1 Dec 2012

Notes from SMALL ISLAND -Bill Bryson



Name       : Notes from a SMALL ISLAND
Author     : BILL BRYSON
Black Swan books
To Buy     : Amazon
  
மூன்றாண்டுகள் நான் நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன், இப்போது சில மாதங்களாக மீண்டும் அதே நரகம்- நகரம். எப்போது இந்த நகரத்தை விட்டுப் போகும்போதும், போகிற காரணம் மனதுக்கு பிடித்ததாக இல்லாவிட்டாலும், போகிற சொந்த ஊர் மனதுக்கு இதம் தருவதாகவே இருந்தது. நீங்கள் ஒரு ஊருக்கு வருகிறீர்கள், கிட்டதட்ட இருபது வருடங்கள் அங்கே இருக்கிறீர்கள், மீண்டும் சொந்த ஊர் போகிறீர்கள். போவதற்கு ஒரு மாதம் முன் என்ன செய்வீர்கள்? யோசிங்க.

அ.முத்துலிங்கம் எழுதிய ”அங்கே இப்ப என்ன நேரம்” கட்டுரை தொகுப்பின் வழியாக, பில் ப்ரைசன் என்று ஒருவர் எழுதுவதாக எனக்கு அறிமுகம் ஆனது. இந்த தடவை நூலகம் சென்றபோது, ப்ரைஸனின் இந்தப் புத்தகம் எடுத்து வந்தேன். 

பில் ப்ரைசன் அமெரிக்காவில் பிறந்தவர், 1973ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்து வருகிறார். இருபது வருடம் இங்கிலாந்தில் வாழ்ந்துவிட்டு தனது சொந்த நாடான அமெரிக்கா செல்ல முடிவு செய்கிறார். அப்போதுதான் இத்தனை வருடங்கள் தான் வாழ்ந்த இந்தச் சின்ன இங்கிலாந்து தீவை, தான் முதலில் வந்தடைந்த துறைமுகத்திலிருந்து ஆரம்பித்து, தீவெங்கும் சுற்றி பார்ப்பதும், அது தொடர்பான நிகழ்ச்சிகளுமாகச் சின்னச் சின்ன அத்தியாயங்களாக இந்தப் புத்தகம்.


                                                    


சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒவ்வொரு அத்தியாயத்திலும், இங்கிலாந்தில் இருக்கிற சிறிய ஒரு ஊருக்குப் போகிறார், சின்ன/பெரிய விடுதிகளில் தங்குகிறார். நிறைய பீர் அருந்துகிறார், அங்கே இருக்கும் முக்கிய இடங்களை நடந்தும், பேருந்து / ரயில் மூலமாகவும் சுற்றிப் பார்க்கிறார். ஆனால் இதைத் தாண்டி, முதலில் வரும் சில அத்தியாங்களில், ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் மனிதர்கள் பற்றிய செய்திகள், நம்மை சட்டென புத்தகத்தில் ஆழ்த்துகின்றன. உதாரணத்திற்கு, ஹாரி பேக். இவர் லண்டன் நகரில், பூமிக்கு அடியில் ஓடும் இரயிலுக்கு வழித்தடம் அமைத்துத் தந்தவர். அதே போல், சார்லி வில்சன், ”தி டைம்ஸ்” பத்திரிகையின் எடிட்டர், ஒரே சமயத்தில் 5000 பேரை வேலையை விட்டு நிறுத்தியவர். இது போன்ற தகவல்கள்.

இந்தப் புத்தகத்தில் எனக்கு பிடித்த சில இடங்கள்:

ப்ரைசன் இங்கிலாந்துக்கு வந்த புதிதில் virginia waters என்ற ஊரில் இருக்கும் ஒரு மனநல மருத்துவமனையில் வேலை செய்கிறார். அங்கே வரும் ஒரு நர்ஸைக் கண்டதும் காதல் வந்து விடுகிறது. அவரைத் திருமணமும் செய்து கொள்கிறார். அதே மருத்துவமனையில் இருக்கும் ஒரு நோயாளி, மனநோயால் பாதிக்கப்பட்ட அவன் மிகவும் புத்திசாலி - மருத்துவமனைக்கு வந்த நாளிலிருந்து 1980ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை மூடப்படும் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதே மாதிரி அந்த மருத்துவமனை 1980ஆம் ஆண்டு எரிந்து  சாம்பல் ஆகிறது.

ஒரு ஊரில் Upper Pleasure Gardens, Lower Pleasure Gardens என்ற இரு பூங்காக்கள் இருக்கவே, Lower Pleasure Gardens என்பதை Pleasure Gardens என மாற்றிய அரசியல்வாதிகள் எல்லா ஊரிலும் இருக்கிற அரசியல்வாதிகள் மாதிரி முட்டாள்கள்தான் என்று சொல்கிறார்.

நம் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஹீரோவைப் பற்றியோ, இல்லை இசையமைப்பாளர் பற்றியோ ஏதாவது சொல்லிவிட்டால் போதும், உடனே திட்ட வந்துவிடுவார்கள். ஆனால் ப்ரைசன் இங்கிலாந்து மகராணி எலிசபெத்திலிருந்து, பிரின்ஸ் சார்லஸ் வரை எல்லோரையும் சரமாரியாக இந்தப் புத்தகத்தில் பகடி  செய்கிறார்.

W.J.C.Scott Benedict (1800-1879) ஆம் ஆண்டு வரை போர்ட்லன்ட் ஐந்தாவது ட்யுக் ,மக்களிடம் அதிகம் பழக விரும்பாதவர். எப்போதும் ஒரு தனி அறையில் அடைந்து கிடக்க விரும்பக்கூடியவர். அவர் வெளியே வரும் நேரங்களில் அவரது வேலைக்காரர்கள் அவர்களுக்குரிய அந்த இடத்திலேயே நின்று கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், அந்த வேலைக்காரர்கள் சோர்வு அடையும்வரை skating செய்ய வேண்டும். எனக்கு இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் ஞாபகம் வந்தது.

புத்தகத்தின் துவக்கத்தில் இங்கிலாந்தின் வரைபடமும், அதில் பில் ப்ரைசன்  பயணம் செய்த பாதையும் குறிப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தின் சிறப்பு, ஒரு நண்பர் தான் பயணம் செய்த இடங்களை சின்ன சின்ன நாட்குறிப்புகளாக நமக்கு எழுதுவது போலிருக்கிறது. ஒரு கடிதம் மாதிரி, நக்கலும் ,கிண்டலும்  எழுத்தில் கொப்பளிக்கிறது, புத்தகம் முழுக்க. சில இடங்களில் எழுத்து அப்படியே அந்த இடத்தை காட்சிப்படுத்துவது இன்னும் அருமை.

நாவலின் குறை என்று சொன்னால், மொழி நடை கொஞ்சம் ஆபாசமாக இருக்கிறது. இதை சகித்துக்கொண்டு படிக்கும்போது நன்றாகவே இருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தப் புத்தகம் 1995ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது, அப்பொழுதே இங்கிலாந்து பற்றி நிறைய குறை கூறுகிறார்.  இப்போதைக்கு கொஞ்சம் சுத்தம் வந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒரு சில அத்தியாயங்களைப் படிக்கும்போது ஐயோ! நாமும் இந்த இடத்தை வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விட வேண்டும் என மனசில் நினைக்க வைத்துவிடுகிறார். இப்போது சொல்லுங்கள், ஒரு ஊரில் இருபது ஆண்டுகள் இருந்தீர்களானால் அதை விட்டுப் போகும்போது என்ன செய்வீர்கள்? அதன் அழகு எப்படிப்பட்டதாக இருந்திருந்தால், அந்த ஊரைப் பிரியும்முன் அங்கு ஒவ்வொரு இடமாகப் போய் பார்த்து ரசிப்பீர்கள்?












No comments:

Post a Comment