26 Jul 2013

Noi Chhoi- At Sixes And Sevens - Ashapurna Devi

பதிவர்  : ச. அனுக்ரஹா

242 நாவல்கள், 37 சிறுகதைத் தொகுப்புகள் 59 குழந்தைக் கதைகள் மற்றும் இன்னும் பல ஆக்கங்களைப் படைத்த பெரும் வங்க எழுத்தாளர் ஆஷாபூர்ண தேவி. சாஹித்திய அகாதமியின் 'ஃபெல்லோஷிப்' மற்றும் ஞானபீட விருதினைப் பெற்ற இவர் முறையாக பள்ளி, கல்லூரி சென்றவர் அல்ல. 1909-இல் பிறந்து கல்கத்தாவில் ஒரு விரிந்த குடும்பச் சூழலில் வளர்ந்தவர்.  பழமைவாதியான அவரது பாட்டி, வீட்டுப் பெண்கள் கல்வி கற்பதை அனுமதிக்கவில்லை. வீட்டில் தனது சகோதரர்கள் பாடம் சொல்லிக் கொள்ளும்போது உடனிருந்து தானாகவே எழுத படிக்க கற்றுக்கொண்டார். அவரது தாயின் புத்தக விருப்பம், அவருக்கு மிக இளமையிலேயே புத்தகங்களையும் வாசிப்பையும் அறிமுகப்படுத்தியது. சிறுவயதிலேயே கவிதைகளும் குழந்தைகளுக்கானக் கதைகளும் எழுத தொடங்கியவர், தன் திருமணத்திற்குப் பின் வளர்ந்தவர்களுக்கான கதைகளும் நாவல்களும் எழுதினார். தன் எழுத்துலகைப் பற்றி கூறுகையில், "நான் எப்பொழுதும் சாமானியர்களைப் பற்றிதான் எழுதுகிறேன். ஒரு சீரழிந்த சமூகத்தில், பெண்களே முதலில் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் நிலை என்னை உலுக்குகிறது, அதை நான் சித்தரிக்க முயற்சித்திருக்கிறேன்" என்று கூறுகிறார்.


இது, நான் அவரது எழுத்தில் படிக்கும் முதல் படைப்பு. இந்த நாவலை, ஆஷாபூர்ண தேவியின் மருமகளான நுபுர் குப்தா ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருக்கிறார். கருப்பொருள் மட்டுமல்லாது, இதன் புதுமையான வடிவமும் இதை மொழிபெயர்க்கத் தூண்டியதாக கூறுகிறார். ஆம், இந்த நாவலின் சிந்தனை மற்றும் வடிவத்தின் நவீன, சமகாலத்தன்மை நம்மையும் ஆச்சரியப்படுத்துகிறது.

பெரும்பாலும் மத்திய வர்க்கப் பெண்கள் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட முதல் தலைமுறையைப் பற்றியது இக்கதை. கல்லூரியைக் கண்டிராத ஆஷாபூர்ண தேவி, இப்பெண்களின் உணர்வுகளைத் துல்லியமாக அதன் எல்லா கோபங்களுடனும் தயக்கங்களுடனும் பலவீனங்களுடனும் பதிவு செய்திருப்பது சற்று ஆச்சரியமாகதான் இருக்கிறது. பெண்களுக்கான கல்லூரியில் படிக்கும் இந்த ஆறு பெண்களும், ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் சமகால பதட்டங்கள், மன உளைச்சல்கள் மற்றும் இளமையின் அலைக்கழிப்புகளைப் பற்றி சூடாக பேசிக்கொள்கிறார்கள். தம் சமகால இலக்கியங்களில் எங்கும் விரவியிருக்கும் ஆண் பார்வையைக் கண்டு கொதிக்கிறார்கள். அவர்களின் வருத்தங்களுக்கு தகுந்த எதிர்வினையாகவே, மிகைப்படுத்தப்படாத, யதார்த்தமான சமகால பெண் பார்வையை ஆஷாபூர்ண தேவி இங்கு முன்வைக்கிறார். பெண்களுக்கும் இருத்தலியல் பதட்டம், ஆர்வங்கள், ஆர்வமின்மைகள், சமூகத்தை நோக்கிய கோபங்கள், தேடல்கள் எல்லாம் இருக்கும் எனச் சொல்லும் பதிவு இது.

