22 Dec 2012

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்

முன்குறிப்பு: இந்த அறிமுகம்/ விமர்சனம்/ ஆய்வு/ கதைச் சுருக்கத்தை எழுதும்போது, பலருடைய கருத்துக்களை, இணையத்திலிருந்தும் ஆம்னிபஸ் நண்பர்களிடமிருந்தும் எடுத்துக்கொண்டேன். அவர்களனைவருக்கும் நன்றி.

மனைவிக்கு உடம்பு சரியில்லை. கணவன் வீட்டைச் சுத்தம் செய்து, சமையல் செய்து, துணிகளைத் துவைத்துக் காயப்போட்டு, பாத்திரம் தேய்த்து, மனைவியை எழுப்பி சோறு போட்டு, மாத்திரை கொடுத்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான். மனைவி கொஞ்சம் சரியானவுடன் அடுப்படிக்குள் வருகிறாள். அடுப்பைத் துடைக்கத் தொடங்குகிறாள்; அங்கங்கே சிதறியிருக்கும் சாமான்களை எடுத்துவைக்கிறாள். மனைவியிடம் இன்றைக்காவது தன்னுடைய முக்கியத்துவத்தை உணர்த்திவிட வேண்டுமென்று காலையிலிருந்து பாடுபட்ட கணவனுக்கு மனைவியை அடுக்களையில் பார்த்ததும் சுருக்கென்கிறது.

ஒரு நாள் முழுவதும் நானே வீட்டு வேலையைக் கவனித்துக் கொண்டேன் என்பதை அவனால் இனி சொல்ல முடியாது. அப்படி அவன் சொல்வதைத் தவிர்க்கவே அவள் இப்படிச் செய்கிறாள் என்று நினைக்கிறான். ஒரு நாள் முழுவதும் தன்னுடைய வேலை அனைத்தும் அவரே செய்தார் என்பதை நிறுவ விட்டுவிடக்கூடாது என்பது அவளுடைய எண்ணம். கணவன் மனைவி என்றில்லை, இருவரில் தான் முக்கியமானவன்/வள் என்று நிறுவுவது எல்லா உறவுகளிலும் நடக்கிறது. [...]in every relationship, there's a bull and a cow. [...] என்று Gigli படத்தில் ஒரு வசனம் உண்டு. வேறு எதற்காகவோ கூட இந்த வசனம் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், பசுவாகவும் காளையாகவும் மாறி மாறி மற்றவர்களை முக்கியமாக உணரவைப்பதும் தன்னுடைய முக்கியத்துவத்தை நிறுவிக் கொள்வதும்,  மனிதனுடைய இயல்பு. இதுதான் ராமசேஷனுக்கு வேடமாகத் தெரிகிறது.

இந்த பாசாங்கு, வேடம் அல்லது ஏதோவொன்றுக்கான காரணங்கள் இரண்டு. ஒன்று, தன்னுடைய தேவைகள் : தன்னைப் பற்றிய ஒரு தோற்றத்தை பிறர் உள்ளத்தில் உருவாக்கிக் கொள்வதை அவசியப்படுத்தும் சுய தேவைகள். மற்றொன்று பிறருடைய தேவைகள் : மற்றவர்களுடைய விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்காக ஒருவன் மேற்கொள்ளும் பிம்பம். ராமசேஷனைப் பொறுத்தவரை தன்னைப் பற்றி தான் கட்டிக் கொள்ளும் பிம்பம் உண்மை; மற்றவர்களுக்காக தான் கட்டிக் கொண்டதும், மற்றவர்கள் அவர்களுக்காக கட்டிக்கொள்வதும் போலி.

இடையில் இதுமாதிரி ஒருவிஷயத்தை நமது பேயோன் சார் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது- ஓர் உரையாடல்

"ட்விட்டரில் பேயோனாக ரொம்ப ஆக்டிவாக, எப்போதும் ட்வீட்டிங் மோடிலேயே சிந்தித்துக்கொண்டிருந்ததால் பேச்சிலும் அது பிரதிபலிக்கத் தொடங்கியது. என்னை அறியாமல் சுவாரஸ்யமாகப் பேச முயற்சி செய்தேன். இப்போது அதை கூடுமான வரை தவிர்க்கிறேன். என்னுடைய self-centric குணமும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளும் பேயோனுக்காக மிகைப்படுத்த உதவின. “மனதிற்குள் எப்போதும் யாருக்காவது பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கிறேன்” மாதிரியான ட்வீட்கள் இதன் விளைவுதான். :-) எழுதுவதுதான் தொழில் என்பதால் என்னுடைய எழுத்துக்கும் பேயோன் எழுத்துக்கும் வித்தியாசம் காட்ட வேண்டியிருந்தது. இது அடையாள அம்பல பயம் சார்ந்த ஒரு முடிவும்தான். :-) "

