9 Feb 2013

தூண்டில் கதைகள் -சுஜாதா



தூண்டில் கதைகள்
சுஜாதா
Photo Courtesy/To buy: Tamil books online



...சம்பிரதாயமான பழைய கால சிறுகதை வடிவம். முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இவைதான் இந்தக் கதைகளின் பொது அம்சம். இதைப் படிப்பவர்கள் இவை இலக்கியமா இல்லையா என்று கவலைப்பட வேண்டியது இல்லை. உற்சாகமாக, சுலபமாகப் படிக்க முடியும்...
                                                              சுஜாதா (முன்னுரையிலிருந்து)
 
                                                           

இது மாதிரி முன்னாடியே தெளிவாக சொல்லிவிட்டால் இதை இலக்கியமாகப் பொருட்படுத்தலாமா, இதன் உள் அர்த்தம் என்ன, இதில் படிமங்கள் உண்டா, உண்டெனில் அவற்றின் பொருள் என்ன, படிமங்கள் எந்த அளவுக்கு படிமப் பொருளைத் தாண்டிச் செல்கின்றன என்று எல்லாம் கேள்விகளைக் கேட்டு மண்டையைப் போட்டு பிய்த்து கொள்ள வேண்டாம் பாருங்கள். 

குமுதம் இதழில் 12 வார தொடராக வெளிவந்த சிறுகதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். மொத்தம் 12 சிறுகதைகள் (12 வாரம் என்றால் 12  சிறுகதைகள், இதுகூடவா தெரியாது!). சுஜாதா முன்னுரையில் சொன்ன மாதிரி, ஒரு சின்ன அதிர்ச்சிதான் கதையின் நாடி, சில கதைகளில் இவை கதையின் கடைசி வரியில் வருகின்றன, சில கதைகளில் கடைசி பத்தியாக வருகின்றன. ஒருசில ஆண்டுகள் முன்னமேயே இந்தத் தொகுப்பைப் படித்திருந்தாலும், யாரைப் படிப்பது என்று குழப்பம் இருப்பதால், படித்ததையே மீண்டும் படிப்போம் என்று முடிவு செய்து விட்டேன். இந்த கதைகளின் முடிவை நீங்களே படித்து தெரிந்துக் கொள்ளுங்கள், கதையின் சுருக்கம் மட்டுமே, இங்கு சொல்ல விரும்புகிறேன்.



“அனுபமாவின் தீர்மானம்” கதையில் மிகுந்த விசாரிப்புக்கு பின் நாகேந்திரனை அனுபமாவிற்கு திருமணம் செய்துக் கொடுக்கின்றார் அவள் தந்தை. கல்யாணம் ஆன இரண்டாம் நாளே, அனுபமா தன் பிறந்த வீட்டுக்கு திரும்ப வருகிறாள். காரணம்: நாகேந்திரன் ஏற்கனவே திருமணம் ஆனவன், அவனும் அதை ஒத்துக் கொள்கிறான். அனுபமாவின் தந்தை மிகுந்த யோசனைக்குப் பின் அவனைக் கொல்வதாக முடிவு செய்கிறார். ஆனால் அனுபமா கதையின் முடிவில் நாகேந்திரனையே தன் கணவனாக ஏற்றுக் கொண்டு விடுகிறாள், ஏன்?

“மறக்க முடியாத சிரிப்பு” கதையில் மனைவியின் துரோகத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் கணவன், சாவதற்கு முன் மனைவியில் விரல்களை வெட்டி விடுகிறார். மகனுக்கும் கடிதத்தில் இதைப் பற்றி எழுதுகிறார். மகன் வளர்ந்து பெரியவன் ஆனதும், பெண்களை மயக்கி அவர்களது விரல்களைக் கேட்கிறான். விரல்களைத் தர மறுக்கும் பெண்களைக் கொலை செய்கிறான் - மூன்று பேரை கொன்றபின், நாலாவது பெண் மட்டும் தப்பித்து விடுகிறாள், எப்படி?

“ஆக்க்ஷன் வேண்டும்” சிறுகதையில், சி.ஏ படித்துவிட்டு ஆடிட்டர் வேலை செய்யும் மூன்று பேர், வேலை செய்து கொடுத்த கம்பெனி அளிக்கும் பார்ட்டியில் கலந்துக் கொள்கின்றனர். அதில் ஒருவன் பெண் வேண்டும் என கேட்க, பெண்கள் நடனம் ஆடுவதைப் பார்க்க செல்கின்றனர். அங்கு ஆடும் பெண் மீது ஒருவனுக்கு மோகம் ஏற்பட்டு, வெளியே வந்தும் அவளைப் பற்றி புலம்பிக் கொண்டே இருக்கிறான். திடீரென, அவர்கள் வந்த வண்டி பழுதாகிறது. அதே சமயம் அந்த பெண்ணும் வர, அவளை அடைய முயற்சி செய்கிறான். நடந்தது என்ன? 

“ஒரு நாள் மட்டும்” கதையில் இளமையில் காதலித்து தோற்ற ஒரு ஜோடி மீண்டும் சந்திக்கிறது. இருவரும் தங்கள் மனைவி- கணவனுக்கு தெரியாமல் ஊர் சுற்றுகின்றனர். புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் என்ன விபரீதம் ஏற்பட்டது?

“மற்றொரு பாலு” ஒரு அறிவியல் புனைவு கதை. அறிவியல் ஆராய்ச்சிக்காக ஒருவன் வருகிறான். வருகிறவனுக்கு மருத்துவர் மேல் நம்பிக்கை இல்லை. மருத்துவர் அவன் நம்பிக்கையை பெறுகிறார். ஆனால் அப்போது என்ன நடந்தது? இந்த கதையில் அறிவியலில் நல்ல புரிதலும், அதை எளிமையாக எழுதும் திறமையும் கொண்ட சுஜாதாவை காணலாம். 
]
“குந்தவையின் காதல்” சரித்தர கதை. ராஜராஜ சோழன் மகளுக்கு சாளுக்கிய மன்னன், விமலாதித்தனை மணம் செய்விக்க முடிவு செய்யப்படுகிறது, முதலில் குந்தவை எதிர்ப்பு தெரிவித்தாலும், குந்தவை தான் முன்னர் காதலித்தவனே இவன் என்பதை அறியவரும்போது, அவனையே மணம் செய்ய முடிவு செய்கிறாள். திருமணம் நடக்கிறது. இதில் சொடக்கு என்ன?

“தண்டனையும் குற்றமும்” கணேஷ்-வசந்த் தோன்றும் சிறுகதை. தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் எவ்வளவோ முயற்சி செய்தும், அவன் குற்றவாளி என்று தீர்ப்பாகி அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. குற்றவாளி, நிரபராதி முன் சிரித்துக் கொண்டே செல்கிறான் - அடுத்து நடப்பது என்ன? 

“சுயம்வரம்”  கொஞ்சம் புரட்சிகரமான கதை. பணக்கார பெண்ணான சுரேகாவை இரு பையன்கள் காதல் செய்கின்றனர். இவளும் இருவரையும் விரும்புகிறாள். யாரை மணம் செய்ய வேண்டும் என்று குழம்புகிறாள். ஒரு நாள் சுரேகாவின் தந்தை வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதைத் தெரிந்து கொண்டது, யாரை திருமணம் செய்வது என்று முடிவு செய்கிறாள். ஏன்?

“யாருக்கு” என்ற கதையில் பல வருடங்களாக ஒரு கம்பெனியில் வேலை செய்யும் குணா, தனக்கு வரும் என்று எதிர்பார்க்கும் எம்.டி பதவி, அவரது எதிரி ஆன லீக்கு போகிறது. மனம் உடைந்து பதவி விலகுகிறார் குணா. ஆனால் அதனால்தான் பெரிய ஒரு நன்மையை அடைகிறார் , அது என்ன ?

‘பெய்ரூட்” கதையில் ஆயுதம் விற்கும் சதீஷ், அவனின் செயல்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. கடைசியில் அவன் கொல்லப்படுகிறான். ஆனால் எதிரியால் அல்ல. யார், ஏன் ? 

