31 Dec 2012

உள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுடன்

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட புத்தகங்களில் ஒன்றாக இருப்பது திரு ஆ. சிதம்பரகுற்றாலம் அவர்களின் 'உள்ளது நாற்பது'. "84 பக்கங்கள், விலை : மதிப்பிட முடியாதது" என்று குறிப்பிட்டிருக்கிறது என்னிடமுள்ள 2011ஆம் ஆண்டு பதிப்பில். என் தந்தை கோவையில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தபோது அங்கே எவரோ ஒருவர் இந்தப் புத்தகத்தின் சில பிரதிகளை அடுக்கி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார். இந்த காலத்தில்கூட இப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அள்ளிவிட்டார்கள் நம் மக்கள்.

ரமணர் இயற்றிய 'உள்ளது நாற்பது' என்ற நூலின் நாற்பது வெண்பாக்களுக்கு மிக எளிய, எவரும் புரிந்துகொள்ளக்கூடிய உரை. உபநிடதங்கள், திருக்குறள், பத்திரகிரியார் மெய்ஞானப் புலம்பல், தாயுமானவர், குகை நமசிவாயர், செங்கோட்டை ஆவுடையக்காள் பாடல்கள், ஒழிவில் ஒடுக்கம், ரிபு கீதை, அவதூத கீதை, அஷ்டவக்ர கீதை, சிவகீதை, விவேகசூடாமணி, யோக வாசிட்டம் மற்றும் திருமந்திரம் ஆகிய நூல்களிலிருந்து தகுந்த மேற்கோள்களுடன் ரமணரின் பாடல்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. 



 இந்தப் பட்டியலில் இல்லாத, ஆனால் மிகவும் முக்கியமானவர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. இவரது மெய்ஞானம் இந்த நூலின் ஒவ்வொரு புரிதலிலும் ஒளிர்வதைப் பார்க்கிறேன் - "அனுபவம் நிகழ்வது நிகழ்காலத்தில் மட்டுமே. விழிப்புடன் கூடிய இருப்பே உங்களை நிகழ் காலத்திலிருத்தும். இந்த அகவிழிப்பிற்கு எடுத்துச் செல்வதுதான் விசாரமார்க்கம். பகவான் இதை நேர்வழி என்பார்," என்று எழுதுகிறார் ஆ சிதம்பரகுற்றாலம். பகவானின் கருத்துகளின் மையத்தை இங்கு அவர் வெளிப்படுத்தியிருப்பது ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மொழியில்.

சிதம்பரகுற்றாலம் எந்த ஒரு ஆன்மிக உயர்நிலையையும் தனக்குரியதாகப் பதிவு செய்து கொள்வதில்லை. "என் பணி பகவானை வேண்டுவது மட்டுமே. நடப்பது அவனருளால்" என்று எழுதுகிறார், "பகவானின் கருத்துகளைப் பரவலாக எடுத்துச் செல்வதில் மேலும் ஒரு முயற்சி". "குறளுக்கு எத்தனை விளக்க உரைகள். உரை எழுதியவர்களில் அதன் வழி நடந்தவர்கள் எத்தனை பேர். இதுதான் செயலுக்குதவாத கல்வி".

சும்மா இருக்க வேண்டும் என்று நினைப்பவனை கர்மம் செய்யத்தூண்டிக் கொண்டே இருப்பது பிரகிருதியின் இயல்பு. யாரும் எதுவும் செய்யாமல் இருக்க முடியாது. ஆன்மவிசாரத்தையன்றி அனைத்தும் அகங்காரத்தின் வெளிப்பாடுகளே. அதையும்கூட பிணம் சுடும் தடி என்றுதான் சொல்கிறார் பகவான். இந்நிலையில் சிதம்பரகுற்றாலம் இப்படிப்பட்ட ஒரு ஆழமான உரையை எழுதி பலரும் வாசிக்க இலவசமாய் தருவதில் அகங்காரத்தையோ உரை எழுதுவதற்கான  தகுதியையோ தேடுவது அறிவீனம்.

உன்ளது நாற்பதின் மங்கல பாடல் மிகச் சிறப்பானது. புரிந்து கொள்ள கடினமான ஒன்று போன்ற தோற்றம் கொண்டாலும், மனதை விட்டு நீங்காமல் நிற்கும் மனனத் தன்மை கொண்ட பாடல்.

