24 Sept 2012

மகாராஜாவின் ரயில்வண்டி – அ.முத்துலிங்கம்



என் நண்பர்களிடம் அவர்களைக் கவர்ந்த புத்தகங்களைக் கேட்டு அதை வாங்கிப் படிப்பேன். இது என்னிடம் உள்ள ஒரு பழக்கம், கேட்டவர்கள் அனைவரும் அ.முத்துலிங்கம் பற்றி சொல்லாமல் இருந்ததில்லை.”முத்துலிங்கம் கதைகள் படிச்சிருக்கியா?” நிச்சயம் இந்த கேள்வி வந்து விழும். அப்படித்தான் அறிமுகமானார் அ.முத்துலிங்கம். சில கதைகளிலேயே தெரிந்து போனது அவர் ஒரு நல்ல கதைசொல்லி. நமக்குத் தெரிந்த பல விஷயங்களை நாமறியாத வகையில் சொல்லி ஆச்சர்யமூட்டுபவர். காதலும், எள்ளலும், நகைச்சுவையும் எப்போதும் குறைந்திடாமல் வாசகனுக்குத் திருப்தியைத் தரும் சின்ன சின்னக் கதைகள்தாம். சில வேளைகளில் “ச்ச, இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சிடுச்சே” என்று கூட ஏமாற்றம் தர வல்ல கதைகள்.

அன்றாடம் நம் பணி நெரிசலில், இயந்திரத்தனமாக ஏதேதோ செய்து கொண்டிருக்கையில் திடிரென ஏதோ ஒரு காட்சியோ ஒரு செய்கையோ நம்மை, நம் மனதை அப்படியே Freeze செய்து விடும். பல நாட்களுக்கு முன்போ, பல வருடங்களுக்கு முன்போ நிகந்த ஏதோ ஒன்றையோ, யாரோ ஒருவரையோ நினைவுபடுத்தி மகிழ்விக்கவோ, நோகடிக்காமலோ அது போகாது. இவ்வுலகில் மிகப் பெரிய வரம் நினைவுகள், மிகப்பெரிய சாபமும் கூட. நினைவோடைகளை மனதில் தாக்கம் ஏற்படும் படி இவர் சொல்லும் கதைகள் இதில் ஏராளம்.

மகாராஜாவின் ரயில்வண்டி கதையில் நாயகன் அன்னியர் ஒருவர் வீட்டில் தங்குகிறார். அவர்களில் வீட்டில் இருக்கும் பெண்ணை இவருக்கு மிக பிடித்துப் போகிறது. மெல்லிய கிதார் இசையில் அவளுடன் சேர்ந்து இனிப்பு பிஸ்கட் சாப்பிடுகிறார். அவள் வீட்டில் வளரும் பூனைக் குட்டிகளை இவருக்கு காண்பிக்கிறாள். அந்த நாள் இனிமையாகக் கழிகிறது. பல வருடங்கள் கழித்தும் கூட, கிதார் இசையைக் கேட்டாலோ, இனிப்பு பிஸ்கட் சாப்பிட்டாலோ இல்லை நிம்மதியான உறக்கத்திலோ இவர் அவை நினைக்காமல் இருந்ததில்லை என கதை முடிகிறது. இப்படியான ஒரு பெண் எல்லோருடைய வாழ்விலும் இருக்கத்தானே செய்கிறாள்?

மற்றொரு கதையில், நல்ல லாபத்திலிருந்து இப்போது நட்டத்தில் ஓடும் ஒரு கம்பெனி ஊழியர்களுக்கு கம்பெனியின் நிலை குறித்து எடுத்துச் சொல்ல இவரை அழைத்திருக்கின்றனர். இருபத்தொன்பதாவது மாடியில் இவரது அறை. கம்பெனி நிலவரங்களை ஆராய்ந்து கொண்டும், தான் பேசவேண்டியவற்றை எழுதிக்கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டிருக்கிறார். வானத்தில் மிதப்பதாகவும், பறவைகளோடு சேர்ந்து தானும் பறப்பதாகவும் உணர்கிறார். அப்போது வேகமாய் வந்த ஒரு பறவை அறைச் சாளரத்தை வெற்றுவெளி என்று நினைத்து மோதிச் சாகிறது. இவர் அந்த பறவையைக் கையிலெடுத்து அதன் மரணத்தை உணருகிறார். அடுத்தநாள் மீட்டிங்கில் இந்தப் பறவையைப் பற்றி மட்டுமே பேசுகிறார். இறுதியில் ஊழியர்களுக்கு வேறேதும் சொல்லத் தேவைப்படாமல் போகிறது. அவ்வளவு நேர்த்தியாக கம்பெனி நிலவரத்தையும் அந்த பறவையையும் இணைத்துப் பேசுகிறார். இது தொடக்கம் சிறுகதை. இது போலத்தான் வாழ்க்கையில் ஏதேதோ சம்பவங்கள் நமக்குப் பல படிப்பினைகளை தந்து செல்கிறது.

படிப்பினையையும், மெத்தப் படித்தவர்களையும் பகடி செய்யும் எதிரி கதை மிகச் சிறந்தது எனச்சொல்லலாம். ம்வாங்கி என்பவர் அந்த ஊரிலேயே மெத்தப் படித்த ஆசாமி, படிப்பிற்கேற்ற வேலை ஒன்றும் கிடைக்காததால் இவர் அறிவில் கோழிப்பண்ணை வைக்கலாம் என்று முடிவு செய்து அந்த தொழில் துவங்குகிறார். கோழிகள் அப்படியே இருக்க, முட்டைகள் மட்டும் தினசரி களவு போகின்றது. நாளடைவில் அது ஒரு பாம்பின் செய்கை என கண்டு கொள்கிறார். தனக்கு ஒரு எதிரி வாய்த்ததையும், அதை வெற்றிகொள்ளப் போகும் வழிமுறைகளையும் சிந்திக்கிறார். ஒரு கட்டத்தில் இவர் என்ன செய்தாலும் அந்த பாம்பு இவரை ஏமாற்றி முட்டையை அபகரித்து விடுகிறது. இவர் தந்திரமாக அந்த பாம்பை கொன்று விடுகிறார். அதன் பின்னரே எதிரியை தான் நேருக்கு நேர் சந்திருக்க வேண்டும், அது முட்டையை அபகரிக்காமல் செய்திருக்க வேண்டும். தந்திரமாகக் கொன்றது தன் தவறு என உணருகிறார். இதுபோலத்தான் சில சமயங்களில் நம் வெற்றியை மட்டுமே உத்தேசித்து நாம் செய்யும் பல காரியங்களும் பின்னர் நமக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தும். 

நாமறிந்த விஷயங்களையே நமக்குத் தெரியான புதிய பரிமாணத்தில் நமக்கு எடுத்துச் சொல்கின்றன கதைகள். இதே போல பல சிறந்த கதைகளை உள்ளடக்கி ஒரு நல்ல வாசித்தனுபவத்தை தரவல்ல ஒரு நல்ல சிறுகதைத் தொகுப்பு இப்புத்தகம்.

அ. முத்துலிங்கம் | சிறுகதைத் தொகுப்பு | காலச்சுவடு | பக்கங்கள் 173 | விலை ரூ.125

இணையத்தில் வாங்க: கிழக்கு

No comments:

Post a Comment