25 Jun 2013

The Devotion of Suspect X - Keigo Higashino

சிறப்புப் பதிவர்: எஸ். சுரேஷ் (@raaga_suresh)


தன் கணவனிடமிருந்து விவாக ரத்து பெற்ற யாசுகோ டீனேஜ் மகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை செய்யும் அவள், தான் தன் கடந்த காலத்தைக் கடந்து வந்துவிட்ட நினைப்பில் இருக்கிறாள். ஆனால், அவள் வேலை செய்து கொண்டிருக்கும் கடைக்கு அவளது முன்னாள் கணவன், டோகாஷி, வரும்போது கடந்த காலம் அவளைப் பிடித்துக்கொள்கிறது. 

வேலை செய்யும் இடத்தில் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாத அவள், அவனை ஒரு ரெஸ்டாரண்டில் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். அங்கு அவனிடம் பேசிவிட்டு இனி நீ என்னைத் தொல்லை செய்யக்கூடாது என்று சொல்லி வீடு திரும்புகிறாள் யாசுகோ. ஆனால் அவளைப் பின்தொடர்ந்து டோகாஷியும் அவளது வீட்டுக்கு வந்து விடுகிறான். 

அபார்ட்மெண்ட்டில் மற்றவர்கள் முன்னால் அவனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க மனமில்லாமல் வேண்டா வெறுப்பாக அவனைத் தன் வீட்டுக்குள் வர அனுமதிக்கிறாள் யாசுகோ. அவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே அவளது மகள் மிசாடோ ஸ்கூல் விட்டு வீடு திரும்புகிறாள். மிசாடோவுக்கு டோகாஷி வளர்ப்புத் தந்தை முறை. 

பணம் கொடுத்து தன் முன்னாள் கணவனை வீட்டைவிட்டு வெளியேற்றப் பார்க்கிறாள் யாசுகோ. அவள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளும் டோகாஷி, மிசாடோ பற்றி மோசமாகப் பேசுகிறான். அதனால் கோபமடைந்த மிசாடோ ஒரு பூச்சட்டியை எடுத்து டோகாஷியைத் தாக்குகிறாள். அடி விழுந்ததும் டோகாஷிக்குக் கோபம் வந்து விடுகிறது. மிசாடோவை பதிலுக்குத் தாக்குகிறான். தன் மகளை அவன் கொன்று விடப் போகிறான் என்ற பயத்தில் யாசுகோ மின்சார வடத்தைக் கொண்டு டோகாஷியின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்து விடுகிறாள். 

இந்த களேபரத்தில் பக்கத்து பிளாட்டில் வசிக்கும் கணிதவியலாளன் இஷிகாமிக்கு கொலை சம்பவம் தெரிந்து விடுகிறது. யாசுகோவுக்கே தெரியாமல் அவளை உயிருக்குயிராகக் காதலித்துக் கொண்டிருக்கிறான் அவன். எனவே, குற்றத்தை மறைக்க உதவி செய்ய முன்வருகிறான். தான் மட்டுமல்ல, தன் மகளும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்ற பயத்தில் யாசுகோ அவனது உதவியை ஏற்றுக் கொள்கிறாள். எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள், என்று விவகாரத்தை அவன் பொறுப்பில் விட்டுவிடுகிறாள்.

இப்படியாகத் துவங்குகிறது கெய்கோ ஹிகாஷினோவின் உலகப் புகழ் பெற்ற "The Devotion of Suspect X" என்ற த்ரில்லர். 

மேலே சொன்ன கதைச்சுருக்கம் உங்கள் வாசிப்பனுபவத்தைக் கொஞ்சமும் கெடுக்காது. இதெல்லாம் முதல் இரண்டு அத்தியாயங்களில் வருபவைதான். தவிரவும், இணையத்தில் யாரோ சொன்னதுபோல், 'கொலை செய்தது யார்?" என்ற வகை புத்தகமல்ல இது. அதைவிட, 'குற்றம் - நடந்தது என்ன?" என்று சொல்லும் புத்தகம். 

