10 Dec 2012

கதைநேரம் - பாலு மகேந்திரா



எல்லா விஷயத்திற்கும் ஒரு வாத்தியார் இருக்கும்போது கற்றல் மிக எளிமையாகிறது. கற்றல் எளிமையாக இருப்பதை விட பிடித்தமானதாக மாறும்போது கற்றுக் கொள்ளும் விஷயம் மிக உவப்பானதாகிறது. வாத்தியார் தான் எப்போதும் மாணவர்களுக்கான ரோல் மாடல். மாணவர்கள் கற்றலின் போது அவரையேப் பின்தொடர்கின்றனர். தங்களை அவராக நினைக்கின்றனர். கற்றல் முதிர்ச்சியடையும் போது வரும் பக்குவத்தில் தங்களைத் தாங்களே உணர்கின்றனர். ஒரு வாத்தியாரின் வெற்றியே ஒரு தனித்துவமானமானவனை, தனித்துவ மாணவனை உருவாக்குவதுதான். அப்படி பல வெற்றி இயக்குனர்களை உருவாக்கிய வாத்தியார் பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்த கதைகளும் அக்கதைகளுக்கு அவர் எழுதிய திரைக்கதைகளும் குறும்படங்களும் சேர்ந்ததே இந்த புத்தகம்.

சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் கவிதை எழுதிக்கொண்டு திரிந்தவர்கள் ஏராளம். ஒரு முறையாவது குடும்பமலரில் கவிதை வெளியாகிவிட்டால் அந்த வட்டத்தில் அவர் பெரிய கவிஞர் ஆகி விடுவார். ட்விட்டர், பேஸ்புக் எல்லாம் வந்த பிறகு நம்மவர்களின் ரசனை அடுத்த கட்டத்திற்கு போய்விட்டது. தொழில்நுட்பம் வேறு வளர்ந்து விட்டது. எழுதுவதைக் காட்சிப் படுத்துவதில் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும். மலிவு விலை கேமிராக்கள், உயர் தொழில்நுட்ப அலைபேசி கேமிராக்கள் என எல்லாம் வந்த பிறகு இது மிகவும் லகுவாகிப் போனது.


குறும்படங்கள், ஆம் ஒரு பத்திலிருந்து இருபது நிமிடங்கள்வரை ஓடக்கூடிய நல்ல கதையம்சங்கள் கொண்ட படங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. கலைஞர் தொலைக்காட்சியில் வரும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சி இளைஞர்களிடையே நல்ல விதமாக சென்று சேர்ந்திருக்கிறது. யாரிடமில்லை கதை? எல்லோரும் பல கதைகளைக் கொண்டே அலைந்து கொண்டிருக்கிறோம். சொந்தக்கதைகளும், சோகக் கதைகளும். அதற்குத் தகுந்த நபர்கள், பெரும்பாலும் நண்பர்கள் கிடைக்கும்போது குறும்படங்கள் தயாராகின்றன.

குறும்படங்களில் இன்னொரு அம்சம், நண்பர்கள் சேர்ந்து எடுக்கும்போது அதிகம் செலவாவதில்லை. வியாபார ரீதியாக ஒரு குறும்படம் எடுக்க அறுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை செலவாகிறது. ஆனால், அலைபேசி கேமிரா உதவியோடோ, நண்பனின் கேமிராவிலோ எடுக்கும்போது, அதுவும் நண்பர்களே நடிக்கும்போது அதிகம் செலவில்லை. மேலும் குறும்படம் எடுப்பதே ஒரு நல்ல அனுபவமாகிறது, நண்பர்கள் உடன் இருக்கையில்.

சுஜாதா எழுதிய நிலம் கதையில் அரசாங்கத்தால் கோபாலனுக்கு கொடுக்கப்பட்ட நிலம் வேறொருவர் பெயரில் மாற்றப்பட்டு கோபாலனுக்கு வேறொரு இடத்தில் நிலம் கொடுக்கப்படுகிறது. ஆனால், நிலம் கிடைத்த மகிழ்ச்சியில் அங்கு சில ஏற்பாடுகள் செய்து விசேஷம் வைத்து விட கடைசி நேர சிக்கல் கோபாலனின் கழுத்தை நெரிக்கிறது. இதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் கதை. கதையைப் படித்து விட்டு உடனே பாலு மகேந்திரா எழுதிய திரைக்கதையைப் படிக்கும்போதே காட்சிகள் கண்களுக்குள் விரிகிறது. ஒரு கதை எப்படி நல்ல திரைக்கதை ஆகிறது என்பதை உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிறது. புத்தகத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும் டிவிடியில் குறும்படத்தை பார்த்து முடிக்கும்போது ஒரு விதமான பரவசம் தோன்றி மறைவதென்னவோ உண்மை.

ஒரு படைப்பை எழுத்தில் கண்டு, அதை மனதில் உருவகப்படுத்தி பின்னர் அதையே காட்சியாகப் பார்க்கும்போது வரும் மனநிலையை விவரிக்க முடியாததுதான். இருந்தாலும், குறும்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், அதன் அடிப்படை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது பாலபாடம். அதுவும் வாத்தியாரை பார்க்காமலேயே வாத்தியாரிடம் பாடம் பயிலலாம்.

ஒரு காலத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் யார் அதிக நேரம் விளையாடுகிறார்கள், யார் அணியை காக்கிறார்கள் என்பதுதான் சவாலாக இருக்கும். பிறகு ஐம்பது ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிகள் வந்தன. இப்போதோ, உடனுக்குடனே முடிவு தெரிய வேண்டும், அதிரடி வேண்டும், நம் ஃப்ரீடைமில் பார்க்கக் கூடியதாக இருக்க வேண்டும் போன்ற அனைத்து கேளிக்கை விதிகளையும் ஒருசேர நிறைவேற்ற வந்த டுவென்டி 20 பேரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோலத்தான், மூன்று மணிநேர படங்கள் விரும்பிப் போய் பார்க்கும்போது சொதப்பலாகி எரிச்சலாக்கி விடும். அச்சமயம் இருபது நிமிடத்தில் ஒரு நல்ல கதை வந்தால் நல்ல விதமாக படமாக்கப்பட்டு இருந்தால் அது நிச்சயம் பார்ப்பவருக்கு மகிழ்வைத்தரும்.

T20 ஐ போல, குறும்படங்களும் வெகுவாக ரசிக்கப் படலாம். வருங்காலத்தில். அதுவும் மிக விரைவில். அத்தகைய வகையில் குறும்படங்களுக்கான புத்தகங்களில் இது ஒரு முக்கியமான புத்தகமாகும்.

கதைநேரம் | சிறுகதைகள் ~ திரைக்கதைகள் | குறும்படம் | பாலு மகேந்திரா | ரூ.300

இணையத்தில் வாங்க : கிழக்கு

1 comment:

  1. சுஜாதாவின் நிலம் – குறும்படம்...

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=USOQnuvC5cc

    ReplyDelete