கல்வி என்பது பெண்களுக்கு ஒரு உரிமையாகவோ பரிசாகவோ அளிக்கப்படவில்லை. அது ஒரு தற்காப்பு கருவி, அவசர வெளியேற்று கதவு, இல்லை ஒரு ஆடை ஆபரணம் போல்தான் - நினைத்தபோது உபயோகிக்க முடியாது; எதிர்பாராத அசம்பாவிதங்களுக்கான வைப்புத்தொகைப் போல்தான் அது. இந்த ஆறு நண்பர்களில் ஒவ்வொருவரும் மாலையில் கல்லூரி முடிந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். அங்கு அவரவர் முந்தைய தலைமுறையை எதிர்கொள்கிறார்கள். கல்விச் சலுகை அளிக்கப்படாத தம் முந்தைய தலைமுறைப் பெண்களால் சீண்டப்படுகிறார்கள். வீட்டின் நான்கு சுவர்களுக்குள் தம் இரண்டாம் தர அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள அன்றாடம் போராடும் அம்மாக்களும் சகோதரிகளும் ஆண்களைப் போலவே, இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இப்புதிய சலுகையை அஞ்சுகிறார்கள், வெறுக்கிறார்கள்.

மிண்டு, பெலா, ஸ்வப்னா, ருனு, ஸ்வாகதா, சந்திரகலா - இந்த ஆறு கல்லூரி தோழிகளின் ஒரு மாலைப் பொழுதை ஒரு திரைக்கதை போல விவரிக்கிறது இந்த நாவல்.

அன்று மாலை, பிரசவத்திற்கு காத்திருக்கும் மிண்டு-வின் அம்மாவிற்கு அவள் ஆஸ்பத்திரி செல்வதற்கு முன் செய்துமுடிக்க வேண்டிய காரியங்கள் பற்றிய கவலைகள். அவள், பிரசவம் முடிந்த இரண்டு நாட்களில் வீட்டிற்கு வந்து மீண்டும் பழையபடி வேலைகளைத் தொடர வேண்டும். இந்த களேபரத்திலும், ஆண் குழந்தைப் பிறந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் தன் தந்தையை மிண்டுவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. 

தன் வீட்டில் தங்கிப் படிக்கும் பெலாவை, தனது கணவன் முறையற்று அணுகுவதைக் கண்டும் காணாததுபோல் கடந்து செல்லும் பெலாவின் சகோதரியினது கையறு நிலை. அதை ஒரு இயல்பான யதார்த்தமாகவே அவள் கடந்து செல்கிறாள். அப்படித்தான், சிறு பெண் குழந்தை உள்ள குடும்பத்தில் சண்டைகள் இல்லாமல் காலம் கடத்த முடியும். படிப்பையும் கவனித்துக்கொண்டு, தன் சகோதரியையும் வருத்தப்பட வைக்காது அவள் படித்துமுடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறாள், பெலா.

சமீபத்தில், கீழ் மத்திய வர்க்கத்திலிருந்து உயர் மத்தியவர்க்கத்திற்கு மாறியிருக்கும் ஸ்வப்னாவின் குடும்பத்தில், ஸ்வப்னாவின் அம்மா அவளது மறுக்கப்பட்ட கனவுகளையும் ஆசைகளையும் ஆடைகள், க்ளப்புகள், சமூக அந்தஸ்து போன்ற பாவனைகளால் மறுவார்ப்பு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். தன் தாயின் இயல்பான அன்பிற்கான ஏக்கம் ஒருபுறமும், அவளது புதிய சாகஸங்களும் ஆடம்பரமும் ஒருபுறமுமாக, ஸ்வப்னா தன் தாயிடமிருந்து மிகுந்த விலக்கத்தை உணர்கிறாள்.

ருனு-வின் பெரிய குடும்பத்தில், இப்போதோ அப்போதோ என்று படுக்கையிலிருக்கும் பாட்டியை விழுந்து விழுந்து பார்த்துக்கொள்வது போன்ற பாவனைகளால் குடும்ப ஆண்களிடம் நற்பெயர் வாங்க போட்டியிடும் அம்மாக்கள், மாமிகள், அத்தைகள். இவர்களின் பிடியிலிருந்து தப்ப, தன்னைப் பின் தொடரும் பருணை மணந்து எங்காவது போய்விடலாம் என்றுகூட ருனு-விற்குத் தோன்றுகிறது.

இந்த ஆறு பேரில், உயர்குடியிலிருந்து வந்த ஸ்வாகதா, தன் குடும்ப அந்தஸ்தின் போலி இயங்குவிதிகளின் கட்டுக்குள் அடைபட்ட அண்ணன் அண்ணியுடன் வாழ்கிறாள். தனது இளமையில் வேலைக்காரர்களின் கவனிப்பில் மட்டுமே வளர்ந்தவள், தன் அண்ணன் குழந்தைகளுக்கும் அத்தனிமை ஆசைமூட்டும் சலுகையாக திணிக்கப்படுவதைக் கண்டு வருந்துகிறாள். நினைத்த நேரத்திற்கு வெளியே க்ளப்புகளுக்கு செல்லும் அண்ணியின் சுதந்திரம் உண்மையில் சம பொறுப்புகளை ஏற்க தயங்கும் அண்ணன் அளிக்கும் போலி சுதந்திரம் என்று உணர்கிறாள்.

தன் அழகையும் இளமையும் முதலீடாக்கிப் பிழைக்கும் சந்திரகலாவின் சகோதரிக்கு, அதுவேதான் உலகம். தன் சகோதரியின் மீது எத்தனை வருத்தங்கள்,  கோபங்கள் இருந்தாலும் சந்திரகலா அவளது நிழலைத்தான் தன் படிப்பிற்கும் பிழைப்பிற்கும் நாடவேண்டிய நிலை.

பெண்களின் சுதந்திரம் என்பது பொம்மலாட்ட பொம்மைகள் காற்றில் நடனமிடுவது போல, எப்போதும் கண்ணிற்கு தெரியாத பல கயிறுகளால் இயங்குவிக்கப்படுவதுதான் என்று இக்கதை நமக்கு உணர்த்துகிறது. வீட்டிற்குச் சென்று இப்பெண்கள் அடையும் மன கொதிப்பும் கசப்பும், இவர்களின் இளம் மனதில் கொடூரமான சிந்தனைகளைத் தூண்டுகின்றன. மீண்டும் மறுநாள், கல்லூரியில் சந்திக்கும் நண்பர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, ஒரு கணம் அவர்களின் சிந்தனையிலிருக்கும் வன்முறை அவர்களையே ஆச்சரியப்படுத்துகிறது. அத்துடன், ஒரு கையறு நிலையின் மௌனம்.

கதையின் தொடக்கத்தில், இந்த ஆறு தோழிகளை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் அணிந்திருக்கும் வேறு வேறு வண்ண சேலைகளை விவரிக்கிறார் ஆஷாபூர்ண தேவி: நூறு பெண்களை ஒன்றாகப் பார்த்தாலும் ஒரே நிறத்தில் ஒரே மாதிரியான புடவையை அணிந்த இன்னொருவரைப் பார்க்க முடியாது. இது ஒருவகையில் அவர்கள் முகங்களிலும் மனதினிலும் மங்கியிருக்கும் வண்ணங்களை ஈடு செய்வதற்காகவோ என்று ஆசிரியர் வியக்கிறார். இங்குதான் கதை தொடங்குகிறது.

ஆணுக்கு அவனது சுய அடையாளத்திற்கு பின்னரே ஆண் என்ற இரண்டாம் அடையாளம். பெண்ணுக்கோ பெண் என்பதுதான் அவளது முதல் அடையாளம். அதிலிருந்து அவள் தன் சுய அடையாளத்தை வெளிப்படுத்த முயலும் யதார்த்தத்தின் சித்திரமே இந்த நாவல்.

Noi Chhoi - At Sixes and Sevens
Ashapoorna Devi
translated by Nupur Gupta
Published by Srishti
இணையத்தில் வாங்க - Amazon

No comments:

Post a Comment