28 Apr 2013

Brave New World- Aldous Huxley

Brave New World
Aldous Huxley
A Novel
Photo Courtesy/To Buy:Flipkart

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘1984’ என்ற நாவலுக்கு எழுதிய விமர்சனம் குறித்த விவாதத்தின்போது, அல்டஸ் ஹக்ஸ்லி எழுதிய “பிரேவ் நியூ வேர்ல்ட்” அதே காலகட்டத்தில் வெளிவந்த Dystopian நாவல், அதையும் முடிந்தால் படிக்கவும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் வழக்கமாகச் செல்லும் வாடகை நூலகத்தில் இந்தப் புத்தகம் இல்லை எனச் சொல்லி விட்டார்கள். இன்னொரு வாடகை நூலகத்தில் உறுப்பினர் ஆகும் வாய்ப்பு கிடைத்தபோது, அவர்களிடம் சொல்லி இந்த புத்தகத்தை தருவித்துக் கொண்டேன். 
 
 
 

இந்த புத்தகத்தின் விமர்சனத்தை எழுதும்போது, கடைசியில் 1984 நாவலுடன் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டி வருகிறது. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு நாவலையும் இன்னொரு நாவலுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டியதில்லை. அதே சமயம் இந்த இரு நாவல்களும் ஒரே சமயத்தில் வெளியாகி, இணையத்தில் சேர்ந்தே விவாதிக்கப்பட்டு வருகிறது என்பதையும் சொல்ல வேண்டும்.

முதலில் இந்த நாவலின் கதைச் சுருக்கம் மற்றும் இந்த நாவல் ஏன் எழுதப்பட்டது என்று பார்த்து விடுவோம். ஃபோர்ட்(Ford), அறிமுகப்படுத்திய கார் உற்பத்தி செய்யும் முறை, மனிதனின் சிறு உதவிக் கொண்டு, பெரிதளவில் இயந்திரங்களால் காரின் சிறு சிறு  உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றாகப் பொருத்தப்பட்டு தயாரிக்கும் முறை. இது நாவலின் அடிநாதம்.

ஹக்ஸ்லியின் இந்த உலகத்தில் ஃபோர்ட் கடவுள். குழந்தைகள் பெண்களால் பெற்றெடுக்கப்படுவதில்லை. அவர்களும் இயந்திரங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறார்கள். அதுவும் ஆண் - பெண் என்று இல்லை. அல்பா, பீட்டா, காமா(Gamma),எப்சிலான் என்று மனித பிரிவுகள். இவற்றிலும் பல உப பிரிவுகள். அல்பா மிக புத்திசாலிகள், எப்சிலான் மிக முட்டாள்கள். அவர்கள் பாட்டிலில் உருவாகும்போதே, அவர்கள் உடம்பில் மது செலுத்தப்படுவதும், அவர்கள் பிரிவுக்கு ஏற்ப அவர்கள் ஆக்சிஜென் கூடி- குறைப்பதும், அவர்கள் பாட்டிலில் இருந்து வெளிவந்தவுடன், அவர்கள் தூக்கத்தில் இருக்கும்போது அவர்கள் பிரிவுக்கு ஏற்ப பாடம் கற்பிப்பதும், அதனால் கடைசிவரை அந்த உணர்வுகளை தாங்கிக் கொண்டு இருப்பதுமாக இருக்கிறது. 

இந்த உலகத்தில் குடும்பம் என்று ஒன்றே கிடையாது. எல்லாரும் எல்லோருக்குமாக படைக்கப்பட்டிருக்கிறார்கள். எல்லோரும் சந்தோஷமாக வாழவே படைக்கப்பட்டிருக்கிறார்கள். சோகம், துக்கம், கோபம் என்று எது வந்தாலும் ‘சோமா’ எடுத்துக் கொண்டால் சரியாய் போய்விடும். சோமா என்பது ஒரு வகை மது.

தாய்- தந்தை என்ற சொல்லே ஒரு வித அருவருப்பை ஏற்படுத்தக்கூடியதாக அவர்கள் சிந்திக்க வைக்கப்படுகிறார்கள். இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே ஆண் - பெண் உடலுறவு அசிங்கமானதாகப் பார்க்கப்படுவதில்லை. சிறு வயது முதலே அது நல்ல பழக்கம் என்று அறிவுறுத்தப்படுகிறது. யார் வேண்டுமானாலும் (அந்த பிரிவுக்குள்) யாருடனும் உறங்கலாம். அதே மாதிரி இறப்பு என்பது இங்கு பயப்பட வேண்டிய விஷயம் இல்லை. சிறு வயது முதலே, அது குறித்து தெளிவாக பாடம் எடுத்து, ஒரு குறிப்பிட்ட வயது ஆனவுடன் கொன்று விடுகிறார்கள். இங்கே சந்தோஷம், சந்தோஷம் மட்டுமே.

