7 Jan 2013

அடியாள் – ஜோதிநரசிம்மன்



2012ம் வருடம் இறுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. கைவசம் இருந்த எல்லாப் புனைவுகளையும் வாசித்து முடித்திருந்தேன். அந்த சமயம் நண்பர் ஒருவர் பரிசளித்த அடியாள் புத்தகம் கையில் கிடைத்தது. விறுவிறுவென ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். உண்மை பல நேரங்களில் புனைவை விட சுவாரஸ்யமானதாக இருக்கக்கூடும். ஒரு புனைவு என்னுள் ஏற்படுத்திய சோகம், கோபம், பயம் இன்னபிற உணர்வுகள் அத்துனையையும் உணர்ந்தேன் இதன் வாசிப்பின் முடிவில்.

ஜோதி நரசிம்மன், ஐடிஐ முடித்தும் பல்வேறு காரணங்களாலும், வன்முறை மீதிருந்த காதலாலும் அரசியல் அடியாள் ஆனவர். இவர் சார்ந்த அடியாள் கூட்டத்தில் பத்து பதினைந்து பேர், தலைவனாக எழில். இவர் சார்ந்துள்ள கட்சி தொகுதியில் ஜெயித்த போதும், எதிரணி மேலிடத்தில் ஆட்சி அமைக்கிறது. இதனால் தொகுதியில் ஏற்பட்ட பிரச்சினையில் போலீஸ் தேடும் குற்றவாளி ஆகிறார். குழுவினரோடு ஓடி ஒளிந்து கொள்கிறார். ரவுடிகள் பிரச்சினையில் சிக்கும்போது அவர்களின் பாதுகாப்பு என்ன, அவர்களுக்கு யார் பாதுகாப்பு கொடுக்கிறார்கள், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற எப்படி பணம் கிடைக்கிறது போன்ற விஷயங்களை இவர் எவ்வாறு கையாண்டார் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.

என்னதான் ஊரை மிரட்டும் அடியாளாக இருந்தாலும், போலீசில் மாட்டினால் அடிப்பார்களோ, சித்திரவதை செய்வார்களோ, என்றெல்லாம் ஒவ்வொரு சாமனியனுக்கும் வரும் கேள்விகளும் பயமும் இவருக்குள்ளும் வருகிறது. புத்தகத்தை வாசிக்கும் தருணத்தில் அந்த பயம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. சரண்டர் ஆக வேண்டிய கட்டாயத்தில் “அடிக்கக் கூடாதுன்னு சொல்லுங்க”  என்று சொல்லி சரண்டர் ஆவதும், உடனிருப்பவர் அடிபடும்போது இவர் மிரள்வதும் நம்மை மிரட்சி அடையச் செய்கின்றன. எந்த சமயத்திலும், யார் சொல்லினும் சட்டம் தன் கடமையை “சரிவர” செய்கிறது.

சிறைக்குள் இருந்த மிக முக்கிய குற்றவாளிகள் சிலரை சந்தித்த இவர் அந்த அனுபவங்களையும், சிறைச்சாலை எனப்படும் வேறொரு உலகத்தைப் பற்றி உலகறியா பல உண்மைகளையும் எழுதியிருக்கிறார். சிறைக்குள் இருப்பவர்களை யார் பார்க்கலாம், அந்த சந்திப்பு எப்படி இருக்கும், பரோல் என்பது என்ன, சிறைக்குள் கிடைக்கும் உணவு எப்படி, கைதிகளின் தினசரி வேலை என்ன என பல ஆச்சர்யமூட்டும் இல்லை, உண்மையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

ஜாமீனில் வெளிவந்த பிறகு தெளிவடையும் இவர், தான் போகவேண்டிய பாதை இதுவல்ல என்று புரிந்துகொண்டு ஒரு போராளியாகிறார். இரண்டாவது முறையாக சிறை செல்கிறார். இம்முறை இலங்கைப் போராட்டத்திற்காக அரசியல் கைதியாக. இரண்டிற்குமான வித்தியாசத்தை இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளார் ஜோதி நரசிம்மன். புதிய பாதையை தேர்ந்தெடுத்த பின்னர் தனக்கு மிகவும் விருப்பப்பட்ட பத்திரிகைத் துறையில் வேலை செய்ய முடிவெடுக்கிறார்.

ஒருவன் சூழ்நிலை வசத்தால் கைது செய்யப்பட்டு சிறை செல்ல நேர்ந்தால் அவனை சமூகம் எப்படிப் பார்க்கிறது, வெளியில் வந்த பிறகு அவன் நிலைமை என்ன, சமூகம் அவனை எப்படி அணுகுகிறது, அவமானப் படுத்துகிறது போன்ற கேள்விகளுக்கு பதிலாகிறது இந்த புத்தகம். கைதிகளும் மனிதர்கள்தாம் அவர்களுக்கும் மனம் திருந்தி வாழ ஒரு அவகாசம் உண்டு. இருந்தாலும் சமூகம் அதை அனுமதிப்பதில்லை எனும் கசப்பூட்டும் உண்மையுடன், கைதிகளையும் சமூகம் மனிதர்களாக காண வேண்டும் எனும் நோக்கத்தோடு இந்த புத்தகத்தை முடித்திருக்கிறார்.

கைதிகளை சிறையில் காண என்ன செய்ய வேண்டும், கைது செய்யப்பட்டவரின் உரிமைகள் என்ன, முதல் தகவல் அறிக்கை (FIR) என்பது என்ன தகவல்களைக் கொண்டிருக்கும் எனும் தகவல்களைத் தரும் பின்னிணைப்புகளை நிச்சயம் நாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய அவசிமாகிறது.

“அடியாள் கூட்டம், சிறை அதிகாரிகள், காவல் துறையினர், கைதிகள். இவர்களைப்பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப் போகிறது. எச்சரிக்கை!” இந்த வாசகங்களைக் கொண்டு ஆரம்பிக்கும் புத்தகம் ஒவ்வொரு அத்தியாயங்களைக் கடக்கும்போதும் ஏதோ ஒரு திகிலை மனதில் பரப்பிச் செல்கிறது. “ஒருவேளை கைது செய்யப்பட்டால்” இப்படி நாம் சிந்திக்காத, சிந்திக்க விரும்பாத கேள்விகளின் பதிலாகவும், கேள்விகளுக்கு அப்பால் உள்ள நிதர்சனத்தையும் உணர்த்தும் ஒரு புத்தகம்.

ஜோதி நரசிம்மன் | அபுனைவு | கிழக்கு பதிப்பகம் | விலை. 70 | பக்கங்கள் 170
இணையத்தில் வாங்க: கிழக்கு

No comments:

Post a Comment