4 Feb 2013

என் பெயர் ராமசேஷன் – ஆதவன்



அமெரிக்க ஏகாதிபத்தியமா, விஸ்வரூபம் வெளியாகவில்லையா, ராஜா சிறந்தவரா ரகுமான் சிறந்தவரா, ஆணாதிக்கமா, பெண்ணியமா, எகிப்தில் புரட்சியா? இப்படி உலகத்தின் எந்தவொரு மூலையில் என்ன பிரச்சினை நடந்தாலும் அதைத் தீர்க்கக் கருத்துச்சொல்லும் அல்லது புரட்சி பண்ணும் ஒரு அறிவுஜீவிக் கூட்டத்தினிடையே வாழ்வதென்பதொரு சாபம். இக்கூட்டத்தில் விஷயமறிந்து பேசுவோர் சிலர் மட்டுமே. அத்தகைய சிலரின் கருத்துக்கள் பாராட்டத்தக்கவை. ஆனால் மேற்சொன்ன கூட்ட்த்தில் பெரும்பான்மையினர் எக்ஸிபிஷனிஸ்டுகள் அல்லது விளம்பரப் பிரியர்கள். இத்தகையதான ஒரு சூழலை வாய்க்கப் பெற்றவன் தினசரி வாழ்க்கையில் போலி அறிவுஜீவித்தனத்தின் வெளிப்பாடுகளாக வெற்று வார்த்தைப் போர்களைக் கடந்துசெல்லும் தருணத்தில் ஏற்படும் ஆயாசத்தையோ மனவிரக்தி அல்லது வெறுமையையோ தீர்க்க ஒரு நல்ல படமோ ஒரு புனைவோ ஒரு இசையோ போதாது. தாந்தான் இண்டலெக்சுவல் என தனக்குத்தானே நிறுவிக் கொண்டு, நன்றாய்ப் பேசத்தெரிந்த ஒரு கூட்டத்தின் மௌனம்கூட பேரிரைச்சலாய் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது காதுகளிலெப்போதும். நானிப்படியுணரும் எந்தச் சூழலிலும் மனதிற்கொரு நிம்மதி தருபவர் ஆதவன் மட்டுமே.

ஒரு விபத்தினைக் காணும்போதோ ஒரு ஆம்புலன்ஸ் கடந்து செல்லும்போதோ தானாகவே மனது பிழையாக ஒன்றும் இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்வது போல இத்தகைய போலி அறிவுஜீவிகளைக் கடந்து செல்லும் தருணத்தில் அனிச்சையாகவே கைகள் ஆதவனை எடுத்து வாசிக்கத் துவங்கியிருக்கின்றன. என்னளவில் இத்தகைய சங்கடங்களின் மீட்பராக ஆதவன் இருக்கிறார்.

இனி நாவலுக்குள் வருவோம். தன்னை நிறுவுதல் அல்லது அறிமுகம் செய்தல் என்பதொரு கலை. சிலர் பெயரைச் சொல்லுவார்கள், சிலர் குடும்பப் பின்னணியைச் சொல்லுவார்கள், சிலர் செய்யும் தொழிலைச் சொல்லுவார்கள். ஆனால் தன்னை ராமசேஷனாக அறிமுகம் செய்ய ஆதவனின் பிரயத்தனங்கள் இந்தப் புத்தகத்தின் முதல் வரியிலிருந்தே துவங்குகிறது. ராமசேஷனின் அறிமுகம் தன்மையிலிருந்து துவங்கவில்லை. தன் குடும்பம், தன் நண்பர்களிடமிருந்து துவங்குகிறார்.

அப்பாவை ஒரு சம்பிரதாயப் பிச்சு என்கிறார். கட்டிய மனைவியைவிட தாய்க்கும் சகோதரிக்கும் முக்கியத்துவம் கொடுக்குமொரு பழங்காலத்து ஆள். இருந்தாலும் மனைவி அவருக்கு உறவெனும்போது மட்டும் தேவைப்படுகிறார். மகனை மருமகள் கைக்குள் போட்டுவிடாதபடி அதிகாரம் செய்யும் பாட்டி, அவளிறந்தபின் அந்த அதிகாரம் தனக்கு வரவேண்டுமென நினைக்கும் அத்தை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தானொரு இஞ்சினியரின் தாயாக வேண்டுமென்று நினைக்கும் அம்மா.