இஷிகாமி இந்தக் கொலையை எப்படி மறைக்கிறான் என்பதும், காவல்துறை உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதும்தான் கதை. உண்மையில், இந்தக் கொலையை காவல்துறையோ, அல்லது  துப்பறியாளன் குசங்கியோ கண்டுபிடிப்பதில்லை. டிடக்டிவ் கலிலியோ என்று அழைக்கப்படும் இயற்பியல் விஞ்ஞானியான யுகாவாதான் இந்தக் கொலையை துப்பு துலக்குகிறான்.

இது எவ்வளவு சிறந்த நாவல் என்பதை அதன் தலைப்பிலேயே நாம் பெற்றுக் கொள்ள முடியும் - ‘The Devotion of Suspect X’. அறிவியல்பூர்வமான துப்பு துலக்குதலை விவரிக்கும் கதை என்பதைவிட காதலையும் உணர்ச்சிக் கொந்தளிப்பையும் விவரிக்கும் நாவல் என்று சொல்லலாம். தனிமையில் வாடும் இஷிகாமியின் ஒருதலைக் காதல்தான் இந்த நாவலின் திறவுகோல். தனிமையும், கணித ஆசிரியனாக இருக்கும் அவனுக்குக் கல்வி அமைப்பின் மீது உண்டான ஏமாற்றமும், அவனது ரகசிய காதலும் நினைத்தும் பார்க்க முடியாத காரியங்களைச் செய்ய அவனைத் தூண்டுகின்றன. 

கொலைச் சம்பவத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று எப்போதும் பயப்பட்டுக் கொண்டிருக்கிறான் இஷிகாமி. ஒருநாளைப் போல யாஷுகோவையும் அவளது மகளையும் எச்சரித்துக் கொண்டேயிருக்கிறான். எப்போதும் அவன் ஃபோனில்தான் அதைச் செய்வது. அதிலும் குறிப்பாக, அவர்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் வாசலில் உள்ள ஃபோன் பூத்திலிருந்து. தன் வீட்டிலிருந்து அவன் அழைப்பதேயில்லை. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறான், யாஷுகோ எப்படி நடந்து கொள்ள வேண்டும், மிசாடோ ஸ்கூலில் என்ன செய்ய வேண்டும், அவள் யாருடன் பேச வேண்டும், என்ன பேசவேண்டும் என்று பிணத்தோடு அவர்களது வாழ்வையும் அவன் தன் கையில் எடுத்துக் கொண்டு விடுகிறான். 

ஒரு கணிதவியலாளனான அவன் கச்சிதமாகத் திட்டம் போட்டுச் செயல்படுகிறான், காவல்துறையினரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறான். கதாசிரியர் ஹிகாஷினோ அவனது மிகையான அச்சத்தையும் மிதமிஞ்சிய காதலையும் மிகப் பிரமாதமாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார். இதனால், சில இக்காட்டான கட்டங்களில் மிகக் கடுமையான சில முடிவுகளை எடுத்துச் செயல்படுவதைத் தவிர இஷிகாமிக்கு வேறு வழியில்லை என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது. அவன் கடைசியில் செய்யும் காரியம் வாசகரை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. ஆனால் அதிலும் ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கிறது. அதைத்தவிர அவனுக்கு வேறு வழி இல்லை என்று நம் வாசக மனம் ஏற்றுக் கொள்ளும் வகையில் இஷிகாமியின் பாத்திரப் படைப்பை வளர்த்திருக்கிறார் கதாசிரியர் ஹிகாஷினோ.

