1 Oct 2012

பரத்தை கூற்று – சி.சரவணகார்த்திகேயன்


நண்பர் சிஎஸ்கேவை ட்விட்டரின் மூலம் தான் அறிமுகம் எனக்கு. அவரின் ட்வீட்டுகளால் ஈர்க்கப் பட்டே இந்தப் புத்தகத்தை வாசிக்கலானேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குக் காரணம் பாடுபொருள் அல்ல, பாடப் பட்ட விதம். பொதுவாகக் காமம் சம்மந்தப்பட்ட எழுத்துகளில் அல்லது அவ்வாறாக எழுதுபவர்களின் புத்தகங்களில் வாசகரைத் தக்கவைக்க, தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் வகையில் ‘திணிக்கப்பட்ட’ காமம் இருக்கும். அப்படியொன்றும் இல்லாது உண்மைபேசி வலி பொறுத்து ரணம் சொல்லி கர்வம் கொள்ளும் கவிதைகள் நிறைந்த புத்தகமிது.

கற்பு, பெரும் பிரளயங்களை ஏற்படுத்தவல்ல ஒரு புண்ணிய வார்த்தை. பத்தினியர், குல விளக்கு, குத்துவிளக்கு என பெண்களைக் கொண்டாடும் அதே சமூகம்தான் வேறு சிலரை வேசிகள், தாசி, பரத்தை இன்னும் கொச்சையாக தேவடியா என்றும் தூற்றுகிறது. இப்புத்தகம் இவர்களை நியாயப் படுத்தவில்லை, சட்டபூர்வமாக்கவேண்டுமென்று அரசியல் பேசவில்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையை அவர்களே சொல்வதாய் அமைந்திருக்கிறது. உலகில் அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவான காமத்தை பொதுவில் பேசக் கூட சங்கோஜப்படும் நிலையில் அதற்காகவே (அர்ப்பணித்து??) வாழும் பரத்தையரின் வாழ்வின் வலிகளைச் சுட்டுகிறது. பரத்தையர் பற்றிய கவிதைகள் அவர்களின் உடலைப் பற்றி மட்டும் பேசாமல் உள்ளத்தைப் பற்றியும் பேசுகிறது.

குலமகளானாலும், விலைமகளானாலும் பெண்ணின் முக்கியக் கடமை ஆணை திருப்தி படுத்துவதே. இப்படித்தான் இந்த சமூகம் அமைக்கப் பட்டிருக்கிறது, இயங்கிக் கொண்டிருக்கிறது. இக்கவிதைகளில் சில செவிட்டில் அறைந்தாற்போல் இருக்கிறது, ஆணாதிக்கச் சமூகத்திற்கெதிராக.

பகுத்தறிவு
யாதெனில்
கலவிக்குக்
காசு கேட்பது.

சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுத்தல்.

இந்தச் சுதந்திரம் இங்குள்ள பெண்களுக்கு இருக்கிறதா? இங்கு பெண்களானால் எந்தச் சுதந்திரமும் இல்லைதான். திருமணம் செய்யாமல் பெண்கள் வாழக் கூடிய சூழல் இங்கு இல்லை. கல்விக்கு கூட சுதந்திரமில்லா நாட்டில் கலவிக்குச் சுதந்திரம், புணர்வதற்கோ அல்லது மறுப்பதற்கோ, சாத்தியமே இல்லை.

பரத்தையர் அனைவரும் அத்தொழிலை விரும்பிச் செய்பவர்களாக இருக்க வாய்ப்பில்லை. குடும்பக் கஷ்டம், வன்புணர்வு செய்யப்பட்டவர்கள், காதலித்து ஏமாற்றப்பட்டவர்கள், வெளிநாட்டிற்கு விற்கப்பட்டவர்கள் என காரணங்கள் இன்னுமேராளம். உடலின் வலியை சகித்துப் பழகியவர்கள் மனதில் வலியோடுதான் வாழ்கின்றனர்.

தொலைவே ஊரிலிருக்கும்
தாய் தந்தை தம்பி தங்கை
எவருமறிந்திலர் – அவர்தம்
உணவென் உடலென.

நீலப் படம்
சிவப்பு விளக்கு
பச்சை வார்த்தை
மஞ்சள் பத்திரிக்கை
கருப்பு வாழ்க்கை

உண்மைதானே?

இதை விட இப்புத்தகத்தின் ஹைலைட், பரத்தையர் கர்வம் கூறும் கவிதைகள்.

எந்த ஆண்மகனும் இதுவரை
நேருக்கு நேர் சந்தித்ததில்லை
என் கண்களின் அலட்சியத்தை.

கதவு ஜன்னலடைத்து
ஒளிர் விளக்கணைத்து
விழிசொக்கிப் புணரும்
பத்தினித்தாலி கட்டிய
வீட்டுப் பிராணியல்ல -
நான் காட்டு ராணி

மீசை முளைத்தலோ
மோகித் திளைத்தலோ
மட்டும் ஆண்மையல்ல.

இப்படியானவளைக் காமத்தினால் வெற்றி கொள்ளலாமென நினைக்கும் எந்தவொரு ஆண் மகனின் முகத்திலும் காறியுமிழும் கவிதைகளிவை.

வாசிப்பவர் மனத்திலும் வலியேற்படுத்தும் சில கவிதைகளும் உள்ளன.

அன்பு மனைவியை ஆசைப் புதல்வியை
ஒற்றைக் கணத்தில் எனைப் போலாக்கும்
வல்லமை வாய்ந்தது உன் அகால மரணம்.

இப்படியாக வாசிப்பின் முடிவில் மனதிலொரு நிதர்சனத்தையும், மனதின் நிர்வாணத்தையும் உணர்த்தவல்ல ஒரு புத்தகம் பரத்தைக் கூற்று. காமத்தினை காமத் திணையாக்கிச் சமைத்திருக்கிறார் ஆசிரியர். மற்றபடி, இது கூழாங்கல்லோ, கற்கண்டோ, வைரமோ எல்லாம் அவரவர் மனசு படி.

சி.சரவணகார்த்திகேயன் | கவிதைத் தொகுப்பு | அகநாழிகை | பக்கங்கள் 72 | விலை ரூ. 50

2 comments:

  1. அருமையான விமர்சனம் அய்யா..
    நண்பர் சிஎஸ்கேவின் கருத்துக்களை அழகாக, சுவை குறையாமல் பிரதிபலித்திருக்கிறீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  2. வாங்க நாயோன் சார் :)

    தங்கள் ஊக்கத்துக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete