23 Aug 2013

பி.ஏ.கிருஷ்ணனின் ’கலங்கிய நதி’ - ஒரு விவாதம்


ஆம்னிபஸ் தளம் புத்தக மதிப்பீட்டு இயந்திரமாகச் செயல்படவில்லை. வெளியே சொல்லக்கூடியதும் கூடாததுமாக பல விவாதங்கள் நிகழ்ந்தன. அவற்றில் ஒன்று பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவல் பற்றிய விவாதம்.

புத்தக மதிப்பீட்டின் கூறுகளாக மூன்றைச் சொல்லலாம் : படைப்பின் களம், படைப்பாசிரியரின் அணுகல் இவ்விரண்டும் முதன்மையானவை, நூல் மதிப்பீட்டில் சொல்லப்பட்டாக வேண்டும். இவற்றோடு மதிப்பீட்டாளரின் பார்வையும் இணைந்து மூன்று கூறுகளும் தெளிவாக வெளிப்படும்போது, அது ஒரு நல்ல விமரிசனமாகிறது.

விமரிசனம் என்று பார்க்கும்போது, பாராட்டுகள் மற்றும் கண்டனங்களுக்கு அப்பால் ஒரு படைப்பு அது எழுப்பும் கேள்விகளில்தான் உயிர்த்து இருக்கிறது : பாராட்டுகளிலும் கண்டனங்களிலும் விருப்பு வெறுப்புகள், லாபநஷ்ட கணக்குகள் இருக்கலாம். ஆனால், கேள்விகள் தவிர்க்க முடியாத நிர்பந்தத்தால் எழுபவை. இந்த விவாதத்தை வாசிக்கும்போது, இப்படிப்பட்ட கேள்விகளுக்குக் காரணமாக இருந்த பி.ஏ. கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வெற்றி பெற்ற நாவல் என்பது உறுதிபடுகிறது. 

இனி, ஆம்னிபஸ் குழும ஆவணக் காப்பகத்திலிருந்து:

பைராகி: நாவலில் காந்தியப் பார்வை அதிக அளவில் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள் - அதுதான் நாவலின் செய்தி என இருந்தாலும்,  இந்திய ஜனநாயகத்தின் கூத்துகளை படம் பிடித்திருப்பதில், குறிப்பாக நேருவின் போலி சோசியலிசம் அஸ்ஸாம் போன்ற அனாதைகளை உருவாக்கியது, மாவோயிஸ்ட்களின் கைப்பிள்ளையாகிப் போன வன்முறை கம்யூனிசம் வரட்டு சித்தாந்தம் மட்டுமாக மாறிப்போனது,  இவையனைத்தும் இந்தியாவில் கம்யூனிசம் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணச் செய்கின்றன. சமூக முன்னேற்றத்தின் ஒரே வழியாக காந்தியம் மட்டுமே இருக்க முடியுமா என்று கேட்பது ஆசிரியரின் நோக்கமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது, காந்தியச் சார்பு என்பதைவிட, கம்யூனிச சார்பும் அதன் குறைகளுக்கு காந்தியத்தில் மாற்று உண்டா என்ற தேடலும் இந்த நாவலின் பார்வையாக இருக்கலாம்.

கம்யூனிசச் சிந்தாந்தம் வீழச்சி அடைந்த பின்னரும் ஸ்டாலினைக் கைவிடாத கூட்டம்- அவரது கொன்றழிப்பு நடவடிக்கைகள் வெளிவராதிருந்தால் ஸ்டாலினைத் தியாகி ஆக்கியிருப்பார்கள் கம்யூனிச ஆதரவர்கள். நம்பிக்கை இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களின் இறுதி அடைக்கலமாக காந்தியம் வெளிப்பட்டிருக்கிறது இந்த நாவலில் - இது விரும்பி ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மாறாக தண்ணீரில் மூழ்குபவ்ன் தன் கைக்குக் கிடைக்கும் கொம்பைப் பற்றிக் கொள்வது போல் காந்தியம் இதில் கைகொள்ளப்படுகிறது.

சுனில்: மார்க்ஸ் எனது ஆசான், காந்தி எனது ஆசான், என்றுதான் முன்னுரையிலும் எழுதுகிறார் கிருஷ்ணன். அவரது மார்க்சிய லட்சிய பிம்பம் கலைந்து போவது நேரடியாக சொல்லப்படவில்லை என்றாலும் அது உணர்த்தப்படுகிறது. நேர்மாறாக - தன் தந்தை காலத்து லட்சிய புருஷரான காந்தி இன்றும் ராஜவம்ஷி போன்றவர்கள் மூலம் வெற்றிகரமாக இயங்கி வருவதை உணர்கிறார். மார்க்சிய சாய்வு கொண்ட ஒருவர் அவருடைய லட்சியங்களை நோக்கி முன்நகர (மார்க்சிய வழிமுறைகள் - ஸ்டாலினிய வீழ்ச்சியும், மாவோயிசமும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கக்கூடும்) காந்திய வழிமுறைகள் மேலானது என்று அவர் கருதியிருக்கலாம்.
    
அரசாங்கத்தின் இயலாமை மற்றும் தவறான அணுகுமுறைகள் தோலுரித்துக் காட்டப்படும் அளவிற்கு மார்க்சியத்தின் தோல்வி மற்றும் அதன் மீதான விமரிசனம் இந்த நாவலில் விவாதிக்கப்படவில்லை. ஒருவகையில் மார்க்சிய ஓட்டுனர் ஒருவர் தன் இலக்கை நோக்கி ஓட்டும் காந்திய வண்டி என்று சொல்லலாம்.

பைராகி: ஓட்டுனரை ஓட்டியது யார்? காந்திய நம்பிக்கைகளை இப்போது இவர் வைத்துக் கொண்டிருக்கிறார், இதற்கு முன்னர் யார் வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று செந்தில் போல் கேட்க முடியும்!

இப்போது கால இயந்திரத்தில் ஏறி ஜேபி வாழ்ந்த அறுபதுகளுக்குப் போவோம், கல்கி ஸ்டைலில்.

ஜேபி ஒரு தேர்ந்த மார்க்சியர், அதே நேரம் காந்தி மேல், காந்தியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர். குறிப்பாக இந்திய காங்கிரஸ் எதிர்ப்பாக மார்க்சியர்கள் செயல்படக்கூடாது என அறிவித்தவர். காந்தியமும் மார்க்சியமும் ஒருசேர அமைந்தவர். மிக அழகாக, காந்தியத்தையும் சோசியலிசத்தையும் இரு புரவிகளாகக் கொண்டு வண்டி ஓட்டியவர். இவர்தான் நீங்கள் சொல்லும் வண்டி ஓட்டியாக இருக்க முடியும். பி.ஏ.கிருஷ்ணன் காணும் கனவு இந்தியாவும் இந்த வண்டி ஓட்டுனர் கையில்தான் இருக்க முடியும்.

நேருவின் சோசியலிசம் போலி கனவுகளால் கட்டப்பட்டது என்று தெரிந்ததும் ஜேபி அறுபதுகளில் வினோபாவின் சர்வோதயாவில் சேர்கிறார். நேருவின் ஜம்மு காஷ்மீர் தீர்வை எதிர்க்கிறார், மார்சிய மாவோயிஸ்டுகளை எதிர்க்கிறார், இந்திரா காந்தியின் அடக்குமுறையை எதிர்க்கிறார் - காந்தியத்தையும் தொலைத்து, பொதுவுடமை கொள்கையையும் பறக்கவிட்ட சமூகத்தை உயிரோடு இருந்து வேடிக்கைப் பார்க்கிறார். ஆனால் இன்னும் இரு புரவிகளைக் கைவிடாத கனவு அவருக்கு இருந்தமைக்கு ஜனதா கட்சி உருவாக்கம் ஒரு காரணம்.

இதுதான் நமது கலங்கிய நதியின் நாயகனின் கனவும். முழு காந்தியம் அல்ல. காந்திய வழி அறப் போராட்டம், பொதுவுடைமை வழி மக்கள் நலம் - இதில் காந்தியின் கிராம சுயராஜ்யம், நவீனத்துவத்துக்கு எதிர்ப்பு நிலை போன்றவற்றையும் எதிர்க்கும் பார்வையும் இயல்பாகச் சேர்ந்து விடுகிறது.

நாவலாசிரியராக, பி.ஏ.கிருஷ்ணனின் கனவும் இதுதான் - ராஜவம்ஷி இரண்டு தரப்புக்கும் நண்பனாக இருப்பதாகவே காட்டியிருப்பார் என்பதை கவனியுங்கள்.

புலிநகக் கொன்றை, கலங்கிய நதி என இரண்டிலும் இந்த இரு புரவிகளையும் சமூக மாற்றத்துக்கு தேவையான வாகனங்களாகப் பார்க்கிறார். ஒன்றை ஒதுக்கி மற்றொன்றைக் கையிலெடுக்கும் பிடிவாதம் இவரிடம் இல்லை - இருதரப்பின் நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து, நடைமுறை பயன்பாட்டு அடிப்படையில் ஒரு அரசியல் நிலைப்பாடு எடுக்கிறார்.

சுனில்: பி.ஏ.கே.வினுடைய லட்சிய பிம்பம் ஜெ.பி போன்ற ஒருவராக இருந்திருக்கக்கூடும். சுதந்திர இந்தியாவின் சமரசமற்ற, மகத்தான ஆளுமை அவர்.

காந்தியின் அறங்காவலர் முறை மற்றும் constructive program-ஆகியவற்றைக் கொஞ்சம் வாசித்து வந்திருக்கிறேன். மார்க்சியம் சொல்லும் பொதுவுடைமை போன்றவற்றை அவரும் சொல்கிறார். மேலும்,- மார்க்சியத்தில் உள்ள அனைத்து 'நல்ல' அம்சங்களையும் காந்தி உள்வாங்கிக் கொண்டார் என்றே எண்ணுகிறேன். 

நிலப்பிரபுத்துவ மையத்திற்கு மாற்றாக மார்க்சியம் சொன்ன தொழில் வர்க்க புரட்சி - மற்றொரு வகையான அதிகார குவிப்பிற்கே வழிவகை செய்கிறது. காந்தி ஒரு படி முன்னகர்ந்து- அதிகார பரவலாக்கத்தைச் சொல்கிறார், மைய அதிகார குவிப்பற்ற சமூகத்தை கனவு காண்கிறார். சமூக சமத்துவம் நிலைநாட்டப்படுவது வன்முறை வழியாக என்று மார்க்ஸ் சொல்கிறார்- அகிம்சை வழியில் நியாயங்களை உணர்த்தி அதே இலக்கை அடைய முடியும் என்கிறார் காந்தி. ஆக- இந்தப் புள்ளியில் மார்க்சியத்தை காந்தி கடந்துவிட்டார் என்றே எண்ணுகிறேன். 

இன்னமும் சொல்லப்போனால், மார்க்சியம் ஒருவகை அறிவியல் மாதிரி வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் என்பதைத் தாண்டி அதனுடைய இன்றைய பயன் என்னவென்று தெரியவில்லை.

இந்த காந்தி - மார்க்ஸ் இணைப்பு என்பது உண்மையில் எதற்கு, ஏன் என்று எனக்கு புரியவில்லை..எந்தப் புள்ளியில் காந்தியத்திற்கு மார்க்சிய உதவி தேவைப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால், எஸ்.என் நாகராஜன் போன்றவர்களைச் சுட்டிக்காட்டும்போது அவர்கள் காந்திய-மார்க்சியர்கள் என்று சொல்கிறார் ஜெயமோகன். குமரப்பாவும் அந்த வகையில் வரக்கூடியவர்தான். ஆனால் காந்தியத்தின் குறைகளை மார்க்சியம் எப்படி சமன் செய்கிறது என்பதில் எனக்கு தெளிவில்லை.

காந்திக்குள் ஒரு இடதுசாரி இருந்தார் என்றே எண்ணுகிறேன். ஆனால் மார்க்ஸிலிருந்து ஒரு முக்கியமான விஷயத்தில் காந்தி வேறுபடுகிறார். வர்க்கப் போர் ஒரு வரலாற்றுக் கட்டாயம் என்ற நம்பிக்கையில் ஏற்படக்கூடிய துவேஷம் காந்தியிடம் இல்லை. மாறாக, அன்பு அவரை இயக்குகிறது. காந்திக்கு மட்டுமல்ல, காந்தியர்களுக்கும் இது பொருந்தும் என்று எண்ணுகிறேன்.

பைராகி: மார்க்சிய - காந்தியத்தை நோக்கித்தான் பி.ஏ.கிருஷ்ணன் நகர்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. புலிநகக் கொன்றையில் இதை நாம் இன்னும் வெளிப்படையாகக் காணலாம்.

ஆனால், இரண்டிலிருந்தும் அன்னம் போல நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு முன்நகர முடியுமா, எது எதற்கு சமன்பாடு அளிக்கிறது என்பதில் எனக்குச் சரியான புரிதல் கிடையாது. என்றாலும் மார்க்சியம், காந்தியம் என்ற இந்த இரு அரசியல் பார்வைகளும் தேவையற்றவை எனும் நோக்கு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதில் சந்தேகமில்லை.

சுனில்: நான் இதை இப்படி புரிந்துகொள்ள முயல்கிறேன்- ஒருவருக்கு மார்க்சியம் முதலில் அறிமுகம் ஆகிறதென்று வைத்துக்கொண்டால், அவர் திறந்த மனம் கொண்டவராக இருக்கும் பட்சத்தில் - ஏதோ ஒரு புள்ளியில் அதனுடைய எல்லையை அவர் உணரக்கூடும். அந்த இடத்தில் அந்த எல்லையை தாண்டுவதற்கான தேடலில் காந்தி அவர்களுக்கு தென்படலாம். அதாவது மார்க்சியத்தின் சில எல்லைகளை காந்தியம் நிச்சயம் விரித்துச் செல்லும். ஒப்பீட்டளவில்- மார்க்சியர்கள் காந்தியர்களைக் காட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள், ஆகவே இந்த இணைப்பு அவர்களுக்குத் தேவைப்படலாம். அது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். ஆனால் காந்தியில் துவங்குபவர்களுக்கு மார்க்ஸில் பெற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என்பதை மிக முக்கிய கேள்வியாகவே நினைக்கிறேன். மார்க்சியத்துக்கு காந்தியத்தை சுவீகரித்துக்கொள்ள வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது. ஆனால், காந்தியம் மார்க்சிய சார்பு நிலை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

பைராகி: இந்த நவீன உலகில் காந்திய உற்பத்தி முறை சார்ந்த வர்த்தக சமூகமோ, காந்திய தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார அமைப்போ சாத்தியமில்லை.

காந்தியம் எந்த மாதிரியான சமூக வடிவமைப்பும், தொழில் வளர்ச்சியும் கொடுக்கும்? உபரி நிலத்தைப் பகிர வேண்டும் என்று பொதுவுடைமை ஆட்கள் சொன்னது போல் வெளிப்படையாக உலக அளவில் எந்த அமைப்பு செய்துள்ளது? இந்திய கிராம முன்னேற்றம், கூட்டுறவு அமைப்புகள் ஓரளவு இதைச் செய்தாலும் அவர்களால் ஒரு தேசம் முழுக்க இப்படி செய்ய முடியுமா? எந்த அமைப்பு வந்தாலும் அரசியலில் ஆழ இறங்கும் எண்ணம் இல்லாமல் ஒரு மாற்றத்தையும் பெரியளவு செய்ய முடியாது.

சுனில்: நடைமுறையில் காந்தியம் செயல்படுவதில் மிகப்பெரிய சிக்கல்கள் இருக்கின்றன. தனி மனித தளத்திலிருந்து இதை அரசியல் தளத்திற்கு உயர்த்துவது அத்தனை எளிதான விஷயம் அல்ல.

வருங்காலத்தில் காந்தியம் எப்படிச் செயலாற்றும் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை - இன்றைய நுகர்வுப் பண்பாட்டிலிருந்தும், உலகமயமாக்கத்திலிருந்தும் திரும்பிச் செல்வது என்பது சாத்தியமில்லை.

மார்க்சியம் தொழில்மயமாக்கப்பட்ட சமூகத்தைக் கனவு கண்டது. அங்கு வேளாண்மைகூட ஒரு தொழிலாக (கூட்டு பண்ணைகள்) பார்க்கப்பட்டது. ஆனால், காந்தி வேளாண்மையை மையமாகக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டமைக்க நினைத்தார், அவர் தொழில்களுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் எதிரி அல்ல. பொருளாதார அமைப்பின் மையத்தில் வேளாண்மை இருக்க வேண்டும் என்றும், தொழில்கள் வேளாண் சமூக சார்புத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் எண்ணினார். தொழிற்சாலைகள் வேளாண்மையை அழித்து ஒழித்துவிடும் என்று கவலைப்பட்டார்.

அவர் எதற்கெல்லாம் பயப்பட்டாரோ அதெல்லாம் இன்றைய இந்தியாவில் மெய்ப்படுகின்றன. நாம் காந்தியத்தைவிட்டு வெகு தூரம் வந்து விட்டோம். 

உண்மையைச் சொன்னால், சில நேரங்களில் - காந்தியை வாசிப்பது வெறும் நோஸ்டல்ஜியாவோ என்றுகூடத் தோன்றும்.
கலங்கிய நதி
பி.ஏ.கிருஷ்ணன்

நாவல் 


காலச்சுவடு வெளியீடு.

விலை.ரூ.250/-

No comments:

Post a Comment