14 Apr 2013

வாழ்ந்தவர் கெட்டால் – கந்தாடை நாராயணசாமி சுப்ரமண்யம்



எனக்கு இருநூறு அறுநூறு பக்கங்கள் என்று நாவல்கள் எழுதுவதைவிட சிறிய சிறிய நாவல்கள் நூறு நூற்றிருபது பக்கங்களுக்கு அதிகம் போகாமல் எழுதுவதில் ஒரு அலாதியான திருப்தி. நூறு பக்கங்களில் சொல்ல முடியாத விஷயம் எதையும் இலக்கியாசிரியன் ஐநூறு பக்கங்களில் சொல்லிவிட முடியாது என்பது என் நினைப்பு. இது நாவல்களில் கருத்தாழமும் கட்டுக்கோப்பும் கனமும் சிறப்பாகவே வரக்கூடும் என்றுதான் நான் எண்ணுகிறேன். –க.நா.சு

என்னுடைய விருப்பம் அளவில் பெரிய நாவல்களே. ஆனாலும், க.நா.சு சொல்வது போல், குறைவான பக்கங்களிலும் ஒரு பெரிய நாவலின் அம்சங்களைக் கொண்டு வந்துவிட முடியும். முடியும் என்பதற்கு சாட்சி, வாழ்ந்தவர் கெட்டால், வாடிவாசல் போன்ற சிறிய நாவல்கள். விட்டால் ஆதவனுடைய குறுநாவல்களையும் இதில் சேர்த்துக் கொள்வேன்; விடமாட்டார்கள். இந்த நாவல்களை ‘சற்றே பெரிய சிறுகதைகள்’ என்று சொல்லவே முடியாது என்பது என் துணிபு. க.நா.சுவின் பரிசோதனை முயற்சிகளில்  இந்நாவல் ஒன்றாக இருந்திருக்கலாம். 


தன்னுடைய நண்பனோடு சில நாட்கள் தங்கியிருக்கலாம் என்று தஞ்சாவூருக்கு வரும் எழுத்தாளனின் பார்வையில் சொல்லப்படும் கதை. எந்தவொரு நோக்கமும் இல்லாமல் சிறிது நாட்கள் நண்பனோடு நேரம் கழிக்கலாம் என்பது தான் எழுத்தாளருடைய எண்ணம். ஆனால், எதிர்பாராதவிதமாக, நண்பனுக்கும் அதே ஊரிலிருக்கும் மற்றுமொரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் உறவைப் பற்றிய ஆர்வம் மேலோங்க மேலோங்க தன்னையே அறியாது எழுத்தாளர், அதன் பிறகு நடக்கும் விஷயங்களுக்கெல்லாம் காரணமாகிவிடுகிறார். கதையைப் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். அதுவே சிறிய கதை அதை இன்னும் விளக்கமாகச் சொல்வது தர்மமாகாது என்பது என் நினைப்பு.

இது நான் படிக்கும் க.நா.சுவின் இரண்டாவது நாவல். படிக்கப் படிக்க அவருடைய எழுத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கிறது. அவருடைய அனைத்து படைப்புகளையும் குறிப்பாக அனைத்து நாவல்களையும் படித்துவிட வேண்டும். தற்போது நற்றிணை பதிப்பகம் அவருடைய நாவல்களை நல்ல தரமான பதிப்பாக வெளியிட்டிருக்கிறது. 

அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி அருமையானது; குழப்பமில்லாதது. பேசும் விஷயங்களும் நமக்குப் பிடித்தமானவையாகவும் சுவாரசியமாகவும் இருந்துவிட்டால் இன்னும் சிறப்பு. இம்மாதிரி எழுத்துக்கள் ஏன் நமது பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெறுவதில்லை என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம். நான் படித்த போது, ஆங்கிலப் பாடத்தில் ஆலிவர் ட்விஸ்ட் நாவல் முழுக்க பாடமாக இருந்தது. ஆனால், அது மாதிரி தமிழுக்கு ஒரு முழு நாவல் இருந்ததாக நினைவில்லை (சில நல்ல சிறுகதைகள் தமிழில் துணைப்பாடமாக இருந்தன.) அப்படியொரு முழுநாவல் பாடமாக வைக்கப்படலாம் என்றால், என்னுடைய சிபாரிசு பொய்த்தேவு. அல்லது பொய்த்தேவு நாவலில் வரும் ‘பொங்கும் புது வெள்ளம்’ பகுதியை மட்டுமாவது பாடமாக வைக்கலாம். ஒரு முழு பருவ காலத்தில் காவிரி நதியையும் அதைச் சார்ந்து இருக்கும் மக்களைப் பற்றியும் அத்தனை அழகாக யாராலும் எழுத முடியாது. 

