27 Dec 2012

Malgudi Days-R.K.Narayan

Malgudi Days

R.K.Narayan

Indian Thought publications

photo courtesy/To buy: Flipkart



எவ்வளவோ புத்தகங்கள் படிக்க வரிசைக் கட்டி நிற்கும்போது, எப்போதோ படித்த புத்தகங்களை மீண்டும் பார்க்கும்போது, அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆர்.கே. நாராயண் எழுதிய ”மால்குடி டேஸ்” அவற்றுள் ஒன்று. ஆம்னிபஸ்ஸில் ஆர்.கே.நாராயண் வாரம் கொண்டாடப்பட்டபோது, அவரின் புத்தகத்தைப் பற்றி எழுதத் தவறிவிட்டேன். அதற்குப் பரிகாரமாக இந்த வாரம் “மால்குடி டேஸ்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் மால்குடி என்ற ஊர் ஒரு கற்பனை, இதை உலகின் எந்த பகுதியோடும், இந்த மக்களை எங்கு இருப்பவர்களுடனும் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ஆர். கே. நாராயண். இந்த விஷயத்தில் எனக்கு மாற்று கருத்து உண்டு, அதை கடைசியில் சொல்கிறேன்.
 
 
 
 

இந்த தொகுப்பில் மொத்தம் 32 கதைகள். ஒவ்வொரு கதையிலும் அவர் உருவாக்கும் கதாபாத்திரமும், அந்த கதாபாத்திரத்தின் குணத்தில் உள்ள தனித்தன்மைகளும்தான் ஆர்.கே நாராயணின் பலம், அவரது கதாபாத்திரங்கள் பழகும் விதம் நம்மை கதையின் நடையோடு கூட்டிச் செல்கிறது. அதே மாதிரி மால்குடி ஊரைச் சித்தரிக்கும் விதம், சில சமயம் அதை மிகப் பெரிய ஊராகவும், மற்றொரு சமயத்தில் அதை ஒரு சின்ன கிராமமாகவும் சித்தரித்து கதைத் தன்மைக்கு ஏற்ப எழுதிச் செல்கிறார்.

எல்லோருக்கும் இந்த மாதிரி ஒரு ஊரில் வாழவேண்டும், இந்த மாதிரி கொல்லைப்புறத்தில் ஆறோடும் வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் இதை அப்படியே மால்குடியில் செய்திருக்கிறார் நாராயண். மால்குடியிள் சரயு என்ற நதி ஓடுகிறது. ஊரின் எல்லையில் மெம்பி மலை மற்றும் காடு இருக்கிறது.

இந்தக் கதைகள் யாவும் மனிதர்களை நல்லவர்களாகவே காட்டுகின்றன, ஆர்.கே நாராயண் மனிதர்களின் நல்ல பகுதியை மட்டுமே சுட்டிக் காட்ட முடிவு செய்திருக்கலாம். கதைகள் எல்லாவற்றையுமே ஒரு வகையில் பொதுமைப்படுத்தி விடலாம் (Generalisation). சிறுகதைகள் எழுதப்பட்ட மொழிநடை இந்தியமயமான ஆங்கில மொழி நடை. நிறைய இடங்களில் இந்தியாவில் இருந்து ஆங்கிலத்திற்குச் சென்ற வார்த்தைககளை அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறார். இதனால் இக்கதைகளைப் படிக்கும்போது ஒரு விதமான ‘தேசி’(desi) உணர்வுதான் வருகிறது.

“An Astrologer’s Day” கதை பாதி படிக்கும்போதே கதையின் முடிவை ஒருவாறு ஊகிக்க முடிகிறது. “The Missing mail” கதையில் வரும் போஸ்ட்மேன் தான் கடிதம் வழங்கும் அத்தனை பேரையும் நன்றாக அறிந்திருப்பதும், அவர்களின் சுக-துக்கங்களில் பங்கேற்பதும், ஒரு திருமணம் தடைபட்டு விடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்துடன் அவர் செய்யும் வேலையும், அவரின் அன்பை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது/

இந்த தொகுப்பில் ஒரு முக்கியமான சிறுகதை ”Iswaran” பல வருடங்களாக இண்டர்மீடியட் பரீட்சையில் தவறி வரும் ஈஸ்வரன், திடீரென பரீட்சையில் தேறிவிடுகிறான். அதையொட்டி அவன் மன நிலை பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறான். இந்த கதை, பரீட்சையில் வெற்றி பெறுவதுதான் குறிக்கோள் என்ற சமுதாயத்தையும், அதே சமயத்தில் எதிர்பாரா வெற்றி மனிதனை நிலைகுலைய வைப்பதையும் சித்தரிக்கிறது.