யாஷுகோவும் முழுமையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவித்தாலும், தன் மகளுக்கு எது நல்லதோ அதைச் செய்யும் கௌரவமான ஒரு தாயாக நாம் யாஷுகோவைக் காண்கிறோம். தன் கடந்த காலத்தைத் தாண்டிச் செல்ல விரும்பும் அவளது உணர்வுகளும் மிக நன்றாக விவரிக்கப்பட்டிருக்கின்றன - ஒரு காலத்தில் நைட் கிளப் ஒன்றில் பணியாற்றிய அவளைக் கடந்த காலம் திரும்பத் திரும்பத் துரத்திப் பிடித்துக் கொண்டேயிருக்கிறது. அது அவளுக்கு நன்மையும் செய்கிறது, கெடுதலும் செய்கிறது.

யாஷூகோவின் சிக்கல் அற்புதமாக விவரிக்கப்படுகிறது - ஒரு புறம் அவள் விரும்பும், அவளை விரும்பும், சிரிப்பும் சந்தொஷமுமாக இருக்கும் முன்னாள் முதலாளி. மறுபுறம் இஷிகாமி தன்னைத் தீவிரமாக நேசிக்கிறான் என்ற புரிதலின் துவக்கம் - அவன் வழக்கமாகப் போகும் வழியில் இல்லாத போதும் அவளது சாப்பாட்டுக் கடைக்கு வந்து அவன் தினமும் லஞ்ச் வாங்கிப் போகக் காரணம் அவனது தீராக் காதலே என்பதை அவள் உணர்கிறாள். அச்சங்கள், துயரங்கள், சந்தோஷங்கள், கவலைகள் என்று யாஷுகோவின் உணர்ச்சிகளை விவரித்து அவளை ரத்தமும் சதையுமாக நம்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் வெற்றி பெற்று விடுகிறார் ஹிகாஷினோ. இது நாவலுக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கிறது.

ஹிகாஷினோ தொடும் விஷயங்களில் சுவையான ஒன்றுண்டு - கடன்பட்டார் நெஞ்சத்தையும் நன்றியுணர்வின் மூச்சுத்திணறலையும் சிந்திக்க வைப்பதில் வெற்றி பெற்று விடுகிறார் ஹிகாஷினோ.  மிகக் கடுமையான சிக்கலில் இருக்கும்போது உங்களுக்கு ஒருத்தர் உதவி செய்தால் அவருக்கு நீங்கள் எவ்வளவுக்கு கடன்பட்டவராவீர்கள்? அந்த நன்றிக்கடனைச் செலுத்துவது எப்படி? 

செய்நன்றி மறவாமை ஒரு விசித்திர மிருகம். இறுக்கமான அதன் பிடியை உதறுவது அவ்வளவு சுலபமில்லை என்ற அளவுக்கு அது நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது. இது போதாதென்று, நன்றியுணர்வோடு குற்றவுணர்வும் சேர்ந்து கொள்கிறது. நாம் செய்த குற்றத்துக்கான பழியை இன்னொருத்தர் ஏற்றுக் கொள்வதற்கு நம்மால் எவ்வளவு எளிதாகச் சம்மதிக்க முடியும்? 

செய்நன்றி மறவாமையைப் போல் குற்றவுணர்வும் வினோத விலங்குதான். அந்த விலங்கின் உருவத்தை எவராலும் தீர்மானமாகச் சொல்ல முடியாது. அது ஒரு மனிதனை என்ன செய்யத் தூண்டும் என்பதையும் அனுமானிக்க முடியாது. நாவலின் மையத்தில் உள்ள இந்த அறச்சிக்கல்கள் எதிர்பாராத, ஆனால் வேறு வழியில்லாத உச்சத்தை நோக்கி கதையைக் கொண்டு செல்கின்றன -  எவ்வளவுக்கு எவ்வளவு முடிவு நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறதோ, அதே அளவுக்கு அதைத் தவிர்க்க முடியாது என்றும் நம்மை நம்பச் செய்கிறார் ஹிகாஷினோ.

நாவலுக்குத் தேவையான உயிரோட்டத்தையும் ஆழத்தையும் பாத்திரங்கள் கொடுக்கின்றன என்றால், முழுக்க முழுக்க அறிவுப்பூர்வமான, தர்க்க விதிகளுக்குட்பட்ட துப்பறிதல் நமக்கு அந்த யுரேகா கணத்தைத் தருகிறது. ஷெர்லாக் ஹோம்ஸின் வார்ப்பில் துப்பறியும் நிபுணர், இயற்பியல் விஞ்ஞானி யுகாவாவைப் படைத்திருக்கிறார் ஹிகாஷினோ. ஹோம்ஸ் போலவே இவனும் அறிவியல் வழிமுறையில் துப்புத் துலக்குகிறான். ஒரு அசாதாரண கணித மேதையான இஷிகாமிக்குத் தக்க எதிரியாக இருக்கிறான் யுகாவா. கணிதவியலாளனின் வழிமுறைகளை யுகாவா புரிந்து கொள்ளும்போதுதான் குற்றத்துக்கான விடை காணப்படுகிறது. 

யுகாவாவின் வாட்சனாக டிடெக்டிவ் குசநாகி செயல்படுகிறான். வாட்சனைப் போலவே அவனுக்கு யுகாவாவின் செயல்கள் புதிராக இருக்கின்றன. வாட்சனைப் போலவே, குசநாகியின் குழப்பம் துப்பறியும் மேதையின் அசாதாரண அறிவாற்றலுக்கு வெளிச்சம் கொடுப்பதாக இருக்கிறது. சில தகவல்களை நம்மிடமிருந்து மறைத்து கதாசிரியர் கொஞ்சம் போக்கு காட்டியிருக்கிறார் என்றாலும் கதையின் சிக்கலுக்கு அவர் அளிக்கும் விடை நம்மை வாய் பிளந்து திகைத்து நிற்க வைக்கிறது. இஷிகாமியின் புத்திசாலித்தனமான வழிமுறைகளும் யாசுகோவிடம் அவனுக்கு உள்ள தீராக் காதலும் சந்தேகத்துக்கிடமின்றி சமபோதில் வெளிப்படுகின்றன. இந்த அளவுக்கு நிறைவளிக்கும் முடிவை மர்மக்கதைகளில் உங்களால் மிக அபூர்வமாகவே பார்க்க முடியும். 


மானுட வாழ்வின் நாடகீய கூறுகளை அருமையான துப்பறிதலோடு கலந்து அசாதாரண உச்சத்துக்குக் கொண்டு செல்லும் இந்த நாவல் உலகெங்கும் விற்பனையில் சக்கை போடு போட்டதில் ஆச்சரியம் இல்லை.

The Devotion of Suspect X | Keigo Higashino | Little Brown Book Group | 384 Pages | Rs.217 | Flipkart.com

2 comments:

  1. 2012 ல் 185 பதிவுகள். 2013 ல் இது 180 ஆவது பதிவு. ஆக மொத்தம் இது 365 ஆவது பதிவா? ஆம்னி பஸ் இந்த மைல் கல்லைக் கடந்ததற்கு வாழ்ந்துகள்! உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. சரவணன் அவர்களுக்கு,

      புத்தகத்தைப் பற்றியோ மதிப்புரை பற்றியோ எதுவுமே சொல்லாமல் ஆம்னிபஸ்ஸை வாழ்த்துகிறீர்களே, இது நியாயமா?

      - என்று நம்மைப் பாராட்டும்போது கேட்கத் தோன்றாது, இல்லையா? அப்படி என்ன செய்து விட்டோம் ஐயா, என்று தழைந்து குழைந்து பாராட்டிக் கொள்ளத் தோன்றும். நல்லது சொன்னால் அவ்வளவு இனிப்பாக இருக்கிறது!

      இருந்தாலும் நன்றி. நீங்களும் இன்னும் பலரும் இப்போது ட்ரிப் அடிப்பதால், நண்பர்கள் அனைவரும் இணைந்து புதிய மைல்கற்களை படைப்போம்!

      Delete