26 Apr 2013

அசுரகணம் – க.நா.சுப்ரமண்யம்


அசுரகணம், க.நா.சு-வின் மற்றுமொரு பரிசோதனை முயற்சி. நினைவோடை உத்தியைக் கொண்டு எழுதியிருக்கிறார். நினைவோடை உத்தியென்றால் நினைவுக்கு வருவது லா.ச.ராவும் அபிதாவும். இந்த உத்தியில் க.நா.சாவுக்கும் லா.ச.ராவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றன. லா.ச.ரா, தனக்குத் தானே பேசிக் கொள்வது மாதிரியிருக்கும்; சிந்தனைகள் எல்லாம் மனம் தனக்கே ஆறுதல் சொல்லிக் கொள்வது போல இருக்கும். ஆனால், க.நா.சுவின் நடை, மனத்தை இரண்டாகப் பிரித்து ஒருமனம் மற்றொன்றிடம் பேசுவது போல இருக்கிறது. மனத்தில் எழும் சிந்தனைகளை அப்படியே எழுதிப்போன மாதிரி. லா.ச.ராவுக்கு முன்னால் யாருமே இருக்கமாட்டார்கள்; க.நா.சுவுக்கு முன்னால் அவர் இருப்பார்; நாம் இருப்போம் என்றும் சொல்லலாம். 


ராமன் என்றொரு பதினெட்டரை வயதுடைய பெரிய மனுஷன், வழக்கமாக எல்லோரும் நினைப்பது போல தான் மற்றவர்களைப் போல இல்லை என்று நினைத்துக் கொள்ளுகிறான். சாதாரணர்களுக்கான இந்த உலகில், மற்றவர்களைப்  போல அல்லாமல், தன்னை அசாதாரணமானவன் என்று நினைத்துக் கொள்கிறான். சில சமயங்களில் தான் பைத்தியமா, அல்லது மற்றவர்கள் பைத்தியமா என்று குழப்பம் வேறு. இவனுடைய சிந்தனை முத்துக்களே அசுரகணம் நாவல்.

ஒரு மனிதனுடைய சிந்தனை எத்தனை தூரம், எங்கெங்கெல்லாம் போகும் என்பதைக் எழுத்திக் கொண்டு வந்திருக்கிறார். அசுரகணத்தை, ‘என் பெயர் ராமசேஷனோடு’ ஒப்பிடமுடியும். ராமன் – ராமசேஷன்; கல்லூரிப் பருவம், தன்னைவிட்டால் கிடையாது என்ற நினைப்பு, அப்பாவைப் படிக்காது, தன்னைத் தானே நொந்து கொள்வது, கடைசியில் நானும் சாதாரணன் என்று ஒப்புக் கொள்வது. ஆதவன் மோருஞ்சாத வாழ்க்கை என்று கிண்டல் செய்தால், இங்கே தன்னுடைய ஆசிரியரை நாரத்தங்காய் என்று கிண்டல். நான் படித்த பத்துப் பன்னிரெண்டு நாவல்களில் இவ்விரண்டும் வந்துவிட்டதாலும், இவ்விரண்டிற்கும் ஒத்துமை இருப்பதாக எனக்குத் தோன்றுவதாலும், இந்த புத்தக அறிமுகத்திற்கு இன்னும் சில வார்த்தைகளைத் தேற்ற வேண்டியிருப்பதாலும் இவற்றை ஒப்பீடு செய்தேன். அஷ்டே. (ஆதவன், க.நா.சுவின் கதையைத் தான் வளர்த்தி எழுதிவிட்டார் என்று யாரும் கிளம்பாமல் இருக்க வேண்டும்.)

“அசுரகணம் என்பது எனக்கும், என்னைப் போலச் சிந்திக்கிற பலருக்கும் திருப்தி தந்த நாவல். அதன் ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் இடையில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் இருந்தன என்பது அதன் ஆழத்தையும் கனத்தையும் அதிகரிக்க உபயோகப்பட்டது.” – முன்னுரையிலிருந்து…

நாவலில் ஒரு கதாப்பாத்திரத்தை ரவிவர்மாவின் ஊஞ்சல் மோகினியோடு ஒப்பிடுகிறார்  (படம்: விக்கிபீடியா)

உண்மையில், கதையின், கதாநாயகனின் ஆழம் என்பது ஒன்றுக்கு இரண்டு முறை படிக்கும் போது நன்கு விளங்குகிறது. தன்னைப் பற்றிய தன்னுடைய எண்ணத்தால் தான் ஒரு உயரத்தில் இருப்பதாகவும், மீதமிருக்கும் அனைத்தும் தன்னுடைய தகுதிக்கு குறைவானவை என்ற எண்ணமுடையவனை மிகக் கவனமாகச் சித்தரித்திருக்கிறார். 

“மறுநாள் அதிகாலையில் மீண்டும் யார் வீட்டிலோ ஏதோ விசேஷம் வந்துவிட்டது போலும். நாதசுரமும் தவிலும் என் காதையும், மனத்தையும் தொளைக்க ஆரம்பித்துவிட்டன. விடியற்காலையிலேயே விழித்துக் கொண்ட நான், சாவுச் சிந்தனைகளும் நானுமாகச் சிறிது நேரம் இருந்துவிட்டு, எழுந்து ஸ்நானம் பண்ணிவிட்டு, சட்டையை மாட்டிக் கொண்டு, தெருக்கோடி ஹோட்டலில் ஒரு கப் மோசமான காபி சாப்பிட்டுவிட்டு, மனவலி தீரக் கால்வலியை வரவழைத்துக் கொள்ளலாம் என்று நடந்தேன்.” (பக். 49)

தடிமனான வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து மீண்டும் படித்துப் பாருங்கள். தன்னுடைய அனுபவத்திற்கு மீறிய, அறிவுக்கு மீறிய விஷயங்களைப் பேசுபவர்கள் இப்படித்தான் ஒரு மாதிரி ‘எடுத்தெறிந்து’ பேசுவார்கள். இந்த ஒரு பத்தி மட்டுமல்ல, ராமனின் சிந்தனைகள் முழுவதுமே இப்படி ஒரு ‘எடுத்தெறிந்து’ பேசும்/சிந்திக்கும் நடையில் தான் எழுதப்பட்டிருக்கின்றன.

பல இடங்களில், க.நா.சு-வா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு வெடிச் சிரிப்பு வரும்படி எழுதியிருக்கிறார்.

“சுற்றி வந்தது நரகம் என்கிற நினைவும், எட்ட இருந்தது இன்பம் என்கிற நினைவும், என் உள்ளத்திலே கால் வீசிக் கைவீசிப் புயல் கிளப்பிவிட்டன. இன்பதுன்பம் தாண்டிய ஒரு நிலையை எட்டினேன் நான். பரப்பிரம்மாவாகவும் பரமஹம்சனாகவும் ஆகியிருக்க வேண்டும் இம்மியளவில் தப்பியது.” (பக். 16)

“முதல்நாள் பூராவையும் ருக்குவுடன் காரம்போர்டு ஆடுவதிலேயே கழித்தேன். நான் அவள் பார்க்காதபோது போர்டில் உள்ள காயின்களைத் திருட்டுத்தனமாகப் பாக்கெட்டுக்குள் தள்ளிக்கூடப் பார்க்கிறேன். அப்படியும் ருக்குதான் ஜெயிக்கிறாள்.

தருமம்தான் இவ்வுலகில் வெல்லும் என்பதற்கு இது சூசகமோ!

காரம்போர்டு போன்ற முக்கியமில்லாத விஷயங்களில் மட்டும் தான் தருமம் வெல்லுமோ?”(பக். 48)

என்னது? உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா? நாவலை முழுவதும் படித்துப் பாருங்கள் சார்/மேடம்.

பொய்த்தேவு நாவலில் தத்துவ விசாரங்கள் நிறைய உண்டு. அது ஒரு வகை. இந்நாவலிலும் தத்துவ விசாரங்கள் உண்டு. ஆனால், பொய்த்தேவு நாவலில் இருப்பது போல, தெளிவாகவும் கச்சிதமாகவும் இருக்காது. ஆனால், ஒரு ‘ஸெமி’’யின் உளறல்கள் போல, ரசமான தத்துவ விசாரங்கள் இங்கே உண்டு. ஒரே ஒரு எடுத்துக்காட்டு, 

“மனிதன் விடுதலையை வேண்டுகிறான் என்பது உண்மையல்ல என்றுதான் தோன்றுகிறது. விடுதலையை வேண்டியவனாக இருந்தால் வீடு என்று ஒன்றைக் கட்டிக் கொண்டிருப்பானா?”

அசுரகணம், க.நா.சுப்ரமண்யம், நற்றிணை பதிப்பகம், 112 பக்கங்கள், ரூ. 75, இணையத்தில் வாங்க

No comments:

Post a Comment