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ள பொரு
ளுள்ளலற வுள்ளத்தே  யுள்ளதா - லுள்ளமெனு
முள்ளபொரு லுள்ளலெவ னுள்ளத்தே  யுள்ளபடி
யுள்ளதே யுள்ள லுணர்.

உண்மையில் இது மிக எளிய வெண்பா. இதில் ரமணரின் உபதேசம் அத்தனையும் அடக்கம். அதன் விளக்கமாகவே அவர் செய்தது சொன்னது எழுதியது என்று அத்தனையையும் கொள்ளலாம்.

உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ - உள்ளது அல்லாது உள்ள உணர்வு உள்ளதோ? 

உள்ள பொருள் வேறு, உள்ளதென்ற உணர்வு வேறு என்ற இருமை இங்கு மறுக்கப்படுகிறது - "உள்ளது எதுவோ அது இல்லாமல் 'உள்ளது' என்ற உணர்வு இருக்குமோ?... எல்லாத் தோற்றங்களுக்கும் ஆதாரமாக இருப்பது இந்த உள்ளதே"

அடுத்த அடியில் வரும், "உள்ள பொருள் உள்ளல் அற உள்ளத்தே உள்ளதால்" என்பதன் பொருளும் எளிமையானதுதான் - உள்ளல் என்றால் நினைத்தல் என்பதை அறிந்தால். உள்ளல் அற, என்பதைத் துவக்கப் புள்ளியாகக் கொண்டு, "எண்ணக் குவியல்களே மனம். இந்த மனம் எதிலிருந்து எழுந்து எதில் ஒடுங்குகிறதோ, அதுவே என்றுமுள்ள உண்மைப் பொருள். அதுவே உள்ள பொருள். அதுவே மைய்யம்," என்று பொருள் கொள்கிறார் ஆ. சிதம்பரக்குற்றாலம்.

உள்ளல் அற, எண்ணங்களற்று, உள்ள பொருள் உள்ளத்தில் இருக்கிறது.

இங்கு உபதேச உந்தியார் பாடல் மேற்கோள் காட்டப்படுகிறது:

உள்ளது உணர உணர்வு வேறின்மையின்
உள்ளது உணர்வாகும் உந்தீபற
உணர்வே நாமாயுள முந்தீபற.

இது தியானத்தை எளிமையாக வரையறுக்கிறது - "உள்ளதை உள்ளவாறு அறிவதற்கு உள்ளதைச் சேர்வதுதான் வழி. அதுதான் தியானம். தானாயிருத்தலே தன்னையறிதல் என்பார் பகவான். அங்கு அறிவதற்கு ஒன்றுமில்லை. அறிவும், அறியாமையும் அற்ற இடம்தான் அது."

இதைப் புரிந்து கொண்டபின், 'உள்ளத்தே உள்ளபடி உள்ளலே உள்ளல் உணர்' என்பதற்கு விளக்கம் தேவைப்படுவதில்லை - நாம் எதுவாக இருக்கிறோமோ அதிலிருப்பதுதான் தியானம்.

ரமணர் தன் உபதேசங்கள் அனைத்தையும் நாற்பதே வெண்பாக்களில் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் முருகனார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க எழுதப்பட்டவையே உள்ளது நாற்பது வெண்பாக்கள்.

ஓஷோ ஓரிடத்தில், ரமணரின் உபதேசத்தை ஒரு தபால் அட்டையில் எழுதிவிடலாம் என்று கூறியிருப்பதாக நினைவு. உண்மையில் அதை எழுத ஒரு தபால்தலை போதும். இரண்டே சொற்கள் - "நான் யார்?"

இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்பவன், இந்த விசாரணையைத் தொடரும் காலத்தில் ரமணரின் உபதேசங்களைக் கடைபிடிக்கிறான். இந்தக் கேள்வியைவிட்டு விலகி பிற விஷயங்களைக் கருதுவது ஒரு வீழ்ச்சியே. ஆனால் இந்தக் கேள்வி கேட்டுக்கொள்வதற்கான நாட்டத்தின் அடிப்படையில் உலக இயல்பு, தன்னியல்பு, சிந்தனையின் இயல்பு என்று பல விஷயங்களைப் பற்றிய குழப்பங்களுக்கான தெளிவு இருக்கிறது. ஆன்மவிசாரம் மட்டுமே போதுமானது என்றாலும், இந்தக் கேள்விகள் குறித்த ஐயங்கள் தவிர்க்கப்பட முடியாதவை. இந்த நூலில் உள்ள அனைத்து வெண்பாக்களும் இந்த சந்தேகங்களை அப்புறப்படுத்தி சாதகனை ஆன்ம நாட்டத்தில் திருப்புகின்றன.