இந்த தொகுப்பில் “சுவாமி” பற்றிய ஒரு கதையும் உண்டு. திங்கள் காலையில் பள்ளிக்கு மட்டம் போட ஸ்வாமி உத்தேசிக்கிறான். ஆனால் சுவாமியின் தந்தை அவனை வலுக்கட்டாயமாக பள்ளிக்கு அனுப்புகிறார். பள்ளிக்கு நேரம் தவறி வந்தால் சாமுவேல் ஆசிரியர் அடிப்பார் என பொய் சொல்லியும், அதற்கு மாற்றாக அவரை பற்றி ஒரு புகார் கடிதத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுக்க சொல்லுகிறான் சுவாமி. ஆனால் அவன் எதிர்பாராவிதமாக சாமுவேல் அன்று நல்ல முறையில் மாணவர்களை நடத்துகிறார். அவருக்கு எப்படியாவது கோபம் மூட்டி விட வேண்டும் என்ற ஸ்வாமியின் எண்ணம் நிறைவேறுகிறது. ஆனால் பள்ளி விட்டு தலைமை ஆசிரியரிடம் கடிதம் கொடுக்கச் செல்லும்போது, அவர் விடுமுறையில் சென்று விடுகிறார். உதவி தலைமை ஆசிரியராக அங்கு சாமுவேல் உட்கார்ந்திருக்கிறார்.

“Forty-five-a month”என்ற கதை எக்காலத்திற்க்கும் பொருந்தும். நாள் முழுவதும் வேலையில் முழுகியிருக்கும் வெங்கட் ராவ், ஒரு நாள் தன்னுடைய குழந்தையை படத்துக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்.  என்ன ஆனாலும் மேலாளரை எதிர்த்தாவது படம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் கடைசியில் சம்பளம் ஐந்து ரூபாய் ஏற்றிக் கொடுத்தவுடன் மனம் மாறி விடுகிறது.

“leela’s friend” என்ற கதையில் வீட்டின் வேலையாள்- சித்தா, லீலாவின் நகையை திருடிவிட்டதாக திருட்டுக் குற்றம் சாட்டப்படுகிறது. லீலா- சித்தாவின்மேல் பாசமாக இருக்கிறான். சித்தா ஏற்கனவே திருடனாக இருந்தவன், கடைசில் நகை அரிசி பானையில் இருந்து வெளிப்படுகிறது.

“The Edge” கதை எழுபது –எண்பதுகளில் அரசின் மக்கள் நல ஆண் கருத்தடை பற்றி ஒரு நகைச்சுவையான சிறுகதை. அரசின் கொள்கை மக்களிடம் எப்படி தவறாக செல்கிறது எனவும், படிக்காத மக்கள் அவற்றை எப்படி தவறாக புரிந்துக் கொள்கின்றனர் என்பதும் சொல்லும் கதை, அதனால் ஏற்படும் விளைவுகள் கதையை நகர்த்தி செல்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கதைகள் இந்தியாவை மையமாக வைத்து மட்டுமே எழுதப்பட்டுள்ளன. ஒரு சில கதாபாத்திரங்களை உலகத்தின் எந்த நாட்டு மக்களோடும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம். மற்றபடி இது இந்தியா என்ற குறுகிய வட்டத்தில்தான் கதையாக வரும். முன்னர் சொன்ன மாதிரி இந்த கதையில் வரும் மால்குடி பற்றிய விவரணைகள்தான் மொத்த சிறுகதை தொகுப்பையும் இணைக்கின்றன.

அதனால்தான் இந்தத் தொகுப்பு டிவியில் நாடகமாக வெளியாகி வெற்றி பெற்றதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை.
 







No comments:

Post a Comment