ஆங்கிலமும் பணமும் இருப்பதானால் மட்டுமே தன்னை உயர்ந்தவனாகக் காட்டிக்கொள்ளும் ராவ், வெறும் சினிமாவுக்காகவும் பணத்துக்காகவும் அவனிடம் நண்பனாக இருக்கும் மூர்த்தி எனும் விசுவாசநாய்என இத்தனை பேரின் முகமூடிகளையும் பாசாங்குகளையும் தோலுரித்து, இவைகள் யாவுமற்ற தானொரு இண்டலெக்சுவல் என்று தலைக்கு வரும் முதல் பவுன்சரியே சிக்சராக்கித் துவங்குகிறார். இருந்தும் ராவின் தங்கை மாலாவைக் காணும் தருணங்களின் தன் மனம் காமுறுவதைச் சுட்டி தானொரு அல்ஷேஷனாக மாறிவிடுவதாகவும் சொல்லுகிறார். தன்னியல்புகளில் தானே குறையுணரும் ஒரு புத்திசாலி.

உறவுகளில் இருக்கும் பாசாங்குகளைக் கட்டவிழ்க்கிறார். இயக்குனருக்கும் மிஸஸ்.ராவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்தபின் அவரிடம் நெருங்கும் சமயத்தில் அவளொரு சபலக்காரி என்று ஜட்ஜ்மெண்டலாக (தமிழில் என்ன?) முடிவெடுத்து நெருங்க அந்தச் சூழலை அவள் தன்வசமாக்கிக் கொள்கிறாள். தன் மகள் ஒரு போக்கிரியுடன் பழகுவதைத் தவிர்க்க நினைப்பவள் ராமசேஷனை ஒரு காமுகனாக்கி மகளிடம் பழகுவதைத் தடை செய்கிறாள். இந்தச் சூழலில் ஆணுக்கு காமம் எவ்வளவு பாதகம் என்றும் பெண்ணுக்கு அவளுடல் எவ்வளவு சாதகமென்றும் விளக்கியிருக்கிறார். அதே சமயம் பிரேமாவைக் கருப்பானவளாக சித்தரித்து அந்த மாதிரியான பெண்களிடத்தே இருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

இப்படியாகச் சில சம்பவங்களின் கோர்வைதான் நாவல் என்றாலும் சொல்லப்பட்ட விதமும் ஆளுமையும் தான் இதில் பிரதானம். தன்னை ஒரு காஸனோவாவாக நினைத்துக் கொள்ளும் ராமசேஷன் தோற்பதென்னவோ காமத்தின் முன்னிலையில் மட்டுமே. ராவுடன் ஏற்பட்ட ஈகோவில் பிரேமாவையும் விடுத்து பங்கஜம் மாமியிடம் போய் தோற்று நிற்கும்போது காமத்துக்கு இறைஞ்சுபவனாகவும், ஒரு பெண்ணின் ஸ்பரிசத்தில் தோற்றவனாகவும் தான் தெரிகிறான் ராமசேஷன். ஒரு பெண்ணுடல் ஆணுக்குள் செய்திடும் மாயையை எழுத்தில் கொணர்ந்திருக்கிறார், அவ்வளவுதான்.

கதவுகள் தாழிடப்பட்ட தனியறையிலாவது நாம் எப்போதும் சுமந்துகொண்டிருக்கும் கிரீடத்தையும், புத்திசாலியெனும் முகமூடியையும் ஒருவரும் அறியாதவாறு கழட்டிவைத்துவிட்டு எம்ப்டி த கப்என்று ஜென்னில் சொல்லுவார்களே அதுபோல நம்மை முன்னிலைப்படுத்தாமல் வாசிப்போமேயெனில் நல்லதொரு தரிசனம் கிட்டும் ஆதவனிடத்தே!

நாவல் | ஆதவன் | பக்கங்கள் 200 | விலை ரூ. 120 | இணையத்தில் வாங்க: கிழக்கு

1 comment:

  1. ஆதவனைப் பற்றிய அருமையான இண்ட்ரோ!

    ReplyDelete