ரமணரின் உபதேசங்களை அறிந்து கொள்ள வேண்டியவர்களுக்கு இந்த நூல் உதவக்கூடிய ஒன்று.  இதைத் தன் சொந்த செலவில் பதிப்பித்து இலவசமாக வழங்கும் திரு ஆ. சிதம்பரகுற்றாலம் போற்றுதலுக்குரியவர்.

உள்ளது நாற்பது,
விளக்கவுரை - ஆ. சிதம்பரகுற்றாலம்
விலை : மதிப்பிட முடியாதது
தங்கம் பிரிண்டர்ஸ், தாராபுரம்
99942 90221

புத்தகம் வேண்டுவோர் 93605 10327 என்ற அலைபேசி எண்ணில் நூலாசிரியர் திரு ஆ. சிதம்பரகுற்றாலம் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

பின்குறிப்பு : வழியெல்லாம் பிறர்மதி என்று சொல்லியிருக்கிறார் ரமணர், உனக்கான வழியைத் தேர்ந்தெடு என்ற பொருளில். ஆனால் இதை இந்தப் புத்தகத்தில் வாசிக்கும்போதே, "என் வழி தனி வழி" என்று நம் சூப்பர் ஸ்டார் சொன்னது நினைவுக்கு வந்துவிட்டது. என்னவோ போடா மாதவா என்று முதுகில் தட்டிக்கொள்ளும்போதே, பஞ்ச்தந்த்ரா என்ற ஆன்மீகப் புத்தகம்...

வேணாம்... இத்தோட நிறுத்திக்கிடுவோம்.


10 comments:

  1. உன்ளது நாற்பதின் மங்கல பாடல் மிகச் சிறப்பானது. புரிந்து கொள்ள கடினமான ஒன்று போன்ற தோற்றம் கொண்டாலும், மனதை விட்டு நீங்காமல் நிற்கும் மனனத் தன்மை கொண்ட பாடல்.

    அருமையான பத்தக அறிமுகத்திற்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழர்...

      தாங்களும் தங்கள் நட்பும் சுற்றமும் அனைத்து வளமும் நலமும் கண்டு நல்வாழ்வு வாழ இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

      Delete
    2. http://chidambarakuttalam.blogspot.in/

      Delete
  2. பதிப்பகத்தின் மின்னஞ்சலை தாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மின்னஞ்சல் குறித்த தகவல் தரப்படவில்லை. பதிப்பாசிரியரே, "இதை வாசிப்பவர்கள் மற்றவர்களுக்கும் வாசிக்கக் கொடுத்து பகவான் கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். புத்தகம் வேண்டுவோர் அலைபேசியில் தொடர்பு கொள்க"

      என்று கூறி தன் அலைபேசி எண்ணைத் தந்திருக்கிறார்.

      நன்றி.

      Delete
    2. http://chidambarakuttalam.blogspot.in/

      Delete
  3. http://chidambarakuttalam.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்....தங்கள் புத்தகம் வேண்டும்... 6369041415

      Delete
  4. கடந்த ஆண்டு புதுதில்லி,ரமண கேந்த்ரா சென்றிருந்தபோழ்து அங்கு மேற்கண்ட புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.தொடர்ந்து கிடைத்த திரு.குற்றாலம் ஐயா அவர்களது தொடர்பால் அக்ஷரமண மாலையும் கிட்டிற்று.அவர்தம் மிக எளிய நடைப்பொருள் விளக்கத்தால் கவரப்பட்டேன்.தவிரவும்,ஜிட்டுவின் கருத்துக்களில் காணக்கிடைக்காத எளிமையை இவரது விளக்க உரைகளில் அதிகம் காண்கிறேன்.திரு.சிதம்பர குற்றாலம் அவர்களின் எளிய நடை,அவர்தம் எளிமை பாராட்டுக்குரியன.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி. அக்ஷரமண மாலையின் உரை குறித்து உங்கள் அறிமுகத்தை ஐநூறு சொற்கள் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு, என்ற கணக்கில் எழுதி அனுப்பலாமே? அன்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

      Delete