28 Jun 2013

Civilization – the West and the Rest by Niall Ferguson

சிறப்புப் பதிவர்: ரவி நடராஜன் 


அலுவலக வேலை காரணமாக பயணம் மேற்கொள்ளும்பொழுது, புதிய ஊரில், புதிய இடத்தில் தூக்கம் வராமல் புரளுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. ஆனால் அவ்வாறு புரண்டபோது, விடுதி அறையில் இருந்த தொலைகாட்சி ரிமோட்டில் சானல்களை மாற்றுகையில் புத்தக விமர்சனம் ஒன்று காலை 3 மணி என்றபோதும் என் ஆவலைத் தூண்டி, புத்தகத்தின் பெயரை பத்திரமாக எழுத வைத்தது. இது புதிது. பிறகு அந்தப் புத்தகத்தைத் தேடிப் படித்ததுடன், அந்த எழுத்தாளரின் இன்னும் மூன்று புத்தகங்களை வாசித்ததும் வேறொரு கதை.

அப்படி என்ன விஷயம் இந்தப் புத்தகத்தில்? 

ஒரு மேற்கத்திய எழுத்தாளர், “மேற்குலகின் ஆதிக்கம் முடியும் நேரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!” என்கிறார். 

1970 –களில் ஒரு சராசரி அமெரிக்கர், ஒரு சராசரி சீனரை விட 70 மடங்கு பணக்காரராக இருந்தார். 2000-களில், அதே சராசரி அமெரிக்கர், அதே சீனரைவிட 5 மடங்குதான் பணக்காரர் என்ற நிலைக்கு வந்து விட்டார். சீனாவின் ராட்சச முன்னேற்றம் ஒரு காரணம் என்றாலும், அமெரிக்கரின் முன்னேற்றத் தொய்வும் இன்னொரு காரணம்.  1970க்கு முந்தைய 30 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஏற்பட்ட 14 மடங்கு முன்னேற்றம் என்பது, மனித சரித்திரத்தில் எங்கும் எப்போதும் நிகழ்ந்ததே இல்லை.

இதையெல்லாம் கேட்கக் கேட்க என் முழு தூக்கமும் கலைந்து இந்தப் புத்தகம் பற்றிய தொலைகாட்சி விமரிசனத்தை உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினேன். ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான, Niall Ferguson என்பவரின், “Civilization – the West and the Rest”, என்ற புத்தகம் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த உரையாடல் அன்றிரவு புதிய பல சுவாரசியமான வாதங்களை கவனத்துக்குக் கொண்டு வந்தது. புத்தகத்தையும் வாங்கிப் படிக்க வைத்தது.

ஒரு 500 ஆண்டுகளுக்கு முன் மேற்குலகு மற்றும் அதன் ஆதிக்கம் என்று எதுவும் இல்லை. சீனாவும் இந்தியாவும் உலக வல்லரசுகளாய் திகழ்ந்து வந்தன. மேற்குலகம் எப்படி இந்தக் குறுகிய காலத்தில், உலகை ஆட்டிப் படைக்கும் அளவுக்கு வளர்ந்தது? ஏன் எங்கோ இருக்கும் சிரியாவில் அமைதி நிலவ, எல்லோரும் அமெரிக்கா ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஏன் பாகிஸ்தானின் பல தீவிரவாத உதவி அமைப்புகளை ஒடுக்க அமெரிக்காவை எதிர்பார்க்கிறோம்? ஏன் யாருமே ஒரு சிறிய லத்தீன் அமெரிக்க நாட்டின் பிரச்சனையை தீர்த்து வைக்கக்கூட, இந்தியாவை நினைத்துப் பார்ப்பதில்லை?

வேறு விதத்தில் சொல்லப் போனால், மேற்குலகின் ஆதிக்கம் என்றால் என்ன? எப்படி இவர்களால் தொடர்ந்து ஆதிக்கம் செய்ய முடிகிறது? ஏன் அந்த ஆதிக்கம் கடந்த 20 ஆண்டுகளாய் தளர்ந்து வருகிறது? அடுத்த 20 ஆண்டுகளில் யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்? அடுத்த ஆதிக்க சக்திக்கும் மேற்குலகிற்கும் என்ன வித்தியாசம்? ஆதிக்கம் செய்ய வேண்டுமானால், ஒரு நாடு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? மேற்குலகின் கடந்த 500 ஆண்டு ஆதிக்க  வரலாற்றைக் கொண்டு உலகம் என்ன கற்றுக் கொள்ள முடியும்?

மேற்குலகின் ஆதிக்கத்தின் ரகசியம் ஒன்றல்ல – ஆறு விஷயங்களில் அடங்கியது என்பது ஃபெர்கூஸனின் வாதம். இந்த ஆறு விஷயங்களும் வளர்ச்சித் தூண்கள் எனலாம். 

வியாரங்களுக்குள் போட்டி (Competition)
விஞ்ஞானம் (Science)
சொத்து வரம்புச் சட்டங்கள் (Property)
மருத்துவம் (Medicine)
நுகர்வு (Consumption)
வேலை நெறிகள் (Work Ethics)

இந்த ஆறு விஷயங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே 500 ஆண்டு கால ஆதிக்கம். இவை ஒவ்வொன்றும் ஒரு அமைப்பு (institution). இன்றைய மேற்குலகம் இவற்றின் பிடியை இழந்து விட்டாலும், அடுத்த கட்ட வல்லரசுகள் இந்த அமைப்புகளை நன்றாக புரிந்து செயல்பட்டாலே சில ஆண்டுகளாவது ஆதிக்கம் செலுத்த முடியும். இன்று சில நாடுகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகத் தோன்றினாலும் இந்த ஆறு வளர்ச்சி அமைப்புகளிலும் சீராக வளரக் காணோம். ஏதாவது ஒன்றோ அல்லது சிலவற்றிலோ சரியான வளர்ச்சி இல்லாததால் இன்னும் அமெரிக்காவையோ மற்ற மேற்குலகு வல்லரசுகளையோ எவற்றாலும் தூக்கி எறிய முடியவில்லை. 

1980 –களில், ஜப்பான் அடுத்த பெரிய வல்லரசு என்று பேசப்பட்டது. ஆனால் இன்றுவரை அது நிகழவில்லை. சீனா இன்னும் ஒரு 8 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக மாறப் போவது உறுதி. ஆனால், இன்னும் சில அமைப்புகளில் மேற்குலகை முழுவதும் காப்பியடித்தால் மட்டுமே அது உலக அளவில் ஆதிக்க நாடாக முடியும். இந்தியாவின் வளர்ச்சியோ சீரற்ற ஒன்று. இதை ஆமை வேக பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி என்று சொல்லலாம். இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு இந்தியா உலகளவில் ஒரு வல்லரசாகி ஆதிக்கம் செலுத்த வழியில்லை. சில அமைப்புகளில் பிரமாதமாக விளங்கும் இந்தியா, மற்ற அமைப்புகளில் ஏராளமாக பின்தங்கியுள்ளது. 

இவரது ஆறு அமை[ப்புகளிலிருந்தும் சிறிய உதாரணங்களை பார்க்கலாம்.

போட்டி – முதலியத்தின் அடிப்படை இது - அரசியல் மற்றும் வியாபாரத்தில் தடையற்ற போட்டி இருக்க வேண்டும். இந்தப் போட்டி மனப்பான்மை வளர்ச்சியைத் தூண்டிக் கொண்டே இருக்கும். ஃபெர்கூஸன், இங்கிலாந்து தன் பொருட்களை எப்படி தன் கடற்படை சக்தியைக் கொண்டு சீனாவின் மீது திணித்தது என்று அழகாக புள்ளிவிவரங்களுடன் விவரிக்கிறார். வாஸ்கோ இந்திய (கோழிக்கோடு) ராஜ்ஜியங்களுடன் எப்படி அடாவடி வியாபாரம் நடத்தினார் என்பதையும் விவரிக்கிறார் ஃபெர்கூஸன். இன்று அந்தப் போட்டி சற்று இலை மறைவு காய் மறைவாக நடக்கிறது. வளரும் இந்தியாவும் சீனாவும் தன் வளர்ச்சிக்கு வேண்டிய கச்சா பொருட்களுக்காக போர் நிகழ்த்தாவிட்டாலும், ஏதேதோ அடாவடி ஆப்பிரிக்க மற்றும் அரபு தேசங்களோடு உறவு வைத்துக் கொள்கின்றன. பல கச்சா பொருள் தயாரிக்கும் சுரங்க கம்பெனிகளில் முதலீடும் செய்கின்றன. இந்த விஷயத்தில் வளரும் சீனா போன்ற நாடுகள் நன்றாக தேறிவிட்டன.

விஞ்ஞானம் – இயற்கையின் பல சக்திகளை முறைப்படி ஆராய்ந்து, அந்த ஆற்றல்களை ராணுவ பயன்பாடுகளாக மாற்றுவது ஆதிக்கத்தின் இன்னொரு அடிப்படை அமைப்பு. அன்றாட வாழ்க்கைக்கு தொழில்நுட்பம் உதவினாலும், ராணுவ பயன்பாடுகள் ஆதிக்கத்திற்கு மிகவும் அவசியமானவை. ஃபெர்கூஸன், 17-ஆம் நூற்றாண்டில் வியன்னாவில் நடந்த ஆட்டமன் ராஜ்ஜிய வீழ்ச்சியை விஞ்ஞானத்தின் முதல் வெற்றியாகச் சொல்கிறார். நியூட்டன் ஆரம்பித்த இயக்க பெளதிக புரட்சியின் வெற்றியே இப்போரில் உபயோகிக்கப்பட்ட பீரங்கி போர் முறைகளை உருவாக்கப் பயன்பட்டது. இதே போர் முறைகள் இந்திய துணைகண்டத்தை ஆதிக்கம் செய்யவும் உதவியது. அரபு, சீன மற்றும் இந்திய விஞ்ஞானம் மேற்குலகின் விஞ்ஞானம் வளர்வதற்குமுன் கொடி கட்டிப் பறந்தாலும், அச்சு என்ற மேற்குலக புரட்சி மூலமே உலகெங்கும் மேற்கத்திய விஞ்ஞான அறிவு பரவத் தொடங்கியது. இன்று இந்தியாவும் சீனாவும் மேற்குலகின் விஞ்ஞானத்தை காப்பியடித்தாலும் அதில் முழுவதும் வெற்றியடையவில்லை. சீனாவைவிட இந்தியா அடிப்படை விஞ்ஞான ஆராய்ச்சியில் பின்தங்கி வருகிறது.

சொத்து – தனியார் சொத்து வாங்கவும் விற்கவும் சரியான சட்ட திட்டங்கள் மிகவும் அவசியம். இதனால் எழும் மோதல்களுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களின் பங்களிப்பும் அவசியம். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடையே உள்ள மிக முக்கிய வேறுபாடு இது. ஒரே சமயத்தில் தோன்றிய நாடுகளாக இவை இரண்டும் இருந்தபோதிலும், பாகிஸ்தானின் சொத்துரிமைச் சட்டங்கள் பின்தங்கியுள்ளதால், அந்த நாடும் பின்தங்கியே உள்ளது. ஐரோப்பிய சக்திகள் (இங்கிலாந்து) அமெரிக்காவில் காலடி பதித்தவுடன் செய்த முதல் வேலை சொத்துரிமைச் சட்டங்களை உருவாக்கி அமல்படுத்தியதுதான். ஸ்பானியர்கள் மெக்சிக்கோ மற்றும் தென் அமெரிக்காவைக் கைப்பற்றினாலும், சொத்துரிமைச் சட்டங்களில் சற்று பின்தங்கிவிட்டதால், இன்றுவரை பின்தங்கியே இருக்கின்றன என்பது ஃபெர்கூஸனின் வாதம். புதிய வல்லரசு போட்டியாளர்கள் இந்த விஷயத்தில் சற்றும் கவனம் செலுத்துவதாக தெரியவில்லை.

மருத்துவம் – மக்கள் தம் வாழ்நாளில் குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் உபயோகமாகச் செயல்பட மருத்துவ முன்னேற்றம் மிகவும் அவசியம். மக்களின் சராசரி ஆயுள் நீள்வதற்கு மருத்துவம் ஒரு முக்கிய காரணம். ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்க முறைகளை ஒப்பிடும் ஃபெர்கூஸன், பிரிட்டிஷ் அரசாங்க மருத்துவ முறைகள் பிரெஞ்சு முறைகளைவிட நன்றாகவும், பிரெஞ்சு முறைகள் ஜெர்மானிய மருத்துவ வழிமுறைகளைவிட நன்றாக இருந்ததை புள்ளி விவரங்களுடன் விவாதிக்கிறார். பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தங்களுடைய குடியேற்ற நாடுகளிலும் மிஷனரிகள் மூலம் மருத்துவ வசதிகளை உருவாக்கி சராசரி மக்களின் நம்பிக்கையை பெற முயன்றது பிரிட்டிஷ் சாம்ராஜியம். இன்று வளரும் புதிய வல்லரசு போட்டியாளர்கள் இந்த விஷயத்திலும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.

நுகர்வு – ஒரு நாட்டின் மக்களுக்கு அங்கு தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்கி உபயோகிக்கும் சக்தி இருக்க வேண்டும். இன்று உள்நாட்டில் தயாரித்த பொருட்கள் மட்டுமல்லாமல், ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களையும் நுகரும் பொருளாதார ஆற்றல் வல்லரசாக வளர விரும்பும் தேசத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நுகரும் சமூகம் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இங்கிலாந்தின் 17 –ஆம் நூற்றாண்டு வளர்ச்சி, உற்பத்தி வளர்ச்சி மட்டுமல்ல; ஏற்றுமதி வளர்ச்சியும்கூட. அது, தன்னுடைய தேவைக்கு மேல் உற்பத்தி செய்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்றது. இத்துடன் இந்தியாவிலும் நூல் உற்பத்தி செய்து மேலும் வியாபார விரிவு ஏற்படுத்தியது. இன்றைய சீனா இதையே செய்து அடுத்த வல்லரசாகப் பார்க்கிறது. அமெரிக்க ஜீன்ஸ் துணி ஏற்றுமதி பற்றி அனைவருக்கும் தெரியும். 

வேலை நெறிகள்  - உழைக்கும் மற்றும் பொறுப்புள்ள தொழிலாளர்கள் ஒரு நாட்டில் இருந்தால்தான், முன் சொன்ன ஐந்து அமைப்புகளிற்கும் ஏதாவது பயனிருக்கும். 

இப்புத்தக வெளியீட்டின் போது ஃபெர்கூஸன் ஆற்றிய உரை மற்றும் நேர்காணல் இங்கே…


ஃபெர்கூஸனுடைய எல்லா கருத்துகளுடனும் ஒவ்வொருவரும் ஒத்துப்போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், இவர் ஒரு அருமையான சரித்திர ஆராய்ச்சியாளர். அத்துடன் தேர்ந்த பொருளாதார நிபுணரும்கூட. தைரியமாக மேற்குலகின் அஸ்தமனம் பற்றி ஒளிவு மறைவின்றி எழுதும் இவரது தொலைநோக்குப் பார்வை பாராட்டுக்குரியது.

Civilisation: The West and the rest | Niall Ferguson | Penguin Books | 432 Pages | Rs. 1000 | Flipkart.com

No comments:

Post a Comment