28 Apr 2014

அம்மா வந்தாள்- தி. ஜானகிராமன்


ஆம்னிபஸ் தளத்தில் திரு. சுகுமாரன் காலச்சுவடுக்காக எழுதி இருந்த மீறலின் புனித பிரதி முன்னுரை  பாதி படித்துக் கொண்டு இருக்கும்போதே வேறு வேலை வந்துவிட , இந்த நாவலைப் படிக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்த வேலையை கவனிக்க சென்றுவிட்டேன். அப்புறம் சில மாதங்களில் இந்த நாவலை படித்து முடித்தேன். என்ன சொல்ல, எப்படிச் சொல்ல, என ரொம்ப நாளைக்கு யோசித்தபின் இப்போது எப்படியோ எழுத ஆரம்பித்துவிட்டேன். நல்லது. 

எனக்கு ஒரு சந்தேகம். இந்த நாவலைப் புகழ்ந்து எழுதுபவர்கள் எல்லாம் இந்த நாவலின் மத்தியில், வாவ் மேன் என்று சொல்லிக்கொண்டு இரு கைகளையும் தேய்த்துக் கொண்டு இருப்பார்களோ? யாராவது ஒரு கல்யாணமான பெண் புருஷனைத் தவிர வேறு யாருடன் உறங்கினாள்,- ஆங்கிலத்தில் சொல்வது என்றால், it was kind of interesting to know with whom the lady slept and also got three children, right? தமிழில் இதை எழுதினால் இவ்வளவு தெளிவாக இருக்காது என்பதால்தான் ஆங்கிலம். எல்லாமே கிசுகிசுவில் இருக்கும் ஆர்வம் தவிர வேறில்லை. நம் அனைவரிடத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது, அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பதுதான். "என் பெயர் ராமசேஷன்" நாவலில் வரும் இந்த வரி "உன் மூக்கு இவ்ளோ ஏன் நீளமா இருக்கு,"  இதுதான் நினைவுக்கு வருகிறது.


அதற்க்காக இந்த மாதிரி கதைக்களம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இந்த மாதிரி கதைக்களம் வைக்கும்போது, படிப்பவர் நம்பும்படியாக இருக்க வேண்டும். ஒரு பெண்மணி கணவனுடன் மூன்று குழந்தை பெற்றுக் கொண்டு, அவனுடன் நல்ல உறவில் இருந்துக் கொண்டே வேறு ஒருவருடனும் மூன்று குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஆனால் கணவன் அப்படியே ரொம்ப நல்லவர், ஒன்றுமே சொல்லாமல் அப்படியே இருந்து விடுவார். புனைவுதான் என்றாலும் பாத்திரங்கள் இந்த மாதிரி நடந்து கொள்வதற்கு நியாயம் வேண்டாமா? அப்படி எந்த நியாயத்தையும் சொல்லாதபோது இது என்ன மாதிரியான கற்பனை என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

இது ஏதோ நான்தான் இப்படிச் சொல்கிறேன் என்றில்லை. கரிச்சான்குஞ்சு அவர்களும் இந்த நாவலைப் படித்துவிட்டு இதில் வெளிப்படும் மோசமான ரசனையைப் பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார் என்பது சொல்வனம் இணைய இதழில் உள்ள "தி.ஜானகிராமன் – சில நினைவுகள்" என்ற இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது தெரிகிறது http://solvanam.com/?p=15152 . இது சம்பந்தமாக வருத்தப்பட்டு கரிச்சான்குஞ்சு கடிதம் எழுதியதற்கு, தி. ஜானகிராமன்,  “நான் ஒரு பாசாண்ட எழுத்தாளன் ஆகிவிட்டேன். என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்,” என்று பதில் எழுதியிருக்கிறார். இந்த மாதிரி சும்மா, தான் கண்ட உண்மை மட்டும்தான் இலக்கியம், இது பிடிக்காதவர்களுக்கு உண்மையை நேருக்கு நேர் பார்க்கும் திராணி இல்லை என்றெல்லாம் சொல்வது ஒரு எலைட்டிஸ்ட் வேஷம் போட்டுக் கொண்டு தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாக இருக்கும். யாரும் யாருடைய எழுத்தையும் படித்துவிட்டு அதன் ஏன் என்ன என்பது பற்றி என்ன கேள்வி வேண்டுமானால் கேட்கலாம். அந்த உரிமை எந்த வாசகனுக்கும் உண்டு. தான் எழுதுவதைப் படிக்க மட்டும் சாதாரண வாசகன் வேண்டும் ஆனால் அவன் எதுவும் கேள்வி கேட்கக்கூடாதா? அந்த மாதிரி நினைப்பவர்கள் எழுதுவதை எல்லாருக்கும் ஏன் விற்க வேண்டும்?

