4 May 2013

Terminal - Robin Cook


Terminal
Robin Cook
Novel

Photo Cortuesy/To Buy:Barnesandnoble



சில சமயம் எங்கேயாவது நீண்ட பயணம், முக்கியமாக ரயிலில் போகும்போது, நிறைய போர் அடிக்கும். அந்த மாதிரி சமயங்களில் எதாவது படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். கொஞ்சம் படிக்கலாம், கொஞ்ச நேரம் வேடிக்கை பார்க்கலாம். 

இந்தப் புத்தகத்தை அது மாதிரியான ஒரு ரயில் பயணத்தின்போது படிக்கவில்லை, வீட்டில் வெட்டியாக இருந்தபோது படித்தது. ஆனால் ரயில் பயணங்களில் படிக்க ஏதுவான புத்தகம். 

ராபின் குக், ஒரு மருத்துவர், அதே சமயம் நாவலாசிரியர். நிறைய மருத்துவம் சார்ந்த த்ரில்லர் கதைகளை எழுதி இருக்கிறார். “டெர்மினல்” அதே மாதிரியான ஒரு நாவல். என்னுடைய நண்பன் ஒருவன், சில வருடங்கள் முன்பு பழைய புத்தக கடையில் இந்த மாதிரி புத்தங்களைப் படிக்க வாங்கி, அவர் படித்து விட்டு, எனக்கு படிக்கத் தந்தான்.

இந்த மாதிரி புத்தகங்களின் சிறப்பு, ஒரு கதாநாயகன், அவன் இருக்கும் துறையில் நடக்கும் மர்மமான நிகழ்ச்சி, அதில் அவர் தெரிந்தோ, தெரியாமலோ மாட்டிக் கொள்ளுதல், அதைத் தொடர்ந்து, அந்த புதிரை எப்படி விடுவிக்கிறார், என்று செல்லும்.

இந்த நாவலும் முன் சொன்ன மாதிரியான சம்பவங்களால் ஆனது தான். Sean Murphy மருத்தவ பட்டம் பெற்று, மருத்துவ துறையில் ஆராய்ச்சி செய்யும் மாணவன். தன்னுடைய ஆராய்ச்சிப் பணியின் ஒரு பகுதியாக சில காலம் மியாமியில் இருக்கும் ஒரு புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி + ஆஸ்பத்திரியில், இரண்டு மாதம் வேலை செய்யச் செல்கிறார். இவருக்கு Janet Reardon என்று ஒரு காதலி.

இவருக்கு இந்த பெண்ணின் மீது ஈர்ப்பு இருகிறது. அவளிடம் கடைசி நிமிடத்தில் அதைச் சொல்லிவிட்டு, மியாமி செல்கிறார். சீன்(Sean)  மியாமி செல்வதற்கு முக்கியமான காரணம், அந்த ஆராய்ச்சி நிறுவனம், மூளையில் உண்டாகும் ஒரு புற்றுநோயை நூறு சதவிதம் குணப்படுத்துவதுதான். சீன் ஆராய்ச்சி செய்யும் துறையும் இதுதான். 

ஆனால் அங்கு போய் அந்த நிறுவனத்தின் தலைவர் ரண்டோல்ப் மன்சன் (Randolph Manson) மற்றும் புற்றுநோய் சிறப்பு நிபுணர் Dr.Levyயை சந்தித்த பிறகு, அந்த மூளை புற்றுநோயில் ஆராய்ச்சி செய்ய மறுக்கப்படுகிறார். சீன் இரண்டு வருடம் முன்பு ஆராய்ச்சி செய்த பகுதி ஒதுக்கப்படுகிறது, இதனால் கொஞ்சம் கோபம் + வருத்தமடைகிறார்.

இந்த சமயம் அவரின் காதலி ஜானெட் வருகிறார். அவர் ஒரு செவிலி, சீனை(Sean) துரத்திக் கொண்டு மியாமி வருகிறார். சீன் வேலை செய்யும் ஆஸ்பத்திரியில் செவிலியாக சேர்கிறார். ஜானெட் எப்படியாவது சீனை திருமணம் செய்யவேண்டும் என்ற முடிவில் இருப்பவர். 

ஜானெட் உதவிகொண்டு சீன் அங்கு மூளை புற்றுநோய் மருந்துகளை analyse செய்கிறார். ஜானெட் இந்த புற்றுநோய் யாருக்கு எல்லாம் வந்து உள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு எடுக்கிறார். இந்த நோய் முக்கியமாக மிகுந்த பணம் உள்ளவர்களைதான் தாக்குகிறது என்று அறிகிறார். இதே சமயத்தில் ரண்டோல்ப் சீனை பற்றி இன்னும் அறிந்து கொள்வதற்காக, ஸ்டெர்லிங் என்றொரு Detectiveஐ நியமிக்கிறார். இந்த மருத்துவமனையில் ஜப்பானை சேர்ந்த சுஷிதா நிறுவனம் முதலீடு செய்து, அங்கு பணி செய்ய வரும் மருத்துவர்களை நிறைய சம்பளம் கொடுத்து ஜப்பான் கடத்திச் செல்கிறது. இன்னொரு பகுதியில் ராபர்ட் ஹாரிஸ், மருத்துவமனை தலைமை காவல் அதிகாரி, சீனை பின் தொடர்கிறார். டாம் விடிகோம்ப், மனநலம் பாதிக்கப்பட்ட நபர், ஜானெட்டைப் பின் தொடர்கிறார்.

 இந்த சமயத்தில் ஹெலன் கபோட், அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் (மூளை புற்றுநோய்) மரணம் அடைகிறார். சீன் அந்த பெண்ணின் மூளையை மட்டும் அடக்கம் செய்யும் இடத்திலிருந்து திருடி எடுத்து வருகிறார். ஜானெட் கொடுத்த மருந்துகளை அதன் மீது செலுத்தி ஆராய்ச்சி செய்கிறார். அந்த வாரயிறுதியில் மால்கம்  என்பவரை சீன் மற்றும் ஜானெட் சந்தித்து பேசுகிறார்கள். அவர் இந்த மியாமி மருத்தவமனையில் இருந்து மூளை புற்றுநோயிலிருந்து குணப்படுத்தப்பட்டவர். 

அவர் சொல்லும் ஒரு விஷயம் சீனைத் தூண்டவே ஜானெட்டை அழைத்துக் கொண்டு மேலும் இந்த புதிரை அவிழ்க்கச் செல்கிறார். ஒரே சமயத்தில் ராபர்ட், ஸ்டெர்லிங், டாம், சுஷிதா நிறுவனத்தைச் சேர்ந்த தமகா யமகுச்சி என்று பலரும் சீனை ஒவ்வொரு பகுதியில் இருந்து துரத்த, இந்த நாவல் வெகு வேகமாக முடிவை நோக்கிச் செல்கிறது.

இந்த நாவல் படிக்கும்போது முதலில், இதில் வரும் மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்த்தைகள் புரிபடாமல் இருந்தாலும், படிக்கப் படிக்க நாவல் சுவாரசியம் குறையாமல் இருந்ததால், இது பெரும் குறையாக தெரியவில்லை. 

இந்த மாதிரி நாவல்கள் படிக்கும்போது நான் ஆச்சரியப்படுவது, அவற்றின் எடிட்டிங். ஒரு இடத்தில கூட நாவலில் தொய்வு இருக்காது. எடிட்டர்களின் பங்கை வியக்காமல் இருக்க முடிவதில்லை. உடனே இந்த நாவல் காலத்தை கடந்து நின்றதா, எதாவது ஒரு பகுதி உங்களை தாக்கியதா என்று கேட்கக் கூடாது. இந்த நாவல் ஜஸ்ட் ஒரு பொழுதுபோக்கு. அதே சமயம் மருத்தவ துறையில் நடக்கும் குளறுபடிகளைக் கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறதோ என்று மனம் சிந்தித்தாலும், ஒரு நாவலை எப்படி எழுத வேண்டும் என்பதை இவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment