25 Sept 2012

பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்


நா.முத்துக்குமார் 1997’ல் தன் 22’வது வயதில் வெளியிட்ட ஒரு கவிதைத் தொகுப்பு “பட்டாம்பூச்சி விற்பவன்”

பள்ளிப் பருவத்துப் பரவசங்கள், பதின்ம வயதின் நினைவுகள், வாலிபப் பருவத்து மயக்கங்கள், வலி, ஏக்கம்,  என்று தான் கடந்த ஒரு காலகட்டத்தின் அனுபவத் தொகுப்பையே பட்டாம்பூச்சி விற்பவனாகத் தந்திருக்கிறார் நா.முத்துக்குமார்.

ண்பதுகளின் இறுதியில் புதுவை ஜீவானந்தம் ஸ்கூலில் எனக்கென கிரிக்கெட் அணி ஒன்று உண்டு. டென்னிஸ் பந்து அல்லது ரப்பர் பந்து கொண்டு கிரிக்கெட் ஆடும் மிக முக்கிய அணி எங்கள் அணி. அணியின் மிக முக்கியஸ்தன் நான், ஆல்ரவுண்ட் பர்ஃபாமெர். 

1990’ல் சென்னை வந்து சேர்ந்தபோது முதல் இரண்டொரு மாதங்களில் மாதவரம் பகுதியில் யாரும் கிரிக்கெட் ஆடிப் பார்க்கவில்லை.  அட, மெட்ராஸ்ல எவனுக்கும் கிரிக்கெட் ஆடத் தெரியாது போல என்று நினைத்தேன்.



”அடுத்த மாசந்தான் கிரிக்கெட் சீஸன் இங்க” என்று அப்போதெல்லாம் கிரிக்கெட்டுக்கு, பட்டம் விடுவதற்கு என்று சீஸன் பிரித்து ஆடும் உலகம் அது. சரி வரட்டும் கிரிக்கெட் சீஸன்; ஊரான் ஊரான் என்று நம்மை ஓட்டும் இந்தப் பயலுகளை ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்தவனுக்கு விழுந்தது மரண அடி. ஆரம்பித்த சீஸனின் முதல் சீஸனிலேயே இந்தப் பயல்களுக்குத் தெரிந்த வித்தையில் காலே அரைக்கால் வீதம் கூட நமக்குத் தெரியாது என்பதறிந்து முடங்கிப் போய் கிரிக்கெட்டை மூட்டைக் கட்டியவன்தான். அதன்பிறகு நமக்கு கிரிக்கெட் என்றால் அது டிவியிலும், சேப்பாக்கம் ஸ்டேடியத்திலும் மட்டும் நடப்பது.

இதே போன்றதான தன் அனுபவத்தை நா.முத்துக்குமார் இந்தத் தொகுப்பில் “ஒரு கிராமத்துக் கிரிக்கெட்” கவிதை வழியே சொல்கிறார்.

ஆடாதொடை
குச்சிதான் ஸ்டெம்பு.
மட்டையில் பட்டால் ‘ரன்’
குச்சியில் பட்டால் ’அவுட்’
என்று கிராமத்து அத்தியாயம் சொல்லும் கவிதை,

‘இப்போதெல்லாம்...
...‘கிரிக்கெட் போட்டியில்
இந்தியா வெற்றி’
என படிக்கையில்
புன்னகைப்பதோடு சரி
என்று நிறைகிறது.

னக்கும், விஷ்ணுவுக்கும் பரிச்சயமான பெண் சாந்தினி. தொண்ணூறுகளின் இறுதியில் நாங்களிருவரும் வேலை செய்த கம்பெனியில் அவளும் வேலை செய்தாள். 

ராக்கெட் மட்டும்தான் ஓட்டத் தெரியாது அவளுக்கு. மற்றபடி உலகில் உள்ள மற்ற அத்தனை வித்தையும் தெரிந்தவள். சினிமாவில் வரும் ஹீரோயினிகளுக்கு எந்தவிதத்திலும் குறையில்லை என்று இருப்பாள். சகலகலாவல்லவி என்ற வார்த்தை மிகையில்லை. மடந்தைப் பருவம் கடந்தும் மழலை மாறாமல் பேசுவதுதான் சாந்தினியின் பிரதான அழகு. அந்த அழகிக்கு அழகு சேர்த்த ஒரு தெற்றுப்பல் அவள் நாக்கில் அடிக்கடி இடறுவதில், அல்லது இடறுவதான பாவனையில் அவள் பேசுவதில் அவள் பேச்சில் அந்த மழலை மிகும்.

ஒருநாள் எங்கள் வீட்டு மொட்டைமாடியில் பேசிக்கொண்டிருந்தபோது விஷ்ணு கேட்டார், 

“சாந்தினி பத்தி என்ன நெனைக்கற?”

“சூப்பர் பொண்ணுல்ல? நேரம் கெடைச்சா ப்ரபோஸ் பண்ணலாம்னு இருக்கேன்”, ஏனோ மனசில் ரொம்ப நாளாய்த் தேங்கினதை அவர் கேள்வி கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல் சட்டென்று கொட்டிவிட்டேன்.

“.........”

“எதான தப்பா சொல்லிட்டனா?”

”ஆர் யூ சீரியஸ் அபவுட் ஹெர்?”

“சீரியஸ் எல்லாம் இல்லை. அவ நெனைப்பு எப்பவும் ஜஸ்ட் ஒரு சின்ன ஊஞ்சலாட்டம் ஆடும் மனசுல. தட்ஸ் இட்”

”காதல் தேசம் அப்பாஸ், வினீத் கதையாப் போச்சு போ. ஒண்ணும் சொல்றதுக்கில்லை”

“அடக் கடவுளே! நீரும் அந்தப் பொண்ணை மனசுல குறிச்சி வெச்சிருக்கீறா? விடுமைய்யா. நான் வெலகிக்கறேன். நட்புக்கு அதுகூட செய்யாட்டி என்ன? என்ன உதவி தேவை சொல்லும், செய்யறேன்”

“ரொம்ப தேங்க்ஸ். நேரம் வரட்டும். வெயிட் பண்ணலாம். உதவின்னா நிச்சயம் கேக்கறேன்”

நான் என் டைரி திறந்து அவள் பெயருக்கு எதிரே ஒரு பெருக்கல் குறி போட்டுவிட்டு அதற்கு அடுத்து நோட் செய்திருந்த பெயர் யாருடையது என்று பார்க்கலானேன்.

இரண்டொரு வாரத்தில், “உங்க ரெண்டு பேருக்கும் இல்லடா”, என்று வேறொருத்தன் சாந்தினியைக் கொத்திச் சென்ற ஆன்ட்டி-க்ளைமாக்ஸ் நேர்ந்தது தனிச்சோகம். விஷ்ணுவும் தன் டைரியைத் திறந்து.....இத்யாதி இத்யாதி.

பற்பல வருடங்கள் கடந்தபின்னர் சிலமாதங்கள் முன் எதேச்சையாய் சாந்தினியை எதிரில் பார்த்தேன். இடுப்பில் ஒன்றும் கையில் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள். இல்லையில்லை அவள் சாந்தினியில்லை. வேறு யாரோ. இவள் அவளுக்குப் பெரியம்மாவோ இல்லை சின்னப் பாட்டியோ. 

தொண்ணூறுகளின் இறுதியில் பதின்ம விளிம்பில் நின்றவளுக்கு இன்று மிஞ்சிப்போனால் முப்பதை இதோ இப்போதான் கடந்தேன் எனும் வயது இருக்கும். ஆனால் பார்ப்பதற்கு ஏதோ ஐம்பதை நெருங்கும் ஒருத்தியின் தோற்றத்தில் எதிரில் வருகிறாள் அவள்.

“ஹ்ஹாய் கிரி! எப்டி இருக்கீங்க?”