நாவல் ஆரம்பத்தில் இந்து (சிறு வயதில் விதவையான பெண்) அப்புவை விரும்புவதாக சொல்லுவதும், அவள் அவனை மயக்கப் பார்ப்பதும், தன் காதலை வெளிப்படுத்துவதும் வழக்கமான தமிழ் காதல் கதைகளில் வருவதற்கு மாறான அப்படியே ஒரு தலைகீழான நிகழ்ச்சி. எப்போதுமே ஒரு ஆண் தான் பெண்ணை மயக்க முயற்சிப்பதாக நம்மூரில் எழுதுகிறார்கள், சினிமாவில் காட்டுகிறார்கள்.  இங்கே ஒரு பெண் அதைச் செய்வதாக எழுதுவது மட்டுமே புரட்சி. இதே மாதிரி ஒரு சம்பவம் "மோக முள்" நாவலிலும் வரும்.

அப்புவுக்கு அவன் அம்மா வேறு ஒருவருடன் உறவில் இருப்பது இத்தனை நாள் தெரியாமல் இருப்பதும் அதை இந்து சொல்லித் தேர்ந்து கொள்வதிலும் லாஜிக்கே இல்லை. இதைக் கேட்டால், உடனே வாசகர்கள் ஊகத்தில் விட்டுவிட்டதாகச் சொல்வதும், இதில் ஆன்மிகம் காண்பதும் சிரிக்க வைக்கிறது. அதே மாதிரி கடைசியில் அலங்காரம் காசிக்குப் போய் தன் பாவத்தை கழுவி கொள்வதாகக் கதையை முடித்திருப்பதும் பயங்கரமான முரண். ஏதோ, அலங்காரம் தன் உடலை யாருக்குக் கொடுப்பது என்று தீர்மானிப்பது அவள் உரிமை என்று கதை முழுதும் எழுதிவிட்டு, கடைசியில் பார்த்தால் அவள் என்னவோ இத்தனை காலம் பாவம் செய்து கொண்டிருந்தது போல அவளைப் பழி வாங்கும் விதமாக முடிவில் எழுதி விட்டார் தி. ஜானகிராமன். படுத்துக் கொள்ளும்போதும் பிள்ளை பெற்றுக்கொள்ளும்போதும் வராத குற்ற உணர்ச்சி கடைசியில் எப்படி வரும்? அதுவும் காசிக்குப் போய் தன் பாவங்களைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிற மாதிரி வரும்?

இதெல்லாம் ஒரு மாதிரி பெண்ணை உயர்த்தி எழுதுவதுபோல் எழுதிவிட்டு கடைசியில் அவர்களை மட்டம் தட்டுவதாகத்தானே இருக்கிறது? தி. ஜானகிராமன் கடைசியில் இப்படி முடித்திருப்பது பெரும்பாலான மக்கள் திருப்திப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.  அதாவது அவள் தப்பு செய்து விட்டாள், அதனால் அவள் காசிக்கு போய்  பாவம் கழுவிக் கொள்ள வேண்டும் என்றுதானே பாமர வாசகன் நினைப்பான்? இது ஒரு விதமான குறுகிய மனநிலையை உணர்த்துகிறது. இந்த மாதிரியான மனநிலையை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று எழுதுவதுதானா இலக்கியம்?

அப்படியானால் இந்த நாவலில் உயர்வான வேறு விஷயங்களே இல்லையா என்றால் அதை எல்லாம் நான் இங்கே சொல்ல வேண்டியதில்லை. தி ஜானகிராமனை எத்தனையோ உயர்த்தி பக்கம் பக்கமாக நிறைய பேர் எழுதிவிட்டார்கள், ஆனால் யாரும் அவ்வளவாக குற்றம் சொல்லி நான் படிக்காத நாலு விஷயங்களை எழுதும்போதும்கூட கூடவே வேறு எதையாவது புகழ வேண்டும் என்றால் ஒரு எழுத்தாளரை எப்போதும் புகழ்ந்து கொண்டேதான் இருக்க வேண்டுமா? புகழாமல் எதையும் சொல்லக் கூடாதா?

5 comments: