1 Aug 2013

The Singing Sands - Josephine Tey



த்ரில்லர் புத்தகங்கள் இருவகைப்பட்டவை: முதல் வகை புத்தகம் உங்களைச் சட்டையைப் பிடித்து நிறுத்தி வைத்துக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமை இரவுத் தூக்கம் கெட்டாலும் பரவாயில்லை ஒரே மூச்சில் அது அத்தனையையும் படித்து முடிக்கும்வரை விடாது. மூச்சுத் திணறும் வேகத்தில் செல்லும் இந்தக் கதைகளில் அடுத்து வரும் திடுக்கிடும் திருப்பம் என்னவாக இருக்குமோ என்ற ஆவலுடன் நீங்கள் வாசித்துக் கொண்டே செல்வீர்கள். இரண்டாம் வகை புத்தகங்கள் உங்களைக் கதைக்குள் மெல்ல இழுத்துக் கொள்கின்றன. என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குமுன் நீங்கள் இந்தக் கதைகளில் உள்ள பாத்திரங்களைக் குறித்தும் இனி கதை எந்த திசையில் செல்லுமோ என்றும் கொஞ்சம் அதிகமாகவே கவலைப்பட ஆரம்பித்து விடுகிறீர்கள். இங்கே புனைவுக்கென்று தனியொரு தர்க்கமும் வாழ்வும் இருப்பதாகத் தோன்றுகிறது, திடீர் திருப்பங்களைத் தந்து உங்களைத் திக்குமுக்காடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் கதாசிரியரால் அலைக்கழிக்கப்படும் கதை இதிலெல்லாம் கிடையாது.

முதல் வகை கதைகள் உங்கள் ரயில் பயணங்களுக்குத் தேவைப்படலாம், இரண்டாம் வகை கதைகள் சோம்பல் ​​நிறைந்த மழைக்கால வாரயிறுதி நாட்களுக்குத் துணையிருக்கும் - உங்கள் வசமிருக்கும் அபரிதமான அந்த ஓய்வு நேரத்தில் முறையான இடைவெளிகளில் கோப்பை கோப்பையாக தேநீர் பருகியவாறே மர்மத்தின் சுவையை ரசித்து அனுபவிக்கலாம். ஜோசபைன் தே'யின் "The Singing Sands' இரண்டாம் வகையைச் சேர்ந்த மர்ம நாவல் (இதில் மூன்றாம் வகை த்ரில்லரும் உண்டு - இவற்றின் முப்பது நாற்பது பக்கங்களில் நீங்கள் வாசிப்பின் எல்லையைத் தொட்டு அதற்கு மேல் தொடர முடியாமல் நிறுத்தி விடுவீர்கள் - அந்தப் பேச்சு இங்கே வேண்டாம்!).

தேயின் புத்தகங்களில் வரும் இன்ஸ்பெக்டர் கிராண்ட் தான் இதிலும் நாயகன். அவன் விடுப்பெடுத்துக் கொண்டு ஸ்காட்லாந்தின் மலைச்சிகரங்களை நோக்கி ரயிலில் பயணிக்கிறான். அவனால் மூடப்பட்ட அறைகளில் இருக்க முடியாது - மூச்சுத் திணறும், இடமாற்றம் தன் பிரச்சினைக்குத் தீர்வு அளிக்கும் என்பது அவனது நம்பிக்கை. அவன் செல்வது தன் கஸினைச் சந்திக்க. போய்ச சேர வேண்டிய இடம் வந்ததும் இறங்குவதற்கு சற்று முன்னர்தான் அவன் கவனிக்கிறான் - ரயிலின் போர்ட்டர் அதன் கம்பார்ட்மெண்ட்களில் ஒன்றில் ஒரு மனிதன் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்திருக்கிறான். கிராண்ட் அந்த கம்பார்ட்மெண்ட்டினுள் நுழைந்து அங்கிருக்கும் செய்தித்தாள் ஒன்றை எடுத்துச் செல்கிறார்.