“ச்சாந்த்த்னீ?”

“ஏன், அவங்க பாட்டின்னு நெனைச்சீங்களா?”, மனதைப் படித்ததான கேள்வி.

காலம் எப்படியெல்லாம் வாழ்க்கையைப் புரட்டுகிறது? குசல விசாரிப்புகள், வீட்டுக்கு வாங்க காபி, டிபன் சாப்பிடலாம், பரவால்லை இன்னொரு நாள் வர்றேன்’களைப் பேசிமுடித்து அந்த இடம் விட்டு அகன்றோம்.

நான் அன்று பார்த்த சாந்தினியின் கோலத்தை இன்றுவரை விஷ்ணுவுக்குச் சொல்லவில்லை. காரணம், அவன் மனதிலாவது சாந்தினி அதே பழைய சாந்தினியாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம்தான்.

நான் இப்படி 300 வார்த்தைகளில் நீட்டி முழக்கிய சாந்தினி புராணத்தைத்தான் “டென்த் ஏ காயத்ரிக்கு...” கவிதையில் நச் என்று  சொல்லியிருக்கிறார் நா.முத்துக்குமார்.
பேருந்தில்,
டீக்கடையில் என
பொருள்வாயிற் பிரிந்த
நண்பர்களின்
தற்செயல் சந்திப்புகளில்
கேட்கப்படும் முதல் கேள்வி:
‘காயத்ரி எங்க இருக்கா மாப்ளே?’
என் பதில்:
‘பத்து வருடத்திற்கு முந்தைய
டென்த் ஏ க்ளாஸ் ரூம்ல.’
வாழ்க்கை பெரும்பாலும் இங்கே எல்லோருக்கும் ஒரேபோல்தான் இருக்கிறது. அதனைப் பார்த்து, உள்வாங்கி, இப்படி ஆவணப்படுத்தும் விதத்தில்தான் ஒரு சாதாரணனும், கவிஞனும் வித்தியாசப்படுகிறான்.

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்:  தொகுப்பின் மிகச் சிறந்த கவிதை. ஒவ்வொருமுறை வீடு மாற்றும் போதும் வீட்டில் ஒவ்வொருவரும் எதையேனும் இழக்கிறோம். அவை ஒவ்வொன்றும் அழகழகாய்ப் பட்டியலிடப் படுகின்றன. பட்டியலில் இவர் இழக்கும் விஷயமாய்க் குறிப்பிடும் “ஆடுசதை தெரியக் கோலம்போடும் எதிர்வீட்டுப் பெண்” வரியில் ஓராயிரம் ஹைக்கூகள் தரிசனம் தருகின்றன.
”சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய்ச் சொல்வது
வீடு மாற்றுவதை?”
என்று கவிதை நிறைகையில் மனசை ஏதோ செய்கிறது.

மொத்தம் முப்பது கவிதைகள். அத்தனையையும் திகட்டத் திகட்ட சிறந்தவைகளாக நிரப்பாததிலும் ஒரு அர்த்தம் உள்ளதாய்த்தான்  தோன்றுகிறது. இடையிடையே வரும் மிகச் சாதாரண ரகக் கவிதைகள்தான் ஒரு சூப்பருக்கும் இன்னொரு சூப்பருக்கும் இடையே நமக்குக் கிடைக்கும் சின்ன ஆசுவாச அவகாசம்.

பட்டாம்பூச்சி விற்பவன் - நா.முத்துக்குமார்
50 பக்கங்கள். விலை ரூ. 30/-
பட்டாம்பூச்சி பதிப்பகம்.

கிடைக்குமிடம்: 
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு,
பாண்டி பஜார், சென்னை-17.

இணையம் மூலம் வாங்க: உடுமலை
(ஃபோன் மூலம் உறுதி செய்து கொள்ளவும். நான் சென்ற ஆண்டு கேட்டபோது ஸ்டாக் இல்லை என்றார்கள்)

1 comment:

  1. நூல் விமர்சனம் அருமை...

    பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete