17 Jun 2013

வெண்ணிற இரவுகள் – ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி


ரஷ்ய இலக்கியங்களைப் படிக்கவேண்டுமென்று ஒரு ஆசை சில நாட்களாகவே இருந்து கொண்டேதான் இருக்கிறது. பொதுவாகவே எல்லோரும் சொல்லிச் சிலாகிக்கும் ஒரு பெயர் தஸ்தயேவ்ஸ்கி. அதில் அப்படி என்னதான் இருக்குமென அறியும் ஆர்வம் எந்தக்கணம் உட்புகுந்ததெனத் தெரியவில்லை. முழுக்க முழுக்க லேபிளை மட்டுமே வைத்து வாங்கிய சரக்கு இது. ஒரு குறு நாவல்தான் எனினும் இப்புத்தகம் தந்த தாக்கம், ஒரு உணர்வு சமீபத்தில் நான் வாசித்திருந்தவற்றில் எதிலும் கிடைத்திருக்கவில்லை.

நிறைய நண்பர்கள் வேண்டும், பெண்கள் நம்மிடம் சரி சமமாக, தோழமையுடன் பேச வேண்டும். இதெல்லாம் பொதுவாகவே இளைஞர்களுக்கு இருக்கும் ஆசைகள், விருப்பங்கள். ஆனால் நாம் காணும் அனைவருமே ஒருபோல இருப்பதில்லை. நாமும் எல்லோரிடமும் ஒரேபோல் நடிப்பதுமில்லை. எல்லோரிடமும் இருக்கும் அவரவர் சுயம் வெளிப்படும் தருணங்களில் உடனிருப்பவர் எவ்வாறு பதில்வினையாற்றுகிறார் என்பதில்தான் நட்பு காதல் போன்ற மற்று உறவுகளும். மனம் முழுக்க அன்பும், தம்மை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாத ஒரு சுபாவமும் கொண்டவருக்கு இப்படியாக உறவுகள் அமைவது மிகச் சிரமமே.

இந்தக் கதையில் தஸ்தாயேவ்ஸ்க்கியின் நாயகன் இதுபோலொருவன் தான். பீட்டர்ஸ்பர்க் நகரில் எட்டு ஆண்டுகளாக வசித்தும் ஒருவரைக் கூட நண்பராக பெற்றிடாத ஒருவன். தன்னைத்தான் சோகத்திலோ அன்று கண்ட எதோ ஒரு காட்சியின் மகிழ்ச்சியிலோ ஆழ்த்திக்கொண்டு தனக்கு யாரும் நண்பர்களாய் இல்லததினால் அங்கிருக்கும் தெருக்களில் நடமாடும் ஒவ்வொருவரையும் கவனித்தவாறே, அந்த இயற்கையில் தன்னை கரைத்துக் கொண்டு நடமாடுகிறான். எல்லோரும் அவரவர் கிராமத்துக் குடிலுக்குச் செல்வது இவனுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோரும் தன்னைப் பிரிவதாக எண்ணிக் கொள்கிறான். “என்னுடன் வா” என்றழைக்க யாருமில்லாத தனிமை இவனை மேலும் நோகடிக்கிறது.

இது போலான ஒரு இரவு நேர நடை பயணத்தில் இளம் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அழுதவாறு இருக்கிறான். ஆறுதல் சொல்லலாமா என்றெண்ணியவன் குறைந்தபட்சம் அவள் ஏன் அழுகிறாள் என்றாவது கேட்கலாமென நெருங்கிச்சென்று தயக்கத்தினால் தன் முடிவைக் கை விடுகிறான். அவள் அழுதவாறே நடந்து செல்கிறாள். ஒரு முரடனொருவன் அவளைத்தொடர்ந்து செல்ல இவன் அவளை காப்பாற்றுகிறான். முதல்முறையாக ஒரு பெண்ணிடம் பேசும் வாய்ப்பையும் பெறுகிறான். அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். அவள் அழுத காரணத்தைக் கேட்கிறான். ஆறுதல் கூறுகிறான். தான் அவளுடன் பேசியதில் மகிழ்ச்சி என்றும், இதுவரையிலும் பெண்களிடம் பேசிப் பழகியதில்லை என்றும் கூறுகிறான். அவளுக்குப் பிடித்தமானவனாக இருக்க விரும்புவதாகவும் கூறுகிறான். நாளையும் அதே இடத்தில் அவளுக்காக காத்திருப்பதாக சொல்கிறான். தன்னைக் காதலிக்ககூடாது என்னும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் அவளும் அடுத்தநாள் அங்கு வருவதாக் உறுதியளிக்கிறாள். இப்படியாக முதல் நாள் இரவு முடிகிறது.

அடுத்த நாள் அவள் வருகிறாள். அவள் வருகையில் மகிழ்வுற்றவன் தன்னைப்பற்றி அவளிடம் கூறுகிறான். ஒரு நல்ல நண்பர்களைக்கூட பெற்றிடாதவன் என்றும் தன் வாழ்க்கை நிலையைப்பற்றியும் தனிமையின் கொடுமையில் வாழ்வதாகவும் கூறுகிறான். அவள் தன்னை நாஸ்தென்கா என அறிமுகப்படுத்திக் கொள்கிறாள். தனக்கு ஆதரவென்று ஒரு பாட்டி மட்டும்தான் என்றும், கண் தெரியாத பாட்டி, நாஸ்தென்கா பெரியவளானதும் தன் ஆடையை அவள் ஆடையோடு ஊக்கு குத்திக்கொண்டு எங்கும் போக விடமாட்டாள் என்றும் புத்தகங்கள் படிக்க கூட அனுமதிப்பதில்லை என்றும் கூறுகிறாள். அந்த சமயத்தில் தங்கள் வீட்டு மாடியில் குடியிருந்த ஒருவரைத் தான் நேசித்ததாகவும், ஒரு வருடத்திற்குப்பின் வந்து தன்னை அழைத்துப் போவதாய் சொல்லியிருக்கிறார் என்றும் அவருக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறாள். அவர் இன்னும் வராததை எண்ணி வருந்துகிறாள். அவருக்கு ஒரு கடிதம் எழுதித்தந்தால் அவரிடம் கொண்டு சேர்ப்பதாகச் சொல்கிறான் இவன். அவளுக்குப் பிடித்தமானவனாக, ஒரு நண்பனாக இரண்டாம் இரவும் முடிகிறது. பகலிலும் கூட அடர்ந்த தனிமை இருளில் வசித்திருப்பவனுக்கு தன் வாழ்வில் ஒரு பெண்ணின் வருகை, இரவில் அவளின் சந்திப்பு அவனது இரவுகளை உறக்கமற்றதாக்குகிறது. வெறும் இரவுகள் அவனுக்கான வெண்ணிற இரவுகளாகிறது.

மூன்றாம் இரவும் இருவரும் சந்திக்கின்றனர். அவருக்காக காத்திருக்கின்றனர் இருவரும். அவர் அன்றும் வரவில்லை. இருவருக்குமிடையேயான புரிதல் இன்னும் அதிகரித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவள் கூறுகிறாள் “என்மீது நீங்கள் காதல் கொண்டுவிடாமல் இருப்பதால்தான் நான் உங்களை மிக நேசிக்கிறேன்”. அவளறியாமலே அவளுக்கு அவன் மீது ஒரு பற்றுதல் வந்து விடுகிறது. தானும் அவ்வாறு உணர்வதாய்க்கூறி இருவரும் நாளை சந்திப்பதாய்க் கூறி பிரிகின்றனர்.

நான்காம் இரவும் வருகிறது. இத்தனைக்குப்பிறகு அவளின் விம்மல்கள் கண்டு அவன் நொடிந்து போகிறான். அவளைக் காதலிப்பதாக உரைக்கிறான். பல குழப்பங்கள் அவளை சூழ்கின்றன. இருந்தும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கிறாள். அந்த சமயத்தில் அவளின் காதலன் வந்து நாஸ்தென்காவை அழைத்துச்செல்கிறான்.

இருவிதமான முடிவுகளே சாத்தியம் எனும்போது, அவை தெரிந்திருந்தும் அந்த நான்காம் இரவின் பக்கங்களைப்படிக்கும்போது ஏதோ ஒரு கோழிக்குஞ்சினை கையில் வைத்திருப்பதான ஒரு பரபரப்பு உணர்வு. இறுக்கிப்பிடித்தால் இறந்துவிடுமோ என்றொரு மனநிலை. அவள் காதலனோடுதான் சேர்கிறாள் என்றபோதும், இவன் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டதை எண்ணும் தருணங்களில் என்னையறியாமல் கலங்கி விட்டேன். இதை வைத்து எத்துனையோ சினிமா பார்த்திருப்போம். இருந்தும் கூட எழுத்தில் அந்த வலியை உணரச்செய்தது மிக அருமை. அதுவும் அவள் காதலன் முன்பாக இவனை வந்து இறுக்க அணைத்துக்கொள்வாள் நாஸ்தென்கா. அப்போது வந்த உணர்வை எழுத்தில் சொல்வது மிகக்கடினம். உணரப்பட வேண்டியதது.

நாஸ்தென்கா, எங்கோ பீட்டர்ஸ்பெர்க் நகரில் உன்னையே எண்ணி வாழ்ந்த ஒருவனின் ஆன்மாவாக என்னை இப்போது கருதுகிறேன். உன்னை நான் ஒருபோதும் காதலித்து விடக்கூடாது என்று சொல்லி எந்தன் ஏமாற்றத்தை தடுத்ததிலாகட்டும், பெண்கள் குறித்த எனது தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்து என்னை ஓர் ஆணாக உணரச்செய்ததிலாகட்டும், எந்தன் தனிமைப் பிணியைப் போக்கி என்றும் மறவா இனிய நினைவுகளைக் கொடுத்ததிலாகட்டும், எந்தன் காதலை உணர்ந்து இறுக அணைத்த அணைப்பிலாகட்டும், எனது அருமை நாஸ்தென்கா இன்றும் இப்போதும் ஒவ்வொரு கணமும் என் நினைவுகளில் நீ நிழலாடுகிறாய், உன்னை அதிகமதிகம் நேசித்துக்கொண்டேதான் இருக்கிறேன்.

குறுநாவல் | ஃபியோதர் தஸ்தாயேவ்ஸ்கி | மொழிபெயர்ப்பு | ரா. கிருஷ்ணையா | நியூ செஞ்சுரி வெளியீடு | பக்கங்கள் 94 | விலை ரூ. 70

இணையத்தில் வாங்க: டிஸ்கவரி

1 comment:

  1. நல்ல வாசிப்பு.அருமையாக உணரவைத்துள்ளீர்கள்.

    ReplyDelete