13 Dec 2012

பாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி

புதுவையில் 1917 இல் முந்திய படம் எடுத்த அதே நாள் எடுத்த மற்றோரு படம். மனைவி செல்லம்மாளும், இளைய புதல்வி சகுந்தலாவும்
உட்கார்ந்திருக்கிறார்கள்.மூத்த புதல்வி தங்கம்மாள், நண்பர்கள் ராமு, டி.விஜயராகவன். பாரதி நிற்கிறார்கள். (நன்றி tamilvu.org )

ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்.விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்.

உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.

கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் கூட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவிதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கும் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா? 


பாரதியாரின் வாழ்க்கையை நமக்குச் சொன்னவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் யதுகிரி அம்மாளும் செல்லம்மா பாரதியும். இவர்கள் இருவரும் எழுதியிருக்கவில்லையென்றால் பாரதி என்ற மனிதரை, அவருடைய பண்புகளை, அவருடைய இயல்பை நாம் அறிய முடியாது போயிருக்கும். பாரதி என்கிற மனிதனையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் யதுகிரியும் செல்லம்மாவும் இல்லாமல் முடியாது.


செல்லம்மா பாரதி, தன் கணவரின் சரித்திரத்தை அவருடைய தாத்தாவிலிருந்து தொடங்குகிறார். கிட்டத்தட்ட மூன்றாவது நபரைப் பற்றி எழுதுவது போல் தான் ஆரம்பிக்கிறார் (முதல் இரண்டு அத்தியாயங்கள்). அவர்களுடைய திருமணத்தைப் பற்றிப் பேசுத் தொடங்கும் வரை மூன்றாவது நபர் பார்வை தொடர்கிறது. திருமணத்தின் போது பாரதிக்கு வயது பதிநான்கு, செல்லம்மாவுக்கு ஏழு. கல்யாணத்தின் நான்காம் நாளில் ஒரு கவிதையிற்றி அதைப் பாடி, அதன் பொருளுரைக்க ஒரு குட்டிப் பிரசங்கமும் செய்தாரம் பாரதியார்.

அவர் என் பொருட்டுப் பிறந்தவரல்ல – என்கிறார் செல்லம்மா. வானொலி உரையில் சொன்னது போல் பாரதியின் மனைவியாக இருப்பது, ஊருக்கு மட்டுமே பெருமையாக இருந்திருக்கிறது. எங்களிடம் கையில் தம்பிடிகூட இல்லாமல் இருந்த சமயம் உண்டு. ஆனால் மனமோ நிறைந்த திருப்தியோடு இருக்கும். இவ்விதமாகத் தண்டகாவனம் ரிஷிகளால் நிறைந்ததுபோல் புதுவை சுதேசிகளால் நிறைந்திருந்தது –என்று செல்லம்மா எழுதினாலும், அவருடைய மனவருத்தங்களை யதுகிரி எழுதியிருக்கிறார். எழுத்து மூலம் பாரதியாருக்கு போதிய பணம் வந்த போதும், புதுவையில் அவருக்கு பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து வரவேண்டிய பணம் எல்லையிலேயே தடுக்கப்பட்டது. சி.ஐ.டி போலீஸ் எப்போதும் கண்காணித்துக் கொண்டிருந்ததால், சில நண்பர்கள் நள்ளிரவுக்கு மேல் பாரதியார் வீடு வந்து பணவுதவி செய்ததாக தெரிவிக்கிறார் செல்லம்மா.

ஆஷ் துரை கொல்லப்பட்ட பின் இந்த கெடுபிடிகள் அதிகமானதாக குறிப்பிடும் செல்லம்மா, அக்கொலையை “ஒர் இளைஞன் ஆய்ந்தோய்ந்து பாராமல் செய்த பிழையானது, அனேக சாதுக்களான கிராமவாசிகளையும், நல்லோரையும், பொதுவாகக் ‘கிராப்பு’த் தலையுள்ள இளைஞர்களையும், மீளமுடியாத தண்டனைக்கு உள்ளாக்கியது” என்கிறார். அப்போது புதுவையிலிருந்த சுதேசிகள் மீது தான் போலீசுக்குச் சந்தேகம்.

யதுகிரியின் பாரதி நினைவுகளைப் போலவே இந்தப் புத்தகத்திலும் நந்தலாலா, தூண்டிற்புழுவினைப்போல் போன்ற பாடல்கள் உருவான நிகழ்ச்சிகள் பற்றி செல்லம்மா எழுதியிருக்கிறார்.

பாரதியின் நண்பர்களில் குவளைக் கிருஷ்ணமாச்சாரியார் விசேஷமானவர். அவற்றைப் பற்றி ‘எங்கிருந்தோ வந்தான் ’குவளை’ என்று ஒரு முழு அத்தியாயமே எழுதியிருக்கிறார் செல்லம்மா. எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் என்ற கண்ணன் பாட்டில் பாரதி சொல்லியிருப்பது ’குவளை’ கிருஷ்ணமாச்சாரியாரைத் தானாம். அவரைப் பற்றி மேலும்,

“ஸ்ரீ குவளைக்கண்ணர் பாரதியாருக்கு எல்லா விஷயங்களிலும் நேர்மாறானவர். அவர் அன்பின் மிகுதியால் செய்த தொல்லைகள் கணக்கிலங்காதவை. ஓயாமல் பாஞ்சாலி சபதமோ அல்லது நொண்டிச்சிந்தில் அமைக்கப்பட்ட பாடல் ஏதேனுமொன்றோ காலை மூன்று மணிக்கு மனப்பாடம் பண்ண ஆரம்பித்தால், பொறுமையில் மிக்க தருமபுத்திரருக்குக்கூடக் கோபம் வரும்; அவ்வளவு உரக்கவும், கர்ண கடூரமான சுருதியிலும் பாடுவார்; ஓயவே மாட்டார். பாரதியாரைப் பிரியவே மாட்டார். அனாவசியமான கேள்வி கேட்பதில் குவளையை மிஞ்சினவர் கிடைப்பது அரிது. அனேக நாட்களில் சாப்பாட்டு வேளைக்கு வந்து எனக்குக் கூடச் சாதம் இல்லாமல் செய்துவிடுவது அவரது சுபாவம். தமது மிதமிஞ்சிய ஹிம்ஸை என்னும் கோலால் பாரதியாருக்குப் பொறுமை என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.”

இந்தக் குவளைக் கண்ணன் தான் பாரதியார், யானையால் அடிப்பட்டுக்கிடந்த போது, யானைக்கு அருகே சென்று அவரை வெளியில் கொண்டு வந்தவர். இதே போல் அம்மாக்கண்ணு என்ற அம்மாளைப் பற்றியும் செல்லம்மா நிரம்ப எழுதியிருக்கிறார். அம்மாக்கண்ணு பாரதியார் வீட்டில் வேலை செய்தவர். இந்த அம்மாளைப் பற்றி வ.ராவும் கூட எழுதியிருக்கிறார். பாரதியின் மீது ஆழ்ந்த பற்றுடையவராம். இவரைப் பற்றித்தான் பாரதி அம்மாக்கண்ணு பாட்டு பாடியிருக்கிறார்.

செல்லம்மா தங்களுடைய வறுமையைப் பற்றி அதிகம் எழுதவேயில்லை; பாரதியைக் குற்றம்சாட்டவில்லை. அவருக்கு குழந்தை மனது என்கிறார். திருவனந்தபுர மிருகட் காட்சி சாலையில் பாரதியார் சிங்கத்தைத் தொடப் போக, செல்லம்மா “சிங்கத்திற்கு நல்ல புத்தி கொடு! பகவானே” என்று வேண்டிக் கொண்டதாக சொல்கிறார். தென்னாப்பரிக்க இந்தியர்களுக்கு நிதி திரட்ட பாரதியார் உழைத்ததையும், அதற்காக மாதா மணி வாசகம் என்று புத்தகம் வெளியிட்டதையும் சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு செல்வந்தர்களிடம் பணம் பெற்றுக் கொடுத்ததையும் செல்லம்மா நினைவுகூர்ந்திருக்கிறார்.

செல்லம்மா பாரதி இன்னும் எழுதியிருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. செல்லாம்மா, யதுகிரி இருவரில் யார் பாரதியார் என்ற மனிதனை நம்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறார் என்று என்னிடம் கேட்டால், நான் யதுகிரியைத் தான் சொல்வேன்.

பாரதியார் சரித்திரம் | செல்லம்மா பாரதி | தையல் வெளியீடு | 96 பக்கங்கள் | விலை ரூ.50 | இணையத்தில் வாங்க

No comments:

Post a Comment