் என்றும் ஒரு தரிசனம் தருகிறார் கரிச்சான் குஞ்சு இந்நாவல் வழி. மனதைப் பிடித்து ஆட்டும் பணம், பதவி, பெண் இவையனைத்துமே மாயை என்பதை உணர்ந்தவன் ஞானி ஆகிறான் என்பதே சாராம்சம்.

ரத்தக் கண்ணீர் திரைப்படம் போன்றதொரு நாவல்தான் என்றாலும், வாசிக்கும்போது ஒரு தரிசனம் தரவல்ல ஒரு மிகச்சிறந்த புத்தகம் – பசித்த மானிடம்.


கரிச்சான் குஞ்சு | நாவல் | காலச்சுவடு | பக்கங்கள் 271 | விலை ரூ. 200 

இணையத்தில் வாங்க: கிழக்கு

1 comment:

  1. வாங்கி வாசிக்க வேண்டும்... நன்றி...

    ReplyDelete