இறந்து போன இளைஞன் செய்தித்தாளில் ஒரு வெற்றிடத்தில் கவிதை ஒன்றை எழுதியிருக்கிறான்: 

பேசும் விலங்குகள்,
நிற்கும் ஓடைகள், 
நடக்கும் கற்கள், 
பாடும் மணல்...

இறந்தவனின் முகமும் இந்தக் கவிதையும் கிராண்ட்டை வசீகரிக்கின்றன. எனவே, ஏன் இவன் கொலை செய்யப்பட்டான் என்ற மர்மத்தைத் துப்பறியச் செல்கிறார் இன்ஸ்பெக்டர் கிராண்ட்.

காவல்துறையினர் இந்த வழக்கை விசாரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அந்த இளைஞன் யார் என்ற அடையாளமும் தெரியவில்லை. யாரும் இப்படியொருவனைக் காணவில்லை என்று புகார் கொடுக்கவில்லை - யாரும் இறந்தவனின் உடலைக் கொண்டு செல்ல வருவதுமில்லை. யார் இந்த அந்நியன், இவன் எதற்காக ஸ்காட்லாந்து வந்தான், செய்தித்தாளின் ஓரத்தில் ஏன் அந்தக் கவிதையை எழுதினான்? இந்தக் கேள்விகள் கிராண்ட்டுக்குப் புதிராக இருக்கின்றன. தடயங்கள் என்று எதுவும் இல்லாதபோதும், அவர் தன் அறிவைப் பலவாறு பயன்படுத்தி இந்த மர்மத்தின் விடை காண தொடர்ந்து முயற்சித்தவாறு இருக்கிறார். கதையின் முடிவில் அவர் இந்தப் புதிருக்கு விடை காண்கிறார் என்பது மட்டுமல்ல, அடைபட்ட அறைகளில் மூச்சுத் திணறும் அவரது கிளாஸ்ட்ரோஃபோபியா பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கிறது.

அடுத்தடுத்த கொலைகளைச் செய்யும் தொடர் கொலைகாரன் தன் கொலைச் சங்கிலியின் அடுத்த கண்ணியை இணைக்கும்முன் அவனைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்பதைப் போன்ற கதையல்ல இது. ஹீரோ தன் மனசாட்சியின் உறுத்தலுக்குத் தீர்வு காண துப்பறியக் கிளம்பும் கதை இது. அவனைக் குறித்து யாருக்கும் அக்கறையில்லாமல் ஒருவன் இறந்து கிடக்கிறான், ஆனால் இவனும் மனிதன்தான் - இப்படிப்பட்ட முகமற்ற ஒரு மனிதனின் மரணத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது. அது கிராண்ட்டின் மனசாட்சியை உறுத்துகிறது. இதனோடு ஒரு புதிரின் வசீகரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: அவன் தன் கவிதையைக் கொண்டு என்ன சொல்ல முயற்சித்தான், நடக்கும் கற்கள் எவை? பாடும் மணல் எது? மனசாட்சி மட்டுமல்ல, தன் பிரச்சினைகளிலிருந்து ஒரு கவனக்கலைப்பு தேவைப்படுவதும் இந்த மர்மத்துக்கு விடை கண்டாக வேண்டும் என்று அவரைத் உந்தித் தள்ளுகின்றன.

ஜோசபைன் தே'யின் நடை அவர் சொல்லும் கதைக்குக் கச்சிதமான பொருத்தம் கொண்டிருக்கிறது. கதை நிதானமான வேகத்தில் செல்கிறது; அவர் எதற்கும் அவசரப்படுவதில்லை. கதை தன் சந்தத்தைக் கண்டடைய அவர் அனுமதிக்கிறார். கதையின் ரிதத்துக்கு ஏற்ப இசைந்து வாசகர் நகரத் துவங்கும்போது கதைக்குள் இழுத்துக் கொள்ளப்படுகிறார்கள் - புதைமணலுள் விழுங்கப்படுவது போல. கதையின் நிதானமான வேகம் அரக்கப்பரக்க ஓடும் நகரைவிட்டு வெகு தொலைவில் வாழும் பாத்திரங்களோடும் அவர்களது வாழ்க்கை முறையோடும் உறவு ஏற்படுத்திக் கொள்ள அவகாசம் தருகிறது. கதையில் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்க தே சரியான இடைவெளிகளில் புதுப்புது பாத்திரங்களையும் அறிமுகப்படுத்துகிறார். கிராமப்புற வாழ்வும் வழக்கின் முன்னேற்றமும் இணையான வேகத்தில் நகர்த்திக் கொண்டு செல்லப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு காலகதிக்கு ஏற்ற வகையில் கதையின் முடிவும் அமைந்திருக்கிறது - இது நிறைவளிப்பதாக உள்ளது.

ஸ்காட்லாந்து மீது தே'வுக்கு உள்ள நேசம் மட்டுமல்ல, ஒரு கிளாசிக் கொலை மர்மத்தை எழுதுவதில் அவருக்கு இருக்கும் புத்திசாலித்தனமும் இந்த நாவலில் வெளிப்படுகிறது. ஸ்காட்லாந்தில் கிராண்ட் மேற்கொள்ளும் பயணங்களை அவர் மிகவும் ரசித்து எழுதுகிறார். ஸ்காட்லாந்தின் மேட்டுநிலங்களும் அதன் சின்னஞ்சிறு தீவுகளும் அவரது எழுத்தில் உயிர் பெறுகின்றன. அதன் நீர்நிலைகளில் கிராண்ட் மேற்கொள்ளும் பயணங்களை விவரிக்கும்போது தே அவற்றை எவ்வளவுக்கு நேசிக்கிறார் என்பது எழுத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி வெளிப்படுகிறது. ஸ்காட்லாந்து மீது தே'வுக்கு இருக்கும் ஈர்ப்பும், ஒவ்வொரு சிறு விவரணையையும் விவரிக்கும் அவரது கூர்மையான பார்வையும் இதை ஒரு வசீகரமான நாவலாக்குகின்றன. தான் விவரிக்கும் இடங்களை நேசிப்பவர் இவர் என்பது நாவலில் நமக்கு தனிக்கவனத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஒரு கொலை வழக்கின் விடையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, ஸ்காட்லாந்தின் அழகைக் கண்டுபிடிப்பதும்தான் நாவலின் கருப்பொருள். பார்த்துப் பார்த்து எழுதப்பட்ட விவரணைகளால் தான் அறியாத இடங்களுக்கும் வாசகர் கொண்டு செல்லப்படுகிறார் - நாவலின் முடிவில், ஸ்காட்லாந்துடன் தனக்கு நெருங்கிய ஒரு பந்தம் இருப்பதான உணர்வு வாசகரின் மனதில் ஏற்பட்டுவிடுகிறது. சிறந்த எழுத்தாளர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும். தே அவர்களில் ஒருவர்.

இன்றும் எனக்கு இது ஒரு பெரும்புதிராக இருக்கிறது. உப்புசப்பில்லாத நடையில் எழுதும் அகதா கிறிஸ்டியைக் காட்டிலும் இவ்வளவு நளினமான எழுத்துக்குரியவரும் தான் விவரிக்கும் இடங்களையும் மனிதர்களையும் உயிர்ப்பிப்பவருமான ஜோசபைன் தே ஏன் பிரபலமடையவில்லை? வாழ்வின் சில மர்மங்களுக்கு விடையே கிடையாது போலும்.

The Singing Sands | Josephine Tey | Random House | 256 Pages | Flipkart

மொழிபெயர்ப்பு: பீட்டர் பொங்கல்

No comments:

Post a Comment