17 Nov 2012

108 வைணவ திவ்ய தேச வரலாறு - வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்

சிறப்புப் பதிவர்: R.கோபி

“திருப்பதி போய் வந்தேன். இந்தாங்க லட்டு”

பயபக்தியுடன் எழுந்து நின்று குனித்து அந்தப் பெரியவர் நம்
கையில் இருந்து லட்டை வாங்கி மென்றுகொண்டே

“பூவராகனை சேவிச்சீங்களா?” என்பார்

நான் ராஜேந்திர குமார் நாவலில் கதாபாத்திரங்கள் விளிப்பது போல விழிப்பேன்.

“பாதகமில்லை. கீழே கோவிந்தராஜப் பெருமாளை சேவிச்சேளா?”

நமக்கு இப்போது ஐயம் வந்துவிடும். நாம் போன இடம் திருப்பதிதானா என்று:-)



“திருக்குறுங்குடியில் ஆமை, யானையைத் தூக்கிக்கொண்டு பறக்கும் கருடன் சிற்பம் பார்த்திருக்கிறீர்களா?”

“ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் உள்ளே இருக்கும் பெருமாள் சந்நதி ஒரு திவ்யதேசம், தெரியுமோ?” 

“ஏங்க சாரங்கபாணி கோவிலுக்கு இவ்ளோ வாட்டி போயிருக்கீங்க. உபயப் பிரதானம்னா என்னன்னு தெரியலைன்னு சொல்றீங்களே?”

இப்படி ராஜேந்திர குமார் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் விழிப்பது போல விழிக்கும் சந்தர்ப்பங்கள் எனக்குப் பலமுறை வாய்த்திருக்கின்றன. சமயத்தில் அந்தப் பெரிசுகள் மீது கோபம் கூட வரும். போய் வந்த மூடையே ஸ்பாயில் செய்கிறார்களே என்று. தவறை நம்மீது வைத்துக்கொண்டு அடுத்தவர்களை முறைப்பதுதானே நம் வழக்கம்:-)

சரி, இனி கோவில்களுக்குச் செல்லுமுன் அவற்றைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டே செல்லவேண்டும் என்ற முடிவெடுத்தேன். இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன என்றாலும் அவற்றின் நம்பகத்தன்மை கொஞ்சம் கேள்விக்குரியது. மேலும் தகவல்கள் consistent ஆக இருக்காது. நமக்குத் தேவை ஒரு புத்தகம்: பயணத் திட்டத்திற்கும், அந்தக் குறிப்பிட்ட கோவிலின் சிறப்பம்சங்கள் முழுதையும் தெரிந்துகொள்வதற்கும்.

வைணவச் சுடராழி திரு ஆ. எதிராஜன் எழுதிய ‘திவ்யதேச வரலாறு’ புத்தகம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்தது. இதுவரை 97 திவ்யதேசங்களை சேவித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் உதவியில்லாமல் இது சாத்தியமாகி இருந்திருக்காது.

ஒரு விரிவான முன்னுரை, ஸ்ரீவைணவம் பற்றிய விளக்கம், திவ்யதேச விளக்கம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திவ்யதேசங்கள் குறித்த முன்னுரை, பிற்சேர்க்கை என்று கட்டுக்கோப்பான வடிவம்.

குறிப்பிட்ட திவ்யதேசம் பற்றிய கட்டுரையில் பொருத்தமான பாசுரங்கள், பயணக் குறிப்புகள், பிற திவ்யதேசங்களுடன் இருக்கும் தொடர்புகள், அந்த திவ்யதேசத்தின் சிறப்பம்சங்கள் என்று நம்மை virtual ஆகக் கால தேச வர்த்தமானங்களை மீறி அங்கேயே கொண்டுபோய் விடக்கூடிய வகையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் படித்து முடித்ததும் ஒரு மஞ்சள் துணிப்பையில் வேட்டி, சட்டைகளைத் திணித்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்றிருக்கிறேன்!  

பல நூல்களை ஆராய்ந்து எழுதப்பட்ட விஷயங்களும் உள்ளன. உதாரணத்திற்குத் திருப்புள்ளபூதங்குடி, திருப்புட்குழி திவ்யதேசங்களுக்கு ஒரே தல வரலாறு சொல்லபடுகிறது. எது சரி என்பது குறித்து ஆசிரியர் மேற்கொண்ட ஆய்வுகளைச் சொல்லலாம்.

திவ்ய தேச யாத்திரை மேற்கொள்பவர்கள் அவசியம் கையில் வைத்திருக்க வேண்டிய புத்தகம் இது. மின்வடிவிலும் இங்கே இருக்கிறது.http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?pno=1&bookid=74


108 வைணவ திவ்ய தேச வரலாறு
வைணவச் சுடராழி ஆ. எதிராஜன்
697 பக்கங்கள் / விலை  150 ரூபாய்
ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு 

2 comments:

  1. ஒரு விரிவான முன்னுரை, ஸ்ரீவைணவம் பற்றிய விளக்கம், திவ்யதேச விளக்கம், அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் திவ்யதேசங்கள் குறித்த முன்னுரை, பிற்சேர்க்கை என்று கட்டுக்கோப்பான வடிவம்./

    தகவலுக்கு நன்றிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. @ராஜராஜேஸ்வரி, மிக்க நன்றி

    ReplyDelete