இங்கு டிவிட்டர் என்ற இடத்தில் ஒரு பெண்பெயரைப் போட்டுப் படித்தால், பேயோனின் பிரச்சினைக்கும் ராமசேஷனின் பிரச்சினைக்கும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை என்று புரியும். தற்காலிக தேவைகளுக்காக ஏற்படுத்திக் கொள்ளும் பிம்பம், அது உருவாகக் காரணமானவனைத் தூக்கிச்  சாப்பிட்டுவிடுகிறது, அல்லது அப்படிச் செய்வேன் என்று மிரட்டுகிறது. ஆதவன்தான் பேயோன் என்று சொல்ல வரவில்லை, ஆதவனை நாம் வாசிக்க என்னென்ன காரணங்கள் உண்டோ அதெல்லாமும் பேயோனை வாசிக்கவும் காரணமாக இருக்கிறது என்று சொல்கிறேன்.

சினிமா பார்க்கும்போது, சினிமாவைப் பார்க்காமல், மற்ற எல்லாவற்றையும் பற்றி யோசிக்கும் தன்னுடைய குணத்தை, மற்றவரிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் கொள்ள பயன்படுத்திக் கொள்கிறான். அது ADHD ஆகக்கூட இருக்கலாம். ஆனால் அதைத் தன்னுடைய பிரத்யேக குணமாக எடுத்துக் கொள்கிறான் ராமசேஷன்.

ராமசேஷனின் பார்வையில், அவனே சொல்வது போல கதையை எழுதியிருக்கிறார் ஆதவன். எழுத்தாளர் ஒரு பாத்திரத்தை உருவாக்கி, அதற்கான இயல்புகளாக, குணங்களாக சிலதைச் சித்தரித்து, அதை அப்பாத்திரத்தின் மீது ஏற்றி அவனைப் பேசவைக்கிறார். இனி அவன் பேசுவதெல்லாம் அவனுடைய எண்ணங்களை மட்டுமே. கதாசிரியருக்கும் கதாபாத்திரத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். எழுத்தாளனின் குரலையும் கதாப்பாத்திரத்தில் குரலையும் தனித்தனியே பார்க்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். (இங்கே இருப்பது போல... http://www.317am.net/2010/07/ras-the-manacled-throat-of-reverend-eccles.html )

இந்நாவலின் அடுத்த மையப்புள்ளி intellectualism. அறிவுஜீவித்தனத்திற்கும் போலி அறிவுஜீவித்தனத்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. அறிவுஜீவித்தனம் எதுவாக இருந்தாலும், அவர்கள் செயலுக்கு வரும்போது வாக்குவன்மையால் விஷயங்களை நிருபணம் செய்வதைதான் முக்கியமாக நினைக்கிறார்கள். அது உண்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. தான் காண்பதே உண்மை என்று அதைக் கொண்டு வாதாட வேண்டும். வாதிட்டுக் கொண்டேயிருக்கலாம். தாத்தா காலத்து சிக்கல்கள் கூட வாக்குவன்மையால் ஒரு முடிவை அடையாமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. ராமசேஷனுக்கு தான் ஒரு அறிவுஜீவி என்ற நினைப்பு. அவனுடைய பார்வையில் மற்றவர்கள் எல்லாரும் முட்டாள்கள்; போலிகள்; வேடம் அணிந்தவர்கள். அப்பா, அம்மா, நண்பர்கள், நண்பர்களின் உறவினர்கள், ஆசிரியர்கள், காதலிகள் எல்லோரும், ராமசேஷனைப் பொறுத்தவரை வேஷதாரிகள்.

நாவலில் மையம் சக மனிதர்களின் பாசாங்குகளையும் முகமூடிகளையும் வெளிப்படுத்துவது இல்லை. இது தன்னை அறிவுஜீவியாக முன்னிறுத்தும் ஒருவனுடைய கதை. அந்த அறிவுஜீவி பிம்பத்தின் வீழ்ச்சியின் கதை.
ராமசேஷனுக்கு தன்னுடைய அப்பாவைப்போல் தன்னை உருவாக்கிக் கொள்ள விருப்பமில்லை. அந்த அறிவுஜீவிக்கு தான் யாராகப் போகிறோம் என்ற குழப்பம் பெரியப்பா மூலம் தீர்கிறது. தன் அப்பா-அம்மாவுக்கு நேரெதிராக இருக்கும் பெரியப்பா-பெரியம்மா எளிதாக அவனுடைய ஆதர்சமாக ஆகிவிடுகிறார்கள். மேலும் நம்முடைய அறிவுஜீவிக்கு தன்னைப் பற்றிய காம்ப்ளக்ஸ் அதிகம். தான் அழகானவன் என்ற கர்வம் நாவல் முழுதுவும் ஒலிக்கிறது. தான் ஒரு காஸனோவா என்ற அவனே ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொள்கிறான்; “அவள் வேண்டுவது ஒரு அமாரல் ஹீரோ, ஒரு காஸனோவா. அதாவது நான்” (பக். 40). இதுமாதிரி நிறைய. பணக்கார நண்பனுக்கு குழையும் மூர்த்தியை நாய் என்று சொல்லும் ராமசேஷன், தான் மாலாவிடம் குழையும் போதும் தன்னை நாய் என்றே சொல்லிக் கொள்கிறான். கொஞ்சம் பெருமையாக அல்சேஷன். சுப்பிரியாரிட்டி காம்பெளக்ஸ் உடன் இருக்கும்போது தன்னை காஸனோவாகவும், இன்ஃபீரியராட்டியுடன் இருக்கும்போது நாயாகவும் கற்பனை செய்துகொள்கிறான்.

மேலும் அவன் தன்னுடைய செயலுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறவனும் இல்லை. பிரேமாவை தான் முத்தமிட்டதற்கு கணித ஆசிரியர், ராவ், மூர்த்தி எல்லோரும் காரணம் என்கிறான்.
கடைசியில் அவன் சாதித்ததாக நினைத்துக் கொள்வது, தன்னுடைய சூழலில் நிலவும் sexual inhibitionsஐ உடைத்துவிட்டதையே. நாவலில் சொல்லப்படும் ஒன்றிரண்டு சம்பவங்களை வைத்து இதை ஒரு கிளுகிளுப்பான நாவல் என்பது போல் இந்த நாவல் இங்கே சித்தரிக்கப்பட்டிருப்பது எரிச்சலாக இருக்கிறது. அதைத் தாண்டி, மனோரீதியிலான பல விஷயங்களை இந்நாவல் சொல்லிப்போகிறது.

மீண்டும் ராமசேஷனுடைய sexual inhibitionக்கு வருவோம். 2011ல் edge.orgல் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு கட்டடவியலாளர் இப்படி பதிலளிக்கிறார்,

Even the most insurmountable ethnic or religious barriers can suddenly disappear with the furor of an intercourse; even the warmest and cohesive community can rapidly dissolve in absence of erotic tension.

தன்னுடைய சூழலில் நிலவும் sexual inhibitionsஐ உடைத்து அந்த மோருஞ்சாத வாழ்விலிருந்து வெகுதூரம் வந்துவிட்டதாக ராமசேஷன் நினைத்துக் கொள்கிறான். ஆனால், அவன் அதிலிருந்து ஒரு அடிகூட நகரவில்லை. பொய்த் தேவுவில், சோமு முதலி எவ்வளவு முயன்றாலும் மீண்டும் மீண்டும் மேட்டுத் தெருவுக்கே போய்க்கொண்டிருக்கிறார் என்று க.நா.சு சொல்லியிருப்பார். அதேதான் இங்கும். ராமசேஷன் தன்னைப்பற்றி கட்டிக்கொண்ட பிம்பம், ஒரு நாள் நிஜத்துடன் மோதி உடைந்துவிடுகிறது.

--------------

ஆதவனை இப்போது நிறைய பேர் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கடந்த ஒருவாரத்தில் 'என் பெயர் ராமசேஷனை’ப் பற்றி மூன்று பேர் இணையத்தில் எழுதியிருந்தார்கள். இதைப் பற்றி நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்,

"எழுத்தாளர்கள் எல்லாம் தெரிந்தவர்களாகப் பேசுகிறார்கள். வாசகர்களுக்கு அது அலுத்துப் போச்சுன்னு நினைக்கறேன். மற்ற எல்லாரையும் போல சகல விஷயங்களையும் குழப்பிக் கொண்டு, தன்னைப் பற்றியும் சந்தேகமாவே இருக்கிற ஒரு எழுத்தாளர் தேவைப்படுது போல... ஆதவனோட கத்தியின் கூர்முனை எப்பவும் தன்னை நோக்கித்தான் இருக்கும், இப்ப இருக்கிற இலக்கியவாதிங்க மாதிரி இல்லை அவர்."
 என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
உயிர்மை பதிப்பகம்
200 பக்கங்கள், ரூ. 120 இணையத்தில் வாங்க

2 comments: