24 Oct 2012

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் by உமா சம்பத்



ஆசிரியர் : உமா சம்பத்
வரம் வெளியீடு
பக்கங்கள் : 182
விலை : ரூ.80

கடவுளை குழந்தையாக, சிறுவனாக, தோழனாக, தந்தையாக, குருவாக.. ஏன் கணவனாகக் கூட நினைத்து ஆயிரக்கணக்கான பாடல்கள் எழுதியுள்ளனர் ஆழ்வார்கள், தாசர்கள் முதலானோர். பல இந்திய மொழிகளில் இயற்றப்பட்டு நமக்குக் கிடைக்கும் இந்தப் பாடல்களில் பக்தி மணம் கமழும்; கடவுள்பால் அவர்களின் தூய அன்பு கண்டு மெய் சிலிர்க்கும். ஏக்கம், வேண்டுகோள், கெஞ்சுதல், அதட்டல், கோபம் முதற்கொண்டு அனைத்து உணர்ச்சிகளையும் குழைத்து எந்நேரமும் அந்த இறைவன் மேல் பக்தி செலுத்தியவர்கள் பலர். கணவன், மனைவி, பெற்றோர், ஊரார், உறவினர் ஆகிய அனைவரும் ஏசினால்கூட அதை பொருட்படுத்தாமல், கடவுளை பூஜிப்பதும், அவன் மெய்யடியார்களை வணங்குவதும், உபசரிப்பதுமாக இருந்தவர்களைப் பற்றி நிறைய படித்திருக்கலாம்.

கண்ணனின் இத்தகைய பக்தர்களில், பெண்மணிகள் எவ்வளவு பேர்? அவர்களின் பக்தி எத்தகையது? எந்தெந்த சூழலிலிருந்து வந்து அவர்கள் இந்த பக்தி மார்க்கத்தை தழுவினர் என்ற கேள்விகளுக்கு பதில் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளது.

இதில் 12 முக்கிய பக்தைகளின் கதை, சுருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு விதம். ஒருவர் ஏழை. ஒருவர் இளவரசி. இன்னொருவர் யாருமற்ற அநாதை. இவர்கள் அனைவரையும் சேர்க்கும் ஒரு புள்ளி - பக்தி. அரண்மனையோ, மேற்கூரையில்லாத ஒரு குடிசையோ, தினந்தோறும் பூஜை செய்து, கிடைத்ததை அடியவர்களுக்கு கொடுத்து, பகிர்ந்து உண்டு வாழ்ந்தவர்கள் இவர்கள். இதற்காக இவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தூணில் கட்டி வைத்து சோறு போடாமல் பட்டினி போட்டார் ஒருவரின் கணவர். ஊரை விட்டே ஒதுக்கி வைத்தார் மற்றொருவரின் கணவர். ஒருவரின் தாயோ, அந்த கிருஷ்ணன் மேல் தன் மகள் வைத்திருந்த பக்தியை பொறுக்காமல் குடிக்கும் பாலில் விஷத்தைக் கலந்து தன் கையாலேயே மகளுக்கு கொடுத்தவர்.

ஆனால், இந்த எந்த அச்சுறுத்தல், துன்புறுத்தலுக்கும் கலங்காமல் பக்தி செய்த இவர்களை, அந்தக் கண்ணன் எப்படி காப்பாற்றுகிறான் என்பதைப் பற்றி படித்து அறிந்து கொள்வதே ஒரு சுவையான விஷயம். இவர்கள் பக்தியை மெச்சி அனைவரையும் அந்த கண்ணன், ஆட்கொண்டது மட்டுமல்லாமல், பரிசாக ஒருவருக்கு [கண்ணன் / பெருமாள்] கோயில்களில் ஒரு தனி சன்னிதியே கிடைக்கும் என்றும், பண்டரிபுரக் கோயிலில் இன்னொருவரின் பெயரில் ஒரு தனி நுழைவு வாயிலே இருக்கும் என்றும் வரம் அளித்தார் என்று தெரிந்து கொள்கிறோம்.

இந்த பக்தைகளின் தொடர்ந்த பக்திக்கு இவர்களின் குருவும் ஒரு காரணம். சிறுவயதில் கண்ணனின் பெருமைகளை, லீலைகளை எடுத்துச் சொல்லி இவர்களை பக்தி மார்க்கத்திற்கு திசை திருப்பியதில் ஆசிரியர்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அப்படி இவர்களின் குரு யார்? ஒருவருக்கு கபீர்தாசர், இன்னொருவருக்கு பெரியாழ்வார் இப்படி கண்ணனின் புகழ் பாடியவர்களை குருவாகக் கொண்டவர்கள், பக்தியில் சிறந்து விளங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

இவ்வளவு பெருமைகளைக் கொண்ட அந்த 12 கதாநாயகிகளின் பெயர்களை இப்போது பார்ப்போம். அவர்களில் சிலரின் பெயர்களை நீங்கள் ஏற்கனவே ஊகித்திருக்கக் கூடும்.

1. மீராபாய்
2. சாந்த சக்குபாய்
3. ஆண்டாள்
4. கானோபாத்திரை
5. ராமாபாய்
6. ஜனாபாய்
7. காரைக்கால் அம்மையார்
8. பிளாபாய்
9. குணவதிபாய்
10. கருமாபாய்
11. சிளபாய்
12. கோமாபாய்

இவர்களின் பக்தி, போராட்டங்கள், இவர்களுக்காக இறைவன் நடத்திய அற்புதங்கள் ஆகியவற்றைப் பற்றி படித்து மகிழ மிகச் சிறந்த புத்தகம் இது.

***
 

2 comments:

  1. சிறந்த புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... கண்டிப்பாக வாங்கி படிக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி

      Delete