இந்நாவலில், கதையோடு அவர் பேசும் மூன்று விஷயங்கள் ஒன்று காபி, அடுத்தது ஐதிகம், கடைசியாக மார்கெட்டுக்குப் போகுது திறமை. மூன்று ஒருபத்தி விஷயங்கள் தான், ஆனால் எனக்குப் பிடித்திருந்தன. நாவல் எழுதப்பட்டிருந்த காலத்தில் காபி, அனைவருக்குமான பானமாக ஆகத்தொடங்கியிருக்கும் அல்லது ஆகியிருக்கும் போல. 

“நல்ல காபிக்கடை கண்ணில் பட்டால், அநாவசியமாகவே கூட எனக்குக் காபித் தாகம் எடுக்கத் தொடங்கிவிடும். மணிக்கூண்டுக்கருகில் இருந்த ஹோட்டலில் காபி நன்றாகவே இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆகவே அன்றைய தினத்தின் ஒன்பதாவது கப் காபி சாப்பிட எதிர்ப்பட்ட ஹோட்டலில் புகுந்தேன்.

மாலை வேளை; அதுவும் பலகாரம் காபி எல்லாமே நன்றாக இருக்கும் அந்த ஹோட்டலில் என்று பிரசித்தமாகையால், கூட்டம் சற்று அதிகமாகவேதான் இருந்தது. நம் ஊர் நாகரிகத்தின் இன்றைய சின்னம் வேதகோஷம் அல்ல, கோயில்குளம் அல்ல, பள்ளிக்கூடங்களும் அல்ல; காபி ஹோட்டல்கள் தான் என்பது என்னுடைய அனுபவம். காபி கிளப்பில் டவரா டம்ளர் கழுவுகிற சப்தமும் காபியைத் தரம் தெரிந்து ஆற்றுகிற ரசிகர்களின் முகபாவமும் அந்தப் பில் தொகையை நாலு பேருக்கு மத்தியில் எடுத்துத் தருகிற அலட்சிய பாவமும்தான் இன்றைய உண்மையான நாகரிகத்தின் உயர்சின்னங்கள்….” (ப. 44)

அவர் சொல்லும் மற்றுமொரு நாகரிகச் சின்னம்..

“நமது இன்றைய நாகரிகத்தின் சிறந்த சின்னமாகக் கையில் சாக்குப் பையை எடுத்துக்கொண்டு காலையில், சில்லறையுடன், ‘இன்று நாலணாவுக்குக் கறிகாய் வாங்கி விடுவது’ என்று கிளம்புபவர்களைத்தான் சொல்லவேண்டும்.” (ப. 17)

நாவல், ரகுவுக்கும் மம்மேரியார்களுக்கும் இடையே இருக்கும் ரகசியத்தை அறிவதை நோக்கியே செல்கிறது. முதல் சில பக்கங்களிலேயே தொடங்கும் ரகசியத்திற்கான தேடலை, கடைசி பக்கத்தில் தான் தெளியவைக்கிறார் க.நா.சு. அதுவரை ஏதோ மர்மநாவல் படிப்பது போல படிக்க வேண்டியது தான். 

பி.கு: இப்புத்தகத்தின் அட்டைப்படமாக ஃபெர்னார்ட் லெகரின் தி வுமன் இன் ப்ளூ என்ற ஓவியத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள் (பின்னட்டையில் குறிப்பு இருக்கிறது.) நல்ல யோசனை. 

வாழ்ந்தவர் கெட்டால் – கா.ந. சுப்ரமண்யம்
நற்றிணை பதிப்பகம்,
80 பக்கங்கள், விலை ரூ.60

No comments:

Post a Comment