“வானில் ஒரு..” கதையில் விமானத்தில் ஒருவன் குண்டு வைக்க, அதில் பயணம் செய்யும் ஒருவர் வைத்திருக்கும், பாம்ப் டிடக்டர், அதைக் கண்டுபிடித்து பயணிகளைக் காப்பாற்றுகிறது, அந்த பாம்ப் டிடக்டரை, அரசாங்கமும் வாங்குகிறது. கடைசியில் என்ன ஆகிறது? 

“க்ளாக் ஹவுசில் புதையல்” கதையில் தன்னுடைய தாத்தா கோடுத்த ஒரு கடிதத்தில், புதையல் குறித்த தகவல்கள் இருப்பதாக நம்புகிறார் பார்த்தசாரதி. அவரை சந்திக்க வெளிநாட்டில் இருந்து எடிங்டன் வருகிறார். புதையலை தோண்டி எடுக்கின்றனர். ஆனால் அதில் இருப்பது வெறும் கற்கள்தான். கடைசியில் எடிங்டன் புதையலை கண்டுபிடிக்கிறான். ஆனால் புதையல் அவன் கை நழுவி போகிறது. எங்கே, எதில் புதையல் இருந்தது ?

எல்லா  கதைளை படித்து முடித்தவுடன் எதாவது சொல்லாவிட்டால் ஏதோ ஒன்று குறைந்த மாதிரி உள்ளது. இந்த கதைகள் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் பற்றியது. இவர்கள் வாழ்க்கை நடைமுறை சிக்கல்களை எப்படி எதிர்கொள்கின்றனர்? அவர்கள் செய்யும் அசகாய சூரத்தனம் என்ன? 'ஆக்க்ஷன் வேண்டும்' கதையில் வருபவன் போல, நம் ஆபீசில்/ நட்பு வட்டத்தில் இருப்பார்கள். ”மறக்க முடியாத சிரிப்பு” கதையில் வரும் மன நலம் பாதிக்கபட்டவன் போன்ற ஒருவனை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்படி இதில் பத்து கதைகளில் வரும் கதை மாந்தரையாவது நம் வாழ்க்கை வட்டத்தில் காணலாம். 

கதையைப் படிக்கும்போது ஒரு அதிர்ச்சி ஏற்பட வேண்டும் என்று ஆசிரியர் நினைத்து இந்த கதைகளை எழுதி இருந்தாலும், மனித வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுடன் இவற்றைக் கண்டிப்பாக இணைத்துப் பார்க்க முடியும். (அப்பாடி, கருத்து சொல்லியாச்சு !!).

இதில் சில கதைகளில், லாஜிக் ஓட்டைகள், ஏற்கனவே படித்த விட்ட உணர்வு, ஏற்கனவே படித்து விட்ட காரணத்தினால் முன்னமே முடிவை யூகித்துவிட முடிகிற சலிப்பு என்று எல்லாம் இருந்தாலும், ரெண்டு மணி நேர நல்ல பொழுதுபோக்கு






4 comments:

  1. சுஜாதா கதைகள் பெரும்பாலானாவை நல்ல பொழுதுபோக்கு வகையைச் சார்ந்தவைதான்!

    ReplyDelete
  2. மீண்டும் தூண்டில் கதைகள்...
    http://udumalai.com/?prd=meendum%20thondil%20kathaigal&page=products&id=2534

    கறுப்புக் குதிரை
    ==============
    http://udumalai.com/?prd=karuuppu%20kuthirai&page=products&id=2525

    இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள் ' என்ற பொதுத்தலைப்பில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை.மேட்ச்ஃ பிக்ஸிங் என்றால் என்ன என்று தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது என்று இந்த கதை உண்மைக்கு மிக அருகில் வந்து விட்டது. சுஜாதாவிற்கே ஆச்சர்யம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.தூண்டில் கதைகள் என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளை தொடர்ந்து அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக்கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை.

    ReplyDelete
  3. Thanks Balhanuman, for your valuable comments புதிய தூண்டில் கதைகள், is scheduled for next week , thanks for the support

    ReplyDelete
  4. Thanks மதுரை அழகு for your comments too

    ReplyDelete