இந்த உலகம் தவிர, இவர்களால் கட்டுப்படுத்த முடியாத இன்னொரு சிறு பரப்பு காட்டுமிராண்டி பகுதி (Savages reservation) என்று அழைக்கப்படும் இடத்தில் இருக்கிறது. அந்தப் பகுதியில் அறிவியல் வளர்ச்சி இல்லையே தவிர பாக்கி எல்லாம் சாதாரணமாக இருக்கிறது. 

கதையின் ஆரம்பத்தில் மேற்சொன்ன, குழந்தை தயாரிப்பு, செக்ஸ், குடும்பம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் வருகின்றன. அதை தொடர்ந்து லெனினா என்ற பெண்ணும் பெர்னார்ட் என்ற ஆணும் reservation பகுதியைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள். அங்கே நாகரிக (civilisation) பகுதியிலிருந்து போன ஒரு பெண்ணை, அவளுக்கு பிறந்த ஒரு ஆண், இவர்களை சந்திக்கிறான். இந்த பெண் லிண்டா, அந்த ஆண் ஜான்னின் (இங்கு நாகரிகம் என்று குறிப்பிடப்படுவது எல்லா வசதிகளும் கொண்ட உலகம்). தந்தை  குழந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர். ஜான் - லிண்டா, பெர்னார்ட் -லிண்டாவுடன் நாகரிகமடைந்த உலகத்துக்கு வருகின்றனர். அதைத் தொடர்ந்து கதை முடிவை நோக்கி செல்கிறது.

ஆர்வெல்லின் 1984 உலகத்தை ஒப்பீடு செய்யும்போது இங்கு நிறைய வேறுபாடுகள். அங்கு செக்ஸ் அருவருப்பை ஏற்படுத்தக்கூடியது, ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்கு மட்டுமே அனுமதி. இங்கு அப்படியே தலைகீழ். அங்கு செய்திகள் (Information) தடை செய்யப்பட்ட ஒன்று, மக்கள் மிக அதிகமாக கண்காணிக்கப்பட்டனர். இங்கு அவ்வளவு பயங்கரம் இல்லை. ஆனால் புத்தகங்கள், கடவுள் எல்லாம் தடை செய்யப்பட்டுள்ளன. அங்கு மக்கள் சில சமயம் சோகம், துக்கம் அடைகின்றனர். ஆனால் இங்கு மகிழ்ச்சி மட்டுமே. ஹக்ஸ்லி இந்த நாவலை காலத்தை கொஞ்சம் கவனித்தால், தொடர் இயந்திரமாக்கல், அதை தொடர்ந்து மிகை நுகர்வுக் கலாசாரம், அமெரிக்காவில் அவர் கண்ட ஆண்-பெண் உறவு, என்பதெல்லாம பாத்து  இந்த நாவலை எழுதுகிறார் என்று தெரிகிறது.

ஹக்ஸ்லி கண்ட இந்த உலகம் இப்போது எவ்வளவு மாறிப் போயுள்ளது என்று பார்த்தால், Corporate கம்பெனிகளில் அதை கவனிக்கலாம். எல்லாரும் ஒரே குடும்பம் என்று கூப்பாடு போடும் கம்பெனிகள். மிக அதிகமாக மக்களிடையே ஊடுருவி இருக்கும் தொலைகாட்சி, IPL. எந்த பிரச்சனை எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், யார் ஜெயித்தார்கள் என்பதே முக்கியம் என்ற அளவுக்கு மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளது. ஒரு விதமான தனி மனித சுதந்திரம் கொஞ்சமாக கைப்பற்றப்பட்டுக் கொண்டு வருகிறது என்று நம்புகிறேன். 1984 அளவுக்கு இது படிக்கும் போது நம்மை பயப்பட வைக்கவில்லை. ஆனால் இயந்திரமாக்கலில் நாம் இழந்துக் கொண்டு வரும் சில விஷயங்களை ஹக்ஸ்லி சூசகமாக உணர்த்தி விடுகிறார்.




No comments:

Post a Comment